"நமது முடிவுகள் எப்படி இருக்க வேண்டும்?"
ஒருவர் எவ்வளவு தீவிரமாகவும், திறனோடும் சிந்தித்தாலும்கூட, அதை அவர் செயலில் முடித் துக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் நேர்த்தி யுடனும், நேரங்கடத்தாமலும், நேர்மையான முறையிலும் செய்து முடித்தலே சரியானதாகும்.
இதை நன்கு விளக்கி, திருவள்ளுவரின் குறளில், "வினைத் திட்பம்" என்ற அதிகாரத்தின் கீழ், ஒரு குறட்பாவில் மிகத் தெளிவாகவும், அருமையாகவும் விளக்குகிறார்.
"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்" (குறள் - 668)
"நன்கு ஆராய்ந்து, தெளிந்து, செய்யத் துணியும் வினையை, மனக்கலக்கம் இல்லாமலும், சோர்வில் லாமலும், காலத்தாழ்வு ஏற்படுவதை நீக்கியும், விரைந்து செய்து முடிக்க முயல வேண்டும்" என்பதே இதன் பொருளுரையாகும்.
இதன்படி நாம் முடிவுகள் எடுத்து செயல்களைச் செய்து முடிக்கும் முன்பு - அவற்றினை எந்தெந்த முறையில் செய்ய வேண்டுமென்பதை ஆளுமை இயல் அறிஞர்களேகூட கற்றுத் தெளிவடையும் வகையில், பகுத்தறிவாளர் வள்ளுவர் மிக ஆழமாக, குறுகத்தரித்த குறளில் கூறுகிறார்.
இதன்படி,
செயலுக்கு (வினைக்கு) முன்னால் தேவை யாவன:
(1) நன்கு ஆராய்தல், பிறகு
(2) தெளிவு பெறுதல், அடுத்து
(3) செய்யத் துணிதல்
(4) மனக்கலக்கம் - இதில் வரவே கூடாது
(5) சோர்வு - தலை நீட்டவே கூடாது
(6) விரைந்து செயல்படுதல்
இப்படி 'முயலுதல்' என்று முடிக்கிறார்.
அதை ஒரு வாழ்வின் அன்றாடப் பயிற்சியாகக் கொண்டு கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறார்!
இவ்வளவு முறைகளையும் ஒரு மனிதர் தன் செயலைத் தொடங்குமுன் எண்ணி, செய்து முடிக்க முன்வரும்போது நிச்சயம் அதன் விழுமிய பயன் வெற்றி வாகையாகவே அவர் மடியில் வந்து விழுவது உறுதி.
எல்லாவற்றையும் கூறிக் கொண்டே வந்து இறுதியில் விரைந்து செயல்படுக, தாமதிக்காது, தடுமாற்றமின்றி, தயக்கம் இன்றி செய்க என்பதை முத்தாய்ப்பாக வைக்கிறார்! ஆணி அடிக்கிறார்!!
விரைந்து முடிவு எடுங்கள் என்கிறபோது - சிலர் அதனை அவசரமாக முடிவு எடுத்துச் செயல் படுங்கள் என்று கூறுவதாக - அவசரப்பட்டு அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடும்.
அது தவறு.
ஒரு முறை அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து முதல் அமைச்சரான புதிதில் செய்தியாளர்கள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் (1969 - 1970இல்) ஒரு கேள்வி கேட்டனர்.
உங்கள் முடிவுகள் அவசர முடிவுகளாக இருக்கிறதே என்ற ஒரு கருத்து நிலவுகிறது - அதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டனர்.
உடனே 'பட்'டென்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார் முதலமைச்சர் கலைஞர்.
(கேள்வியை ஆங்கில நாளேட்டின் செய்தியாளர்தான் கேட்டார்).
"My decisions are not hasty decisions; only quick decisions" என்று கூறியதும் செய்தியாளர்கள் அசந்து போயினர்!
எனவே "அவசர முடிவு" என்பது வேறு - "விரைந்த முடிவு" என்பது வேறு.
இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்பது இதன் மூலம் புரிகிறதா?
அவசர முடிவு என்பது கால தாமதமின்றியது என்றாலும் பல அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்த பின்பு எடுத்த முடிவாகாது.
விரைந்த முடிவு என்பது பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பரிசீலித்து, பிறகு தயக்கத்திற்கு இடம் தராது முடிவு எடுத்து செயல் செய்தல்.
காலதாமதம் இல்லாதது மட்டுமல்ல, முதிர்ச்சி பெற்ற முடிவாகவும் அது அமைதலே விரைந்த முடிவு.
எனவே, 'விரைந்த முடிவு' என்பது நிறைந்த முடிவாகவும் - பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரிதும் துணை நிற்கும்!
துணிந்த பின் எண்ணாதீர்!
காலத்தாழ்வு பண்ணாதீர்!
என்பதே இதன் முக்கிய கருத்து.
இதைக் கற்றால் மட்டும் போதாதது.
'நிற்க அதற்குத் தக' என்ற முறையில் செயல்பட்டு வாழ்வில் உயர முயற்சிப்போம் - வாரீர்!
No comments:
Post a Comment