தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவி னங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசைப்பற்றி போகிற இடங்களில் எல்லாம் புழுதி வாரித் தூற்றிக் கொண்டு இருக்கிறார். காரணம் இண்டியா கூட்டணிக்கு தி.மு.க. முதுகெலும்பாக இருப்பது தான்.
அதேபோல ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதராமனும் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்கள் தி.மு.க. அரசால் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று பேசிச் சென்றுள்ளார்.
சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தக்க வகையில் பதில் கூறி யுள்ளார்.
ரூ.5,500 கோடி கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தது திமுக அரசு; இத்தகைய அரசைப்பற்றித்தான் பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடுகிறவர்கள் குறை கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நமது முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்களும் புள்ளி விவரங்களோடு - புழுதிவாரித் தூற்றுபவர்களுக்குத் தக்க வகையில் பதிலடி கொடுத்து, 'வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்று பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில் இடையில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக உள்ளே புகுந்து கோயில்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு இந்துக் கோயில்கள் கொண்டு வரப்பட்டதற்கு காரணமே - கோயில் சொத்துக்கள் பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டதுதான்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது கோவில் நிதிகளின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வர 1817ஆம் ஆண்டு சட்டம் க்ஷிமிமிஆவது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவ்ன்யூ போர்டுக்குள் கொண்டு வந்தது.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய மதங்களில் தலையிடுவ தில்லை என்னும் பொதுக் கொள்கையை வகுத்துக் கொண்டு கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி தன்னை விடுவித்துக் கொண்டது.
இததான் சந்தர்ப்பம் என்று கோயில்களில் பார்ப்பனர் கொள்ளை என்பது - கேள்வி கேட்பாரின்றி தலைவிரித்தாடியது.
இத்தகைய சூழலில் தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அற நிலையத்துறை என்ற அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது.
நீதிக்கட்சியை உருவாக்கிய மூவேந்தர்களுள் மூலவரான டாக்டர் சி. நடேசனார் சட்டப் பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
"கோயில் நிதிகளை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் நிர்வகிக்கிறார்கள் இதனால் அவ்வகுப்பாருள் இருக்கின்ற வேலை யில்லாதவர்கள் பயன் அடைகிறார்கள். அதே வகுப்பைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், மிகப் பெரும் அளவில் பயன் பெறுகிறார்கள். பேச்சு வழக்கில் இல்லாத இறந்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்க பாடசாலைகளை நடத்துகிறார்கள் - ஆனால் எல்லா சமயங்களாலும் போற்றப் பெறுகிற மொழியான தமிழைப் புறக்கணிக்கிறார்கள்" என்று அப்பட்டமான உண்மை களை சட்டப் பேரவையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.
'இந்து' ஏடு இதனை எதிர்த்து எழுதியதுண்டு.
இந்து சமய அறநிலையத்துறை மசோதா நீதிக்கட்சி அமைச் சரவையினால் பானகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது (Premier) 1923ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது.
பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் வைசிராய் ஒப்புதல் தரக் கால தாமதம் ஆனது.
1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி வெற்றி பெறவே இந்த மசோதா 1924ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. வைசியராயின் ஒப்புதல் பெற்று 1925ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது.
அப்போது சென்னை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார், நீதிக்கட்சியின் இந்த சட்டத்திற்குத் தம் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முழுக்க முழுக்க மலை விழுங்கி மகாதேவர்களாக இருந்த பார்ப்பனர்களின் கையை விட்டு கோயில்கள் சென்றுவிட்ட காரணத்தால், இந்த இந்து அறநிலையத்துறை ஒழிக்கப்பட்டு இந்துக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் போடுகின்றனர். பிஜேபியும் - ஆர்.எஸ்.எஸ். வட்டாரமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்து அறநிலையத்துறையை ஒழிப்பதே என்று சூளுரைக்கின்றனர்.
இதுபற்றி இந்து அறநிலையத்துறையில் பல்லாண்டுக் காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறீரங்கம் கோயில் இணை ஆணையராக இருந்த செயராமன் என்ன கூறுகிறார்?
"இந்து சமய அறநிலையத்துறை சட்டம் சில திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டபோது 1959இல் பூஜ்ஜியமாக இருந்து முதலீடு இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து, நிலை முதலீடாக மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக ரூ.300 கோடி வருமானம் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க் கூடக் கடன் கிடையாது. அதுபோல கோவில்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி போன்றவை வங்கிகளில் பல டன்கள் உள்ளன" (புதிய தலைமுறை - 8.8.2018) என்று குறிப்பிட்டுள்ளாரே!
இந்த நிலை மாற வேண்டும்; கோயில் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்து அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள் - உஷார்! உஷார்!!
இதில் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால் கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களிலும் இதே இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க. ஆளும் மகாராட்டிரம், உ.பி. ம.பி. மற்றும் ராஜஸ்தான் (காங்கிரஸ்) மாநிலங்களிலும் பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் என்ற அரசு நிர்வாகத்தின்கீழ்தான் கோயில்கள் இருக்கின்றன.
குஜராத் சோமநாதர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். உறுப்பினர்களாக எல்.கே. அத்வானி, அமித்ஷா இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறார்களே எப்படி?
No comments:
Post a Comment