ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! எனக்கென்ன பயம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! எனக்கென்ன பயம்?

இறுதி நாட்களில் பார்வதி அம்மாள்!

திராவிடர் கழகத்தின் செயல் வீராங்கனையாக, களப் போராளியாக தமிழ்நாடெங்கும் வலம் வந்தவர் க.பார்வதி அம்மா அவர்கள்! இயக்கமும், குடும்பமும் இருவேறல்ல என்பதை நூறு விழுக்காடும் நிரூபித்தவர்! 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 08.11.2023 அன்று சென்னையில் இயற்கை எய்தினார். மறுநாள் அவரது உடல் பெரியார் திடலுக்குக் கொண்டு வரப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. “என் உடலுக்கு யாரும் மாலை இடாதீர்கள். மாறாகப் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளியுங்கள்”, எனக் கூறி, இறந்த பிறகும் இயங்கியவர் அவர்! அவரின் வாழ்க்கை வரலாறு ஒரு நூல் வெளியிடும் அளவிற்குப் பெரியது. எனினும் இன்றைய இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஒரு சிறு தொகுப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்! 

பார்வதி அம்மா குறித்து தமது அனுபவங்களைத் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையர் வீ.மோகனா அம்மையாரிடம் கேட்ட போது, “பார்வதி அவர்களின் மறைவு இயக்கத்தினர் அனை வருக்குமே இழப்பு என்றாலும், மகளிரணி தோழர்களுக்குப் மிகப் பெரிய இழப்பாகும்! இயல்பான பொருளாதாரப் பின்னணியில் வாழ்ந்திருந்தாலும், இறுதிவரை உயர்வாகவே வாழ்ந்து மறைந்தவர்! 

முன்னோடியாக விளங்கியவர்

மகளிருக்கு முன்னோடியாக விளங்கியதுடன், பல ரையும் பேச்சாளர்களாக உருவாக்கியவர். பெண்கள் அனைவரும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் எனக் கடும் முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றவர்! ஈரோட்டில் 11.05.1980 இல் நடைபெற்ற மாநாட்டில் மாநில மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். பொறுப்புகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே கிடையாது; போராட்டங்கள் கிடையாது! அலு வலகம் செல்வது போல தினமும் பெரியார் திடலுக்கு வருகை தருவார். 

வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலகட்டத்திலே பேருந்தின் மூலம் தமிழ்நாடு முழுக்கச் செல்வார். ஒருமுறை திருச்சியில் மகளிரணி மாநாடு நடைபெற்றது. அதில் ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் கொடுத் தார்கள். அதில் சேர்ந்த பணத்தை திருச்சி தங்காத்தாள் மூலம் ஈ.வெ.ரா.ம.கலைமணி என்கிற பெண்ணுக்குக் கல்வி கட்டணம் செலுத்தினோம். தமிழ்நாடு முழுவதும் எங்கு நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் பார்வதி அவர்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு.

தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர் 

கடந்த 10 ஆண்டுகளாகவே உடல்நலன் குன்றிய நிலையில் இருந்தார்கள். நேரில் சென்றும், தொலைப்பேசி மூலமாகவும் அவ்வப்போது பேசிக் கொண்டே இருப்பேன். மிகவும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்த பெண்மணி அவர். தம் குழந்தைகள் அனைவருக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர். இறுதிவரை ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவருக்கு என் வீரவணக்கம்“, என வீ.மோகனா அம்மையார் கூறினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களின் வாழ்விணையர் வெற்றிச்செல்வி அவர்களிடம், கேட்டபோது, “1978 இல் நாங்கள் சென்னைக்கு வந்த புதிதில் எங்களின் முதல் சொந்தம் பார்வதி - கணேசன் குடும்பம் தான்! இருவரும் அடிக்கடி திடலுக்கு வருவார்கள். பல நாட்களில் பிள்ளைகளையும் அழைத்து வருவார்கள். எங்கள் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து விளையாடு வார்கள். 

கணேசன் அவர்கள் மிக இயல்பான, அதேநேரம் எளிய மனிதர். அடுப்படி வரை வந்து என்ன இருக்கிறதோ, தேவை யானதை எடுத்துச் சாப்பிடுவார். மணியம்மையார், ஆசிரி யர் இருவரிடமும் நல்ல தொடர்பில் இருந்தார்கள். மகளிரணி யைச் சிறப்பாகக் கட்டமைத்ததில் பார்வதி அவர்களின் பங்கு மகத்தானது. தமிழ்நாடு முழுவதும் நிறைய பயணம் செய்தவர். குடும்ப ரீதியாக இயக்கத் தோழர்களிடம் பழகக் கூடியவர். தமிழ்நாட்டில் எங்கு மாநாடுகள் நடந்தாலும் ஒரு வாரம் முன்பே சென்று களப்பணி ஆற்றுவது, நன்கொடை திரட்டுவது, துண்டறிக்கைக் கொடுப்பது என முழுவீச்சில் செயல்படுவார்.

களப்பணி ஆற்றுவதில்...

கணேசன் அவர்கள் இறந்ததற்குப் பிறகும் கூட 

க.பார்வதி பெரியார் திடலுக்கு வருகை தருவது, வெளியூர் பயணங்கள் எனத் தொடர்ச்சியாகப் பணியாற்றினார். எப்போதாவது மனக் குறைகள் ஏற்படுகையில் என்னிடம் பகிர்ந்து கொள்வார். ஆனால் ஒரு போதும் பிறர் குறித்து அவர் குறை சொன்னதே கிடையாது. மேலும் யாரிடமும், எதற்காகவும் கோபம் கொள்ள மாட்டார்! எனக்கு மிகச் சிறந்த தோழமையாக விளங்கியவர்! தமது 4 பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததார். அதில் 3 இயக்க உறவுக்குள் நடந் தவை! 

சென்னையில் மாதாமாதம் மகளிரணி கூட்டத்தை நடத்தியவர். மகளிர் ஏழெட்டு பேர் சேர்ந்து மும்பை, மைசூர், பெங்களூர், கேரளா வைக்கம், டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா, சிம்லா, குலு மணாலி போன்ற இடங் களுக்குச் சென்று வந்திருக்கிறோம்.

பின்னாட்களில் மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு, மிகுந்த இன்னலுக்கு ஆளானார். ஒருமுறை சிகிச்சை முடித்து திடலில் தங்கி இருந்தார். உணவுகள் தயாரித்துக் கொடுத்து, அதுசமயம் நானும் கவனித்துக் கொண்டேன். உடல்நலன் குன்றிய போதும் 10 நாட்களுக்கு ஒருமுறை அவசியம் பேசிவிடுவார். திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லையே என வருத்தப்படுவார். நிகழ்ச்சி முடிந்ததும் அதுகுறித்து விசாரிப்பார். யார், யார் வந்தார்கள்? எப்படி நடந்தது? என ஆர்வமாகக் கேட்பார். 

மறைவிற்கு 4 நான்கு நாட்களுக்கு முன்பு கூட பேசினார். அவரின் சிந்தனைகளும், எண்ணங்களும் பெரியார் திடலைச் சுற்றியே இருந்தது! இறுதிவரை அது மாறவே இல்லை! என்றும் நினைவில் வாழும் பார்வதி அவர்களுக்கு எனது வீர வணக்கம்“, என வெற்றிச்செல்வி கூறினார்.

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களிடம் கேட்டபோது, “சுயமரியா தைச் சுடரொளியாக, பெரியார் பெருந்தொண்டராகத் தன் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார் பார்வதி அம்மா! இளம் வயதிலேயே அவரை நான் அறிவேன். அவரின் இணையர் மறைந்த கணேசன் அவர்கள் வட சென்னை பொறுப் பா ளராக இருந்தவர். மிகச் சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர். அப்போது வட சென்னை பெரிய பகுதி. மாவட்டங்களாகப் பிரிக்கப் படாத காலகட்டம். 

சிறந்த கொள்கை குடும்பம்

நான் பள்ளி இறுதி வகுப்பு முடித்த நேரத்தில், பார்வதி அம்மா எனது தந்தைக்குக் கடிதம் எழுதி, சென்னையில் நடைபெறும் 5 பொதுக் கூட்டங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நானும் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து பார்வதி அம்மா வீட்டில் தங்கி யிருந்து கூட்டங்களுக்குச் செல்வேன். பார்வதி அம்மாவின் பிள்ளைகளோடு நானும் ஒருவராக இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் மூத்த பிள்ளையாக இருந்தேன். அது ஒரு சிறந்த கொள்கைக் குடும்ப அனுபவம்!

அந்தக் காலக் கட்டத்தில் பொதுக் கூட்டங்கள் அதிகம் நடைபெறும். ஏழுகிணறு, வியாசர்பாடி, பெரம்பூர், மூலக் கடை, எருக்கஞ்சேரி, செம்பியம் திருவொற்றியூர், பழைய வண்ணை, புதுவண்ணை, கல்மண்டபம், இராயபுரம் என அனைத்து இடங்களிலும் கூட்டங்கள் நடைபெறும். ஏற்பாடு களை பார்வதி அம்மாவே முன்னின்று செய்வார். செலவுகள் குறித்து ஒருபோதும் அவர்கள் கவலைப்பட்டது கிடையாது.

என்னை ஒப்படைத்தார்

சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரவலாக என்னை அழைத்துப் போயிருக்கிறார்கள். நாகர்கோயில் கிருஷ்ணேஸ்வரி அம்மா வீட்டில் தங்கியிருந்தும் பிரச் சாரங்கள் செய்தோம். ஒருமுறை பழனியில் கூட்டம். அங்கே ஆசிரியர் அவர்கள் வந்திருந்தார்கள். பார்வதி மற்றும் திரு மகள் அம்மா இருவரிடமும் ஆசிரியர் அவர்கள் என்னை ஒப்படைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இன்று போல் அன்றைக்கு வசதியான பயணங்கள் இல்லை. முழுக்கவும் பேருந்து பயணம். அதுவும் நீண்ட நேரம் பிடிக்கும். பொதுவாகப் பேருந்து பயணங்களில் எனக்கு வாந்தி வரும். எனவே பயணம் தொடங்கியவுடனே என்னைத் தூங்க வைத்து விடுவார்கள். அதுவும் அவர் களின் மடியிலேயே தூங்கிவிடுவேன். அவர்களின் அந்த அணுகுமுறை, வழிகாட்டல் தான் பின்னாளில் என்னை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவிற்று! என்னை மட்டு மல்ல, டெய்சி மணியம்மை உள்ளிட்ட பலரையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். 

அஞ்சியதில்லை

சிவகங்கை இராமலெட்சுமி அம்மா வீட்டில் தங்கி காரைக்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பேசியுள்ளோம். மகளிர் மட்டுமே பயணம் செய்த காலங்கள் நிறைய உண்டு. சில இடங்களில் எதிர்ப்புகள் கடுமையாக இருக்கும். திருப்பாச்சேத்தி கூட்டத்திற்கு முதுகில் மறைத்து வைத்த அரிவாளுடன் ஒருவர் வந்தார். எனினும் பார்வதி மற்றும் திருமகள் அம்மா போன்றோரெல்லாம் ஒருக்காலும் அதற்கு அஞ்சியதில்லை. 

பார்வதி அம்மா போன்ற பலரும் மகளிரணிக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். பலரையும் உருவாக் கினார்கள். பெண்கள் இயல்பாக, துணிச்சலாக, மக்கள் தொண்டு செய்ய வர வேண்டும் என்பது அவர்களின் முனைப்பாக இருந்தது. பதவிகளுக்கு அவர்கள் ஆசைப் பட்டதே கிடையாது.

சில மாதங்களுக்கு முன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சந்தித்தேன், “எப்படி இருக்கிறீர்கள்? பயம் ஒன்றும் இல்லைதானே, தைரியமாக இருங்கள்”, என்று கூறினேன். அவர்களோ, “எனக்கென்ன பயம்? ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! அவர்தான் நம்பிக்கை! என உணர்ச்சிகரமாகக் கூறினார். அந்தளவிற்கு இயக்கம் வேறு; குடும்பம் வேறு என்றில்லாமல் வாழ்ந்தவர். பார்வதி அம்மா குறித்துப் பேச இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அவர் களுக்கு நம் வீரவணக்கம்!”, என்றார் வழக்குரைஞர் அருள் மொழி.

குருதி உறவுகள்போல்...

பெரியார் களம் தலைவரும், தாம்பரம் மாவட்டத் திரா விடர் கழக மகளிரணி தலைவருமான இறைவி அவர்கள் கூறும் போது, பார்வதி அம்மா என்று அழைக்கப்படுபவர், எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பார்வதி அத்தை. எங்கள் தந்தையுடன் பிறந்த ஒருவராகவே அவர்களைக் கருதுகிறோம். எங்களின் இரண்டு குடும்பங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உறவுகளும் பரஸ்பரம் குருதி உறவுகள் போலவே இருக்கிறோம்!

1970களில் நாங்கள் திருப்பூரில் இருந்தோம். அம்மா திருமகள் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். சனி, ஞாயிறுகளில் பிரச்சாரம், சுற்றுப்பயணம் எனக் கிளம்பி விடுவார்கள். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் தான் பார்வதி அத்தை தங்கி இருப்பார்கள். 

வீடே ஒரு பயிற்சி வகுப்பு

கூட்டங்களில் எந்தெந்தத் தலைப்புகளில் பேசுவது, எவற்றைப் பேசுவது என்பது குறித்து எங்கள் தந்தை இறை யனார் அவர்கள் ஆலோசனை கூறுவார்கள். கூட்டங்களுக் குச் சென்று வந்த பிறகு பார்வதி அத்தை, தான் பேசியதைக் கூறி, மேலும் அய்யங்கள் இருந்தால் கேட்டுக் கொள்வார்கள். வீடே ஒரு பயிற்சி வகுப்பு போல இருக்கும்!

பார்வதி அத்தை, திருமகள் அம்மா, மனோரஞ்சிதம் அம்மா, தங்கமணி அம்மா போன்றோர் தமிழ்நாடு முழு வதும் சுற்றுப்பயணம் செல்வார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள இயக்கத்தினர் வீடுகளில் தங்கிக் கொள்வார்கள். எவ்வளவு வசதிக் குறைவாக இருந்தாலும் அங்கேயே தங்கி, அங்கு அளிக்கப்படும் உணவினை உண்டு, அந்தந்தக் குடும்பங்களுடன் ஒரு உறவினை ஏற் படுத்திக் கொள்வார்கள்.

உழைப்பிற்கு ஈடு கொடுக்க...

மிகவும் எளிமையான, சுறுசுறுப்பான பெண்ணாக இருந் தவர் பார்வதி அத்தை. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக் கும் சூழ்நிலையிலும், கவலை இல்லாமல் இயக்கப் பணி களைச் செய்தவர். எங்களைப் போன்றவர்கள் அவருடன் சுற்றுப் பயணத்திற்கு செல்லும் பொழுது, அவரின் உழைப் பிற்கு ஈடு கொடுக்க முடியாது.

இயக்கத்திற்குப் பெண்களை அழைத்து வர வேண்டி யதன் காரணங்களையும், அடுத்த தலைமுறைப் பெண்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அழகாக எடுத்துச் சொல்வார்கள். மாநாடுகள், விடுதலை வளர்ச்சி நிதி, மலர் வெளியீடு என எந்த ஒன்றிற்கும் நன்கொடை திரட்டும் வேலையைச் சிறப்பாக செய்வார்கள். அதேபோல நமது இயக்க வெளியீடுகள், துண்டுப் பிரசுரங் களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள்.

எங்களைப் போன்றோருக்கு உற்சாகம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் இழப்பு எங்களை மிகவும் பாதித்த செய்தியாகவே இருக்கிறது. பார்வதி அத் தைக்கு எங்கள் வீர வணக்கம்!”, என்று கூறினார் இறைவி.

சிறைக்கும் சென்றுள்ளேன்

கடலூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ரமாபிரபா அவர்கள் கூறும் போது, எனக்கு 16 வயது இருக்கும் போது பார்வதி அம்மாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. அன்றிலிருந்து இறுதிவரை தொடர்பிலேயே இருந்தோம். 

ஏராளமான மகளிரணித் தோழர்களை அவர்கள் இயக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் மாநில அளவிலான சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். தவிர மண்டல் கமிஷன் ஆர்ப்பாட்டம், டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாடு, டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா, கேரளா வைக்கம் மாநாடு போன்ற வற்றில் அவர்களுடன் பஙகேற்றேன். பல்வேறு போராட் டங்களில் பங்கேற்று அய்ந்து முறை அவர்களுடன் சிறைக் கும் சென்றுள்ளேன். 

பார்வதி அம்மா அவர்களுக்கு வயது 76, வெற்றிச்செல்வி அம்மாவுக்கு வயது 75 -அய் முன்னிட்டு மகளிரணி சார்பில் பெரியார் திடலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்தோம். 

மறையும் வரையிலும் விடுதலை வாசித்தது, விடுதலை சந்தா சேர்த்தது என அவர்களின் இயக்கச் செயல்பாடுகள் மெய்சிலிர்ப்பவை. உதாரணமாக மகளிரணி சார்பில் ஆசிரியரின் 91 ஆவது பிறந்த நாள் மலருக்கு தோழர்களிடம் பேசி விளம்பரம் கேட்டுள்ளார்கள். கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் ஆசிரியர் பங்கேற்ற ஒரு பரப்புரைக் கூட்டத்தில் மகளிர் நாங்கள் அதிக நூல்கள் விற்பனை செய்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றோம்.

புகழ் நிலைத்திருக்கும்...

தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தவர்கள் அவர்கள். மறைவிற்கு மூன்று நாட்கள் முன்பு கூட பேசினார்கள். என்றும் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும். அவர்களுக்கு எங்கள் வீரவணக்கம்!”, என்றார் ரமாபிரபா.

கழகப் பேச்சாளர் டெய்சி மணியம்மை அவர்களிடம் கேட்டபோது, கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தவர் பார்வதி அக்கா.16 வயதில் அவருக்குத் திருமணம் முடிந்தது. ஓரிரு ஆண்டுகளிலே கொள்கையைப் புரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு, முழுமையாகத் தன்னை இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர். 

குடும்பச் சூழல் காரணமாக அவர் படித்தது 8 ஆம் வகுப்பு என்றாலும், இயக்க நூல்கள் அனைத்தையும் வாங்கி வாசித்து விடுவார். நூலில் உள்ள கருத்துகளைத் தம் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருக் குமே தெளிவுற எடுத்துக் கூறுவார்கள். 

தீவிர செயல்பாடுகளால்...

கொள்கைப் பற்று, இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளைப் பார்த்த ஆசிரியர் அவர்கள் மாநில மகளிரணியை உரு வாக்கி அதன் செயலாளராக பார்வதி அக்காவை நியமித் தார்கள். அதன் பிறகு தனது பணியை மேலும் தீவிரமாக முன்னெடுத்தார்கள். ஒவ்வொரு தோழரிடமும் சென்று உங்கள் இணையர், சகோதரிகள் மற்றும் குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வாருங்கள் என வலியுறுத்துவார்கள். இதை ஒரு தொடர் முயற்சியாகவே செய்தார்கள். 

நாளடைவில் இயக்க நிகழ்ச்சிகளுக்கு மகளிர் வருவது அதிகமானது. பிறகு மகளிரணி பொறுப்புகளும் கூடின. தனிப்பட்ட தோழமை என்பதைவிட குடும்பம், குடும்பமாகப் பழகுவதை அவர் விரும்பினார்! அதனாலே பல விசயங் களும் சாத்தியம் ஆகின. இயக்கக் குடும்பத்தில் யாருக்காவது பிரச்சினை என்றாலோ, உடல்நலக் குறைவு என்றாலோ முதல் ஆளாக பார்வதி அக்கா அங்கே இருப்பார்கள். 

அன்பும், பாசமும் பயணித்த குடும்பம்

அவர்களின் அன்பும், பாசமும் பயணித்த குடும்பங்களில் ஒன்று தான் எங்கள் குடும்பமும்! எனது தந்தையார் பெரியார் பெருந்தொண்டர் சமர் அவர்கள் நான் 6 ஆம் வகுப்புப் படிக்கும் போதே மேடையில் பேசச் சொல்வார். அதே காலக் கட்டத்தில் பள்ளி விடுமுறையின் போது பார்வதி அக்காவுடன் நானும் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தேன். என் அப்பா பெரியார் திடலில் வைத்து பார்வதி அக்கா கையில் என்னை ஒப்படைத்தார்கள். ஒரு தாய் போல அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அந்தக் குணாதிசயங்கள் இன்னும் என்னிடம் உள்ளன. பிறரிடம் அன்போடும், பண்போடும், அக்கறையோடும் நடந்து கொள்வது, கழகக் குடும்பங்களை உறவுக் குடும்பமாகப் பாவிப்பது, அதிலும் எப்படி வரையறை அமைத்துக் கொள்வது, பிரச்சினைகளைக் கோபம் இன்றி பக்குவமாக அணுகும் தன்மை, நம்மை யாரேனும் கேலி, கிண்டல் செய்தால் அதை எதிர் கொண்டு எப்படி கடமையாற்றுவது என அவர்களிடம் கற்ற விசயங்கள் நிறைய! 

கற்ற பாடங்கள்...

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகளிர் பாசறை அமைப்பை உருவாக்கிய போது, அதன் மாநிலச் செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கினார்கள். பார்வதி அக்கா போன்றோரிடம் கற்ற பாடங்கள் அப்போது துணையாய் இருந்தன. தலைமைக் கழகத்தின் ஆர்ப்பாட்டம், போராட் டம், நிகழ்ச்சிகள், சிறைவாசம் என ஒன்றைக் கூட பார்வதி அக்கா தவறவிட்டதில்லை. 

இயக்க வரலாற்றில் அவர்கள் ஒரு செயல் வீராங்கனை! அம்மையாருக்கு என் வீரவணக்கம்!”, என டெய்சி மணியம்மை கூறினார்.

பார்வதி அம்மா அவர்களின் மகன்கள் மணிமாறன், செல்வமணி இருவரிடமும் பேசும் போது, எங்கள் அப்பா கணேசன் அவர்கள் தொடக்கம் முதலே பெரியார் கொள்கையில் இருந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகுதான் அம்மா இந்தச் சிந்தனைக்கு வந்தார்கள். மதுரையில் வசித்த நாங்கள் சென்னைக்கு இடம் மாறினோம். இங்கு வந்த பிறகு அப்பா வட சென்னை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக் கப்பட்டார்கள். உடல்நலம் சரியின்றி 48 வயதிலேயே அப்பா மறைந்துவிட்டார்கள்.

உதவி மிகப்பெரியது

ஓரிரு ஆண்டுகள் கழித்து இயக்கத்தில் அம்மா தீவிரமாக வேலை செய்ய தொடங்கினார்கள். எங்கள் பாட்டிதான் எங்களைப் பார்த்துக் கொண்டார்கள்.‌ அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா திடலில் 2020ஆம் ஆண்டு நடைபெற்றது. அதுதான் அம்மா முழுமையாகப் பங்கேற்ற கடைசிப் பொது நிகழ்வு. அதன்பிறகு மூன்று முறை ஆபத்தான நிலைக்குச் சென்று வந்தார்கள். அந்தக் கால கட்டங்களில் ஆசிரியர் அய்யா அவர்களின் உதவி மிகப் பெரியது.

இயக்கமும், குடும்பமும் வெவ்வேறல்ல என்பதாகவே எங்கள் பெற்றோர் செயல்பட்டார்கள். எங்கள் சகோதரி மேகலா அவர்களுக்கு வாய் பேச முடியாது. எனினும் வட சென்னையைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எம்.எஸ்.மணி அவர்கள் தம் மகனுக்கு, எங்கள் தங்கையைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். கல்லூரியில் படிக்கிறார்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத விசயங்களைப் பெரியாரியம் தான் செய்தது!

மறைவிற்குப் பிறகு, “தன் உடலை பெரியார் திடல் கொண்டு செல்ல வேண்டும், யாரும் மாலை அணிவிக்கக் கூடாது, அதற்குப் பதிலாக நன்கொடை பெறப்பட்டு, அதை பெரியார் உலகத்திற்கு வழங்க வேண்டும்“, என விரும் பினார்கள். அவர்கள் எண்ணப்படியே நடத்தினோம்.

அக்கறை காட்டியது

எங்கள் வாழ்விணையர்கள் இருவரும், இறுதிவரை அம்மா உடல்நலனில் அக்கறை காட்டியது இங்கு குறிப்பிடத் தக்கது.  நக்கீரன் பத்திரிகை சார்பாக 2018 ஆம் ஆண்டு வாழ் நாள் சாதனையாளர் விருதை அம்மா பெற்றார். இறந்த பிறகு அவரின் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்படும் வகையில் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது”, என தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது. அந்த வகையில் இந்த இயக்கத்தில் மகளிர் பங்கு என்பது பெரும் வரலாறு! பார்வதி அம்மாவும் அந்தச் சரித்திரத்தில் இடம் பெற்றவர்தான்! 

வீரவணக்கம்!

தொகுப்பு: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment