''உதவும் மனப்பான்மை...!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

''உதவும் மனப்பான்மை...!''

நமது வாழ்வில் நினைத்தும் கூடப் பார்க்காத இழப்புகள் நம்மை  முடக்கும். கோர விபத்துக்கள் வாழ்வைச் சிதைக்கும்...

அத்தகைய பேரிடர் சூழலில் ஒரு சிலர் மனம் சோர்ந்து போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு மீண்டு சாதனையாளர்களாக மிளிர்வதை பார்க்கின்றோம். அவர்கள் மனம் உடைந்து தடுமாறுபவர்க்கு வழிகாட்டும் உந்து சக்தியாகவும் மாறி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள்...

ஒரு விபத்தால் ஒருவரின் உடலை மாற்றுத் திறனாளியாக்க முடியும். ஆனால்!, அவர்களது கனவை முடக்க முடியாது. அவரது ஊக்கத்தை, உற்சாகத்தை எந்த எதிர்ப்புகளாலும் தடுத்து நிறுத்த முடியாது....

அருணிமா சின்ஹா, 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். தேசிய கைப்பந்து வீராங்கனை.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி CSIF பாதுகாப்புப் படையின் தேர்வில் கலந்து கொள்வதற்காகப் பத்மாவதி ரயிலில் லக்னோவிலிருந்து டில்லி நோக்கிப் பயணப்பட்டார்.

அவருக்கு ஒரு துயரமான நிகழ்வு, ரயிலில் திடீரென அரங்கேறியது. சில வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைத் தாக்கி கைப்பையையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறிக்க முயன்றனர்...

அந்த நிகழ்வை அவர் நினைவு கூரும்போது, ''நான் முழு வலிமையுடன் அவர்களை எதிர்த்துப் போராடினேன். அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். கால்களால் மிதிக்கப் பட்டு, ஓடும் வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன். அடுத்த இணைத் தண்டவாளத்தில் விழுந்தேன். என்னால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. அந்த எதிர்ப் பாதையில் ரயில் வந்தது. நான் எழுந்து தப்பிக்க முயன்றேன். என்னால் இயலவில்லை. முழு முயற்சியுடன் புரண்டு விழுந்தேன். ஒரு விநாடியில்  எதிர்ப்புறம் வந்த ரயிலின் சக்கரங்கள் எனது இடது காலின் மேல் ஏறிச் சுற்றிச் சுழன்று சென்றது..."

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் நாள் டில்லி  AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. அவரது துண்டிக்கப்பட்ட இடது காலில்  கம்பியுடன் இணைக்கப்பட்ட செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. வலது காலின் முறிவு, முதுகுத் தண்டுவடத்தின் காயங்கள் குணப்படுத்தப்பட்டது.

அவருக்கு மனதில் ஒரு தீர்மானம் உதித்தது. தனது சுயமதிப்பைக் காத்திட உறுதி பூண்டார். ஒரு மாபெரும் கனவு பிறந்தது. அது "ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தை மிதிக்க வேண்டும்" எனும் தீர்க்கமான இலக்கு.

செயற்கைக் காலுடன் கடும் பயிற்சி. விடா முயற்சி தொடர்ந்தது.  பலமுறை சறுக்கி விழுந்தார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட அனுபவங்கள் நேர்ந்தது. காயங்கள் ஏற்பட்டது. இந்த பயிற்சிக் காலம் கடுமையாக இருந்தது. ஆனால்!, எதுவும் அவரது மன உறுதியையும் தீர்மானத்தையும் அசைக்க முடியவில்லை...

மனவுறுதியுடன் அஞ்சாது எவரெஸ்ட் சிகரம் ஏறினார், முன்னேறினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில், 2013 மே மாதம் 21ஆம் தேதி காலை 10.55 மணியளவில் எவரெஸ்ட் அவரது காலின் கீழ் இருந்தது.

அருணிமாவின் பார்வை விரிவடைந்தது 

"நான் எனது கனவுகளை அடைந்து விட்டேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப் பட்டு வாழும் ஏழை மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உழைக்க விரும்புகிறேன். அவர்களும் பரிதாபமான பார்வையிலிருந்து விடு பட்டு சுய மதிப்புடன் வாழவேண்டும்".

அவர்களுக்காக  "Shaheed Chandra Shekhar Vikalang Khel Acadamy" எனும் இலவச விளையாட்டுப் பயிற்சி அமைப்பை நிறுவினார். தனக்குக் கிடைத்த பரிசுகள், சுய முன்னேற்ற ஊக்கமளிக்கும் கருத் தரங்குகளில் பேசுவதால் கிடைக்கும் வருமானம் என முழுவதையும் அதன் வளர்ச்சிக்காக அளித்தார்.

ஆம் நண்பர்களே...!

வாழ்வை நொறுக்கிப் போடும் மன வலியிலிருந்து மீள்வதே ஓர் சாதனை. அத்துடன் அதுபோன்ற வலியை அனுபவிக்கும் துயருற்றவரின் கண்ணீரைத் துடைப்பதையும், அவர்கள் கனவை நனவாக்க உழைப்பது என, தனது வாழ்வை அர்ப்பணிப்பதும் மாபெரும் சாதனை...!

உயர்ந்த சாதனைகள் வலிகளாலே அடையப்படுகிறது. சிறந்த வரலாறுகள் அர்ப்பணிப்பாலே எழுதப்படுகிறது.  அவை காலம் கடந்தும் பேசப்படுகிறது. நிலைத்தும் நிற்கிறது...!!

- உடுமலை சு.தண்டபாணி

தகவல்: திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்தி


No comments:

Post a Comment