ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அண்மையில் மறைவுற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் தர முட்டுக்கட்டை போட்ட ஆளுநரின் இன்றைய மனநிலை எப்படி இருக்கும்?

- பா.கண்மணி, ஓசூர்

பதில் 1: இந்த அளவுக்கு உங்கள் சிந்தனையையும், என் நேரத்தையும் நீங்கள் வீணாக்கியிருக்கக் கூடாது. வேறு எத்தனையோ செய்திகள் உள்ளனவே!

---

கேள்வி 2: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையும் - அண்ணாமலையின் 'யாத்திரை'யையும் ஒப்பீடு செய்வது முறையா?

- சி.சிவாஜி, தருமபுரி

பதில் 2: முறையல்ல; இயற்கையானதும், செயற்கையானதும் எப்போதும் வேறுபட்டவைகள்தானே!

---

கேள்வி 3: அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ‘இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக இருக்குமா?

- நே.சக்தி, வேலூர்

பதில் 3: பா.ஜ.க. - பிரதமர் மோடியின் தேர்தல் பேச்சுகள் - இலவச அறிவிப்பு திடீர் மழைகள் எல்லாம் தோல்வி பயத்திலிருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ள அச்சத்துடனே எடுக்கும் நிர்ப்பந்தங்களே அவை என்கிறபோது 5இல் பெரும் பகுதியில் காங்கிரஸ் ஆட்சி அமையவே வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது!

---

கேள்வி 4: தி.மு.க. இளைஞரணியின் செயலாளர் உதயநிதியின் இருசக்கர ஊர்திப் பிரச்சாரம்- மாநில உரிமை மீட்புப் பயணம் பயன் தருமா?

- மு.சிவசக்தி, கள்ளக்குறிச்சி

பதில் 4: அப்பயணத்தின் தலைப்பே மிக 'சுருக்'கென்று லட்சியப் பயணம் - மாநில உரிமை மீட்புக்கான  பலன் தரும்  பயணம் என்பதைப் பறை சாற்றுகிறதே! "நாங்கள் பெரியாரின் பேரன்கள், கோட்சேயின் பேரன்களை எதிர்கொள்வதே இந்த இலட்சியப் பயணம்" என்ற பிரகடனமே எதிரிகளை அதிரவைக்கும் லட்சிய முழக்கப் பயணம்தானே!

---

கேள்வி 5: 'திராவிட மாடல்' ஆட்சியின் மகளிர் உரிமைத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது குறித்து தங்கள் கருத்து?

- சு.ஆனந்த், வெள்ளவேடு

பதில் 5: அத்திட்டம் எடுத்துக்காட்டானது என்பதை அவர்கள் அனைவரும் மறைமுகமாகப் பாராட்டி, அதனால் தாங்களும் பயன் பெறப் பாடமாக அமைந்துள்ளது என்ற உண்மையின் வெளிச்சமே அது!

---

கேள்வி 6: வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி தங்களுக்கு 91 வயது - அதுகுறித்து தங்களது தோழர்களுக்கு தங்களுடைய வேண்டுகோள் என்ன?

- மு.கதிரவன், செஞ்சி

பதில் 6: அப்படியா? நினைவூட்டியமைக்கு நன்றி! இப்படி வயது நினைப்பின்றிப் பணியாற்றுங்கள் - கடமையாற்றுங்கள் - தொண்டாற்றுங்கள் சமூகத்திற்கு என்பதே! பெரியார் புத்தியைத் தேடுங்கள் - நாடுங்கள், அதற்காக எப்போதும் ஓடுங்கள்!

---

கேள்வி 7: பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இப்பொழுது சமூகநீதிபற்றி பேசுகிறார்களே, இது எதைக் காட்டுகிறது?

- கே.கர்ணன், கண்ணந்தங்குடி

பதில் 7: 5 மாநில சட்டமன்றத் தேர்தல் - அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றி மிகவும் சந்தேகத்திற்குரியதாகி வருவதை அவர்கள் உணர்ந்துள்ளதையே அது காட்டுகிறது.

---

கேள்வி 8: தமிழ்நாட்டு மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களுடைய பொருட்கள் சூறையாடப்படுவதும் தொடர்கிறதே, இதற்கு முற்றுப்புள்ளி கிடையாதா?

- வே.இராமலிங்கம், செங்கல்பட்டு

பதில் 8: ஒன்றிய ஆட்சி மாற்றம் - இந்தியா கூட்டணி வெற்றி வந்தால் வற்புறுத்தி செயல்பட வைப்போம்!

---

கேள்வி 9: தமிழ்நாட்டைப் போன்றே பீகாரிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளதே?

- இரா.இராஜேந்திரன், மும்பை

பதில் 9: இந்தியா முழுவதிலும் இது வேகமாகப் பரவுவது இனி காலத்தின் கட்டாயம்!


No comments:

Post a Comment