பா.ஜ.க., அ.தி.மு.க. வெளிநடப்பு!
சென்னை,நவ.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்புமூலம் ஒரு மனதாக நிறைவேறியது.
தி.வேல்முருகன் (தவாக), ஈசுவரன் (கொமக), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), இராமச்சந்திரன் (சிபிஅய்), நாகை மாலி (சிபிஎம்), சிந்தனை செல்வன் (விசிக), கோ.க.மணி (பாமக), செல்வப் பெருந்தகை (காங்.) ஆகியோர் தமிழ்நாடு அரசினர் தனித் தீர்மானத்தை வரவேற்றும் ஆதரித்தும் பேசினர். பிஜேபி சார்பில் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை ஏற்கவில்லை எனக் கூறி பாஜக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
இருவேறு நிலைப்பாடுகளில்
இபிஎஸ்சும், ஓ.பிஎஸ்சும்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்த்தின்மீது பேசும்பொழுது தீர்மானத்தை ஆதரவளிப்பதாகவும், பின்னர் தமிழ்நாடு மீனவளப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெயலலிதா பெயரை நீக்கியதாகவும் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்வதாகக் கூறி, அஇஅதிமுக உறுப்பினர் களுடன் வெளிநடப்பு செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் கூறியதில் உண்மை இல்லை என்பதை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்று தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று (18.11.2023) சட்டமன்றம் கூடிய வுடன் மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரை, விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
அரசினர் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்புமூலம் ஒரு மனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
No comments:
Post a Comment