மணிப்பூர் மாநில கலவரத்தைவிட இஸ்ரேல் விவகாரத்தில் தான் பிரதமர் மோடிக்கு ஆர்வம் அதிகம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

மணிப்பூர் மாநில கலவரத்தைவிட இஸ்ரேல் விவகாரத்தில் தான் பிரதமர் மோடிக்கு ஆர்வம் அதிகம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அய்ஸ்வால், அக.17  நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆ-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இங்கு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கவும் 2 நாள் பயணமாகவும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (16.10.2023)மிசோரம் வந்தார். தலைநகர் அய்ஸ்வாலின் சன்மாரி சந்திப்பில் இருந்து ஆளுநர் மாளிகை வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து ஆளுநர் மாளிகை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. மணிப்பூர் தற்போது 2 மாநிலங்களாக உள்ளது. 

மக்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலி யல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். 

ஆனால் அங்கு பயணம் செய்வதை பிரதமர் முக்கியமாகக் கருதவில்லை. மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் வன்முறை வெடித்ததில் இருந்து அங்கு பிரதமர் செல்லவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். மணிப்பூரில் நடந்த வன்முறை, பிரச்சினையின் அறிகுறி மட்டுமே.இந்தியா என்ற கருத்தாக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி, நாட்டு மக்கள் மீது அடக்குமுறை நடத்தப்படுகிறது. எனது தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை, இந்த நாட்டின் ஒவ்வொரு மதம், கலாச்சாரம், மொழி. பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இருந்தது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

இதனிடையே மிசோரம் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment