"யானை வரும் பின்னே - மணியோசை வரும் முன்னே" என்பதுபோல, லடாக்கில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் மூலம், அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் எல்லாம் பிஜேபி பெரும் அடி வாங்கப் போகிறது என்ற மக்களின் மனோபாவம் தெரிந்து விட்டது.
மொத்தம் 26 தொகுதிகளில் பிஜேபிக்குக் கிடைத்த இடங்கள் இரண்டே இரண்டு தான். தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களை அள்ளிக் கொண்டு விட்டது.
அடுத்து தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவ., 17இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும், நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த ஞாயிறன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் தேதிகளை வெளியிட்டார்.
“கடந்த 40 நாள்களில் 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசு அமைப்புகளுடன் கலந்துரையாடினோம். மிசோரத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சத்தீஸ்கரில் 2.03 கோடி வாக்காளர்களும், மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்களும், தெலங்கானாவில் 3.17 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.
5 மாநில தேர்தல்களில் சுமார் 60 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) பங்கேற்பார்கள். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2900க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். 17,734 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 621 வாக்குச் சாவடிகள் பொதுப்பணித்துறை ஊழியர்களால் நிர்வகிக் கப்படும். மகளிர் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பில் 8,192 வாக்குச் சாவடிகள் இருக்கும். அய்ந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, 679 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
அய்ந்து மாநிலங்களின் எல்லைகளில் 940க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைகளைத் தாண்டி சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுகிறதா, மதுபானம், இலவசங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்படும்” என்றார்.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் 230 தொகுதிகளிலிருந்தும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் சட்டமன்றம் 200 இடங்களிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி 119 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராக மோதவுள்ளது.
90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்தில், காங்கிரஸ் பாஜகவுடன் மோதத் தயாராக உள்ளது, அதே நேரத்தில் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான மிசோரமின் 40 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இரு கட்சிகளும் மோதும் நிலை.
இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பதாண்டுக் கால மோடி தலைமையிலான பிஜேபி ஒன்றிய ஆட்சியின் சாதனை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என்று விரலை மடக்குவதற்கு என்று ஒன்றும் கிடையாது.
56 அங்குல மார்புள்ள ஒருவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மார்பைத் தூக்கி நீட்டி முழங்கியவர் - கொடுத்த வாக்குறுதியில் நிறைவேற்றிக் காட்டியது என்ன?
ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது முக்கியமான ஒன்று என்று யாரும் ஒப்புக் கொள்வார்கள். நடந்தது என்ன? பூஜ்ஜியம்தான். பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் அதானி, அம்பானிகாரர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதுதான் மிச்சம்!
அதானிக்கு நாள் ஒன்றுக்கு வருமானம் மட்டும் ரூ.6,000 கோடியாம். கேட்டாலோ, படித்தாலோ தலையைச் சுற்றுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் ஊழல் என்று ஓலமிட்டு ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் நிலைமை என்ன? 7 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி விட்டதே! வாயைத் திறந்தார்களா? மறுப்புக் கூறினார்களா? மவுன சாமியாராகி விட்டார்களே!
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் என்று வாங்கிய திமிங்கலங்கள் எல்லாம், வெளிநாடு சென்று மாட மாளிகைகளில் சொகுசு வாழ்க்கையில் அல்லவா திளைக்கிறார்கள்!
'நீட்' என்றும், ணிகீஷி என்றும் கூறி மேல் தட்டு உயர் ஜாதியினருக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அல்லவா இடங்களைக் கொடுத்து மகிழ்கிறது பிரதமர் மோடியின் பிஜேபி அரசு. தலைமுறை தலை முறையாகக் கல்வி வாய்ப்பு அற்ற மக்களை மண்டையில் அடிப்பதும், வறுமைச் சேற்றில் உழல்பவர்களை ஏறி மிதிப்பதும் தானே மோடி ஆட்சி! ஒவ்வொன்றுக்கும் எதிர்த்துப் போராட முடியுமா? எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு மக்களவைத் தேர்தலில் பிஜேபியை மண்ணைக் கவ்வ வைப்பதுதான்!
No comments:
Post a Comment