"விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

"விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!

 "விழுதல்" - பல வகை என்றாலும், கவனம்! கவனம்!!

முதியவர்களின் வாழ்க்கையில் முதுமை வளர வளர அவர்களது கவலையும், கவனமும் மற்றவர்கள் - மனைவி, மக்கள், சொத்து, சுற்றம் பற்றி அதிகம் ஈடுபாடு  கொள்வதற்குமுன், அவர்கள் தங்களது பாதுகாப்பில் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையொட்டி அதிக ஈடுபாடு கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானதாகும்!

போதிய உடற்பயிற்சி உடலுக்கு முதுமையில் தேவை; ஆனால் அதற்கு அவரவர் உடல் நிலை - உடற்கூறு - இவைகளுக்கு ஏற்ப - தங்களது சொந்த குடும்ப மருத்துவர் அறிவுரைக்கேற்ப 'அதிகமாக செய்தேன்' என்று பெருமைப்படாமல் - எனது உடல் நலத்திற்கேற்ப செய்தேன் என்ற திருப்தியே அவர்களது சரியான அளவுகோல் ஆகும்!

எதையும், எப்போதும், அளவோடு செய்தல், அனுபவித்தல், அளவு மிஞ்சாமல் நிறுத்திக் கொள்ளுவது நமதுபாதுகாப்புக்கான எளிய சிறந்த வழிமுறையாகும்!

அதனால்தான் முதியவர்களின் நடைப்பயிற்சி உடற்பயிற்சிகூட 20 மணித்துளிகள், வாரத்திற்கு 5 நாட்கள் - இப்படி மிகக் குறைந்த அளவு நிர்ண யமும்  - உடல் நல ஆய்வறிஞர்கள் - மருத்துவர்கள் - முதியவர்களுக்கு நல்ல ஆலோசனையாக வழங்குகிறார்கள்.

முதுமையடைந்தவர்கள் வெறுமனே உட்கார்ந்தே இருப்பதோ, படுத்தே இருப்பதோ, சதா தூங்குவதோ, இடையறாமல் தொலைக்காட்சி யிலோ, தொலைபேசி, அலைபேசியிலோ நேரத்தை இடைவெளி இல்லாமல் செலவு செய்தால் அதைவிட உடல் நலக்கேட்டிற்கான அவசர அழைப்பு வேறு இருக்கவே முடியாது!

முதுமையில் மற்றொரு முக்கிய கூடுதல் கவனம் செலுத்திட வேண்டிய அம்சம் (அன்றாட முக்கியத்துவம்) படுக்கையிலிருந்தோ, நடைப் பயிற்சியிலோ அல்லது கழிப்பறைக்கு போகும் போதோ, குளியல் அறையில் குளிக்கும் போதோ கீழே விழுதல் (திணீறீறீ) என்பது மிக மிக ஆபத்து நிறைந்ததாகும்? 

ஆண், பெண், மற்ற பாலருக்கும் வயது ஏற ஏற எலும்புகள் பலவீனமடைந்து தேய்மனமாகும் நிலை தவிர்க்க இயலாததே!

அதிலும் "ஆண்களைவிட, பெண்களுக்கு குறிப்பாக அதிக வயதாகும் பெண்மணிகளுக்கு எலும்பு பலம் குன்றி வருவது தவிர்க்க இயலாதது" என்று மருத்துவர்கள் விளக்குவார்கள். ஆஸ்டியோ பொரோசிஸ் (ளிstமீஷீஜீஷீக்ஷீஷீsவீs)  என்ற அந்த எலும்பு பலவீன நிலையில் லேசாக தடுக்கி விழுந்தால் இடுப்பு எலும்போ, மற்ற பகுதி எலும்புகளோ உடைந்து விடுவது சர்வ சாதார ணமாகி வருகிறது!

இதில் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக் கையுடன் இருப்பது மிகவும் தேவை.

கட்டிலிலிருந்து புரண்டு கீழே விழுந்து எலும்பு முறிவுகள் மூலம் பல .. அறுவை சிகிச்சை, கட்டுகள் மற்றும் நாற்காலியில் அமர்ந்தே செல்லுதல், படுத்தே இருத்தல் போன்றவை தவிர்க்க இயலாததாகி விடுகிறது!

கடந்த 2 மாதங்களில் பல நண்பர்கள் -  அறிமுகமான தோழர்கள் பலரும் கீழே விழுந்து இந்த எலும்பு முறிதலுக்கு ஆளாகி, மருத்துவமனை சென்று தக்க அறுவை சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வருகின்றனர் என்ற செய்தி எனக்கு வந்த வண்ணம் உள்ளது!

உள்ளத்தால் வருந்தி, மனவேதனையும் அடைந்து, அவர்கள் விரைந்து குணமாகி எழுந்து, நடமாட விழைந்து அமைதியுறும் நிலைதான்!

யாரும், வேண்டுமென்றே விழுவதில்லை; விபத்து எப்படி, எப்போது, எவருக்கு நிகழும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பது உண்மைதான்.

என்றாலும், அலட்சியமாக இல்லாமல் முடிந்தவரை கட்டிலில் ஓரமாகப் படுக்காமல், நடைப்பயிற்சியின்போதுகூட தனியே செல்லாமல், நம் உடல் என்ன கட்டளை இடுகிறது என்பதைப் புரிந்து நடந்து கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம் என்று முதியவர்கள் முடிவு எடுப்பது தேவையானதே. 

வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் விழு கிறோம். ஆனால் சமாளித்து எழுகிறோம் அது வேறு.

அதனால் ஆங்கிலத்தில் ஒரு அனுபவ மொழி உலா வருகிறது உலகம் முழுவதும் - "விழுவது முக்கியம் அல்ல." விரைவில் எழுவதே முக்கியம் முக்கியம்.

அதுவே ஒரு வகை விழுதல் (தோல்விகளைக் குறிக்கும் சொல்லாட்சி). அது உள்ளத்தைப் பொறுத்தது - உந்தி எழுந்து விடல் - இது முதிய வர்கள் விழுதல் - உடலைப் பொறுத்த வரை உடனடியாக எழுந்துவிட முடியாது. முதுமை அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறதே!

எனவே கவனம்! அதிக கவனம்!! முதிய நண்பர்களே!!

No comments:

Post a Comment