2011 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிக் கோப்பையைப் பெற்றது.
கிரிக்கெட் என்றாலே பார்ப்பனர்களின் கையடக்கக் கூடாரம் என்பது தெரிந்த கதை!
‘ஜீவா' என்ற திரைப்படம்கூட இதை மய்யப்படுத்தி வெளிவந்ததுண்டு.
ஆனால், இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்னவென்றால், பார்ப்பனரல்லாத கபில்தேவும், தோனியும் தலைமை வகித்த இந்திய கிரிக்கெட் அணிதான் இரண்டு முறையும் உலக வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்தது.
இன்று ஒரு செய்தி ‘தினத்தந்தி'யில் (பக்கம் 12) வெளிவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் சதம் அடித்து விடக்கூடாது என்று ஷேவாக் என்ற இந்தியக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கடவுளை வேண்டிக் கொண்டாராம்.
அதற்குக் காரணம் என்ன? இதே ஷேவாக்கே கூறுகிறார்.
‘‘85 ஓட்டங்கள் எடுத்து வெளியேறிய டெண்டுல்கரைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். உடனே டெண்டுல்கர், ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்' என்று கூறினார். சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன். ‘நான் சதம் அடித்தால் அணி தோற்றுவிடும், அதனால் சதத்துக்கு முன்பே அவுட் ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்' என்று சொன்னார். அவரது பதிலால் ஆச்சரியமடைந்த நான், எப்படி எனது மனதில் உள்ளதைச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்? இந்த உலகக்கோப்பையில் செஞ்சுரி (100 ஓட்டங்கள்) அடித்த இரு ஆட்டங்களிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதனால்தான் அப்படி நினைத்தேன் என்று கூறினேன். நல்லவேளையாக டெண்டுல்கர் சதம் அடிக்கவில்லை; அந்த ஆட்டத்தில் எங்களால் வெற்றி பெற முடிந்தது'' என்றார் ஷேவாக்.
தகுதி - திறமைபற்றி வாய் நீளம் காட்டும் கூட்டம், உண்மையிலேயே திறமையை வெளிப்படுத்த வேண்டிய விளையாட்டில் கூட மூடநம்பிக்கைப் புதைச் சேற்றில் மூழ்கிக் கிடப்பதை நினைத்தால், வாயால் சிரிக்க முடியுமா?
- மயிலாடன்
No comments:
Post a Comment