பேராசிரியர் நம்.சீனிவாசன்
பல்கலைக்கழகக் கருத்தரங்கம் தொடர்பாக அறிவிப்புகள் இணையத்தில் பரவிக் கொண்டிருந்தன. கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா குறித்த தகவல்கள் சுவரெழுத்துகளாக, அழைப்பிதழ்களாக, அறிவிப்புப் பதாகைகளாக, நாளிதழ் விளம்பரங்களாக பரவலாக தஞ்சை நகரில் பரபரப்பை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. திரா விடர் கழகக் கொடிகளும், திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகளும் வீதி எங்கும் நிறைந்திருந்தன.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு ‘‘இவர்தான் கலைஞர்'' பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடங்கியது.
வரவேற்புரை நிகழ்த்திய பதிவாளர் சிறீவித்யா அவர்களின் உரையில் கலைஞரின் பெருமை, கலைஞருக்கும் - வேந்தருக்குமான நட்பு மிளிர்ந்தது.
'மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்' எனும் தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி நிகழ்த்திய உரையில், கருத்துகள் பிரவாகமெடுத்தன. கலைஞர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் பெண்களின் முன் னேற்றத்திற்குச் செயல்படுத்திய திட்டங்களைப் பட் டியலிட்டார். அரங்கம் ஆச்சரியமாய்ச் செவிமடுத்தது.
'சமத்துவப் போராளி & குருகுல மாணவர்' என்ற தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன் ஆற்றிய உரையில், தந்தை பெரியாரால் கருத்தியல் அடிப் படையில் கலைஞர் உருவான வரலாறு கருத் தோவியமாய் அமைந்தது.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், 'கலைஞர் கலைத்துறைப் புரட்சியாளர்' எனும் தலைப்பில் சுவையான செய்திகளைச் சரளமாக அடுக் கினார். திரைப்படத்திற்கு உள்ளேயும், திரைப்படத்திற்கு வெளியேயும் கலைஞர் நிகழ்த்திய புரட்சியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். கலைத்துறைக்குப் போகாதவர் தந்தை பெரியார் . ஆனால் அவருடைய கருத்துகளைத் திரைத்துறையில் பரப்பியவர் கலைஞரே என்பதை சுப.வீ. அவர்கள் நேர்த்தியாய் விளக்கினார் . குறவஞ்சி , மனோகரா, மந்திரி குமாரி முதலிய படங் களிலிருந்து அவர் காட்டிய மேற்கோள்கள் அரங்கத்தை ஈர்த்தது; மாணவர்கள் கட்டுண்டு கிடந்தார்கள்.
'கலைஞர் எதிர் நீச்சல் வீரர்' எனும் தலைப்பில் உரையாற்றிய மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா அவர்கள், 'வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்குத் தேவையானவற்றை சட்டம் போட்டு சாதித்தவர் கலைஞர் என்றார். அவசர கால நிலையை எதிர்த்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கலைஞரின் எதிர்நீச்சலுக்குச் சான்று என்று உரைத்தார்.
வேந்தர் அவர்களின் நிறைவுரை கருத்தரங்கின் மகுடமாய் திகழ்ந்தது. அண்ணாவிற்குப் பிறகு கலைஞர்தான் தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவர் பெரியார் என்றுரைத்த வேந்தர் அவர்கள், அதற்கு தாமே சாட்சி என்று அறிவித்தது வரலாற்றில் மிக முக்கியமான பதிவாகும்.
கலைஞரின் உள்ளத்தை அண்ணாவின் சொற் களால் விவரித்த வேந்தர், ‘‘வாழும் பெரியார்'' என்றோ, ‘‘வாழும் கலைஞர்'' என்றோ யாரையும் சொல்லக்கூடாது என்ற வேண்டுகோளையும் விடுத்தார். காரணம், அவர்கள் மறையவில்லை!
பரந்த இந்திய நாட்டில் தமிழ்நாட்டைத் தவிர பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் வேறு எங்காவது உண்டா? என்று கருத்தரங்கில் வேந்தர் எழுப்பிய வினா இளைஞர்களின் உள்ளத்தில் சிந்தனை அலையை ஏற்படுத்தியது. கலைஞர் ‘மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று தொடங்கிய வேந்தர் அவர்கள், அதே கருத்தை மய்யப்படுத்தி முத்தாய்ப்பாக முடித்தது உரையின் நேர்த்தி எனலாம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா மாலையில் தஞ்சை மாநகராட்சியின் முத் தமிழறிஞர் கலைஞர் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவின் சிறப்புகளை அடுக்கிக் கொண் டே போகலாம். சிறப்பின் உச்சம் என்று எல்லோரும் கொண்டாடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரைதான்.
சிலிர்ப்பை ஏற்படுத்திய உணர்ச்சிக் காவியம்.
ஒவ்வொரு சொல்லையும் கவனமாகப் பயன்படுத்தினார்.
ஒவ்வொரு வார்த்தையிலும் கொள்கை ததும்பியது.
சிக்கனமாய் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பாராட்டும் போது மனம் திறந்தார். உள்ளன்போடு உரையாற்றினார். பாசத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார்.
' மிசா' காலத்தில் சிறைச்சாலை இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் ஆசிரியர் அய்யா என்றார்.
'தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி' என்று குறிப்பிட்டார்.
'கலைஞர் அவர்கள் இல்லாத நேரத்தில் எனக்கு கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான்' என்று பிரகடனம் செய்தார்.
' வீரமணி வென்றிடுக ' என்று ஓங்கி ஒலித்தார்.
'பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம்'என்று மொழிந்தார்.
நான் போக வேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத் தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கம்பீரமாகச் சொன்னார் , கல்வெட்டு போல உரைத்தார் , ' திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்தால் எங்கும் போவேன் , எப்பொழுதும் போவேன், எந்த நேரத்திலும் போவேன்' என்று உணர்ச்சிகரமாய் முழங்கியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது .
திராவிடர் கழகத் தொண்டர்கள் மட்டுமல்ல,தி.மு.கழகத் தொண்டர்கள் மட்டுமல்ல,
பொதுமக்களும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழர் தலைவர் அவர்களைப் பாராட்டிக்கொண்டிருந்தபோது,
பணிவாகவும், நாணத்துடனும் அமர்ந்திருந்த வீரமணி,
'தமிழ்நாடு அரசுதான் பெரியார்,
பெரியார்தான் தமிழ்நாடு அரசு'
என்று முதலமைச்சர் சொன்னபோது,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்
நிறைவான புன்னகையுடன் கரவொலி எழுப்பி
மகிழ்ச்சியில் திளைத்த காட்சியைக் காண முடிந்தது.
விழாவில் உரை நிகழ்த்திய தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, மேற்கு வங்க மேனாள் தலைமைச் செயலாளர் ஜி .பாலச்சந்திரன் ஆகியோரின் உரைகள் செறிவானதாகவும், சுருக்கமாகவும் இருந்தது. கலைஞர் வழியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்பற்றுவதை சான்றுகளுடன் தமிழர் தலைவர் அவர்கள் தம் தலைமையுரையில் குறிப்பிட்டார்கள்.
பெரியார் கல்வி நிறுவன மாணவர்களின் 15 நிமிட கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலமைச்சருடன் மாணவர்கள் குழுப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதை விட, மாணவர்களுடன் முதலமைச்சர் குழுப்படம் எடுத்துக் கொண்டு கலகலப்பாக்கினார் எனலாம்.
90 நிமிட விழா வரலாற்றில் முத்திரை பதித்த விழா.
'இணைந்தே இருக்கிறோம்; இணைந்தே இருப்போம் ' என்பதே தஞ்சை சொன்ன உண்மை!
No comments:
Post a Comment