*தொகுப்பு: வீ. குமரேசன்
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மாநில அரசுகள், சமூக அமைப்புகள், மனித உரிமைக்கான நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எனப் பலராலும் வைக்கம் போராட்டத்தின் சிறப்புகள், அது மனித குலத்துக்கு அந்தப் போராட்டம் பெற்றுத் தந்த உரிமைகள், அடிப்படை உரிமையில் அடுத்த கட்ட நகர்விற்கு வழி நடத்திடும் போக்கு என பன்முகப்பட்டதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் அந்நாளில் வைக்கம் போராட்டத்திற்கு பல்வேறு வகையில் ஆக்கம் கூட்டிய அமைப்புகள் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பங்கேற்று ஒருங்கிணைத்த வகையில் முக்கியமானது - சிறீ நாராயணகுரு தர்மபரிபாலனம் (Sree Narayanaguru Dharma Paripalanam - SNDP) ஆகும். அன்றைய மலையாளப் பகுதியில் சிறீநாராயண குரு அவர்களால் நிறுவப்பட்ட எஸ்.என்.டி.பி. (SNDP) என சுருக்கமாக அழைக்கப்படும், அமைப்பின் சென்னை ஒன்றியத்தின் முன்னெடுப்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.
நூறாண்டு கடந்த எஸ்.என்.டி.பி. அமைப்பு கொண்டாடிய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று (29.10.2023) மாலையில் நடைபெற்றது. சென்னை - சேத்துப்பட்டுப் பகுதியில் அமைந்துள்ள மலையாளி சங்க அரங்கில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பங்கேற்று வழி நடத்தி உரிமை பெற்றுத் தந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவிற்கு பெரியாரின் கொள்கை வழித் தோன்றலும், பெரியார் உருவாக்கிய அமைப்பின் இன்றைய தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள குலத் தொழில் திட்டத்தினை எதிர்த்து பிரச்சாரத்தினை மேற்கொண்டு 25.10.2023 முதல் தொடர் பயணத்தில் இருந்த தமிழர் தலைவர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிட இடையில் ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழர் தலைவர் சிறப்பு விருந்தினர்
தமிழர் தலைவர் தமது உரையில் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் எடுத்து வைத்தார். 'அன்றைய மலையாள' பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட சமூகப் புரட்சியாளர் சிறீ நாராயணகுரு, எஸ்.என்.டி.பி. அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் பத்மநாபன் ('பல்ப்' என அன்போடு குறிப்பிடப்படுவார்) அன்றைய மன்னராட்சி சமஸ்தானத்தில் ஒரு பெரிய கல்விப் புரட்சியினை ஏற்படுத்தினார். இன்று கல்வியறிவில் முதன்மை மாநிலமாக கேரளா திகழு வதற்கு அந்நாளில் அத்தகைய பெரு மக்கள் பாடுபட்டதுதான் அடிப்படைக் காரணம்.
* கல்வி மறுக்கப்பட்டு, லண்டன் மாநகர் சென்று அங்கு மருந்தியல் கல்வி பயின்று திரும்பிய டாக்டர் 'பல்ப்' அவர்கள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்திட விண்ணப்பித்திருந்தார். சமஸ்தானத்தில் திவானாக இருந்த ராகவய்யா (பார்ப்பனர்) 'பல்ப்' அவர்களிடம் 'உங்களுக்கெல் லாம் சமஸ்தானத்தில் ஏன் பணிபுரிய விருப்பம்!" எனக் கூறி இரண்டு தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்று அதை வளர்த்து குலத் தொழிலை (மரத்திலிருந்து 'கள்' இறக்குவது) செய்து கொள்ளக் கூறினார். அதை ஏற்க மறுத்து மைசூர் சமஸ்தானத்திற்குச் சென்று தனது கல்விக்கேற்ற பணியைத் தொடர்ந்தார்.
* கேரளாவில் அந்நாளில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமையை பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக அமைந்ததுதான் வைக்கம் போராட்டம். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு உரிமை பெற்றுத் தந்தது வைக்கம் போராட்டம்.
* வைக்கம் போராட்டத்தினைத் தொடங்கிய போரா ளிகள் - டி.கே. மாதவன், குரூர் நீலகண்ட நம்பூதிரி, கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெறாமல் தோல்வி அடைந்து விடுமோ என்ற நிலையில் சிறையில் இருந்தவாறே அந்தத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதினார்கள். வைக்கத்திற்கு வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டினர்.
* உடல் நிலை சரியில்லாத நிலையிலும் உடனே கிளம்பி வைக்கம் வந்து போரட்டத்தினை ஒருங்கிணைக்கிறார். வைக்கத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பேராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பிரச்சாரம் செய்கிறார். அதனை 'மக்கள் போராட்ட'மாக மாற்றியவர் தந்தை பெரியார்.
* வைக்கம் போராட்டம் பற்றி அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப்பனும் தொடர்ந்து போராட்ட நோக்கம் பற்றிய பிரச்சாரத்தினை மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மனித சமத்துவத்திற்கு சகோதரன் அய்யப்பன் நடத்திய 'மிஸ்ர போஜனம்' (சமமாக அமர்ந்து உணவருந்தல்) கேரள சமூக சீர்திருத்தத்தில் மிக முக்கியமானது.
* இரண்டு முறை தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார். தொடர்ந்து போராட்டத்தில் பெரியார் கலந்து கொள்ளக் கூடாது என சென்னை ராஜதானியில் இருந்த பழைய வழக்கைத் தூசி தட்டி எடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.
* பெரியார் வைக்கம் போராட்டத்தில் சிறைக்கு சென்ற பின் அவரது துணைவியார் அன்னை நாகம்மையார் வைக்கம் சென்று பெண்களை எல்லாம் திரட்டி போராட்டத்தினை தொடர்ந்து நடத்துகிறார். வைக்கம் போராட்டத் தில் பெண்கள் கணிசமாக பங்கேற்றிட உறு துணையாக இருந்தவர் அன்னை நாகம்மையார் ஆவார்.
போராட்டம் தொடங்கும் முன்னர், பிற மதத்தினர் இந்து கோயில் தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? என காந்தியார் மறுத்த வேளையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
* போராட்டப் போராளிகள் தந்தை பெரியாரை போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டிய வேளையில், பிற மாநிலத் திற்குள் போராட்டம் நடத்திடச் செல்ல வேண் டுமா?' என பெரியாருக்கு காந்தியார் தெரிவித்த வேளையில் வைக்கம் சென்று அங்கு நிலவிய, விலங்குகளைவிட இழிவாக நடத்தப்பட்ட மக்களின் நிலைமை குறித்து காந்தியாருக்கு கடிதம் எழுதினார் தந்தை பெரியார்.
* போராட்டம் வெற்றி பெறும் வேளையில், சமஸ்தான ராணியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திட காந்தியார் அழைக்கப் படுகிறார். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்திடும் உரிமையுடன் போராட்டம் முடிவடைந்து விட்டால் அனுமதிக் கலாம். அதையும் தாண்டி கோயிலுக்குள் நுழைவதற்கு போராட்டக் காரர்கள் முயற்சிப்பார்கள் என ராணியார் அச்சம் தெரிவித்த வேளையில், காந்தியார், தந்தை பெரியாரிடம் உறுதி கேட்டார். பெரியார், கோயில் நுழைவுதான் அடுத்த இலக்கு என்றாலும், அது இப்போதைக்கு இருக்காது" எனக் கூறியதால், வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது.
வைக்கம் போராட்டம்தான், தனக்கு மகத் பொதுக் குளப் போராட்டத்தினைத் தொடங்கு வதற்கு உந்து சக்தியாக விளங்கியது என அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தான் நடத்திய 'பகிஷ்கரித்' மராத்தி ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.
* வைக்கம் போராட்டம் ஏற்படுத்திய வரலாற்று உணர் வுகள், பின்னாளில் நாடு தழுவிய அளவில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு, நலத் திட்டங்கள் வழங்கிட பரிந்துரைத்த மண்டல் குழு அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபொழுது, கேரளா - பாலக்காடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயராகவன் அவர்கள் மண்டல் பரிந்துரையினை ஆதரித்து உரையாற்றியது நினைவு கூரத்தக்கது.
* We Salute you all who Salute the Heros of Vaikom Struggle' (வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை யெல்லாம் போற்றிடும் உங்கள் (விழா ஏற்பட்டாளர்கள் மற்றும் பங்கேற்றோர்) அனைவரையும் போற்றுகிறோம்?
தனது அரைமணி நேர பேச்சிலும், வைக்கம் போராட்ட வரலாற்றுச் செய்திகள் பலவற்றை தமிழர் தலைவர் விளக்கிக் கூறினார்.
நூற்றாண்டு விழா மாட்சிகள்:
*சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மலையாளிகள் பெரியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் குடும்ப விழாவாகக் கருதிப் பங்கேற்றனர்.
* மேடையில் நிகழ்ச்சிகள்தொடங்குவதற்கு முன்னதாக வைக்கம் போராட்டம்பற்றிய குறிப்புகள், பங்கேற்ற தலை வர்கள் பற்றிய குறிப்புகள் பற்றிய காணொளி நிகழ்த்தப்பட்டது. தந்தை பெரியார் பற்றி குறிப்புகளில், குறிப்பிட்டுச் சொல்லப் பட்டது - 'வைக்கம் போராட்டம்' "மக்கள் போராட்டமாக மாறிட காரணமானவர்" என்பது தனிச் சிறப்பாக இருந்தது.
* திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள் தனது சிறப்புரையில் வைக்கம் போராட்ட வரலாற்றுச் செய்திகளுடன் அதில் மகளிர் பங்கேற்பு, இன்றைய நிலைமை - மகளிர் உரிமை பற்றிய குறிப்புகள் பலவற்றை எடுத்துரைத்தார்.
* தந்தை பெரியார் குடும்ப வழித் தோன்றலும், காங்கிரசுப் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தமது உரையில் - 'பெரியார் அவர்களை நான் தாடித் தாத்தா என்று, எனது சிறுவயதில் அழைத்தாலும், அந்த மாபெரும் தலைவரை 'குடும்ப உறவுக்குள் அடக்க முடியாது. பெரும் புரட்சியாளர் அவர். வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரது பங்கு நாடு தழுவிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
*கேரளா - பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப் பினரும், கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான வி.கே. சிறீகண்டன், தமது உரையில், 'கேரள மக்கள் வைக்கம் நூற்றாண்டு விழாவினை கொண்டாட கடமை உள்ளவர்கள், உரிமை உள்ளவர்கள் - இன்றைய கேரள சமுதாய மக்களின் உயர்வுக்கு வித்திட்டது வைக்கம் போராட்டம். தமிழும் மலையாளமும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள், மக்களும் அப்படியே சேர்ந்து சமுதாயப் பணி ஆற்றுவோம்!" எனக் கூறினார்.
*விழாவிற்கு தலைமை ஏற்ற பேராசிரியர் அ. கருணானந் தன் அவர்கள் எந்தவொரு போராட்டமும் முடிவு என்பதாக இருக்காது; தொடக்கமாக இருக்கலாம். தொடர்ந்து, பெற வேண்டிய உரிமைகளுக்காக நடத்தப்படும் - வைக்கம் போராட்டமும் அப்படியே என்று கூறினார்.
எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பாக டி.கே. உன்னிகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
முக்கிய பங்கேற்பாளர்கள்
மேலும் விழாவில் எம்.பி. புருஷோத்தமன் (நிகழ்வின் புரவலர்), சிவகிரி எஸ்.என்.டி.பி. மடத்திலி ருந்து சுவாமி சைதன்யானந்தா, 'மலையாள மனோரமா' சென்னை பிரதிநிதி ஜெரின் ஜாய், அருட்தந்தை மாத்யூ பள்ளிகுணேல், பி.என்.ரவி, பைஜு கோபாலன், வழக்குரைஞர் கே. லிஜன், எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் தலைவர் பி. ராஜு, சிவதாசன் பிள்ளை, எஸ்.என்.டி.பி. அமைப்பின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் மணிகண்டன், நீலகிரி மாவட்ட பீதாம்பரன் மாஸ்டர் எனப் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள்
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தெ.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வி. இராகவன், மாரியப்பன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தாம்பரம் - சு. மோகனராசு, தனசேகரன், பல்லாவரம் நரேசு, சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், பி.சி. ஜெயராமன் (ப.க.) ஒளிப்படக் கலைஞர் ப.சிவக்குமார், சக்திவேல், வட சென்னை மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் சி. பாசுகர், கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, அயன்புரம் துரைராஜ், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பூவை தமிழ்ச்செல்வன், பழ. சேரலாதன், பெரியார் மாணாக்கன், செ.பெ. தொண்டறம் (மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில் எஸ்.என்.டி.பி. சார்பாக நடத்தப்பட்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, உரிமை சார்ந்த மலரும் நினைவுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொன்ன விழா 'தமிழர் - மலையாளிகளின்' இணக்கமான விழாவாக இனிதே நடந்தேறியது.
நூற்றாண்டுச் சிறப்புடன் கொண்டாடப்படும் வைக்கம் போராட்ட விழா நூறு விழாக்களையும் தாண்டி பல்வேறு மக்களால் மனித உரிமைப் போராட்ட விழாவாக நடத்தப்படும். நூறாண்டையும் தாண்டி வைக்கம் போராட்ட விழா நடந்து கொண்டே இருக்கும். தனிச் சிறப்புப் போராட்டமாக பல்வேறு வடிவங்களில் வெளிக் கிளம்பும்.
No comments:
Post a Comment