இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்

மூன்று நாள் பயணமாக தான்சானியா நாட்டு அதிபர் ஸமா ஸுலு ஹசன் இந்தியா வந்திருந்தார். பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய கலந்தாய்வுகளை நடத்திய பிறகு அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். கடைசி நிமிடம் வரை அவருடன் இருந்த பிரதமர் மோடி ஊடகவியலாளர் சந்திப்பின் போது அங்கிருந்து  வெளியே சென்று விட்டார். இந்திய - தான்சானியா உறவு குறித்து பேசிய அந்த நாட்டு அதிபர் “எங்கள் நாட்டில் வணிகம் மற்றும் பணிகள் தொடர்பாக  இந்தியாவைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்..ஆனால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் 60 ஆயிரம் பேர் என்று கூறுகிறார்" என்றார்.

இந்திய அரசின் சார்பில் தான்சானியாவில் 60,000 இந்தியர்கள் உள்ளனர் என்று இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாசித்துக் கொண்டு இருக்கும் போதே தான்சானியா அதிபர் இடை மறித்து "எங்கள் நாட்டில் 40,000 இந்தியர்கள்தான் உள்ளனர் என்று கூறி புள்ளி விவரத்தை சரி செய்து கொள்ளுங்கள்" என்றார். இருப்பினும் தொடர்ந்து 60,000 என்றே இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாசித்து முடித்தார்.   சபை நாகரீகம் கருதி தான்சானியா அதிபர் குறுக்கீடு செய்யாமல் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு விடைபெற்றார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர், வாழ்கிறார்கள் என்ற கணக்கை இந்திய வெளியுறவு அமைச்சகம் வைத்திருக்கிறது - அதையே குடியரசுத்தலைவர் கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கணக்கு சரியானதா? 

அதிகபட்சம் 6.5 கோடி மக்கள் வாழும்  தான்சானியா நாட்டின் அதிபர் தன்னிடமிருக்கும் கணக்கின்படி இந்தியர்கள் 40 ஆயிரம் பேர் என்கிறார். 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் குடியரசுத் தலைவர், எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் உங்கள் நாட்டில் 60 ஆயிரம் பேர் உள்ளனர் என்று கூறுகிறார்.  ஒரு நாட்டில் வாழும் மக்கள் தொகை அதில் அயல் நாட்டு மக்கள் எவ்வளவு போன்ற  புள்ளி விபரங்களை துல்லியமாக வைத்திருப்பது அவசியமான ஒன்று!  

இஸ்ரேலில் 80,000 இந்தியர்கள் உள்ளனர். அங்கு போரில் இந்தியர்கள் இறக்கும் நிலை ஏற்பட்டால் எத்தனை இந்தியர்கள் இறந்தனர் - எத்தனைப் பேர் உயிரோடு இருக்கின்றனர் என்பதற்கு துல்லியமான புள்ளிவிபரங்களை வைத்துதான் கணக்கிட முடியும். கூடவோ குறையவோ இருந்தால் குழப்பம் ஏற்படும்.  தான்சானியாவும் கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற சூழல் கொண்ட ஒரு நாடுதான். அங்கு உள்நாட்டுக்கலவரங்கள் மற்றும் புரட்சிப்படையினரின் தாக்குதல்களும் அவ்வப் போது இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். ஒரு வேளை அங்குள்ள இந்தியர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இவர்கள் கொடுத்த புள்ளிவிபரங்களை வைத்துத் தேடும் போது பெரும் குழப்பம் ஏற்படும்

20 ஆயிரம் மக்கள் எண்ணிக்கை அளவுக்கு வித்தியாசம் வருவது  எவ்வளவு பெரிய முரண்பாடு! இந்த அரசாங்கத்திடம் எந்தக் கணக்கும் தெளிவாக இல்லை என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிசெய்திருக்கிறது. இந்தியாவிற்கு வரும் பல அயல்நாட்டு அதிபர்களில் தான்சானியாஅதிபரும் ஒருவர்தான்.  ஆனால்,தான்சானியா அதிபருக்கு இந்தியப்பயணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் பெண் அதிபர், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டிற்கு அரசாங்க ரீதியாக பயணம் செய்திருப்பது.அங்கு மிக முக்கிய செய்தியாக பேசப்படும்.அவரது ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படலாம். இரு நாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து பேசும் போது அங்கு வாழும் இந்திய மக்கள் குறித்த கணக்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய அரசாங்கம். ஆனால் அதை மிகவும் அழகாக சமாளித்துவிட்டார் தான்சானியா அதிபர் சமியா ஸுலு ஹஸன்.  எந்தப் புள்ளி விபரங்களையும் கணக்குகளையும் சரியாக பராமரிக்காத  - வெளியிடாத இந்திய அரசாங்கம்,,தற்போது சரியான விபரங்களை வழங்காமல் குடியரசுத் தலைவரையே அந்நிய நாட்டு அதிபரின் முன்பு தலைகுனிவிற்கு ஆளாக்கியுள்ளது.

இதுதான் குஜராத் மாடல் என்று பீற்றிக் கொள்ளும் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்!

No comments:

Post a Comment