சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத் தையும் தன் மதிப்பையும் உண்டாக்க கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல் லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடு தலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரி யாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மையை விளக்க வேண்டு மானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத் தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும், சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்க ளுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த் தாலும் கூட இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க;
தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள்தனத் திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசியக் கூட்டத்தார்கள் என்பவர்களும், சமய இயல்பில் வைதிகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும் இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெரு மைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வி யக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கம் என்றும் சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வளவோ முயற்சியும் கட்டுப் பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்க பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.
இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ‘சுயராஜ்யா’ ‘தமிழ்நாடு’ ‘நவசக்தி’ ‘லோகோபகாரி’ ‘ஊழியன்’ முதலிய தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப்பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்து கூறுவதும் கருத்துகளை மாற்றிக் கூறுவதும், பொது மக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும் படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.
இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து (வடநாட்டிலிருந்து) திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள். இன்றியும் ரகசியமாகச் செய்த இழிதகைப் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும் செய்யப்பட்ட இழிவுப் பிரச்சாரத்திற்கு அள வில்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும் குத்தி விடுவதாகவும் சுட்டுவிடுவதாகவும் மற்றும் பலவிதமாய் அவமானப்படுத்துவதாகவும் கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும் பொய்க்கையெழுத்திட்ட கடிதங் களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவில்லை. இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி, இவ்வியக்கம் இன்றையதினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசியத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும், பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப்பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன் ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும், ‘கசகச’ வென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதாவது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக் கின்றதா என்று யாராவது பரீட்சை செய்து பார்க்க விரும் பினால் இதுபோது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும் அவற்றின் முடிவுகளையும் கவனித் துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
எனவே இந்த நிலையில் இன்றைய தினம் நமது நாட்டில் சுயமரியாதை இயக்கமும் அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும் அவ்வியத்தின் உண்மையான கொள்கைகள் தான் என்ன என்பதைப் பற்றிச் சற்று கவனிப்போம். சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காய் இருக்கின்றது, மற்றபடி சமுக சீர்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்கள பலர் நமக்கு எழுதியிருக்கின்றார்கள். அதாவது, அரசிய லில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக் காததும், சட்டசபையில் ஒத்துழைப் பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால் இப்போது சைமன் கமிஷனை பகிஷ்கரித்தது பைத்தியக்காரத்தனம் என்று அவர் களுக்கே தோன்றி விட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசன முள்ளது என்பது விளங்கும். அதாவது காங்கிரசைச் சார்ந்த திரு.ஆர்.கே. சண்முகம் எம்.எல்.ஏ. அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சார்ந்த டாக்டர் பெஸண்ட் அம்மை அவர்களும் நமது குறைகளைப் பார்லி மெண்டு முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் பார்லிமெண்டை நம்ப வேண்டு மென்றும் அதைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லிவிட்டார்கள். இதை எந்த காங்கிரஸ்வாதியும் சுயாட்சிவாதியும் தேசியவாதியும் நாளிதுவரை ஆட்சே பிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வருஷத் திய காங்கிரஸ் தலைவர்களைத் தேர்ந் தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லி வாதம் செய்து அவர்களிடம் சுயராஜ் ஜியம் பெற தகுதியுடைவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் பேசி இருக்கின்றார்கள். இதையும் எந்த பகிஷ்காரவாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும் போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போகச் சவுகரியமும் சக்தியும் இல்லாத ஜனங்கள் பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடயத்திற்கு அனுப்பி இருக்கும் பார்லிமெண்டு பிரதிநிதிகளிடம் நமது கட்சியையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசியத்திற்கோ தேசிய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்துவிட்டது என்று கேட்கின்றோம். அடுத் தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று பார்ப்போம். முதலாவது, இப்போது ஒத்துழையாமை என்பது எவ்வித தேசியத் திட்டத்திலும் இல்லவே இல்லை. சட்டசபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம்தான் சொல்லிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி சட்ட சபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழை யாமையோ முட்டுக் கட்டையோ சிறிதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனெனில் சட்டசபைக்குப் போனவர் களுக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்நிபந்த னைப்படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டியவர் களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழை யாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும் சமுக சீர்திருத்தச் சட்டங்களும் சமத்துவ சட்டங்களும் சட்ட சபைகளின் மூலம் தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக் கின்றது. அப்போது சர்க்காரிடம் போகாவிட்டால் சர்க்கார் சம்மத மில்லா விட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவை களை அமலுக்குக் கொண்டு வரமுடியும்? அன்றியும், சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்குக் கட்டுப் பட்டு சர்க்கார் தயவை எதிர்ப்பார்ப்பதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளாமல் இருக்கச் சட்டசபையில் எப்பேர்ப் பட்ட தேசிய, அமிதவாதிக்கும் சிறிதும் இடமே இல்லை.
இப்போதும் திரு. நேரு உட்பட ஒவ்வொரு தேசிய வாதியும் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றார்கள் உதாரணமாக, இப்போது சர்க்கார் செய்யும் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் திருவாளர்கள் சாமி. வெங்கடாசலம் செட்டியார், வெங்கிடபதிராஜு, நாகேஸ்வரராவ் பந்துலு ஆகியவர் களெல்லாம் சர்க்கார் நியமனம் பெற்றுச் சர்க்காருடன் ஒத்துழைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். சென்னை மாகாண ஒத்துழையாமை தலைவர் என்பவர் அதாவது காந்தியார் கண்ணுக்கு இந்தியா முழுவதற்கும் ஒத்துழையாமை தத்துவத்தை உள்ளபடி உணர்ந்த ஒரே ஒரு உண்மை ஒத்துழையாதாராகத் தோன்றும் திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரும் மதுவிலக்குப் பிரச்சாரம் சம்பந்தமாய் சர்க்கார் நியமனத்தைப் பெற்று சர்க்காருடன் ஒத்துழைக்க சம்மதித்திருக்கின்றார். எனவே, இனி யார் எவ்விதத்தில் சர்க்காரை பகிஷ்கரித்திருக் கின்றார்கள் என்பது விளங்கவில்லை. வேண்டுமானால் திரு.சத்திய மூர்த்தி போன்றவர்கள் குடிகாரர், வெறிகாரர் போல் காலித்தனமாய் சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத் தினர்களையும் மந்திரிகளையும் நிர்வாகசபை அங்கத் தினர்களையும் வைதுவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.
இந்து மகாசபை, முஸ்லீம் சபை, கிறிஸ்தவ சபை ஆகிய மத சபைகள் தீண்டப்படாதார் முதலியவர்கள் என்கின்ற சமூக சபைகள் எல்லாம் ஆதிமுதலிலிருந்தே ஆட்சேபித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் என்பவர்களுக்குள் பார்ப்பன சமுகசபை, பார்ப்பனரல்லாத சமூகசபை ஆகியவைகளும் எதிர்க்கின்றன. எனவே நேரு திட்ட விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி சுமத்த ஏதாவது இடமிருக்கின்றதா என்று கேட் கின்றோம். அதுபோலவே சமய சமூக விஷயங்களிலும் சுயமரியாதை இயக்கம் எந்த விதத்தில் நாத்திகமும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதென்பது அடுத்தாற்போல் யோசிக்க வேண்டிய விஷயமாகும். சுயமரியாதை இயக்கத்தின் சமய சமூக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மானங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசியவாதிகள், மதவாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசுகின்றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப்போம்.
1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.
2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.
3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங்களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.
5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷ னுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக் கக்கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்ப தற்கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொரு ளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும் படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில்; பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.
12. “தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதார்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொதுநிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
மேலும் இவைகளும் அநேகமாக சிபாரிசு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசியத்திற்கும், காங்கிரசிற்கும் விரோத மானவை என்றும் எந்த யோக்கியமான தேசியவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்று, சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவி னர்க்கு தற்றென விளங்கவில்லையா என்று கேட் கின்றோம்.
எது எப்படி இருந்தபோதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்களை ஒழித்தல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய் வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும் இவ்விஷயங்களில் பொது மக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க் கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கி வருகின்றது. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கு இவ்வியக்க சம்பந் தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும் ஜில்லாக்கள் தோறும் தாலுகாகள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும் அங்கு கூடும் கூட்டங்களும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும் அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்றதென்பது சிறு குழந்தையும் அறிய முடியும்.
நிற்க; தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்டக் கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக் காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்ததுதானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங் களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவை களைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படு கின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியா சங்கள் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோசங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டு மாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 25.08.1929
No comments:
Post a Comment