நூறு ஆண்டுகளுக்கு முன்பே
‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்!
சென்னை மாநாட்டில் பிரியங்கா காந்தி புகழாரம்
சென்னை, அக்.15 நூறு ஆண்டுகளுக்குமுன்பே, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார் என்று சென்னையில் தி.மு.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பெருமிதமுடன் கூறினார்.
மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளி ரணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத் தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நேற்று (14.10.2023) மகளிர் உரிமை மாநாடு நடை பெற்றது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட ‘இந்தியா' கூட்டணியின் பல் வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
பின்னர், இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி உரையாற்றுகையில்,
‘‘32 ஆண்டுகளுக்கு முன்பு, எனது 19 வயதில் நான் தமிழ்நாட்டிற்கு என் தந்தையின் சிதறிய உடலை எடுத்துச் செல்ல வந்தேன். விமான நிலையத்தில் கூட்டமாக வந்த பெண்கள் என் தாயை கட்டித் தழுவி அழுதனர். அப்போது, என் மனதில் எழுந்த உணர்வை சொல்ல இயலாது. நீங்கள் தான் என் தாய் , நீங்கள் தான் என் சகோதரி. இன்று உங்களுடன் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்திய நாட்டின் பெண்களை பற்றி பேசப் போகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘பெண் ஏன் அடிமையா னாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார். 100 ஆண்டுகளுக்கு முன்பே ‘பெண் ஏன் அடிமை யானாள்?' என்ற கேள்வி எழுப்பியவர் பெரியார். அவர் கேள்வி எழுப்பி 100 ஆண்டுகளுக்குப் பிறகும் பெண் அடிமைத்தனம் இன்னும் உள்ளது. பெண்கள் ஏன் அடிமையாகவே இருக்கிறார்கள் என்ற பெரியாரின் கேள்வி தற்போது வரை நீடித்து வருகிறது.
சமூகத்திற்கு அன்பையும், போராடும் குணத்தையும் கற்றுத் தந்தது பெண்களே. பெரியார் வழியில் அண் ணாவும், கலைஞரும் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள். சமூக மாற்றத்திற்கான புரட்சி தமிழநாட்டில் தான் உருவானது. சமூக மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கிறோம். முழுமையான சமத்துவத்தைப் பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும். இந்திய பெண்கள் நேரத்தை இனி வீணடிக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண் டும்” என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
No comments:
Post a Comment