தொண்டறத்தினுடைய உச்சத்திற்கு தளபதி அர்ச்சுனன் அடையாளம் - அவருடைய படத்தைப் பார்க்கும்பொழுது, அவருடைய உருவத்தை மட்டும் நாம் பார்க்கவில்லை; அவருடைய உணர்வையும் நாங்கள் சேகரிக்கிறோம்!
இந்தத் தலைமுறை, இனி வரக்கூடிய தலைமுறையினருக்கு படமாக மட்டுமல்ல, பாடமாகவும் அவர் திகழ்வார்!
சென்னை, அக்.15 தொண்டறத்தினுடைய உச்சத்திற்கு தளபதி அர்ச்சுனன் அடையாளம் - அவருடைய படத் தைப் பார்க்கும்பொழுது, அவருடைய உருவத்தை மட்டும் நாம் பார்க்கவில்லை; அவருடைய உணர்வையும் நாங்கள் சேகரிக்கிறோம். இந்தத் தலைமுறை, இனி வரக்கூடிய தலைமுறையினருக்கு படமாக மட்டுமல்ல, பாடமாகவும் அவர் திகழ்வார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா
நேற்று (14.10.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
காலம் அதிகமாகிவிட்ட சூழ்நிலையில் அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ளவதாக இல்லை.
பலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள்;
இவர் வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்!
நம் நெஞ்சங்களிலெல்லாம் நிறைந்திருக்கின்ற நூற்றாண்டு விழா நாயகர் தளபதி அர்ச்சுனன் அவர்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.
பலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள். ஆனால், இவர் வரலாற்றை உருவாக்கியிருக்கிறார். தனி வரலாறாகவே ஆகியிருக்கிறார்.
அவரால் கொள்கைக்குப் பெருமையா? கொள்கை யால் அவருக்குப் பெருமையா? என்று நிர்ணயித்துக் கூற முடியாத அளவிற்குப் பெருமை வாய்ந்த அவரது நூற்றாண்டு விழா - சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்ற இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றிய இந்தக் குடும்பத் தினுடைய பெருமகனார் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா என்.எஸ்.எஸ்.ராஜ்குமார் மன்றாடி யார் அவர்களே, இந்நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
முதலமைச்சரின் மறக்க முடியாத உரை - என்றென்றைக்கும்
அழியாத ஓர் உரை!
முதலமைச்சர் அவர்களுக்கு ஏகப்பட்ட நேர நெருக்கடி. ஆனால், நெருக்கடி காலத்தையே அவர் சந்தித்தவர். எல்லா நெருக்கடியையும் எதிர்கொண்டவர் அவர். அவரோடு இருந்தவன் நான். அந்த வகையில், இவ்வளவு நேர நெருக்கடி இருந்தாலும்கூட, அவர்கள் காணொலியின்மூலம் ஓர் அற்புதமான உரையை, மறக்க முடியாத உரையை, என்றென்றைக்கும் சிறப்பாக இருக்கக் கூடிய அழியாத ஓர் உரையை அருமையாகத் தந்த இந்தியாவே பின்பற்றக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி மூலமாக அவர்கள் கருத்தொளியைத் தந்தார்கள். அதன் மூலமாக இளைய தலைமுறை தெரிந்துகொள் வதற்கு வசதியாக பல அற்புதமான கருத்துகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார். ஆழமான சொற் கள், தெளிவான கருத்துரைகள் தந்த அவருக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு மிக முக்கியமான ஒரு மாநாடு நிகழ்ச்சி. அதில் அவர்கள் பங்கேற்று விட்டு, இங்கே வந்த பிறகுதான், படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று நினைத்திருந்தோம். அவர்களும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள்.
மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர் களே, மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களே,
நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு வந்து நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடிய சுற்றுச்சூழல் தி.மு.க. அணியின் மாநில செயலாளர் மானமிகு கார்த்திகேயன் சிவசேனாபதி அவர்களே,
வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் நிறுவநர் அருமைத் தோழர் ஜி.விசுவநாதன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற நம்மு டைய குடும்ப உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,
இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இந்தக் குடும்பத்தில் ஒருவராகவும், கொள்கைக் குடும்பத்திலும் அவர் இருக்கிறார், குருதிக் குடும்பத்திலும் என்றும் உறவோடு இருக்கின்ற நம்முடைய இனமுரசு சத்யராஜ் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து, இந்த நிகழ்ச்சிக்குப் பெருமையைச் சேர்க்கக்கூடிய பண்பாளர் அய்யா திரு.வி.கே.கிருஷ்ணராயர் வானவராயர் அவர் களே, தொழிலதிபர் பண்பாளர் அய்யா மாணிக்கம் அவர்களே, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் அவர்களே,
மற்றும் இங்கே ஏராளமாக வந்திருக்கின்ற நம்முடைய இயக்கத் தோழர்களே, குடும்பத்து உறுப்பினர் பெரு மக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல மாதங்களுக்கு முன்பு
ஈரோட்டில் தொடங்கியது!
வணக்கம் கூறுகின்ற அதேநேரத்தில், நான் வரவேற் பையும், நன்றியையும் இணைத்தே சொல்கிறேன். ஏனென்றால், திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சியை - நூற் றாண்டு விழாவை - பல மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் தொடங்கியது.
ஈரோடுக் கழகத் தோழர்கள், மாவட்டத் தோழர்கள், செயல்வீரர்கள், சண்முகம் போன்றவர்கள், பொறுப்பா ளர்கள் அத்துணை பேரும் அந்த நிகழ்ச்சியை அன் றைக்குச் சிறப்பாக நடத்தி, பல ஊர்களிலும், கொங்கு மண்டலத்தில் அய்யா அர்ச்சுனன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை பல இடங்களில் நடத்தினோம்.
நன்றியுரை கூறவிருக்கக் கூடிய அய்யா நவீன் அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
அருமைச் சகோதரியார் மனோ மன்றாடியார்
எல்லாவற்றையும்விட மிகச் சிறப்பு என்னவென்றால், நம்முடைய அருமைச் சகோதரியார் மனோ மன்றாடியார் அவர்களுடைய உழைப்பு, அவருடைய தொடர்ச்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் சரியாக நடக்கவேண்டும் என்பதற்காக, இடையறாமல் எங்களுக்கு அவர்கள் ஊக்க மாத்திரை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் முன்னணியில் இருந்துதான் இந்த விழாவை அற்புதமாக செய்தார்கள்.
அர்ச்சுனன் மறையவில்லை என்ற உணர்வைத்தான் நாம் இந்த நூற்றாண்டு விழாவில் பெறுகிறோம்.
எப்படி என்று சொன்னால், அவர் இருந்தால், என்ன கொள்கையைச் சொல்வாரோ, அவை அத்தனையையும் இன்றைக்கு இந்தக் குடும்பத்தில் நேரிடையாக உறுப்பி னராக இருக்கமாட்டார்கள். இந்த இயக்கத்திற்கு, தந்தை பெரியார் இயக்கத்திற்கு ஒரு பெரிய பெருமை என்ன வென்றால், இதை நான் நிறைய கூட்டங்களில் சொல்லி யிருக்கிறேன். இந்த அறிவார்ந்த அரங்கத்திலும் அதைச் சொல்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பத்திரிகையை சேர்ந்த பெண் செய்தியாளர் என்னிடம் ஆங்கிலத்தில் பேட்டி எடுக்கும்பொழுது,
‘‘உங்கள் இயக்கத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?'' என்று கேட்டார்.
எங்கள் இயக்கத்தில் இரண்டு வகையான உறுப்பி னர்கள் இருக்கிறார்கள் என்றேன்.
ஒன்று, கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள்; இன் னொன்று கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்றேன்.
உடனே அந்த அம்மையார் பேனாவைக் கீழே போட்டு, ‘‘நீங்கள் ரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா?'' என்று கேட்டார்.
‘‘ரகசியம் இயக்கம் நடத்துபவர்கள் இல்லை. நேரிடையாக கருப்புச் சட்டை அணிந்து, பெரியாருடைய கொள்கையைச் சொல்லக்கூடியவர்கள், (சத்யராஜ் போன்று இருக்கக்கூடியவர்கள் எங்கள் இயக்கத்தில் நேரிடையாக இருக்கக் கூடியவர்கள்).
இன்னும் சிலர் நேரிடையாக இயக்கத்தில் உறுப்பினர் களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் சட்டையை அணிவார்கள். ஆனால், இந்தக் கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்து வார்கள் - அவர்கள் கண்ணுக்குத் தெரியாத உறுப் பினர்கள்'' என்றேன்.
50 சதவிகிதத்தை
இங்கேதான் நிலைநாட்டி இருக்கிறோம்!
அதுபோல, கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் போன்று இந்தக் குடும்பம் இருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு - மனோ மன்றாடியாரும், நவீன் அவர்களும் எங்களுக்கு நன்றி சொல்லி பொன் னாடை போர்த்துவது முக்கியமல்ல.
அதைவிட, ஒருவர் பட்டயம் கொடுக்கிறார்; இன் னொருவர் பொன்னாடை போர்த்தினார். 50 சதவிகி தத்தை இங்கேதான் நிலைநாட்டி இருக்கிறோம். அதுதான் மிக முக்கியம்.
எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கத்தில் சேர்ந்தாரோ, அந்தக் கொள்கை வெற்றி பெற்றது!
50 சதவிகிதத்திற்காக இன்னும் வெளியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது அல்லவா - அர்ச்சுனன் எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கத்தில் சேர்ந்தார்களோ, அந்தக் கொள்கை வெற்றி பெற்றது அவருடைய நூற் றாண்டு விழாவில் என்பதற்கு இது அடை யாளமாகும்.
அதுமட்டுமல்ல, பிள்ளைகளையெல்லாம் இங்கே பார்க்கிறோம்; பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் அத்துணை பேரையும் பார்க்கிறோம்.
நம்முடைய அய்யா சிவக்குமார் மன்றாடியார் அவர் களுடைய பண்பு, அவருடைய நினைவுகளைப் பற்றி இங்கே எங்கள் கழகத் துணைத் தலைவர் சொன்னார்.
காளை மாட்டினைக் கொடுத்து, சாமியாரை விரட்டிய நிகழ்விற்கு நான்தான் சென்றிருந்தேன். அதற்குமுன் நேரிடையாக எங்களுக்கு அறிமுகம் இல்லை. நன்றி சொல்வதற்காகச் சென்றதிலிருந்து, அந்தக் குடும்பத் தோடு நல்ல பழக்கம் ஏற்பட்டது.
அய்யா தளபதி அர்ச்சுனனார் அவர்களை நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்புப் பெற்றவன்!
எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு, இங்கே என்னு டைய வயதை ஞாபகப்படுத்தினார்கள். என்னு டைய 13 ஆவது வயதில், அய்யா தளபதி அர்ச்சுனனார் அவர்களை நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்பும், அவர் கருப்புச் சட்டை அணிந்து உரையாற்றியதையும் நேரில் பார்த் தவன் மாணவர் கழகத்தில் இருக்கும்பொழுது. இன்னும் அந்த நினைவுகள் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் ‘‘எஜமான்'' என்ற வார்த் தையைப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார். மற்றவர் களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
இந்தக் கொள்கையை அவர் தெரிந்துகொண்டதைப் பற்றி குறிப்பிட்டு, மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பலரும் சொன்னீர்கள். அப்போது, இளைஞர்கள் மத்தியில் அந்தக் கொள்கைகள் மிக வேகமாகச் சென்றன.
இளைய பட்டக்காரர் தளபதி அர்ச்சுனன் அவர்கள், எவ்வாறு பெரிய அளவிற்கு ஈர்க்கப்பட்டார் என்பது பெரிய ஆய்வு செய்யவேண்டிய அளவிற்கு இருக்கிறது.
மாணவர்கள், இளைஞர்களை ஈர்த்தன!
ஆனால், அந்தக் காலகட்டத்தில், ‘விடுதலை', ‘குடிஅரசு', அதேபோன்று ‘திராவிட நாடு' பத்திரிகை - இவையெல்லாம் மாணவர்கள், இளைஞர்களை ஈர்த் தன. அந்த இளைஞர்களை மாற்றியிருக்கிறது.
அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும்பொழுது தான் இந்த இயக்கத்திற்கு வந்தார். ஆனால், இவர் களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு, பழையக்கோட்டை பட்டக்காரர் ஒரு பெரிய அரண்மனைக்குள் இருக்கக் கூடியவர். அவருக்கு இந்தக் கொள்கைகளின்மீது ஈடுபாடு வந்திருக்கிறது. அந்தக் கொள்கைகளில் ஈர்ப்பு வந்திருக்கிறது. காலங்காலமாக அந்தக் குடும்பத்தோடு நெருங்கிய குடும்பம் தந்தை பெரியார் அவர்களுடைய குடும்பம். அதை இங்கே ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.
ஒரு பெரிய நீண்ட வரலாறு இருப்பதினால், அவர்கள் அந்தக் குடும்பத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அந்தக் கொள்கையில் எவ்வளவு ஈடுபாடு காட்டினார்கள் என்பதற்கு ஓர் அடையாளம் என்னவென்றால், ஒரே ஒரு செய்தியை சொல்லுகிறேன். ஏனென்றால், இந்த நேரத்தில், நூற்றாண்டு விழா நாயகரைப் பேசச் சொல்லிக் கேட்கவேண்டும்.
ஏனென்றால், அவருடைய பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்குகு முன்பாக அவர் பேசினார்.
மாநாட்டிற்கு அவரைத் தேர்ந்தெடுத்தார் தந்தை பெரியார் அவர்கள். முதல் பொருளாளராக அவரை நியமிப்பதற்கு முன்பே, கோவை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார்.
கோவை ஜில்லா முதலாவது திராவிட இளைஞர் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் அர்ச்சுனன்.
நம்முடைய நூற்றாண்டு விழா நாயகரைப் பேச விடு வோம். அதுதான் மிக முக்கியம். ஏனென்றால், அவரு டைய கருத்து மிகவும் முக்கியம். அவரைப் பாராட்டுவது முக்கியமல்ல; இங்கே திறக்கப்பட்டது வெறும் படமல்ல நண்பர்களே, ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
நூற்றாண்டு விழா நாயகர் பேசுகிறார்!
17.2.1944 இல் நூற்றாண்டு விழா நாயகர் அர்ச்சுனன் பேசுகிறார்:
‘‘தோழர்களே, நாம் ஒரு குறிப்பிடத்தகுந்த அருமையான காலத்தில் வாழ்கிறோம். அஃது என்னவெனில், அறிவில், வயதில், முதியோர் ஆன நம் பெரியார் வாழும் காலத்திலும், அவர் வழிகாட்டும் காலத்திலும், அவர் போராட்டம் நடத்தும் காலத்திலும், வாழுகின்ற மக்களாய் நாம் இருக்கிறோம்.
நம் ஒப்பற்ற தலைவர் பெரியாரின் தொண்டின் பயனாகவே, நாம் மனிதப் பிறவிகள் என்பதை உணருகிறவர்கள் ஆனோம்'' என்றார்.
இங்கே ஜாதியைப்பற்றி பேசிய நண்பர்கள் எல்லாம் சுட்டிக்காட்டினார்கள் அல்லவா! ஜாதி அமைப்பு முறை என்பது மிகக் கொடுமையானது.
பிறவி பேதத்தை ஒழிக்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய முதற்கொள்கை!
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், ஜாதி, பெண்ணடிமை இவ்விரண்டையும்விட, பிறவி பேதத்தை ஒழிக்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய முதற்கொள்கையாக இருந்தது.
ஆண் எஜமானன் - பெண் அடிமை
தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்
பார்க்கக் கூடியவன் - பார்க்கக் கூடாதவன்
படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன்
தோளில் துண்டு போடுபவன் - தோளில் துண்டு போடக்கூடாதவன் என்று மனிதர்களுக்குள் பிரித்து வைத்திருந்தார்கள்.
நாயைக் கொஞ்சுகிறான்; பூனையைக் கொஞ்சு கிறான்; ஆனால், மனிதனைப் பார்த்து எட்டி நில் என் கிறான்; தொட்டுவிட்டால், தீட்டுப்பட்டுவிட்டது என்று குளிக்கிறான்.
ஆகவேதான், ஜாதியினுடைய கொடுமைகளால்தான், மனிதத்தன்மையை கீழே போட்டுவிடுகிறான்.
மேலும் நூற்றாண்டு விழா நாயகர் தொடருகிறார்,
‘‘மனிதன் என்றால், மானம் உடையவன் என்று உணர்ந்தோம்'' என்றார்.
இன்னமும் ஆயிரம் தளபதி அர்ச்சுனன்கள் நமக்குத் தேவை. அவருடைய கருத்துகள் இன்றைக்கும் தேவைப் படக் கூடிய கருத்தாகும்.
அர்ச்சுனன் மறைவும் - தந்தை பெரியாரின் வேதனையும்!
அடுத்தாக நண்பர்களே, அவருடைய மறைவைப் பற்றி சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் அவர்களை- அது மிகப்பெரிய அளவில் பாதித்தது. 23 வயதில் தளபதி அர்ச்சுனன் மறைவுற்றார். அதனால், பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு வேதனைப்பட்டார் என்றால், அந்த வேதனையை தலையங்கத்தின் ஒரு பகுதியாக எழுதினார்.
அர்ச்சுனன் அவர்களின் தொண்டை எவ்வளவு அழகாக நிர்ணயித்துச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.
ஒரு மனிதன் மறைவுற்ற பிறகு பாராட்டு பெறுவ தென்பது பெறவேண்டிய சிறப்புகளிலேயே மிகப் பெரிய சிறப்பாகும். அவருக்கு நிறைய நிலபுலன்கள், செல்வாக்கு, மக்கள் ஈர்ப்புகள் என்று இருக்கலாம்.
தந்தை பெரியார் தீட்டிய தலையங்கம்!
நூற்றாண்டு விழா நாயகர் மறைந்தபொழுது, பெரியார் என்ன சொன்னார் என்பதை நினைவூட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
‘‘மக்களில் எவ்வளவு ஞானம் பெற்றவர்களும், தங்கள் செல்வத்தையும், மனைவி, மக்களையும் கூடத் துறந்துவிடலாம். ஆனால், ஒருவன் தனது அந்தஸ்து என்னும் தகைமையைத் துறப்பது என்பது உண்மையான தொண்டனுக்குத்தான் முடியும்.
ஏனென்றால், துறவிகள் எதைத் துறந்தாலும், தாங்கள் முற்றும் துறந்த துறவிகள் என்ற அந்தஸ்தைத் துறக்கமாட்டார்கள்.
அதற்குத் தகுந்த பயனை எதிர்நோக்கியே, அனுபவித்தே நிற்பார்கள்.
உண்மைத் தொண்டர்களுக்கு அந்தஸ்தும் இருக்காது; பயன் எதிர்பார்ப்பதும் இருக்காது. தொண்டு செய்வதையே தொண்டாகவும், அத் தொண்டில் ஏற்படும் உற்சாகத்தையே பயனாகவும் கருதிக் கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.
ஆதலால், அர்ச்சுனன் தனது தகைமையையும் மறந்து, தொண்டர் தன்மையையே சதா கருத்தில் வைத்து, மனம், மொழி, மெய்களால் உண்மைத் தொண்டாற்றி வந்த சேவகனாகவே இருந்தார்.''
அவருடைய தொண்டுக்குப் பெரியாருடைய பாராட்டு, இதைவிட அர்ச்சுனன் அவர்களுக்குப் பெருமை வேறு என்ன இருக்க முடியும்?
நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்;
நம் உள்ளங்களில் உறைந்திருக்கிறார்!
இன்றைக்கு அவர் மறைந்து 80 ஆண்டுகள் ஆனாலும் அவருடைய நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம். அவர் மறையவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்; நம் உள்ளங்களில் உறைந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
மாணவப் பருவத்தில் நாங்கள் எல்லாம் இருக்கும் பொழுது, பள்ளிக்கூட மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் கோடை விடுமுறையில் ஈரோட்டில் உள்ள அவரது மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அழைத்து சாப்பாடு போட்டு, பயிற்சி கொடுப்பார்கள்.
அய்யா, அண்ணா, நாவலர் போன்றவர்கள் எல்லாம் வகுப்பெடுப்பார்கள். நாங்கள் எல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வோம். மதியம் சாப்பாடு போடுவார்கள். சாப்பிடும்பொழுது, அய்யா அவர்கள் அங்கே வந்து எல்லோரும் சாப்பிடுகிறார்களா என்று பார்ப்பார்.
அன்றைய காலகட்டத்தில் தவமணி ராசன் கல்லூரி மாணவ அமைப்பாளர்.
எங்களுக்கு ஒவ்வொரு நாளும் குடம் குடமாக பழையக்கோட்டையிலிருந்து கட்டித் தயிர் வரும். அந்தக் கட்டித் தயிரை எல்லோருக்கும் சாப்பிடும் பொழுது எடுத்து வைப்பார்கள். அய்யா அவர்கள் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும்.
கட்டித் தயிரை மோராக்கி,
மாணவர்களுக்குக் கொடுங்கள்!
ஒருமுறை ஈரோடு அப்பாவு என்ற தோழர் சாப்பாடு பரிமாறினார். அப்படி பரிமாறும்பொழுது கட்டித் தயிரை எடுத்து வைத்தார்.
அதைப் பார்த்த அய்யா அவர்கள், கூப்பிட்டார், ‘‘இவ்வளவு கட்டித் தயிரை அப்படியே எடுத்துப் போட் டால் என்ன அர்த்தம்? அந்தக் கட்டித் தயிரை மோராக்கி, அதற்குப் பிறகு மாணவர்களுக்குக் கொடுங்கள்'' என்றார்.
தவமணி ராசன் என்பவர் அய்யாவிடம் வேகமாகப் பேசுவார். அப்பொழுது, ‘‘அய்யா, பட்டக்காரர் இடத்தி லிருந்துதானே தயிர் குடம் குடமாக வருகிறது. அதை ஏன் நீங்கள் மோராக்கிக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள். தயிராகவே கொடுக்கலாம் அல்லவா - அவர்தான் தினமும் அனுப்புகிறாரே'' என்றார்.
அப்பொழுது நாங்கள் எல்லாம் பக்கத்தில்தான் இருந்தோம். பெரியார் அவர்களுடைய இயக்கம், கொள்கை எப்படி ஒரு மிகப்பெரிய வசதியாக, வாய்ப் பாக இருக்கும் என்பதால்தான் தளபதி அர்ஜூனன் போன்றவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.
உடனே அய்யா சொன்னார், ‘‘நீ சொல்வது சரிதான்பா. பழையக்கோட்டை பட்டக்காரர் நமக்கு வழக்கமாக குடம் குடமாக கட்டித் தயிர் அனுப்புகிறார். அதற்காக இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் கட்டித் தயிரே கொடுத்தோம் என்றால், பயிற்சி முடித்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவர்களை அனுப்பப் போகிறேன். இந்தப் பிள்ளைகள் எல்லாம் மேடையில் உரையாற்றவிருக்கின்றனர்.
வெறும் தண்ணீர் மோராக இருந்தால்கூட, அதைச் சாப்பிட்டுவிட்டு,
அவன் தொண்டு செய்யவேண்டும்!
இன்றைக்குக் கட்டித் தயிர் கிடைக்கிறது என்று இங்கே அவர்களுக்குப் போட்டால், நாளைக்கு அதே மாணவன் அந்த ஊருக்குப் போகும்பொழுது, சாப்பிடும் வேளையில், இதே போன்று கட்டித் தயிர் போட வில்லையே, என்று சாப்பாடு போடுகின்றவரின் மேல் அல்லவா அவன் வருத்தப்படுவான். இப்பொழுது அவனைப் பழக்கினால்தானே சரியாய் இருக்கும், வெறும் தண்ணீர் மோராக இருந்தால்கூட, அதைச் சாப்பிட்டுவிட்டு, அவன் தொண்டு செய்யவேண்டும், வேலை செய்யவேண்டும் என்கிற புத்தி வரும். உனக்கு என்ன தெரியும்?
இன்றைக்கு இங்கே ஓசியில் வருகிறது என்பதற்காக, எல்லா ஊரிலும் பட்டக்காரர் இருப்பாரா?'' என்றார்.
சிறிய விஷயம்தான், ஆனால், அதிலிருந்து எவ் வளவு பெரிய தத்துவத்தை நாம் புரிந்துகொள்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.
ஆகவேதான், இந்த இயக்கம் என்பது இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்தபொழுது, அவர் களைப் போன்றவர்கள்தான் அடித்தளம்.பழையக் கோட்டை என்று சொல்லுகின்றபொழுது, அய்யா அர்ச்சுனன் அவர்கள் இந்த இயக்கத்திற்கு வரும்பொழுது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு வந்தார்.
எளிய மக்களுக்குத்
தொண்டு செய்வதற்காக வந்தார்!
புதிய கோட்டை இப்பொழுது கிடைத்திருக்கிறது, இந்த அரசுக்கு. ஆனால், கோட்டை கிடைக்கும் என்று அவர் அன்றைக்கு வரவில்லை. இருக்கின்ற கோட் டையை விட்டுவிட்டு வெளியே வந்தார், எளிய மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக.
இதுதான் எடுத்துக்காட்டு - இதுதான் தொண்டறம்.
எனவேதான், தொண்டறத்தினுடைய உச்சத்திற்கு அவர் அடையாளம் - அவருடைய படத்தைப் பார்க்கும் பொழுது, அவருடைய உருவத்தை மட்டும் நாம் பார்க்கவில்லை; அவருடைய உணர்வையும் நாங்கள் சேகரிக்கிறோம்.
இந்தத் தலைமுறை, இனி வரக்கூடிய தலைமுறையினருக்கு அவர் படமாக மட்டுமல்ல, பாடமாகவும் அவர் திகழ்வார் என்று சொல்லி, இவ்வளவு சிறப்பான நூற்றாண்டு விழாவிற்கு வந்த உங்களுக்கு நன்றி! நன்றி!!
ஒத்துழைத்த குடும்பத்தாருக்கு நன்றி!
‘இனமுரசு' சத்யராஜ் அவர்களின் பிரச்சாரம் போதும்; நீண்ட நாளைக்கு அது தாங்கும்!
அதுபோலவே, எங்கள் இனமுரசு சத்யராஜ் அவர்கள், மிகத் தெளிவான அளவில் பிரச்சாரத்தை செய்தார். எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால், இந்த ஒரு பிரச்சாரம் போதும்; நீண்ட நாளைக்கு அது தாங்கும்.
தளபதி அர்ச்சுனன் அவர்களின் குடும்பத்தினர் எல்லோரும் நேரிடையாக இயக்கத்தில் உறுப்பினர்களாக வில்லை என்கிற குறை எங்களுக்கு இல்லை. ஏனென் றால், அவ்வளவையும் சேர்த்து ‘இனமுரசு' சத்யராஜ் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்.
அவருக்கு நன்றி செலுத்தி, எல்லோருக்கும் நன்றி செலுத்தி விடைபெறுகிறோம்.
வாழ்க பெரியார்!
வளர்க அர்ச்சுனன் புகழ்!
வருக அவர் காண விரும்பிய ஜாதியற்ற புதிய சமூகம்! நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
No comments:
Post a Comment