கலைஞரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப்பட்டது
அது ஆல்போல் வளர்ந்து, அருகுபோல் வேரோடி இன்றைக்கும் அசைக்க முடியாமல் இருக்கிறது!
இளைஞர்களே, கலைஞருடைய வழியை பின்பற்றுங்கள்!
தஞ்சை, அக்.9 கலைஞரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப் பட்டது - அது ஆல்போல் வளர்ந்து, அருகுபோல் வேரோடி இன்றைக்கும் அசைக்க முடியாமல் இருக்கிறது. கலைஞருடைய வழியை இளைஞர்களே பின்பற்றுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழா - பன்னாட்டு கருத்தரங்கில் தமிழர் தலைவர் நிறைவுரை
6.10.2023 அன்று காலை தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் முதல் அமர்வாக நடைபெற்ற ‘‘இவர்தான் கலைஞர்’’ என்ற பன்னாட்டுக் கருத் தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
மகளிர் உரிமையைப்பற்றி இங்கே சொன்னார்களே, இந்தியாவில் வேறு எங்கேயாவது இந்த அளவிற்கு மகளிர் உரிமையைப்பற்றி பேசக்கூடிய வாய்ப்பு உண்டா?
இன்றைக்கு சோசலிச ஆட்சி என்பது அப்படியே நடந்துகொண்டிருக்கிறதே!
குழந்தை பெறுவதற்கு முன், தேவைப்படுகின்ற ஊட்டசத்தைப்பற்றி இங்கே உரையாற்றிய வழக்குரைஞர் மதிவதனி அவர்கள் சொன்னார்கள். குழந்தை பெறு வதற்குமுன் தாயும் - சேயும் நலமாக இருக்கவேண்டும்.
மாணவிகள் 60% - மாணவர்கள் 40%
இந்தக் கல்லூரிக்கே ஒரு பெருமை என்னவென்றால், முதலில் மகளிர் பொறியியல் கல்லூரியாக இருந்தது. பல்கலைக் கழகமாக ஆன பிறகுதான், மாணவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அப்படி இருந்தாலும் 60:40 சதவிகிதம்தான்.
ஆகவே, ‘‘மகளிர் உரிமை காத்த மாண்பாளர்'' என்று கலைஞர் அவர்களை நாங்கள் அழைத்தது, சாதாரண மானதல்ல. பிறவி பேதம் கூடாது - பிறவி பேதம் என்பது-
உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி
தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்
தீண்டக்கூடியவன் - தீண்டத்தகாதவன்
படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன்
இப்படி பிரித்து வைத்திருந்தார்கள். இதுபோன்ற பேதம் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. ஜாதி யினுடைய கொடுமை - வருணாசிரம தர்மத்தினுடைய கொடுமை - ஸநாதனத்தினுடைய அடித்தளமாகும்.
ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு சமத் துவத்தை கலைஞர் உருவாக்கினார் என்பது சரித்தி ரமாகும்.
இன்றைக்குப் பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் அந்தத் தலைப்பில்தான் உரையாற்றினார்.
இந்தியாவில் வாக்குரிமையை முதன்முதலில் பெண்களுக்குக் கொடுத்தது நீதிக்கட்சி ஆட்சி!
திராவிட இயக்கத்தினுடைய தனித்தன்மை - அண்ணா - கலைஞர் - ஏற்கெனவே திராவிட இயக்கம் - நீதிக்கட்சி - இந்தியாவிலேயே வாக் குரிமையை முதன்முதலில் பெண்களுக்குக் கொடுத்த ஒரே ஒரு ஆட்சி இருக்கிறது என்றால், அது நீதிக்கட்சி ஆட்சி - திராவிட இயக்க ஆட்சி.
அதற்கு அடுத்தபடியாக, பெண்களுக்கு சமத்துவம் வரவேண்டும் - எல்லா வாய்ப்புகளும் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச்
சட்ட வடிவம்!
ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தங்க மெடல், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்து - தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் - இவ் வளவும் செய்த தனித்தன்மை.
எல்லாவற்றையும்விட, மாநில சுயாட்சி என்பதை சொன்னதோடு நிறுத்தாமல், அதற்குரிய தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றி, இன்றைக்கும், நாளைக்கும் அரசமைப்புச் சட்டம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு நிபுணர் குழுவை அமைத்த பெருமையும் கலைஞரையே சாரும்.
ஆகவே, அப்படிப்பட்ட கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா நடைபெறுவது மிகச் சிறப்பானது.
ஒரு தலைவருக்கு எப்பொழுதும் மக்கள் சிந்தனை தான் இருக்கவேண்டும்.
கலைஞருக்கு முதுகுத் தண்டு வடத்தில் கொஞ்சம் சங்கடம்; அதனால் பிரபலமான மருத்துவமனையின், பிரபல டாக்டர் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்.
கலைஞர் அவர்களும், ‘‘முதுகு வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன்'' என்கிறார்.
தந்தை பெரியார் எப்படி 94 வயதில் தன்னுடைய மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அதுபோன்று கலைஞர் அவர்களும் முதுகுத்தண்டுவடம் செயல்படாமல் போய்விட்டால் என்னாகும்? என்று பயமுறுத்தினார்கள் சிலர் - அதுபற்றி கவலைப்படவில்லை என்று கலைஞர் அவர்கள் கூறிய நிலையில்தான், அந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
அறுவைச் சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து, கலைஞர் அவர்களை ஃபோஸ்ட் ஆபரேட்டிவ் வார்டுக்கு அனுப்புகிறார்கள். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், அங்கே இருந்த இளம்பெண்ணான செவிலியரிடம், ‘‘பேஷண்ட் கண் விழித்ததும், தாகம் என்று தண்ணீர் கேட்பார்; நிறைய தண்ணீர் கொடுக்கக்கூடாது; கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள்'' என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
தண்ணீர் அதிகமாகக் கொடுத்தால், பேஷண்ட்டுக்கு வாந்தி வரும் என்பதால், மருத்துவர்கள் வழக்கமாக சொல்லக்கூடிய விஷயம்தான் அது.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண் விழித்துப் பார்த்து, ‘‘தண்ணீர் வேண்டும்'' என்று கேட்கிறார்.
அங்கே இருந்த செவிலியர், ஒரு சிறிய டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து, ஒரு சொட்டு தண்ணீரை அவருடைய நாக்கில் விட்டார்.
‘‘இன்னும் தண்ணீர் வேண்டும்'' என்று கலைஞர் கேட்க,
இன்னொரு சொட்டு தண்ணீரை, அவருடைய நாக்கில் வைத்தார் அந்த செவிலியர்.
திராவிட ஆட்சி - வெல்லும் ஆட்சியாக இருக்கிறது-
வரலாறு சொல்லும் ஆட்சி!
உடனே கலைஞர் அவர்கள், அந்த நேரத்திலும், மயக்கத்திலிருக்கும்பொழுதும், அவ்வளவு வலி யிலும் ‘‘இங்கே வாம்மா, தண்ணீர் கேட்டேன், கொடுக்கமாட்டேன் என்கிறீர்களே, உன் பெயர் என்ன காவேரியா?'' என்று கேட்டார்.
ராமச்சந்திரா மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சை முடிந்து வார்டில் இருக்கும்பொழுதுகூட, மக்களைப்பற்றி சிந்தித்த, மக்கள் பிரச்சினையில் அக்கறை காட்டிய தலைவர் கலைஞர் என்பதற்கு அடையாளம்தான் இது. அதனால்தான், இந்த ஆட்சி - திராவிட ஆட்சி - வெல்லும் ஆட்சியாக இருக்கிறது- வரலாறு சொல்லும் ஆட்சியாக இருக்கிறது.
‘பெரியார்' திரைப்பட விழாவில்
கலைஞர் உரை!
கலைஞர் போன்று சமயோஜிதமாக பேசக்கூடிய வர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
‘பெரியார்' திரைப்படத்தின் நூறாம் நாள் விழாவில் கலைஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது,
‘‘நான் எப்படி எழுதவேண்டும் என்பதைக் கூடச் சொல்வார். நான் ஒருமுறை அதைச் சொல்லியிருக்கிறேன். நான் ``குடிஅரசு’’ அலுவலகத்தில் போய்ச் சேர்ந்த புதிதில், எனக்கு துணை ஆசிரியர் பொறுப்பைக் கொடுத்து, முதல் கட்டளையாக திருவண்ணா மலையிலே தீபம், அதைப்பற்றி ``குடிஅரசு’’ பத்திரிகையிலே எழுது என்று சொன்னார். நான் எழுதிக் கொண்டு போய் அய்யாவிடம் கொடுத்தேன். அதற்குத் தலைப்பு ``அண்ணா மலைக்கு அரோகரா’’ என்று எழுதியிருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு நல்லாயிருக்கு, ஆனால், நீ இந்த அண்ணாதுரை மாதிரி அலங்காரமா எழுதியிருக்கே, விஷயத்தை மாத்திரம் சொல்லு என்றார். அவருக்கு இந்த அலங்காரம் அவ்வளவாகப் பிடிக்காது, அதற்காக அண்ணாவைப் பிடிக்காது என்று அர்த்தமில்லை. சொல்லவேண்டிய விஷயங் களை சுருக்கமாக, சுவையாக, சூடாக, சுருக் என்று சொல்லவேண்டும் என்பது அய்யா அவர்களின் கருத்து. அதை நான் உடனடி யாகப் பயின்று, அதை ஏற்றுக் கொண்டு அப் படியே நான் செய்த காரியம் ஒன்று உண்டு.
அடுத்த சில வாரங்களுக்கெல்லாம் திருவையாறு தியாக அய்யர் உற்சவத்தில் ஒரு சம்பவம். அதில் இசைவாணர்கள் எல்லாம் அவர்களாகவே சென்று பாடுவது வழக்கம். இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறார்கள், பணத்தைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். அதை தியாக அய்யருக்குச் செய்யவேண்டிய கடமையாகக் கருதி செய்வார்கள். ஒரு நாள் தண்டபாணி தேசிகர் வந்து பாடினார். அவர் தமிழ் இசை இயக்கத்தின் தலைவராக அன்றைக்கு இருந்த காரணத்தால், அந்த மேடையிலே தமிழிலேயே பாடி முடித்தார். மறுநாள் இன்னொருவர் அங்கே கச்சேரிக்காக வந்தார், அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அவர் ‘‘நேற்று யார் பாடி னார்? தேசிகர் பாடினார். என்ன பாடினார், அவர் முழுக்க முழுக்க தமிழ் இசையிலேயே பாடினார் என்றார்கள். அப்படியானால், முத லில் இந்த மேடையை தோஷம் கழியுங்கள், தீர்த்தம் தெளித்து இந்த மேடையில் தோஷம் கழித்தால்தான் நான் உட்கார்ந்து பாடுவேன்'' என்று சொல்லி விட்டார்.
தமிழிலே பாடி இந்த மேடை தீட்டாகி விட்டது என்றார். இந்தச் செய்தி பத்திரிகையிலே வந்தது. மறுநாள் தீர்த்தம் தெளித்து, தீட்டு கழித்த பிறகு அவர் பாடினார். அதற்குப் பிறகு வரலாறு எப்படித் திரும்பியது என்றால், அப்படிச் சொன்னவரே, அதற்குப் பிறகு இருபதாண்டுகள் கழித்து தமிழ் இசைப் பாடல்களைத்தான் பாடித் தீரவேண்டுமென்ற நிலைக்கு ஆளானார். அது வேறு விவகாரம். ஆனால், அந்தச் செய்தி பத்திரிகையிலே வந்ததும், அய்யா என்னை அழைத்து, அதைப் படித்தாயா என்று கேட்டார்.
ஒவ்வொரு நாளும் காலையிலே ஆறு மணிக்கெல்லாம் நாங்கள் எல்லாம் அய்யா வீட்டிற்குச் சென்று விடுவோம். பத்திரிகையை எடுத்துப் போட்டு இதைப்பற்றி எழுது என்றார், எழுதிக் கொடுத்தேன். எனக்கு ஞாபகம் உள்ளது. ‘‘அண்ணாமலைக்கு அரோகரா'' என்று எழுதியது அவருக்குப் பிடிக்கவில்லை, இதை எப்படி எழுதுவதோ என்று நினைத்துக் கொண்டே ``தீட்டாயிடுத்து’’ என்று தலைப்புக் கொடுத்து திருவையாற்றில் தமிழ் இசை பாடியதால் அந்த மேடை தீட்டாகி விட்டது என்று ஒரு பாடகர் பேசியிருக்கிறார், என்ன அநியாயம் என்று எழுதினேன். அய்யா அதைப் படித்துவிட்டு, ஆங், இப்படித்தான் எழுதவேண்டும், இது எப்படி `சுருக்’ என்று படுகிறது பார், என்று இப்படி எனக்கு நான் அண்ணாவின் நடையைப் பின்பற்றியவன் என்றாலுங்கூட, பெரியாருடைய அந்த ஆற்றல், பெரியாருடைய அந்த ``ஸ்டைல்’’ என்பார்களே, அதைப் பின்பற்றித்தான் கருத்துகளை சொல்கின்ற பயிற்சியும் எனக்குக் கிடைத்தது.'' என்றார்.
ஆகவேதான், இங்கே ஒரு பெரிய குருகுலம்; அதில் பெற்ற பயிற்சியால் விளைந்த பெரிய ஆட்சிக் கலை. அதேபோன்று அண்ணாவிடத்திலே அமைந்த அந்த ஆட்சிக் கலை. இப்படி எத்தனையோ செய்திகளை யெல்லாம் சொல்லிக் கொண்டு போகலாம்.
எனவேதான், இன்றைக்கு ஒரு பெரிய தமிழ் மறுமலர்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் மறுமலர்ச்சி. பெண் களைப் பொறுத்தவரையில் சமத்துவம் - அதற்கடுத்த கட்டம் - அதிகாரமளிப்பு - உத்தியோகம். இவை அத் தனையும் செய்யக்கூடிய இயக்கம்தான் இந்த இயக்கம்.
கலைஞருடைய வழியை
இளைஞர்களே பின்பற்றுங்கள்!
எனவேதான், அவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். அவரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப் பட்டது - அது ஆல்போல் வளர்ந்து, அருகுபோல் வேரோடி இன்றைக்கும் அசைக்க முடியாமல் இருக்கிறது. கலைஞர் அவர்களுடைய வழியை இளைஞர்களே பின்பற்றுங்கள்.
ஒன்றிய அரசு இப்பொழுது என்ன திட்டங்களைக் கொண்டு வருகிறது தெரியுமா?
இன்னும் ஆயிரம் கலைஞர்கள் தேவை! ஆயிரம் ஆண்டுகள் திராவிட ஆட்சி தேவை! தேவை!!
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் புதிதாக வரக்கூடாது; படிக்கக்கூடாது; 18 வயதிற்குமேல் அவரவர் ஜாதித் தொழிலை மறுபடியும் செய்ய வேண்டும் என்றெல்லாம் மீண்டும் ஆரம்பித்து விட்ட நேரத்தில், இன்னும் ஆயிரம் கலைஞர்கள் தேவை! மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் திராவிட ஆட்சி தேவை! தேவை!! என்று கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.
சிறப்பாக உரையாற்றிய அத்துணை அறிஞர் பெரு மக்களுக்கும் வேந்தர் என்ற முறையில் பாராட்டு களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்!
வாழ்க கலைஞர்!
திராவிடம் வெல்லும் அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
No comments:
Post a Comment