ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்த கிணற்றில் நீர் வறண்டு கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது ஒரு செய்தி (‘தினமலர்', 1.10.2023).
தீர்த்த தலம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் சேரும் என்பது அய்தீகமாம். இதில் நீராட வட, தென் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனராம். விடுமுறை தினம் என்பதால் காலை 5.30 மணிமுதல் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ‘புனித' நீராடினராம். இந்நிலையில் காலை 11 மணிக்கு 2 ஆவது தீர்த்தமான கெந்தமாதன தீர்த்தம், 14 ஆவது சூரிய தீர்த்தம், 15 ஆவது சந்திர தீர்த்தம், 20 ஆவது யமுனா தீர்த்தம், 21 ஆவது கங்கா தீர்த்தம் ஆகியன வறண்டு அரை அடி உயரத்தில் தீர்த்தம் தேங்கிக் கிடந்ததாம். இதனால் பக்தர்களை சில நிமிடங்கள் காத்திருக்க வைத்து மணல் கலந்த தீர்த்தத்தை ஊழியர்கள் வாளியில் இறைத்து மிக குறைவாக தெளித்தனராம்.
எப்படி இருக்கு?
யானை குளிக்க: கடந்த ஜூலையில் 7 ஆவது தீர்த்தமான சேதுமாதவர் குளத்தில் பல ஆயிரம் லிட்டர் நீரை வெளியேற்றி தூர்வாரினார்கள். மேலும் இந்த தீர்த்த குளத்தில் இருந்து கோயில் யானை குளிக்க தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்தனர். இதனால் இதனை சுற்றியுள்ள பிற தீர்த்தங்களும் வறண்டு போயின என்று இந்து அமைப்பினரே கூறுகின்றனர்.
ஆமாம், அதுதான் ராமநாதரின் புண்ணிய தீர்த்தக் கிணறாயிற்றே - அது எப்படி வற்றலாம்?
ஒரு குட்டையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் போகும் என்பதே படுமுட்டாள்தனம்!
தேங்கிக் கிடக்கும் ஒரு குட்டையில் ஆயிரக்கணக்கானோர் குளித்தால், நோய் தொற்றாதா?
கடந்த கும்பகோணம் மகாமகத்தின் போது என்ன நடந்தது?
மகம் முடிந்த பின், மாவட்ட ஆட்சியர் அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ய அனுப்பிய நிலையில், அதில் 28 விழுக்காடு மலக்கழிவும், 40 விழுக்காடு சிறுநீர் கழிவு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதே!
‘‘பக்தி வந்தால் புத்தி போகும்'' என்று சொன்னாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!
பக்தர்கள் சிந்திப்பார்களாக!
- மயிலாடன்
No comments:
Post a Comment