இந்தியா என்று, ஒரு பொதுக் குடும்பம் (நாடு) எப்போதும் இருந்ததில்லை. நம் குடும்பத்தின் (நாட்டின்) பயனை மற்றவன் அனுபவிப்பதற்கு ஆகப் பல குடும்பங்களை ஒன்றாகப் பிணைத்து வெள்ளையர் உருவாக்கிப் பயன் அனுபவித்து வருகிறார்கள். குடும்ப மக்கள் கூப்பாடு போடாமல் இருப்பதற்கு முன்னணியில் இருப்பவனை (ஆரியனை) சுவாதீனப்படுத்திக் கொண்டு அவனுக்குச் சற்று அதிக போஷனைக் கொடுத்து மற்றவர்களை அந்தகாரத்தில் ஆழ்த்தி வைத்து பலன் அனுபவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இன்று “இந்தியர் ஏக குடும்பம்” என்பது. இந்தியாவில் உள்ள நாம் எல்லோரும் ஒரு குடும்ப மக்கள் அல்ல. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையுமல்ல. நம் எல்லோருக்குமாக ஒரு தகப்பனும் இல்லை. நாம் வேறு வேறு குடும்பத்தவர்கள். நம் தாய் தந்தையர்கள் வேறு வேறு.
திராவிடர்கள் தங்களுடைய, தாங்கள் பாரம்பரியமாய்ச் சரித்திர காலம் தொட்டு ஆண்டு அனுபவித்து வந்த திராவிட நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட வெள்ளை யரைத் தங்களுக்கும் பிரித்துக் கொடுத்துத் தங்கள் தேவைகளுக்குப், பழக்க வழக்கமான உணர்ச்சிக்கு ஏற்றபடி சட்டதிட்டம் செய்துகொண்டு முற்போக்கடையச் சுதந்திரமும், சவுகரியமும் செய்துகொடுக்கும்படி (வெள்ளைக்காரர்களைக்) கேட்கின்றார்கள். இந்நிலையில் குறுக்கே நிற்க ஆரியர்களுக்கு என்ன உரிமை? இவர்கள் இதைப்பற்றி பேசவோ கலந்துகொள்ளவோ என்ன பாத்தியம் என்றுதான் நான் கேட்கிறேன்.
ஆரியனுக்கு வெள்ளையனிடம் உள்ள உரிமை எல்லாம் “நான் உள்ளாளாயிருந்து சூழ்ச்சி செய்தும், சதி செய்தும், முஸ்லிமிடமிருந்தும், திராவிடன் இடமிருந்தும் உன் கைக்கு நாடு வரும்படி செய்தேனே, மறுபடியும் அவர்கள் ஆதிக்கத்திற்கு விடுகிறாயா பிறகு என்கதி என்ன?” என்று கேட்பது போல் தடுப்பதல்லாமல் வேறு என்ன பாத்தியம் என்று கேட்கிறேன். வெள்ளைக்காரன் இந்தியாவின் பல நாடுகளையும் கைப்பற்றும் போது ஆரி யனுக்கு எங்காவது நாடு இருந்ததா என்று கேட்கிறேன்.
வேத காலம் முதல், பேதம் தானே!
நாம் கேட்கும் பிரிவினை இன்று நேற்றுக் கிளம்பிய தில்லை. குறிப்பாக திராவிடர்- ஆரியர் விஷயமும் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத தன்மையும், போராட்டமும் வேத காலம் முதல் இருந்து வருகிறது.
திராவிடர்கள் ஆரியர்களால் பல கஷ்ட நஷ்டங்களும் இழிவுகளும் அனுபவித்ததாகவும், ஆரியர்களைத் திராவிடர்கள் தங்களது பிறவி எதிரிகளாகக் கருதி வந்ததாகவும், ஆதாரங்களும் அனுபவ பூர்த்தியான நடத்தைகளும் இன்றும் காணப்படுகின்றன.
இன்றும் ஆரியன் திராவிடனை “சூத்திரன், தொடக் கூடாதவன்” என்கிறான். “சண்டாளன்” என்கிறான். அந்தப்படி எழுதி வைத்திருக்கும் புஸ்தகத்தைக் கடவுள் வாக்கு, சாஸ்திரம், மனிதர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதி என்கிறான். ஆரியருடன் கூட்டு வாழ்க்கைச் சரித்திரம் தெரிந்த காலம் முதல், ஆரியனுக்குத் திராவிடன் கீழ் ஜாதியானாகவும், சகல துறைகளிலும் பாடுபட்டு உழைத்துப் போட வேண்டியவனுமாகவே இருந்து வந்திருக்கிறான். இப்படிப்பட்ட நிலைமையில் மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறவியில் உறுதியோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும், அரசியல் குருவாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதைவிட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடு என்ன என்று கேட்கிறேன்.
இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது. அப்படியிருக்க திராவிட நாட்டை “பரதநாடு” என்று சொல்லவோ, “பரதகண்டம்” என்று சொல்லவோ, “பாரத தேசம்” என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட்கிறேன்.
அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார்களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியாதையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.
பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப்போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர்களே ஆண்டிருக் கிறார்கள். முஸ்லிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல்லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடி யாது. திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமா னால் ஆரிய நாடுகளிலும் இருந்திருக்கிறது. ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம்பெரும் மன்னர்களின் சமுதாயங்களான திராவிடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதியாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.
பாம்பு வாயில் தவளை
இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்களது கலை, மானம் ஆகியவைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத் திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிராணாவஸ்தைக் கூப்பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித்துவிட்டால்தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக்கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும். இப்படிப்பட்ட நிலையில் “அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம்” என்று மடையனும் மானமற்றவனும்தான் சொல்லுவான்.
இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர் களையும் ஒத்திட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டு கிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆரியர் உயர்வுக்கும், திராவிடன் சீர்கேட்டுக்கும் காரணம் என்ன?
திராவிடன் - “சூத்திரன்”. திராவிடப் பெண் “சூத்திரச்சி”. ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத்தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள். மற்றும் திராவிடப் பழம்பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது. ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி. ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண்டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலிசு காவலர்கள், தோட்டி தலையாரிகள். ஆரியர்கள் 100க்கு 90 உத்தியோகங்களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜுகள் முதலிய பெரும் பெரும் பதவிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அவன் பிள்ளை அய்.சி.எஸ். ஆகிறான். திராவிடன் ஜமீன்தாரனாய் இருந்தாலும் அவன் மகன் தெருவில் காவாலியாய், காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய், மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண்ணும் அணிந்துகொண்டு, பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்து கொண்டு நின்று கும்பிட்டு, அவன் கால்தூசியைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல், பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ‘ஜே’ போட்டு தேசபக்தனாகக் காட்டிக் கொள்ளும் மானமற்ற திராவிடனைக் கேட்கின்றேன். இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.
இதுதானா தேச பக்தி?
நாம் ஒருவருக்கொருவர் அந்தப்பயல் இந்தப் பயல் என்று பேசிக் கொள்கிறோம். ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட அசூயை கொள்கிறோம். ஒருவருக்கொருவர் கீழ் ஜாதிக்கு ஆதாரம் வைத்திருக்கிறோம். ஆனால் பார்ப்பார ஜாதி மாத்திரம் அப்படியே பரிசுத்த ஜாதியாக நம்மாலேயே கருதப்படுகிறது. அவன் வீட்டில் சாப்பிடுவதைப் பெருமை என்பதிலோ, அவனைக் கைகூப்பித் தொழுவதிலேயோ, அவனுக்கு “ஜே” போட்டு சேவகம் செய்வதிலேயோ நம்மவர்களுக்குச் சிறிதும் சங்கோச மில்லை. அதிருப்தி இல்லை. மான உணர்ச்சியும் இல்லை, இதுதானா தேச பக்தி? இதுதானா காங்கிரசினால் நாம் அடைந்த பலன்? என்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் காங்கிரசால் பார்ப்பான் நிலை என்ன? நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
நான் சொல்லுகிறபடி ‘‘திராவிடநாடு திராவிடருக்கு’’ என்று பிரிக்கப்பட்டு ஆட்சி நடந்தால் இந்த நிலை இருக்குமா? என்று பாருங்கள். தேச பக்தி தேசிய உணர்ச்சி என்று பேசுகிற மடையர்கள் நம் கூட்டத்தில் கல்லைப் போடவும், மண்ணைப் போடவும், நாய்கள் போலக் குரைக்கவும், காலித்தனம் செய்யவும் கற்றுக்கொண்டு அவைகளைத்தான் தேசியமென்றும், தேசபக்தியென்றும் கருதிக்கொண்டிருக்கிறார்களே அல்லாமல், நம் நாடு, நாம் பிறந்த நாடு, நம் பெரியோர் மேன்மையாக வாழ்ந்து ஆண்ட நாடு, பிழைக்க வந்த ஆரியர்களால் மிலேச்ச நாடாக ஆகி, நம் பாஷை மிலேச்ச பாஷையாகி நம் சமூகம் மிலேச்சர் - அரக்க - சூத்திர - திருட ஜாதியாக ஆக்கப்பட்டு விட்டதே என்கின்ற கவலை எவருக்கு இருக்கிறது? என்று கேட்கிறேன்.
இந்தியாவைத் துண்டாக்குவதா என்று கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், அவர்களை, இந்தப் பார்ப்பனுக்குக் கீழ் ஜாதியாய் இருப்பதா என்று, இதில் எது கெடுதி?
இந்தியா பிரிவதே அதன் இயற்கை அமைப்பு
ஆகவே, நானோ ஜனாப் ஜின்னாவோ இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகக் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாகப் பிரிக்கப்படத்தான் போகிறது. இன்று இப்போது காலித்தனம் செய்த திராவிடத் தோழர்கள் கூட, அந்த பிரிந்த திராவிட நாட்டில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு இப்படிப்பட்ட ஈனத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல், மானத்தோடு வாழப் போகிறார்கள் என்று இப்போதே உறுதி கூறுகிறேன்.
முன்பு 4, 5 மாகாணமாக இருந்த இந்தியா இன்று 11 மாகாணமாக ஆகவில்லையா? பர்மா பிரிக்கப்பட்டு விடவில்லையா? இலங்கை பிரிந்திருக்கவில்லையா? காங்கிரஸ்காரர்கள் இந்தச் சென்னை மாகாணத்தை 4 மாகாணமாகப் பிரிக்க வேண்டும் என்று தீர்மானித்து இருக்கவில்லையா? சென்ற சில வருஷமாக ஆந்திரா - தமிழ்நாடு வேறுவேறு பிரிக்கப்பட வேண்டும் என்று கிளர்ச்சி நடக்க இல்லையா? நான் பிரிக்க வேண்டும் என்பது இவைகளில் எதற்குப் புறம்பானது. இந்தியாவைத் துண்டுபோடாதே என்கிறது ஒரு கூலி தேசியப்பத்திரிகை. இந்தியா எங்கு ஒன்றாக இருக்கிறது? எப்போது இருந்தது?
ஆட்சி வேறுபாட்டால் அடையும் நன்மைகள்
இந்தியா ஒரே ஆட்சி முறையில் இருப்பதற்கும், வேறு வேறு ஆட்சி முறையில் இருப்பதற்கும், ஆட்சியில் உள்ள வித்தியாசங்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்.
திருவாங்கூர் கொச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்குள்ள ரோட்டுகள் சந்து பொந்தெல்லாம் கண்ணாடி போல் சிமெண்ட் தரைபோல் இருக்கின்றன. இங்குள்ள ரோட்டுகள் பல்லாங்குழி போல் இருக்கின்றன. அதிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு ரோட்டுகளில் உள்ள ஒவ்வொரு பள்ளங்கள், வண்டி குடைகவிழ்ந்தால் வீதியில் நடப்பவருக்கு வண்டியும் மாடும் வண்டிக்காரனும் தெரிய முடியாத மாதிரியில் பள்ளத்தாக்குகள் போல் இருக்கின்றன.
படிப்பு வசதியோ அங்கு மொத்த ஜனத்தொகையில் 100க்கு 30 பேர்களுக்கு மேலாகப் படித்தவர்களாகவும், வயது வந்தவர்களில் 100க்கு 60 பேருக்கு, 70 பேருக்கு மேலாகவும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இங்கு பார்ப்பனர்தான் 100க்கு 100 பேர் ஆண், பெண் அடங்கவும் படித்திருக்கிறார்கள். படியாதவர்கள் 100க்கு 10 பேர் கூட இல்லை. உத்தியோகங்களில் அங்கு சகல ஜாதி மத வகுப்பாரும் விகிதாசாரப்படி அனுபவிக்கிறார்கள். இங்கு பார்ப்பனருக்குத்தான் ஏகபோகம். பெயருக்குத்தான் முஸ்லிம்களும் இந்தியர், ஆதிதிராவிடரும் இந்துக்கள், எல்லோரும் பாரத மாதா புத்திரர்கள் என்று சொல்லு கிறார்களே தவிர, பார்ப்பனர்கள் சட்டப்படி பிறந்த பாரத புத்திரர்களாகவும், மற்றவர்கள் சட்ட விரோதமாகப் பிறந்த அநுலோம புத்திரர்களாகவுமே மதிக்கப்படுகிறது. சமத்துவ பங்கே நமக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஆட்சி நிர்வாகத்திலும் தனி அரசனுடைய ஆதிக் கமாய் இருந்தாலும் வகுப்புக் கலவரம், வகுப்புக் குழப்பங்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் இருப்பதில் 10 இல் ஒரு பங்கு கூட இல்லாமல் இருந்துவருகிறது. எந்த வகையில் பிரிக்கப்பட்ட இந்தியா இன்று கஷ்டப்படுகிறது என்றாவது, பிணைக்கப்பட்ட இந்தியா சுகப்படுகிறது என்றாவது சொல்லமுடியுமா என்று கேட்கிறேன்.
நம்மைத் துரத்துகிறான் - நாம் துரத்த வழியில்லை
சிலோன், பர்மாக்காரர்கள் பிரிந்ததால் தங்கள் நாட்டைச் சுரண்டுகிற அந்நிய நாட்டு மக்களை “வெளியில் போ” என்று சட்டம் செய்யவும், சிலோனியன் தான் அதிகாரியாக இருக்கலாம் என்று சட்டம் செய்யவும், இந்தியக் கூலிகளைக் கூட விரட்டவும் முடிந்தது. ஆனால் நாம் பிணைந்து இருப்பதால் திராவிட நாட்டின் ஆதிக்கம் அதிகாரம் பூராவும் ஆரியனிடமே இருக்கிறது. வெளி மாகாணத்தில் இருந்து வந்து கொள்ளையடிப்பவனையும், சுரண்டுகிறவனையும், சகல தொழிலையும் கைவசப் படுத்திக் கொண்டு, நம் நாட்டு மக்களை வேறு நாட்டிற்கு கூலியாகத் துரத்துகிறவனையும் கூட, துரத்துவதற்கு நமக்கு இன்று அதிகாரமில்லை.
இந்த நாட்டில் முல்தானி, மார்வாடி, குஜராத்தி எதற்காக வந்து கொள்ளை அடித்துப் போவது? பார்ப் பனர்களாவது தொலைந்து போகட்டும் என்றாலும், இந்த முல்தானிக் கூட்டங்கள் சுரண்டுவதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? இவர்களைப் பார்ப்பனர்கள் தானே அழைத்து வந்து சுரண்டிக்கொண்டு போவதற்கு இடம் கொடுத்து, அவர்களிடம் கூலி வாங்கி நம்மை ஒழிக்கும் இயக்கத்தை நடத்துகிறார்கள்.
காங்கிரசுக்குப் பிறகு தானே இவர்களுக்கு இங்கு இவ்வளவு ஆதிக்கமேற்பட்டது?
ஹிந்துமதம், ஹிந்தி பரவ இவர்களுக்கேனோ அக்கறை?
இந்து மகாசபை மகாநாடு நடத்த ஈரோடு முல்தானி சேட்டுகள் ரூ.500 கொடுத்தார்களாம். சேலம் முல்தானியும், குஜராத்தியும் 500 ரூபாய் கொடுத்தார்களாம். இதன் கருத்து என்ன? அவர்களுக்கு மாத்திரம் இந்து மத பக்தி அவ்வளவு ஏன் வரவேண்டும்?
ஹிந்தியை இந்நாட்டில் பரப்ப முல்தானி, குஜராத்தி, மார்வாடிகள் தான் லட்சக்கணக்காகக் கொடுக்கிறார்கள்.
சென்னை ஹிந்தி மண்டலத்திற்கு வருஷம் 20, 30 ஆயிரம் ரூபாய் போல் பார்ப்பனர் செலவு செய்கிறார்கள். கட்டடங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்ப டுகிறது. அங்கு உள்ள பார்ப்பனர்கள் வாழ்க்கை அரவிந்த ஆசிரமம் போலவும், ராமகிருஷ்ண மடம் போலவும், ரமண ரிஷிகள் ஆசிரமம் போலவும் நடைபெறுகின்றன. ஒழுக்கங்களில் என்றாலோ படிக்க வரும் பெண்கள் ஹிந்திப்படிப்புப் பெற்றுப் போவது மாத்திரமல்லாமல் பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு போகிறார்கள். இப்படியெல்லாம் நடந்தும் இதற்கு யார் பணம் கொடுக் கிறார்கள். குஜராத்தி, மார்வாடி, முல்தானியல்லவா? வருஷம் ஒன்றுக்கு இந்தக் கூட்டத்தாரால் திராவிட நாட்டில் இருந்து பகல் கொள்ளை போல் அடித்துக் கொண்டு போகும் பணம் எத்தனை கோடி என்று கணக்குப் போடுங்கள்.
நாடு பிரிந்தால் நடக்குமோ சுரண்டல்கள்?
திராவிட நாடு தனியாகப் பிரிந்தால் இந்தச் சுரண்டுதல்கள் நடக்குமா? திராவிட நாட்டில் இயந்திரம் பிசாசாகக் கருதப்படுகிறது. வடநாட்டில் இயந்திரம் இரசவாதமாகக் கருதப்படுகிறது. காந்தியார் பிர்லா வீட்டில்தான் தங்குவது. திராவிடர்களைப் பார்த்து யந்திரம் பிசாசு என்பது. திராவிடர்களை ராட்டினமும் தக்கிளியும் சுற்றுங்கள் என்பது. குஜராத்தி, மார்வாடி களுக்கு யந்திரங்கள் பெருக உதவி செய்வது. இது போலவே நம்மிடம் வந்து வெள்ளையனை விரட்டு கிறோம் ஓட்டுகொடுங்கள் என்பதும், வெள்ளையரிடம் சென்று திராவிடர்கள் கையில் ராட்டினம் கொடுத்துப் பட்டினி கிடக்கும்படிச் செய்து தக்ளி கொடுத்து அகிம்சை உபதேசித்து கோழைகளாகவும், மானமற்றவர்களாகவும் ஆக்கி விட்டேன்; ஆதலால், எங்களுக்கே மந்திரிவேலை வரும்படியான காரியத்துக்கு உதவி செய் என்பதும் ஆகிய, இம்மாதிரி காரியங்கள் திராவிட நாடு பிரிக்கப் பட்டால் நடக்குமா என்று பாருங்கள். காந்தியார் கை வரிசை, பார்ப்பனர் கைவரிசை, காங்கிரஸ் பித்தலாட்டம் இலங்கையில் செல்லுகிறதா பாருங்கள். ஆகையால் திராவிடர் பிரிக்கப்பட்டால் ஒழிய, தமிழனுக்கும் திராவிடனுக்கும் விடுதலை இல்லை; முற்போக்கு இல்லை என்பதை நினைவில் வையுங்கள்!
குடிஅரசு - கட்டுரை - 10.1.1948
No comments:
Post a Comment