சென்னை, அக்.1- ''தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால், அதில் ஒருவர் கூட பெண் முதலமைச்சர் கிடையாது,'' என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் கூறினார்.
பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சிக்கல்கள் குறித்து, நாடு முழுவதும், காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வது குறித்து, லாவண்யா பல்லால் ஜெயின் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், 29.9.2023 அன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, மாநில நிர்வாகிகள் செந்தமிழ் அரசு, சுமதி அன்பரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
பின், லாவண்யா அளித்த பேட்டி வருமாறு:
மகளிர் இட ஒதுக்கீடு, ராஜிவ் கனவு திட்டம். முதன் முறையாக, உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில், 50 சதவீத இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு வழங்கப் பட்டது. நரசிம்மராவ் காலத்திற்கு பின், பல்வேறு மாநில உள்ளாட்சி அமைப்புகளில், 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
கடந்த, 2014 இல் காங்கிரஸ் கட்சி, இந்த மசோதாவை கொண்டு வந்தபோது, பா.ஜ.,வினர் நிறைவேற்றவிட வில்லை. ஒன்பது ஆண்டுகளாக, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஓட்டு வங்கிக்காக, இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். மசோதாவை நிறைவேற்றிய பின், தொகுதி மறுவரையறைக்காகவும், மக்கள் தொகை கணக்கெடுப் பிற்காகவும் எதற்காக காத்திருக்க வேண்டும்?
காங்கிரஸ் ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பல பெண்கள் முதலமைச்சராக இருந்துள்ளனர். தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால், ஒரு பெண் முதலமைச்சர் கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment