2024 பிப்ரவரியில் சென்னையில் கணினித் தமிழ் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

2024 பிப்ரவரியில் சென்னையில் கணினித் தமிழ் மாநாடு

சென்னை, அக்.12  தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

‘தமிழ் இணையம் 99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ் களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும். 

மேலும், மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 'தமிழ்99 விசைப்பலகை' உருவாக் கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், ‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந் திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே நாம் பேசத் தொடங்கிவிட்டாலும் அண்மைக் காலத்தில்தான் அது முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும். புதிய தலைமுறையை இதன் பக்கம் திருப்ப இயலும்.  

இந்தப் பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாடு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம் பாக்கம் வர்த்தக மய்யத்தில் நடத்தத் திட்டமிடப்பட் டுள்ளது. மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நடத்திய ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடைபெற்ற அதே நாளில் பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாடு (கணினித்தமிழ்24) கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பது சிறப்பான ஒன்றாகும். தமிழ் நாட்டிலும், இந்திய அளவிலும், பன்னாட்டு அள விலும் தமிழுக்காகப் பங்களித்துவரும் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள். மேலும் மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.kanitamil.in  என்ற இணையதளத்தில் அறியலாம்.  

No comments:

Post a Comment