'எமரால்டு' எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் தமிழர் தலைவர் பேருரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

'எமரால்டு' எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் தமிழர் தலைவர் பேருரை

சென்னை,செப்.15- பச்சையப்பன் கல்லூரி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள் 14 செப்டம்பர் 2023. தமிழர் தலைவர் ஆசிரியர் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பல்வேறு இடங்களில், அமைப்புகளில் நிறுவனங்களில் விழாக்களில் பேசியுள்ளார். அவற்றில் பல வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. திருப்புமுனை பேச்சாக அமைந்துள்ளன. இன்றைய தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு அவர் ஆற்றிய உரை அத்தகைய தன்மையைக் கொண்டது. அறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்காக 1967இல் ஆற்றிய உரைக்கு ஒப்பானது. உணர்வுகளை மட்டுமல்ல நம் அறிவையும் தூண்டக்கூடிய ஒன்றாக அமைந்தது.

எமரால்டு எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நினை வாக அறக்கட்டளை துவங்கி தந்தை பெரியார் குறித்து பேருரை நிகழ்த்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை விடப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மிக அதிகமாகப் பெருமிதம் கொள்ள வேண்டும். பொறுப்புணர்வும் அதிகமாக இருக்க வேண்டும். பச்சையப்பன் கல்லூரி நம்முடைய அடையாளம். இலட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து வாழ்க்கையில் மேம்பட கதவுகளைத் திறந்து கல்வி கற்க வழி வகுக்கும் கல்லூரி.

எந்தக் காலத்திலும் பச்சையப்பன் கல்லூரியிலும்  மாண வர்கள் கவனம் சிதறாமல் கல்வி ஒன்றே  இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு படித்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்.

சமூக நீதிக்குக் குந்தகம் ஏற்படும் போது அதற்குப் போராட நாங்கள் இருக்கிறோம் நீங்கள் உங்கள் கடமையான கற்றலை திறம்படச் செய்து அறிவு ஆயுதத்தைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். எல்லாக் காலத்திற்கும் அறிவு மட்டுமே நமக்கு உதவியாக இருக்கும்.

மேலும் ஆசிரியர் பேசுகையில்,

எமரால்டு எம்.டி. கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். பச்சைப்பன் கல்லூரியின் மாணவர்  இலக்கியத்திலே நோபல் பரிசு பெற்ற வி‌ எஸ். நெய்பால் தன்னுடைய இந்தியா - மில்லியன் மியூட்டனி புத்தகத்திலே எம். டி. கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி எழுதி யுள்ளார். பல்வேறு சிறப்புகளுக்குரிய கோபாலகிருஷ்ணன் வாழ்க்கையைத் தக்க வகையில் அமைத்துக் கொள்வதற்கு அடித்தளமிட்டது பச்சையப்பன் கல்லூரி.‌ எம்.டி. கோபால கிருஷ்ணன் போலப் பலர் இந்த கல்லூரியிலிருந்து உருவாக வேண்டும் நோபல் பரிசு பெறக்கூடிய அளவில் விஞ்ஞானிகளாகவும் சிறந்த பொறியியல் நிபுணர்களாகவும், மருத்துவர்களாகவும் சட்ட மேதைகளாகவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நான் படிக்கும் காலத்தில் பெரியார் கொள்கைகளை ஏற்று அதற்கான பணிகளைச் செய்தாலும் கூட படிப்பில் நான் எப்போதும் என் கவனத்தை விலக்கிக் கொள்ள வில்லை வகுப்பில் எப்பொழுதும் முதல் மூன்று ரேங்கில் தான் இருந்தேன் கல்லூரி படிப்பு முடிக்கும் போது 

தங்கப் பதக்கத்தோடு வெளி வந்தேன். என்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. படிக்கும் காலத்தில் படிப்பு என்கிற நம் கடமையிலிருந்து சிறிதும் தவறக் கூடாது என்பதற்காகத் தான் சொன்னேன் என்றார்.

சுமார் 40 நிமிடங்கள் வெள்ளம் போல் ஆசிரியர் சொற்பிரவாகம் செய்து விட்டார். மதிய உணவு நேரம் கடந்தும் அவர் உரையாற்றிக் கொண்டிருந்ததை அமைதியாக ஆழ்ந்து கேட்டது, உரையின் மீது மாணவர்களுக்கு இருந்த அக்கறையும் ஈடுபாடும் புரிந்து கொள்ள முடிந்தது

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு,

அரங்கத்தில் தமிழர் தலைவர் நுழையும்போது மாணவர்கள் எல்லாம் எழுந்து நின்று உற்சாகத்துடன் குரல் கொடுத்துக் கைதட்டி வரவேற்றது கூடுதல் சிறப்பு.

பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் நீதியரசர் ஜெகதீசன் விழாவிற்குத் தலைமை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழர் தலைவர் தனது உரையைத் தொடங் குவதற்கு முன்பு 60ஆவது மணநாள் கொண்டாடும் பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது வாழ்விணையர் யசோதா சண்முகசுந்தரம் இருவருக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.

பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலர் துரைக்கண்ணு, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் பேபி உல்நாஸ், சி. கந்தசாமி நாயுடு கல்லூரியின் முதல்வர் வ.மு.சே. ஆண்டவர், பச்சையப்பன் தமிழ்த் துறைத் தலைவர் ச. உமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்த்துறையைச் சார்ந்த முத்து நிகழ்ச்சியைச் சிறப்புடன் தொகுத்து வழங்கினார். எமரால்டு பதிப்பகத் தின் உரிமையாளர் எம்.டி‌ கோபாலகிருஷ்ணன் அவர் களின் மகன் கோ. ஒளிவண்ணன் விழாவின் நோக்க உரையை வழங்கினார். முன்னதாக எமரால்டு எம்டி கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் அறக்கட்டளை நிறுவுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர்   அவர்கள் வாயிலாக நீதியரசர் ஜெகதீசன் அவர்களிடம் வழங்கினார்கள். முனைவர் பழனிச்சாமி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

எத்திராஜ் கல்லூரியின் மேனாள் துணைவேந்தர்கள் யசோதா சண்முகசுந்தரம் மற்றும் மு. தவமணி ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், வில்வநாதன், வெங்கடேசன், உடுமலை என ஏராளமான கழக பொறுப் பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் உரை கேட்கக் கல்லூரியில் அனைத்து துறை களிலிருந்தும் ஆசிரியர் பெருமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்திருந்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பி பலர் நின்று கொண்டே கேட்கும் சூழல் ஏற்பட்டது.

சமீப காலங்களில் பல்வேறு சிறப்புகளைப் பெற்று வரும் பச்சையப்பன் கல்லூரி வரும் ஆண்டுகளில் இந்தி யாவில் தலைசிறந்த கல்லூரியாக இடம் பெறுவதற்கு இன்றைய (14.9.2023) உரை படிக்கட்டுகளாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment