குலத் தொழிற் கல்வியை (விசுவகர்மா யோஜனா) விரட்டியடிப்போம் - வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

குலத் தொழிற் கல்வியை (விசுவகர்மா யோஜனா) விரட்டியடிப்போம் - வாரீர்! வாரீர்!!

சமதர்ம விரும்பிகளே, சமத்துவச் சிந்தனையாளர்களே, பிறப்பில் பேதம் பேசும் பிற்போக்குச் சக்திகளை பின்னங் கால் பிடரியில் அடிபட ஓட வைக்க விரும்பும் மானிடரே!

நாளை (6.9.2023) மாலை 4 மணிக்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டிய இடம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேதான். 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கூறினாரே திருவள்ளுவர் பெருந்தகை - அவர் பெயரால் முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட வள்ளுவர் கோட்டத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது பொருத்தம்தானே!

"விஸ்வகர்மா யோஜனா" - திட்டம் 18 வகை ஜாதிகளை அடையாளம் காட்டி, அவர்களின் பரம்பரைத் தொழிலுக்கு  ஊட்டச் சத்து ஊட்ட ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடாம் - பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில்

18 வயது முதல் உள்ளவர்கள் - பரம்பரை ஜாதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாமாம்!

சூட்சுமம் புரிகிறதா? ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று 56 அங்குல மார்பைப் புடைத்துக் காட்டி முழங்கினாரே - அது முடியவில்லை என்கிறபோது குலத் தொழிலுக்குக் கை காட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

1952-1954இல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக் கல்வியின் மறுபதிப்புதான் இந்தத் திட்டம் மறவாதீர்!

அந்தக் குலக் கல்வித் திட்டத்தின் காரணமாகத் தானே ஆச்சாரியாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமானது என்பது நினைவிருக்கிறதா?

தந்தை பெரியார்  மாக்கடலாகப் பொங்கி எழுந்தபோது, தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்தாரே ஆச்சரியார்!

அந்த செய்திதான் இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வுக்கும் 'விநாசகாலே விபரீதப் புத்தி' என்று அவர்கள் பாஷையில் சொன்னால்தானே புரியும்.

ஸனாதனத்தின் ஒரு கூறுதான் இந்த குலத் தொழில் 'விஸ்வகர்மா யோஜனா' என்பது.

+2 முடிக்கும் போது வயது 18 ஆகி இருக்கும் அல்லவா - அதுதான் அவர்களின் சூட்சுமம்!

இன்றைக்குப் பிரதமராக இருக்கும் நரேந்திர தாமோ தரதாஸ் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது - அரசு சார்பிலேயே நூல் ஒன்றை வெளியிட்டார்.

நூலின் பெயர் "கர்மயோக்" என்பதாகும். அதில் என்ன கூறுகிறார்?

Scavenging must have been a spiritual experience for the valmiki caste. At some time some body have got enlightment in scavenging, they must have been taught that it is their duty to work for the happiness of the entire society and the gods.

இதன் தமிழாக்கம்:  வால்மீகி ஜாதியைச் (தாழ்த்தப்பட்டவர்கள்) சேர்ந்தவர்கள் மலம் அள்ளுவது அவர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவம் ஆகும். சில வேளைகளில் மலம் அள்ளுவதில் சிலர் மகிழ்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் பெற்றனர்.ஒட்டு மொத்த சமுதாயத்தினரின் மகிழ்ச்சிக்காகவும், கடவுள்களின் மகிழ்ச்சிக்காகவும் அவர்கள் மலம் அள்ளுவது அவர்களின் கடமை என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மலம் அள்ளுவது தெய்வீகமானதாம்.

அப்படியா சேதி? அதை வால்மீகி ஜாதியார் மட்டும்தான் செய்ய வேண்டுமா?

பார்ப்பனர்கள் அந்தத் தொழிலைச் செய்து இந்த தெய்வீக அருளை, கடவுளின் சந்தோஷத்தை ஏன் பெறக் கூடாது?

முதல் அமைச்சராக இருந்து அன்று சொன்ன குலத் தொழிலை, பிரதமராக இருக்கும்போது வார்த்தையை மாற்றி விளையாடுகிறார் மோடி ஜி.

குஜராத் முதலமைச்சர் மோடிஜி "கர்மயோக்"  என்ற நூலை வெளியிட்டபோது திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது தெரியுமா? (11.12.2007).

அந்தக் "கர்மயோக்கும்" இந்த "விஸ்வகர்மா யோஜனா" வும் ஒரு பொருள் இரு சொற்கள்தாம்.

பா.ஜ.க.வின் மூலக்   கருவான ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கரின் "ஞான கங்கை" (Bunch of Thoughts)  என்ற நூலிலில் பச்சையாக வருணாசிரமத்தை ஆதரித்து எழுதிடவில்லையா?

"பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள், க்ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள் - வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள், தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்குச் சேவை செய்பவர்கள் சூத்திரர்கள்" என்கிறாரே ஆர்.எஸ்.எஸின் குருநாதர்.

நாசூக்காகச் சொல்லுகிறார் கோல்வால்கர்.

தொழிலால் இவர்கள் பிராமணர்களா? க்ஷத்திரியர்களா? வைசியர்களா? சூத்திரர்களா? அல்லவே, அதைத்தான் மனுதர்ம சாஸ்திரம் விலாவாரியாக உடைத்து நொறுக்கித் தள்ளி விட்டதே!

பிர்மா தன் முகம், தோள், தொடை, பாதங்களிலிருந்து  முறையே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனைப் படைத்தான் என்று மட்டைக்கு இரண்டு கீற்றாக பிறப்பின் அடிப்படையில்தான் இவர்கள் என்று கறாராக (மனுதர்மம் அத்தியாயம் - 1, சுலோகம் 87) கன்னத்தில் அறைந்தது போல எழுதிய பிறகு குணத்தால்தான் இந்த வருணம் என்ற சப்பைக் கட்டுகள் எதற்கு? 

அதுவும் சூத்திரன் என்றால் விபசாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் - 8, சுலோகம் - 415) என்று விலாவில் குத்திய பிறகும் இந்தப் பெரும்பான்மையான சூத்திர மக்களில் சில 'மேதா விலாசங்கள்' வெட்கம் கெட்ட வகையில் ஸனாதனத்துக்குச் சலாம் போடுவது ஏன்?

பெண்கள் பெரும்பாலும் விபசார தோஷம் உள்ளவர்கள் என்று (மனு அத்தியாயம் -9, சுலோகம் - 19) சொன்ன பிறகும் பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் டாக்டர் பெண்மணிகூட ஸனாதனத்தைக் குறை கூறலாமா என்று சலங்கை கட்டலாமா?

'கர்மயோக்' என்றாலும், 'விஸ்வகர்மா யோஜனா', 'ஸனாதனம்' என்றாலும் சுற்றிச் சுற்றி இந்த இடத்தில் வந்துதான் நிற்கும்!

மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்றார் பெரியார் - அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறதா?

நாம் மானமுள்ளவர்கள் - அறிவு உள்ளவர்கள் என்று காட்ட வேண்டாமா?

நாளை 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு அலை கடலாய் வாருங்கள் வர்ணாசிரம தர்ம எதிர்ப்பாளர்களே!

செருப்பு தைப்பவரின் மகன் செருப்பு தைக்கக் கூடாது  - நீதிபதியாக வேண்டும் என்று நினைப்போர்களால் நிரம்பட்டும் மைதானம்!

சிரைக்கிறவரின் மகன் சிரைக்கும் தொழிலை மேற்கொள்ளக் கூடாது - அய்.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் அணி திரண்டு வாருங்கள்!

சலவைத்  தொழிலாளி மகன் சலவைத் தொழில் செய்யக் கூடாது -  அரசாங்கச் செயலாளராக  வேண்டும் என்று எண்ணுவோர் இருக்க வேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்!

மலம் அள்ளுவோர் மகன் மாவட்ட ஆட்சியராக உயர வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளவர்கள் மான மீட்பராகத் திரளுங்கள்!

திராவிடர் கழகம் ஏற்பாடு என்றாலும் பா.ஜ.க. மற்றும் அதன் தொங்கு சதைகள் தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கர்ச்சிக்க இருக்கிறார்கள்.

உரிய நேரத்தில் உரிமைக் குரல் எழுப்பாவிடின், அந்தக் கணமே நாம் செத்தோம் என்பதை மறவாதீர்! வாரீர்! வாரீர்!!

வங்கக் கடலாக வாரீர்! வாரீர்!!


 'சனாதன தர்மம்' என்ற நூலில்  எழுதப்பட்டுள்ளதன் பொருள்  

அப்ரத்யாபனம்த்யயானம்  யஜன் தஜன் ததா!

தான் க்ரதிக்ரத்ஹம் சைவ ப்ரஹ்ம்ரனாமகல்பயடு!!

க்ரஜானம் ரச்ஹ்ரம் டான்மிச்ஹத்யாயனமெவ ச!

திஷ்யெத்வக்ரசாக்தி ச சத்ரியஸ்ய சமாதிசாத்!!

ப்ஷூனம் சட்த்யம் தானமியாத்யயனமேவ ச!

வாஜிக்பத் குஷீடம் ச வைஷ்வச்ய க்ருஷிமேவ ச!!

ரமெச து ஷுட்ராச்ய ப்ரபூ: க்ரம் சமாஹ்திச்த்!*

எதெஷ்மெவ வர்னீம் ஷுஷ்ரஸாமான்சூதாயா!!

"அவர்கள் (பிராமணர்கள்) ஜோதி மயமானவர்கள்... அவர்களைப் பாதுகாப்பதற்காகவே அனைத்து படைப்பு களும் உள்ளன. அனைத்து வர்ணங்களுக்கும் தனித்தனி கர்மாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரம்மனின் (அவரது)   வாய், கைகள், தொடைகள் மற்றும் பாதங்களிலிருந்து பிறந்தவர்களுக்கான பணிகள்  

· "வேதம் கற்பித்தல் மற்றும் படிப்பது, தியாகம் செய்தல் மேலும் பலிகள், பரிசுகள் வழங்குவதில் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்  மற்றும் பரிசுகளைப் பெறுதல்,  இவை  பிரா மணர்களுக்கான கடமை. 

· "மக்களின் பாதுகாப்பு, உயிர்த்தியாகம், மற்றும் போர்க் கலை படிப்பது, பிறர்சொத்துக்களின் மீது பற்றுதல் இல்லாமல் இருப்பது   இவை சத்திரியர்களுக்கான கடமை. 

· "மாடுகளின் பாதுகாப்பு, பரிசுகள், தியாகம் மற்றும், வணிகம், நிதிபரிபாலனை மற்றும் விவசாயம்  வைசியர் களுக்கு. விதித்த கடமை.

· கர்மா பலனாக சூத்திரர்களானவர்கள் மேலே உள்ள வர்களுக்கு கடமையாற்ற மட்டுமே உரித்தானவர்கள்  இதுவே அவர்களது கடமை ஆகும். 

·  பிராமண, சத்திரிய, வைஷியர்களுக்கு  அக்கறை யோடு சேவை செய்வது சூத்திரர்களின் கடமை.


No comments:

Post a Comment