17 ஆண்டுகள் பெரியார் அறக்கட்டளைக்குத் தலைவராக இருந்து வழிகாட்டியவர் வக்கீல் அய்யா சண்முகநாதன்!
அய்யா - அம்மா காலத்திலும் சரி, அவர்களுக்குப் பிறகும் சரி, கழகத்திற்கு அரணாக - ஆலோசகராக இருந்தவர்!
அவரின் நூற்றாண்டு விழாவை நடத்துவது - வரும் தலைமுறையினருக்கானப் பாடத்தை நடத்துவதாகும்!
தலைமுறை தலைமுறையாகக் கழகக் குடும்பம் எடுத்துக்காட்டானது!
சென்னை, செப்.30 சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண் முகநாதன் 17 ஆண்டுகளாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்து தக்க ஆலோசனைகளையும் கூறி வழிநடத்தியவர். தலை முறை தலைமுறையாக இயக்கக் குடும்பம் அவரு டையது. இவர்களுக்கெல்லாம் நூற்றாண்டு விழா நடத்துவது - படம் திறப்பது - அவர்களுக்காக அல்ல; வரும் தலைமுறையினருக்கு இந்தப் படம் பாடமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா!
நேற்று (29.9.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் மேனாள் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி, சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர் களின் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
17 ஆண்டுகள் தொடர்ந்து
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குத் தலைவராக இருந்தவர்
சிறப்போடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியார் உருவாக்கிய அறக் கட்டளையினுடைய தலைவராக, தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு, 17 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்த சிவகங்கை வழக்குரைஞரும், இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, ஒருங்கிணைந்த இராமநாத புர மாவட்டக் கழகத் தலைவராக இருந்த பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய, அய்யா இரா.சண்முகநாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழா.
இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, ஒரு மறுப்பும் சொல்லாமல், வருகை தர உடனடியாக ஒப்புக்கொண்டார் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள். காலையில் மதுரையில் இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என்பதற்காகவே இங்கே வந்து ஓர் அற்புதமான உரையை, மனந்திறந்த உரையை, பெரியார் திடல், கொள்கைக் குடும்பம் என்பதற்கு அடையாளமாக மிகச் சிறப்பாக உரையாற்றியுள்ள மாண்புமிகு கூட் டுறவுத் துறை அமைச்சர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய பெரியகருப்பன் அவர்களே,
சமூகநீதி பேரவையின் நிறுவனர் -
மேனாள் அமைச்சர் தோழர் விசுவநாதன்!
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக உரையாற்றிய புதுச்சேரி சமூகநீதி பேரவையின் நிறுவனர் - மேனாள் அமைச்சர் என்பதைவிட, எந்நாளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினுடைய சீரிய கொள்கையாளர் என்பதைவிட, சமூக நீதியில் அதை அவர்கள் அழகாக, ஆழமாக முன் வைத்து, அடுத்தபடியாக இயக்கத்தையும், மற்றவற்றை யும் பின்னிருத்தக்கூடிய அளவிற்கு தீவிரமான ஈடுபாடு, பற்றுள்ள அருமைத் தோழர் விசுவநாதன் அவர்களே,
இந்நிகழ்வில் நம் அனைவரையும் வரவேற்ற கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர்கள் காரைக்குடி காப்பாளரும், நான்காவது தலைமுறைக்கு உரிய முறையில், இரண்டாவது தலைமுறையில் இருக் கக்கூடிய அருமைத் தோழர் சாமி.திராவிடமணி அவர் களே, தலைமைக் கழக அமைப்பாளர் ராமேசுவரம் கே.எம்.சிகாமணி அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்க வருகை புரிந்துள்ள சிவகங்கை நகர மன்றத் தலைவர் அவர்களே,
சிவகங்கை நகரத்தில் இந்தக் குடும்பத்தில் இருக்கக் கூடிய பல்வேறு தோழர்கள், உற்றார் உறவினர் போல இருக்கக்கூடிய தோழர்கள் என்று சொல்லக்கூடிய வகை யில் இணைந்து இருக்கக் கூடிய நம்முடைய அய்யா கற்பூரசுந்தரபாண்டியன் அய்.ஏ.எஸ்., அவர்களே, நம் முடைய சத்தியேந்திரன் குடும்பத்தைச் சார்ந்த அருமை சகேதாரர்களே, மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண் டுள்ள அவருடைய உறவுக்காரர்களாக இருக்கக்கூடிய நண்பர்களே, சகோதரர்களே, பெரியோர்களே, சான் றோர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பொறுப் பாளர்களே, தாய்மார்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்ற விழா!
பெரியார் திடலில் இப்படியொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழா நடைபெறுவது என்பது ஒரு பெரிய நிகழ்வாகும்.
இந்நிகழ்வில், அவருடைய பெருமைகளைச் சொல்வதைவிட, என்னைப் பொறுத்தவரையில், எங்களைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத் தைப் பொறுத்தவரையில், அவருக்கு நன்றி செலுத் துகின்ற விழா என்பதற்காகத்தான் இந்த நூற் றாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ புயல்களையெல்லாம் சந்தித்த நிறுவனம்!
அதிலும் குறிப்பாக, தந்தை பெரியார் அவர்கள் அறக் கட்டளை என்று உருவாக்கிய - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ புயல்களையெல்லாம் மிகப்பெரிய அளவிலே சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
அய்யா காலத்தில் பார்த்தீர்களேயானால், இதற்கு ஒரு பெரிய சட்டப் போராட்டம் - வருமான வரித் துறையோடு நடத்திய போராட்டம்.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அய்யா விற்குப் பிறகு ஒன்றுமே இருக்காது என்று நினைத்தார்கள். ஏராளமான பிரச்சினைகள் இருந்தன.
பெரியார் அவர்களுடைய காலம் வரையில், வரியைப் போட்டுக்கொண்டே போங்கள்; நடவடிக்கை எடுக்காதீர்கள்!
அந்தக் குறிப்புகளை எழுதுகின்ற ஓர் அதிகாரி - நம்மோடு இருந்து, அண்மையில்தான் மறைந்தார் அவர். பணி ஓய்வு பெற்ற பிறகு, நம்மை வழிநடத்தியவர் அவர். அவ்வளவு பெரிய துறையில் இருந்தவர் - நம்முடைய அறக்கட்டளைக்கு நல்ல ஆலோசகராக இருந்தவர் ஒரு தகவலை அந்தக் குறிப்பில் சொன்னார்.
‘‘பெரியார் அவர்களுடைய காலம் வரையில், வரி யைப் போட்டுக்கொண்டே போங்கள்; நடவடிக்கை எடுக்காதீர்கள் அவர் இருக்கும்வரை - அவருக்கு வய தாகிவிட்டது - அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என்று அதில் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்.
அப்படியென்றால், பெரியாருக்குப் பிறகு, இந்நிறு வனம் இருக்கக்கூடாது என்பதற்குச் சில ஏற்பாடுகள் என்ற நேரத்தில், நம்முடைய வழக்குரைஞர் இரா.சண் முகநாதன் தலைமையேற்றார்.
அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘வக்கீல் அய்யா அவர்களை கேளுங்கள்'' என்று சொல்வார்.
நெருக்கடி நிலை காலத்தில், இயக்கத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி!
அதேபோன்று, நெருக்கடி நிலை காலத்தில், இயக் கத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி. தி.க., தி.மு.க. போன்ற இயக்கங்கள் இருக்காது; ஒரே ஒரு கட்சிதான் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அச்சுறுத்தினார்கள்.
அந்தக் காலகட்டத்தில், நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கிறோம். அன்னை மணியம்மையார் அவர்கள் வெளியில் இருக்கிறார்.
சிறைச்சாலையிலிருந்து நீங்கள் வெளியே போக முடியாது; உங்கள் வாழ்க்கை இங்கேயே முடிந்துவிடும் என்றெல்லாம் அச்சப்படுத்தினார்கள்.
தனித்தன்மையோடு ஆழமாகச் சிந்தித்தவர்!
உடல்நலம் தளர்ந்த நிலையில்கூட, அம்மா அவர்கள் உறுதியாக இயக்கத்தை நடத்தியபொழுது, அப்பொழுது அவர்களுக்குச் சரியான யோசனை சொல்லி, அந்தக் கட்டத்திலும் எதைச் சொல்லவேண்டுமோ அதைச் சொல்லி, எப்படி நடக்கவேண்டுமோ அதை வகைச் செய்தவர் நம்முடைய அய்யா சிவகங்கை சண்முகநாதன் அவர்களாவார்.
அதற்காக நன்றியுணர்ச்சியோடு அவரைப் பாராட்டு கிறோம். அம்மாவிற்குப் பிறகு நான் பொறுப்பேற்ற காலகட்டத்தில்கூட பயனுள்ள பல கருத்துகளைச் சொல்வார். தனித்தன்மையோடு ஆழமாகச் சிந்தித்தவர்.
அவருடைய தொலைநோக்கு துல்லியமானது. இன்றைய பிரச்சினையைவிட, இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும்? நாம் எதிர்கொள்ளவேண்டிய எதிரிகள் எப் படிப்பட்டவர்கள்? அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதை மிகத் துல்லியமாக, பதற்றமில் லாமல், உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக ஒரு பிரச்சினையை அணுகினால் எப்படி இருக்குமோ, அதுபோன்று அவர் செயல்படக் கூடியவர்.
இங்கே சொன்னார்கள், மலர்க்கண்ணி அவர் களுக்கும், - இன்பலாதன் அவர்களுக்கும் திருமணம் ராகுகாலத்தில் நடைபெற்றது என்ற தகவல் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மக்கள் வழக்கத்தில் என்ன சொல்வார்களோ அந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள். ‘கொழுத்த ராகுகாலம்' என்று.
இளைத்த ராகுகாலம், கொழுத்த ராகுகாலம்!
அது என்ன இளைத்த ராகுகாலம், கொழுத்த ராகு காலம். அதாவது நேரம் ஆக ஆக கொழுத்த இராகு காலமாம்.
இங்கே வந்திருப்பவர்களில் ராகுகாலத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர் இருப்பீர்கள்.
என்னுடைய திருமணத்தை அய்யா அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் ஞாயிற்றுக் கிழமை மாலை கொழுத்த ராகுகாலத்தில் மாலை எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்கள்.
ராகுகாலத்தில் மணம் செய்துகொண்டதால், எங்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் இல்லை; எந்தவிதமான வீழ்தலும் இல்லை.
நேரத்திற்கும், மணவிழாவிற்கும் சம்பந்தம் இல்லை!
நல்ல நேரம் பார்த்து, மணவிழாவினை நடத்திக் கொண்டவர்கள் எல்லாம் இன்றைக்குக் காணாமல் போய்விட்டார்கள்.எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நேரத்திற்கும், மணவிழாவிற்கும் சம்பந்தம் இல்லை.
மூடநம்பிக்கை என்பதே ஒரு பயம்தான். ‘பேய், பிசாசு' என்று சொல்லி எப்படி ஒரு பயத்தை உருவாக் குகிறார்களோ, அதேபோன்று, இந்தக் காலை எடுத்து வைக்காதே, அந்தக் காலை எடுத்து முன் வை என்று சொல்லுகின்ற அளவிற்கு, அந்தப் பயம் எந்த அள விற்குப் போய்விட்டது என்றால், வலது காலை எடுத்து வைத்து வா, வா, வா என்று திரைப்படப் பாடல்கூட உண்டு.
தந்தை பெரியார் கேட்ட கேள்வி!
பெரியார்தான் கேட்பார், ஏன் இடது கால் நம்முடைய கால் இல்லையா? இடது காலில் அடிபட்டால், சும்மா இருப்போமா? என்று.
முதன்முதலில் நிலவில் இறங்கிய ஆம்ஸ்ட்ராங், இடதுகாலைத்தான் வைத்தார்.
இதையெல்லாம் சொன்னால், மக்களுக்குப் புரிகிறது - ஏற்றுக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
நாட்டைப் பாதுகாப்பது யார்? இராணுவத் துறை. ஊரைப் பாதுகாப்பது காவல்துறை?
இரண்டு துறைக்கும் முக்கியமான தகுதி என்ன?
அவர்களுக்கு உடற்பயிற்சி அளித்துத்தான் இராணு வத்திலோ, காவல்துறையிலோ சேர்க்கிறார்கள். அப்படி பயிற்சி கொடுக்கும்பொழுது, ‘‘லெப்ட், ரைட்'' என்று சொல்லித்தான் கொடுக்கிறார்கள்.
‘‘இல்லை, இல்லை நான் பெரிய ஸநாதனி - நான் வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பேன்'' என்றால், ‘‘வேலையை விட்டுப் போ'' என்று சொல்லி விடுவார்கள்.
இரண்டு கால்களும் ஒன்றுதானே - இரண்டு கால்களுக்கும் ரத்தவோட்டம் போகிறது அல்லவா! எந்தக் காலில் அடிபட்டாலும் நாம் கவலைப்படுகிறோம்.
இன்னுங்கேட்டால், வலது கையைவிட, இடது கைதான் மிக முக்கியமாகப் பயன்படுக்கூடிய கையாகும். அவசியமானவற்றுக்கு ரேகை வைக்கின்றபோது இடது கைப் பெருவிரல்தான் பயன்படுகின்றது.
அறிவுப்பூர்வமான ஓர் இயக்கத்தைத்
தொடர்ந்து நடத்திச் செல்லுவதற்கு....
ஆகவே, இப்படி ஓர் அறிவுப்பூர்வமான ஓர் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்லுவதற்கு - அய்யாவிற்குப் பிறகு, ஒரு வழிகாட்டியாக நம்முடைய வழக்குரைஞர் அய்யா இரா.சண்முகநாதன் அவர்கள் இருந்தார்கள்.
அவர் எவ்வளவு சிறப்பாக இருந்தார்கள்; அவரு டைய நேர்மை, நாணயத்திற்கு உதாரணமாக இரண்டு புத்தகங்களை இங்கே வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தை நான் படித்தேன். அருமையான அறிஞர்கள் அதில் எழுதியிருக்கிறார்கள்.
இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன!
அந்தப் புத்தகத்தில் ஜஸ்டிஸ் ராமலிங்கம் அவர்கள், எவ்வளவு அழகாகச் சொல்லவேண்டுமோ அந்த அளவிற்குச் சொல்லியிருக்கிறார்.
அதேபோன்று, சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், ‘‘இரா.சண்முகநாதன் அவர்கள் என்னுடைய ஆசான் - வழிகாட்டியிருக்கிறார். அவரிடமிருந்துதான் நான் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்'' என்று எழுதுகிறார்.
பழைய நகர்மன்றத் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கையாளர் சோலை சாத்தையா அவர்கள் பல செய்திகளை எடுத்துச் சொல்லியிருக் கிறார்.
இந்த இரண்டு புத்தகங்களிலும் அருமையாக ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
அதேபோன்று பேராசிரியர் முனைவர் கருப்பையா அவர்கள் எழுதியிருக்கிறார். நல்ல பல செய்திகளை மிக அடக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
பீஸ் வாங்காததோடு, வழிச் செலவுக்கும்
பணம் கொடுக்கும் வழக்குரைஞர்!
நம்முடைய மேனாள் அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் உரையாற்றும்பொழுது, நல்லகண்ணு அவர் கள் சொன்ன கருத்தை எடுத்துச் சொல்லும்பொழுது, வக்கீல் அய்யா மிக வித்தியாசமான வக்கீல். எப்படி யென்றால், ‘‘வக்கீல்கள் எல்லாம் பீஸ் வாங்குவார்கள். ஆனால், நம்முடைய வக்கீல் இருக்கிறாரே, பீஸ் வாங்காததோடு மட்டுமல்ல, வந்திருக்கின்ற கட்சிக்காரன், சாப்பிட்டானா, அவன் ஊருக்குப் போவதற்கும் தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பி, ஊருக்குப் பத்திரமாகப் போய்விட்டு வா'' என்று சொன்ன வக்கீல் எனக்குத் தெரிந்து மிகக் குறைவுதான் என்றார்.
ஆகவேதான், இது மனிதநேயம். அவர் ஒரு மாமனிதர். கட்சியாக இருக்கட்டும், கொள்கையாக இருக்கட்டும். அந்தக் கொள்கையில் இன்றைக்கு அவர் குடும்பத்தினரும் தீவிரமாக இருக்கிறார்கள்.
அண்ணாவிற்குப் பிறகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்றார் அய்யா!
இந்த இயக்கம் பெரியாருக்குப் பிறகு இருக்குமா? என்று கேட்டார்கள். இருக்காது என்று ஆரூடம் கணித்தார்கள்.
அதேபோன்று அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்று சொன்னார்கள். இருக்கும் என்று காட்டிய பெருமை கலைஞரைச் சாரும்.
அதற்காகத்தான் அய்யா அவர்கள் சென்னையில் ஒரு மாதம் தங்கி, கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அதனை முடித்துவிட்டுச் சென்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் அதனை அதிக சிறப்பாகக் கொண்டுபோகின்ற அளவிற்கு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார். இது ஆயிரங்காலத்துப் பயிர்.
புதைக்கப்பட்டவர்கள் அல்ல; விதைக்கப்பட்டவர்கள்!
எங்களுடைய தலைவர்கள் மறைந்தாலும், அவர்கள் யாரும் புதைக்கப்பட்டவர்கள் அல்ல; விதைக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்குப் பிறகு இயக்கம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றது என்பதற்கு அடை யாளம்தான் அய்யா சண்முகநாதன் அவர்கள்.
அய்யாவிற்குப் பிறகு திராவிடர் கழகத்திற்கு அன்னை மணியம்மையார் அவர்கள் அய்ந்தாண்டு காலம் தலைமை தாங்கியபொழுது, நான் பொதுச் செயலாளராக இருந்தேன்.
தலைவர் பொறுப்பு வேண்டியதில்லை என்று நான் எடுத்துச் சொன்ன நேரத்தில், இன்றைக்கு அந்தச் செய்தி களை இங்கே நான் பகிர்ந்துகொள்கிறேன் உங்களோடு.
அய்யா காலத்திலும் சரி, பல விஷயங்களில், ‘‘வக்கீல் அய்யா கருத்து என்ன?'' என்று கேட்பார்.
அய்யாவிற்குப் பிறகு அம்மா அவர்களும், வக்கீல் அய்யா ஆலோசனைகளைப் பெறுவார்.
அதற்குப் பிறகு நான் பொறுப்பேற்ற பிறகு, நம்மு டைய வக்கீல் அய்யா கருத்தைக் கேட்பேன். வீட்டிற்கு வந்து சொல்வார். அவருக்குத் தோன்றுகின்ற கருத்து களை, அவரே நேரில் வந்து என்னிடம் சொல்வார்.
இளைஞர்கள் பொறுப்பிற்கு
வரவேண்டும் என்றேன்!
ஒருமுறை அவரிடம் நான் ஒரு கருத்தைச் சொன்னேன் - ‘‘இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; நீங்கள் ராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருக்கிறீர்கள்; என்.ஆர்.சாமி செயலாளராக இருக்கிறார். நீங்களே நீண்ட காலமாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு மாவட் டத்திலும் அய்யா காலத்திலிருந்து வயதானவர்கள் தான் பொறுப்பில் இருக்கிறார்கள்; ஆகவே, அவர்களை மாற்றிவிட்டு, இளைஞர்கள் அந்தப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றேன்.
‘‘நல்ல யோசனை. தாராளமாக அதைச் செய்யலாம். என் மகன் இன்பலாதனை அனுப்புகிறேன். அதே போன்று, என்.ஆர்.சாமி அவர்களுடைய மகன் சாமி.திராவிடமணியை அனுப்புகிறேன். அதே பொறுப்பில் அவர்களை நியமித்துவிடுங்கள்; அடுத்த தலைமுறை வளரவேண்டும்'' என்று சொன்னார்.
இது புரியாமல்தான் சில பைத்தியக்காரர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ‘‘வாரிசு அரசியல்'' என்று.
வாழை மரம் அல்ல; ஆலமரம்!
கொள்கையில் விழுதுகள் இருக்கவேண்டும்; இது வாழை மரம் அல்ல; ஆலமரம். அந்த விழுதுகள் பழு தில்லாத விழுதுகளாக வந்துகொண்டே இருக்க வேண்டும்.
அப்பா ஒரு கட்சி, பிள்ளை ஒரு கட்சி என்பதில் பெருமையல்ல. இது கொள்கை - கட்சியல்ல. அந்தக் கொள்கைப் பாரம்பரியமாக வரவேண்டும் என்கிற அடிப்படையில்தான் அவர்கள் பொறுப்பிற்கு வந்தார்கள்.
டாக்டர் ராஜராஜன் - தேம்பாவணி
அதற்குப் பிறகு இல்லத் திறப்பு நிகழ்விற்காக என்னை அழைத்திருந்தார்கள். அவருடைய பேரன் டாக்டர் ராஜராஜன் - தேம்பாவணி இங்கே வந்திருக் கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையுமே, அன்றைக்கு நான் சென்றிருந்தபொழுது, அவர்களுடைய கைகளைப் பிடித்து, என்னுடைய கைகளில் கொடுத்து, ‘‘இவர்கள் இரண்டு பேரையும், உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்'' என்று சொன்னார். மூன்றாவது தலைமுறை.
இதுபோன்று எந்த இயக்கத்திற்குக் கிடைக்கும்? இதற்கு வேர் எங்கே இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது, அழிக்க முடியாது இன்னும் நூறாண்டு காலமானாலும் - திராவிட இயக்கம் இருக் கிறதே, இது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதினுடைய பொருள் அதுதான்.
கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள்; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள்!
எங்கள் இயக்கத்தில் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் மிகக் குறைவு. பலமுறை இதனை நான் சொல்லியிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பத்திரிகையைச் சேர்ந்த அம்மையார் என்னை பேட்டி எடுத்தபொழுது கேள்வி கேட்டார்.
Sir, What is Your Strength? How much membership are there?
நான் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னேன்.
There are two kinds of membership in our Movement. This is not a Party? This is a Movement.
‘‘இது ஓர் அரசியல் கட்சியல்ல; இயக்கம். அதில் உள்ள உறுப்பினர்கள் இரண்டு வகை.
ஒன்று, கண்ணுக்குத் தெரிந்தவர்கள்; இரண்டாவது கண்ணுக்குத் தெரியாதவர்கள்'' என்று சொன்னேன்.
அதைக் கேட்டவுடன், அந்த அம்மையார் பேனாவைக் கீழே போட்டுவிட்டார்.
Sir, are you running an underground movement?
‘‘கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்றால், பயங்கரவாத உறுப்பினர்களை வைத்து, தீவிரவாத இயக்கம் நடத்துகிறீர்களா?'' என்று கேட்டார்.
‘‘இல்லை, இல்லை. கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர் கள் என்றால், கருப்புச் சட்டை அணிந்துகொண்டு எங்கள் இயக்கத்தில் இருப்பார்கள்.
கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்றால், கருப்புச் சட்டை அணியாமல், இந்த இயக்கக் கொள்கை களைக் கடைப்பிடிப்பவர்கள்'' என்று சொன்னேன்.
அய்யா சண்முகநாதன் போன்றவர்களது குடும்பத் தினர் குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு அவருடைய நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகின்றோம். அந்த வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுடைய நூற்றாண்டு விழா!
இரண்டு நாள்கள் கழித்து ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுடைய நூற்றாண்டு விழா நடைபெறவிருக்கிறது.
அந்த நூற்றாண்டு விழாக்களை நாங்கள் சடங்காக நடத்தவில்லை; சரித்திரமாகக் காட்டுகிறோம்.
இது ஒரு சடங்கல்ல - சரித்திரம்; இந்த இயக்கத்திற்கு ஒரு சரித்திரம் உண்டு. அந்த சரித்திரம் நிரந்தரமானது. மேலும் மேலும் ஊக்கம் பெருகும்.
இங்கே இருப்பவர் படம் அல்ல; பாடம். எப்படி உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்குரிய பாடம்.
‘‘பொதுச்செயலாளர் என்ற பொறுப்புதான் இயக் கத்தில் இருக்கவேண்டும்; தலைவர் என்ற பதவியை, அய்யா, அம்மாவிற்குப் பிறகு இருக்கக்கூடாது'' என் பதை உறுதியாக நான் சொன்னபொழுது,
ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்!
‘‘இல்லை, ஓர் அமைப்பிற்குத் தலைவர் என்று இருந்தால்தான், அந்த அமைப்பை, மற்றவர்கள், வெளியில் இருக்கக் கூடியவர்கள் தெளிவாக அதனைப் புரிந்துகொள்ளும் நிலை இருக்கும்'' என்று சொல்லி, என்னிடம் நீண்ட நேரம் வாதம் செய்து, என்னை ஒப்புக்கொள்ள வைத்த பெருமை அய்யா சண்முகநாதன் அவர்களையே சாரும் என்ற ஓர் உண்மையையும் இந்த நேரத்தில் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன்.
இந்த நேரத்தில், அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், அவருடைய பெருமைகளைச் சொல்லவேண்டும். மிக அடக்கமாக உரையாற்றுவார்.
அவர் மேடையில் உரையாற்றும்பொழுதுகூட, கவர்ச்சிகரமாகவோ, தொடர்ச்சியாகவோ இருக்காது. ஆனால், கருத்தியல் ரீதியாக இருக்கும். ஒரு புதையல் எடுப்பதுபோன்று இருக்கும் அவருடைய கருத்தியல். புதையலை அப்படியே பயன்படுத்த முடியாது அல்லவா - அதை எடுத்து நாம் அழகுபடுத்தி, வரிசைப்படுத்தி எடுத்துக்கொள்ளவேண்டும். அதுபோன்று இந்த இயக்கத்திற்குப் பல பேர் உண்டு. அதேபோன்றவர்தான் நம்முடைய அமைச்சர்.
தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு பெரிய சிறப்பு செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!
இன்றைக்கு இருக்கின்ற ஆட்சிக்கு ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், கலைஞர், தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு பெரிய சிறப்பு செய்தார். அய்யாவின் உடலடக்கத்தின்போது அரசு மரியாதை செய்தார். அதிகாரிகள் எல்லாம் மிரட்டுகிறார்கள், பெரியார் அய்யாவிற்கு அரசு மரியாதை கொடுத்தால், உங்கள் ஆட்சி போய்விடும் என்று சொல்கிறார்கள்.
பெரியாருக்காக என்னுடைய ஆட்சி போனால், அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறு என்ன? என்று சொன்ன நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது.
கலைஞருக்கு ஒரு வருத்தம் இருந்தது!
அவருக்கும் ஒரு வருத்தம் இருந்தது - பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்பதுதான். அதற்காக என்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்தார்.
உச்சநீதிமன்றம் சொன்னதை சட்டப்படி செய்யலாம். அதற்காக ஒரு குழுவை அமைத்தார் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில்.
அப்பொழுது ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவருடைய அமைச்சரவையில் அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் நம்முடைய பெரியகருப்பன் அவர்கள்.
சாதனைகளில் முதன்மையானது அறநிலையப் பாதுகாப்புத் துறை!
இன்றைக்குத் தெளிவான ஒரு செய்தியைச் சொல்கிறேன் அறநிலையப் பாதுகாப்புத் துறையை உருவாக்கியது யார்? திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி. பனகல் அரசருடைய மிகப்பெரிய சாதனைகளில் முதன்மையானது அறநிலையப் பாதுகாப்புத் துறையை உருவாக்கியது.
அதற்காக அய்ந்து ஆண்டுகாலப் போராட்டம். வெள்ளைக்காரர்களோடு போராட்டம், ஸநாதனி களோடு போராட்டம் இவற்றையெல்லாம் சந்தித் துத்தான் அதனை உருவாக்கியது என்பது ஒரு பெரிய வரலாறு.
மறைமலையடிகளார் அவர்களுடைய குடும் பத்தைச் சேர்ந்த நம்பி ஆரூரான் அவர்கள், அந்த வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார்.
அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன்!
அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சருடைய வேலை என்ன? என்று சொல்கிறபொழுது, அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை அந்தப் பொறுப் பைக் கொடுத்தார்.
நாவலர் அவர்கள் பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர். அவர் அந்தப் பொறுப்பில் இருக்கும்பொழுது ஒரு சம்பவம் நடைபெற்றது.
கல்வித் துறையோடு, அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார் நாவலர். சிதம்பரத்திற்கு ஒருமுறை வருகிறார். அங்கே உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று கணக்குகளைப் பார்த்துவிட்டு, மாலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருகிறார்.
கணக்கு வழக்குகளைப் பார்ப்பதுதான்
என் வேலை; அங்கே போய் மணியாட்டுவது என்னுடைய வேலை அல்ல!’
பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்பொழுது சொல்கிறார், ‘‘என்னடா, சிதம்பரத்திற்கு வந்த நெடுஞ்செழியன் நேரே கோவிலுக்குப் போகி றானே, மாறிவிட்டானோ என்று யாரும் நீங்கள் நினைக்கவேண்டாம். நான் அறநிலையப் பாது காப்புத் துறை அமைச்சராக இருக்கிறேன். ‘‘எட்டு மரக்கா அரிசி கொடுத்து, அதற்குரிய சாப்பாட்டை வடிக்கிறார்கள் என்று சொன்னால், எட்டு மரக்கா அரிசி போட்டு, சமைத்தானா'' என்று பார்ப்பதுதான் என்னுடைய வேலையே, தவிர, அங்கே போய் மணியாட்டுவது என்னுடைய வேலை அல்ல'' என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் வேலை என்னவென்றால், ஒரு தணிக்கையாளரின் வேலைதான் என்பதை அழகாக எடுத்துச் சொன்னார்.
ஏனென்றால், அதற்குமுன் கோயிற்பூனைகள் கோவில் சொத்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதனை ஒழுங்குபடுத்தியதுதான் நீதிக்கட்சி.
ஓர் அமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானர்!
ஒரு அமைச்சர் எந்த நிகழ்ச்சியில் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்வதினாலேயே அது அவருடைய கருத்து என்றாகி விட முடியாது. அமைச்சர் என்பவர் பொதுவானவர். உண்டு என்பவர்களுக்கும் பொதுவானவர்; இல்லை என்பவர்களுக்கும் பொது வானார்.
இது புரியாமல் சிலர், ‘‘அந்த அமைச்சர் அங்கே போலாமா? இந்த அமைச்சர் அங்கே உட்காரலாமா?'' என்று கேட்பதில் அர்த்தமில்லை.
திருப்பி அடிக்கவேண்டும்; திருப்பி அடிக்காததால் தான், அவன் கேட்கிறான்.
‘‘நான் எங்கே போனால் உனக்கு என்ன? நான் என்ன செய்கிறேன் என்பதைப் பார்; என் பணியில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? என்றுதான் பார்க்கவேண்டும்'' என்று உறுதியோடு சொல்லவேண்டும்.
அறநிலையப் பாதுகாப்புத் துறை பணிகளை மிகச் சிறப்பாக செய்தார்கள். அதில் இவர்களைப் போன்ற அமைச்சர்கள் உற்சாகமாகப் பணியாற்றினார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
அன்றைக்கு அவர்கள் உருவாக்கித் தந்த வாய்ப் பினால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய வெற்றியடைந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்!
தற்போது ஆண் அர்ச்சகர்களை நியமித்தது மட்டுமல்ல - பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டு இருக்கிறார்கள். கேரளாவில், சபரிமலைக்குப் போவதற்கே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இங்கே கோவில் கருவறைக்குள்ளே சென்று மணியாட்டுவதற்கே உள்ளே சென்று விட்டார்கள்.
அதுதான் திராவிட இயக்கத்தினுடைய வெற்றி - அதுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களு டைய சாதனை - அமைச்சர்களின் சாதனை!
இப்பொழுது அதிலும் ஏதாவது சந்து பொந்து கிடைக்குமா? நீதிமன்றத்திற்குச் சென்று ஏதாவது செய்ய முடியுமா? என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. இதைச் சீக்கிரத்தில் முடிக்க முடியாது.
பொறியாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்!
குடும்பம் குடும்பாக இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னோம் அல்லவா - அய்யா சண்முகநாதன் அவர்கள், இந்த இயக்கக் கொள்கையைப் பரப்புவதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதற்கு மிகப்பெரிய துணையாக, அவருடைய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, இருந்தவர் அவருடைய சகோதரர் பொறியாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களா வார்கள்.
நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபொழுது, அவர் பொறியியல் துறையில் படித்தார். நாங்கள் பொருளாதாரத் துறையில் படித்தோம். திராவிட மாணவர் கழகத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்போம். அன்றையிலிருந்து பார்த்தீர்களேயானால், கடைசி வரையில், சண்முகநாதன் எப்படி தனித்த சிந்தனை படைத்தவரோ, அதேபோன்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களும். அவர் ஓய்வு பெற்ற பிறகுகூட, எங்கே சென்றாலும், அங்கே இயக்கக் கிளைகளை உண்டாக்குவார்.
என்னை சந்திக்க வருகின்றபொழுதுகூட, என் நேரத்தை நான் வீணடிக்கக் கூடாது என்பதற்காக, என்னென்ன பேசவேண்டுமோ அதைப்பற்றி குறித்துக் கொண்டு வருவார்; அதேபோன்றுதான் நம்முடைய இன்பலாதன் அவர்களும்.
திராவிடர் கழகம் என்றால்,
வாழ்வியல் வெற்றி!
மேனாள் அமைச்சர் விசுவநாதன் சொன்னாரே, திராவிடர் கழகம் என்றால், வாழ்வியல் வெற்றி என்று. அதுவும் எதிர்நீச்சல் அடித்து வெற்றி என்பதுதான் மிகவும் முக்கியம்.
‘‘நான் ஈரோடு போனவன்;
அதனால், நீரோடு போகமாட்டேன்!’’
நெருக்கடி நிலை காலத்தில் செய்தியாளர் கலைஞர் அவர் களிடம், ‘‘நீங்கள் தேசிய நீரோட்டத்தில் போக வில்லை; தேசியத்திற்கு மாறாக செல்கிறீர்கள் என்று சொல் கிறார்களே?'' என்று கேட்கிறார்.
உடனே கலைஞர் அவர்கள், ‘‘நான் ஈரோடு போனவன்; அதனால், நீரோடு போகமாட்டேன்'' என்று சொன்னார்.
அப்படிப்பட்ட ஒரு உணர்வோடு, எதிர்நீச்சல் அடித்து இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றியதினால், யாரும் தாழ்ந்து விடவில்லை, வீழ்ந்துவிடவில்லை, எல்லா துறைகளிலும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அரசியலுக்குச் சென்றவர்கள் என்றால், அவர்களுக்கு நெளிவு சுளிவு உண்டு. எங்களைப் போன்று இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை; அப்படி எதிர்பார்ப்பதும் நியாயமுமில்லை.
உங்களுக்கு என்ட்ரி டூட்டி;
எங்களுக்கு சென்ட்ரி டூட்டி!
வளைய வேண்டிய நேரத்தில் வளைய வேண்டும் அவர்கள். அந்த இடத்தில் வேறொரு வன் வந்து அமர்ந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கவலையே தவிர, இன்னுங்கேட் டால், நம்முடைய எதிரி வந்து அங்கே அமர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கவலை.
நாங்கள் எல்லாம் பாதையைப் போட்டுக் கொண்டு போகிறவர்கள். நாங்கள் ஒருபோதும் உள்ளே போகமாட்டோம்.
முதலமைச்சர் அவர்கள் என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக் கூட்டத்திற்கு வந் திருந்தபொழுது அதைத்தான் நான் சொன்னேன், ‘‘உங்களுக்கு என்ட்ரி டூட்டி (உள்ளே போவது); எங்களுக்கு சென்ட்ரி டூட்டி (வெளியில் நின்று பாதுகாப்பது). யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக. இந்த இயக்கம் இப்படித்தான் இருக்கும்'' என்று சொன்னேன்.
அய்யா சண்முகநாதன் படத்தைப் பார்த்து, பாடத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும்!
எனவே, காலங்காலமாக இந்தக் கொள்கைகள் பரவவேண்டும். இதுபோன்ற நூற்றாண்டு விழாக்கள் நடத்தவேண்டும் என்பது மறைந்தவர்களுக்காக அல்ல; வாழுகிறவர்களுக்காக - வாழப் போகிறவர்களுக்காக! அவருடைய படத்தைப் பார்த்து, பாடத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்த இயக்கம் என்பது மூச்சுக் காற்று - சுவாசக் காற்று. அதிலும் பிராண வாயு. கரிமில வாயு வெளியே தள்ளுவது - பிராண வாயு என்பது உள்ளே இழுப்பது.
வெளியில் தள்ளுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், நம்முடைய நாட்டில், வெளியே தள்ளுவதை உள்ளே இழுக்கிறான்; உள்ளே இழுக்கவேண்டியதை வெளியே தள்ளுகிறான்.
இளைய தலைமுறையே,
இதோ பார், இந்தப் படத்தை!
இவை இரண்டும் தனித்தனி என்று சொல்வதற்கு ஓர் இயக்கம் தேவை - ஓர் அமைப்பு தேவை. அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்களுடைய பாதை என்ன? அது எவ்வளவு சிறப்பானது? என்பதைத் தெரிய வைப்பதற்காகத்தான் இளைய தலைமுறையே, இதோ பார், இந்தப் படத்தை!
வந்திருக்கின்ற நண்பர்களே, இதோ பாருங்கள்! எங்களுக்கு ரத்த உறவுகள் என்பது ஒரு பக்கம்; கொள்கை உறவுகள் இருக்கிறதே, அது ரத்த உறவைவிட மிக முக்கியம்.
அதனை நிரூபிப்பதற்குத்தான் இதுபோன்ற நூற்றாண்டு விழாக்கள் என்பதை எடுத்துச் சொல்லி, நம்முடைய அழைப்பை ஏற்று வந்த உங்கள் அனை வருக்கும் நன்றி!
‘‘மருமகள் மெச்சிய மாமனார் - மாமனார் மெச்சிய மருமகள்!’’
மிகச் சிறப்பான வகையில் புத்தகங்களைத் தயாரித்து, இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. ‘‘மருமகள் மெச்சிய மாமனார் - மாமனார் மெச்சிய மருமகள்'' இரண்டைப்பற்றியும் மிகத் தெளிவாகத் தெரிந்துகொள் ளலாம்.
அதேபோன்று, நல்ல கருத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளை அந்தப் புத்தகங்களில் பதிவு செய்திருக் கிறார்கள். நிறைய படங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஓர் இயக்க வரலாற்றை படங்கள் மூலம் சொல்வது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியில்கூட, காரைக்குடியில் அய்யா சண்முகநாதன் அவர்கள் சம்பந்தப்பட்ட படக் காட்சிகளை வைத்தி ருந்தார்கள்.
இங்கே வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களிலும் உள்ள படங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிட இன்னொரு முக்கியமான செய்தி - அய்யா சண்முகநாதன் அவர்களின் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம், அவருடைய வாழ்விணையர் அவர்கள். அய்யா இராம லக்குமி அம்மையார் அவர்களுடைய ஒத்துழைப்புதான்.
உத்தரப்பிரதேசம் ‘‘பெரியார் மேளா''வில் பங்கேற்ற இராமலக்குமி அம்மையார்!
‘‘பெரியார் மேளா'' நிகழ்ச்சியை உத்தரப்பிரதேசத்தில் என்னுடைய தலைமையில் கன்ஷிராம், மாயாவதி ஆகியோர் நடத்தினர்.
அதனுடைய பெருமைகள் வெளியே வரக்கூடாது என்பதினால்தான், இப்பொழுது எப்படி ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் திசை திருப்புகின்றனவோ, அதேபோல, அன்றைக்குப் பெரியார் மேளா பெரு மைகள் இந்தியா முழுவதும் வரப் போகிறது என்றவுடன், ‘‘பிள்ளையார் பால் குடித்தார்'' என்று திசை திருப்பினார்கள்.
ஆக, அப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்றைக்கு இயக்கத்தை அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். எங்கள் இயக்கத்தில் எவ்வளவு மூதாட்டிகள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக, இராமலக்குமி அம்மை யாரைத்தான் அழைத்துப் பக்கத்தில் அமர வைத்துப் பார்த்தார்கள்.
வரலாற்றில் இடம்பெற்ற குடும்பம் மட்டுமல்ல - வரலாறு படைத்த குடும்பம்!
ஆகவேதான், இந்தக் குடும்பம் ஒரு வரலாறு படைத்த குடும்பம். வரலாற்றில் இடம்பெற்ற குடும்பம் மட்டுமல்ல - வரலாறு படைத்த குடும்பம் என்ற பெருமையோடு வந்திருக்கின்ற அனை வருக்கும் மீண்டும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க அவர்தம் புகழ்!
அய்யா சண்முகநாதன் புகழ் வளர்க!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.
No comments:
Post a Comment