பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஸநாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (4)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

ஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்... பெண் களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப் பட்டிருக்க வேண்டும். ஆனால்?.. 

டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண் களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ - இதுதான் தந்தி வாசகம்  - கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத் துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி’ என்றேன் நான் - அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா... ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா.... அபாண்டமா அபச் சாரமா போயிடும் ’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்... அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் வந்தால் ஸ்திரி தர்மமே பாழாயிடும். ஸ்தீரிகளுக்கு பாத் யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய் "இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு - பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட் டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரி யவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத் துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்" என்றேன்.

அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ் வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து... "எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும் சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்" என பெண்களை வைத்தே தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம் இது மட்டுமா?

திருநெல்வேலி ஜில்லாவிலிருந்தும் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரி யாரின் உத்தரவுப்படி நடந்தது - என்ன ஏதென்றும் தெரி யாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்க ளுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.

கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.இந்த கூட் டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். "இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது போலிருக் கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும் - அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.

டில்லியில் Constituion Club - இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.

நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது.

சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் பில்லை தள்ளிவைத்த நேரு... பிறகு பெண்களுக்கு சொத் தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார்.

‘டில்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியவில்லையே...’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் பில் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக் கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார்.

அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே... அப்புறம் எதுக்கு சொத்து? சொத்து இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா...

No comments:

Post a Comment