என்ன ஆயிற்று வட இந்தியாவில்? தொடர்ந்து இஸ்லாமிய மாணவர்களை ஆசிரியர்களே அடிக்கிறார்கள், கொல்லச் சொல்கிறார்கள்.
இப்போது கருநாடகாவிலும் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதானே என்று கூறியுள்ளார் ஓர் ஆசிரியர்!
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஒரு கொடூரம் அரங்கேறியது. வகுப்பு ஆசிரியர் ஒருவர் இதர மாணவர்களை அழைத்து இஸ்லாமிய மாணவனை தொடர்ந்து அடிக்கச் சொல்கிறார். ஒரு சிறுவன் மெதுவாக அடிக்க, அவனை திட்டி விட்டு பெரிய பையனை அழைத்து 'அவனை அடித்துக்கொல்லு' என்று கூறுகிறார். அவன் தலையிலும், கன்னத்திலும், முதுகிலும் அடிக்கிறான்.
அடிவாங்கிய சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்க, நீங்கள் எல்லாம் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? இவர்களை எல்லாம் விட்டு வைக்கக் கூடாது என்று அவர் பேசுகிறார்.
அந்தக் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவியதும், இது தொடர்பாக ராகுல்காந்தி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த ஆசிரியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை தரப்பில் இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டனர்.
அந்த காட்சிப் பதிவு வெளியிட்டு, இந்தக் கொடூரத்தை உலகிற்குக் காட்டிய ஊடகவியலாளர்கள் மீது - சிறுவர்களின் படங்களை வெளியிட்டது தொடர்பான கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்த கேவலத்தை என்ன சொல்ல!
அடுத்த நிகழ்வு - தலைநகர் டில்லி ரோகினி விகாரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய சிறுவர்கள் சிலரை நிற்க வைத்து, 'நீங்கள் ஏன் மற்றவர்களோடு பாகிஸ்தான் செல்லவில்லை? உங்கள் தாத்தா, பாட்டி பாகிஸ்தான் சென்றிருந்தால், உங்கள் இடத்தில் ஹிந்து சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும், நீங்கள் பாகிஸ்தான் செல்லாததால் எங்களுக்கு வாய்ப்புகள் பறிபோகின்றன. எங்கள் ரொட்டியில் நீங்களும் பங்கு போடுகிறீர்கள்! உங்களுக்கு என்று ஒரு நாடு உள்ளது, எங்கள் நாட்டில் ஏன் இருக்கிறீர்கள்' என்று இஸ்லாமிய சிறுவர்களைப் பார்த்து திட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் கருநாடகாவில் 5-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவர்களை நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று ஆசிரியர் கூறியுள்ள நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஷிமோகா நகரின் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் ஆசிரியை மஞ்சுளா. இவர் கடந்த 31-8-2023 அன்று அய்ந்தாம் வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார். அப்போது மாணவர்கள் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். இதனைக் கண்டித்த ஆசிரியை மஞ்சுளா, இஸ்லாமிய மாணவர்களைப் பார்த்து, நீங்கள் எல்லாம் ஹிந்துக்களின் அடிமைகள், நீங்கள் பாகிஸ்தானுக்குச் சென்று சுதந்திரமாக இருக்கலாம், நீங்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள் - இங்கு உங்களுக்கு இடமில்லை'என்று கூறியுள்ளார்.
இதனை சில மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து மதவிரோதமாகப் பேசிய ஆசிரியை தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, சிமோகா மாவட்ட கல்வித்துறை, ஆசிரியை மஞ்சுளாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியை தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை; அவரது பணி இட மாற்றம் தொடர்பான உத்தரவைத் திரும்பப் பெறா விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக சில ஹிந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே மதவெறிகொண்டு சிறுபான்மையின மாணவர்களை இழிவுபடுத்துவது தற்போது தெற்கிலும் தொடங்கி விட்டது.
இப்படி மாணவர்கள் மத்தியில் பிளவுகளை ஆசிரியர்கள் ஏற்படுத்துவது எத்தகைய விபரீதம்!
பள்ளிக்குச் செல்வது கல்வியைக் கற்க - நல்ல பண்பாடுகளை வளர்க்கத்தானே! அதற்கு மாறாக மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியிலே ஆசிரியர்கள் விதைப்பது எத்தகைய அபாய கரமானது!
இந்த மதவாத நஞ்சான சனாதனத்தை எதிர்த்தால் - அதைத் திசை திருப்பிப் பிரச்சாரம் செய்வது பித்தலாட்டம் அல்லவா?
'சுதந்திர பாரத்' என்று சுருதி குறையாமல் ஒரு பக்கத்தில் பாடிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் வேலியே பயிரை மேயும் விபரீதமா? வெட்கக் கேடு!
No comments:
Post a Comment