சந்திரயான் - 3 இறங்கிய இடத்திற்கு இந்தியாவின் பிரதமர் சூட்டிய பெயரை என்னவென்று சொல்லுவது!
'சிவ் சக்தி பாயிண்ட்' என்று நாம கரணம் சூட்டியிருக்கிறார்.
விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு ஆளுமைத் திறனைப் பயன்படுத்தி, அரும்பாடுபட்டு ஒன்றைக் கண்டுபிடித்தால் அதற்குப் புராணப் புழுதியிலிருந்த ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து, 'லேபிள்' ஒட்டுவது எத்தகைய விபரீதம்!
ஒரு பிரதமரே இந்தக் கெதியில் இருந்தால் வளரும் தலைமுறையினர், மாணவர்கள் சிந்தனையில் விஞ்ஞான விதை முளைக்குமா?
இது ஒருபுறம் இருந்து தொலையட்டும் 'தினமலரில்' (22.9.2023 பக்கம் 15) ஒரு செய்தி.
"ஆன்மிக பூமியான வாரணாசியில் சிவனின் அம்சங்களுடன் புதிய கிரிக்கெட் மைதானம் உருவாகிறது.
இதன் தீம் கடவுள் சிவன் மைதானத்தை - மேல் இருந்து பார்த்தால், சிவனின் தலையில் உள்ள 'மூன்றாம் பிறை போல இருக்கும் நுழைவு வாயிலின் முன் பகுதியில் அமைய உள்ள 'மீடியா சென்டர்' சிவனின் உடுக்கை போல வடிவமைக்கப்பட உள்ளது. மின்னொளி கோபுரங்கள் சிவன் கையில் உள்ள திரிசூல வடிவில் அமைகிறது. மைதான இருக்கைகளை கங்கை நதிக்கரை படிக்கட்டுகளைப் போல கட்ட உள்ளனர். 30,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளைப் பார்க்கலாம். ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார் "எல்லாம் சிவமயம்" தானாம்!
ஒரு மதச் சார்பற்ற அரசின் தலைவர் 'சிவன்' 'சிவன்;' என்பதும், ராமன் கோயில் கட்டுவதும், அவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசமைப்பு சட்டத்துக்கு எதிராதே!
ஒரு செய்தி தெரியுமா? சிதம்பரத்திலே ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கும் சிவனாகிய நடராஜன் 24.12.1648 முதல் 14.11.1686 வரை 37 ஆண்டு பத்து மாதம் சிதம்பரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார் என்ற தகவலை திருவாரூரில் கிடைத்திருக்கும் செப்பேடுகள் கூறுகின்றன.
இதுதான் சிவசக்தியா?
முதல் 40 மாதங்கள் குடுமியா மலையிலும் பின்னர் மதுரையிலும் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்? கடுமையான பஞ்சத்தின் காரணம் அல்லது பீஜப்பூர் சுல்தான் படை எடுப்பு என்பதை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டதுண்டு. இச்செய்தியை ஆனந்தவிகடன் மணியன் தான் நடத்திய 'இதயம் பேசுகிறது' இதழிலும் வெளியிட்டதுண்டே!
'சிவனேன்னு' இருந்தேன்! என்ற சொல்லாடலின் பொருள் என்ன?
சொல்லட்டும் சிகாமணிகள்!
- மயிலாடன்
No comments:
Post a Comment