சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும் சனாதன ஒழிப்பு மாநாட்டின் மாலை நிகழ்வில் தலைவர்கள் சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும் சனாதன ஒழிப்பு மாநாட்டின் மாலை நிகழ்வில் தலைவர்கள் சூளுரை

சென்னை, செப். 5 - சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும். சனாதனத்தின் முகமாக உள்ள பா.ஜ.க.வை 2024 நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ அணி வீழ்த்தும் என்று தலைவர்கள் சூளு ரைத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.  காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும்  தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அமைச்சர் க.பொன்முடி

மாநில அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசுகையில், “பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனி யத்தைதான் எதிர்க்கிறோம். சனாதனத்தை நிலை நிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வியை புகுத்துகின்றனர். சனாதனத்திற்கு எதிராகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டம்கொண்டு வரப்பட்டது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் ஏற்பட வேண்டும். ஜாதியின் தாக்கம் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதை அகற்ற வேண்டும். இளந்தலை முறையினரிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. சனாதன ஒழிப்பு கருத்துகளை மாணவர்கள், இளைஞர்களிடம் படைப்பாளிகள் கொண்டு சேர்க்க வேண்டும். சனா தனத்தை எதிர்க்க ‘இந்தியா’ அணி வெல்ல வேண்டும். என்றார்.

கே.பாலகிருஷ்ணன்

மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பிரதமரும், ஒன்றிய அரசும் செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகளால் பதற்றமடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, நவம்பர் மாதம் நடத்த வேண்டிய குளிர் காலக் கூட்டத் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்துகிறது. "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை கொண்டு வந்து எதிர்க் கட்சிகளிடம் உள்ள மாநில ஆட்சிகளை பறிக்க நினைக்கிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. சனாதனம் எங்கும் பரவி நிற் கிறது” என்றார். 

“மார்க்சிய இயக்கங்கள், பெரி யாரிய, அம்பேத்கரிய இயக்கங் களின் தொடர் போராட்டத்தால் ஓரளவு சனாதனம் கட்டுப்படுத் தப்படடுள்ளது. சனாதனம் இட ஒதுக்கீடு, மாநில உரிமைகளை பறி க்கிறது. முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முதலாளித்துவம் சனாதனத்தை பாதுகாக்கிறது. எனவே, சனாதனத்தை கருத்தியல் ரீதியாக மட்டும் ஒழிக்க  முடியாது. பொருளாதார கொள்கைகளோடும் இணைத்து நடத்த வேண் டும். அதுதான் இந்தியாவின் அனுபவமாக உள்ளது” என்றும் அவர் கூறினார். 

“வர்ணாசிரமம், சனாதனம் மக்களை ஜாதி ரீதியாக பிரித்து சொத்துடமையை பாதுகாக்கிறது. இதற்கெதிராக உழைப்பாளி மக்களை ஒன்று சேர்த்து போராடுகிறோம். ஜாதிய, சமூக ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை ஒன்றிணைத்து போராட வேண்டும். பாஜகவின் பாசிச கொள்கைகளை எதிர்த்த ‘இந்தியா’ அணி வெற்றி பெற வேண்டும். மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள் செயல்படுத்த களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மக்களவை உறுப் பினர் தொல்.திருமாவளன் பேசுகையில், “பிறப்பின் அடிப் படையில் உயர்வு தாழ்வு என்ற ஜாதிய கட்டமைப்பு நிலையானது, மாறாதது என்பதுதான் சனாதனம். உழைப்புச்சுரண்டல், அதி காரம், ஆதிக்கம், ஒடுக்கு முறை கூடாது என்கிறது கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு நேர் விரோதமானது சனாதனம். சனாதன கருத்தியலை பார்ப்பனர்கள் கைக்கொண்டுள்ளதால் அதை பார்ப்பனீயம் என்கி றோம்.

“இந்தியாவில் ஜாதியும் வர்க்க மும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது. உயர் பொறுப்புகள், அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ள பார்ப்பனியத்தின் மீது பிற்படுத்தப்பட்ட சமூகம் கோபப்பட வேண்டும். மாறாக, கீழ்நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை எதிரியாக பார்க்கின்றனர். இதுதான் சனாதனத்தின் சூழ்ச்சி. பார்ப்பனியத்திற்கு எதிராக  பிற்படுத்தப் பட்ட மக்கள் நகரும் போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும். காலங்காலமாக பிராமனியத்திற்கு எதிரான குரல் ஒலித்து வருகிறது. அதை இந்துத்துவா நீர்த்துப்போகச் செய்கிறது. சனா தனத்தை காப்பாற்றி வரும் பாஜக விற்கு எதிராக மக்கள் திரும்ப வேண்டும். இதனை புரிந்து கொள்வதில் உள்ள தேக்கத்தை படைப்பாளிகள் உடைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ்

“சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு விரோதமான அனைத்தும் சனாதனம்தான். வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் போப்பாண்டவர், சவுதி மன்னரை கட்டிப் பிடித்து அணைத்துக்கொள்கிறார். இந்தியாவில் ஒரு சங்கராச் சாரியாரை அவரால் கட்டிப்பிடிக்க முடியுமா? அதுதான் சனாதனம்” என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல  ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார் “சனாதனத்திற்கு எதிராக பல நூற்றாண்டுகளாக போராடினாலும் ஒழிக்க முடிய வில்லை. சனாதனத்தின் வேர் அறுபடாமல் உள்ளது. சனாத னத்தை அமல்படுத்துகிறவராக பிரதமர் உள்ளார்.  சனாதனத்தில் அடையாளமாக உள்ள மோடியை வீழ்த்த வேண்டும்.  அரசியல் களத்தில் சனாதனத்தின் பிம்பங்களை, தத்துவங்களை கூறி பாஜகவை வீழ்த்த  வேண்டும்.” என்றும் அவர் கூறி னார்.

மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “ஜாதி, உயர்ஜாதி என் போருக்கு சொர்க்கமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நரகமா கவும் உள்ளது. ஜாதி, மதங்களை கேள்விக்குள்ளாக்காமல் கல்லூ ரிகள், பல் கலைக் கழகங்கள் கடந்து செல்கின்றன. கல்வித்துறை யில், மாணவர்களிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். “சனாதனவாதிகளுக்கு இந்திய அரசமைப்பு சட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அதை நீர்த்துப்போகச் செய்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜகவை, ‘இந்தியா’ அணி வீழ்த்தும். ஜனநாய கத்தை காக்கும் பெரும்போரில் கூட்டாக செயல்படுவோம்” என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம்

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், “சனாதனத்திற்கு எதிராக பெரும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்து தொடரும். பெண்ணடிமைத்தனம், ஜாதிய பாகுபாடு, மூடநம் பிக்கை, சடங்கு என்ற பெயரில் மக்கள்  சுரண்டப்படுகிறார்கள். இவை யெல்லாம்தான் சனாதன கலாச்சாரம் என்றால், அதை எதிர்ப்போம்” என்றார். மநுநீதியில் கூட குற்றங்களுக்கு அனை வருக்கும் ஒரே மாதிரி தண்டனை இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். ஒரேநாடு,  ஒரேமதம் என்றெல்லாம் கூறி ஒரே தேர்தல் என்பதில் வந்து நிற்கிறார்கள். சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரமாக வள்ளலார் இருந்தார். "யாதும் ஊரே யாரும் கேளிர்", "பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்" என்பவை எல்லாம் சனாதனத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

சனாதன எதிர்ப்பில் கலைஞர்கள்தான் எப்போதும் முன் னின்று இருக்கிறார்கள். நாடகத்தில் முருகன் வேடம் ஏற்று விஸ்வநாததாஸ் நடித்தார். அவருடன் நடிக்க பலரும் மறுத்த போது, கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள்தான் சேர்ந்து நடித்தார். மீனவரான சிந்தனை சிற்பி சிங்கார வேலர் வழக்குரைஞர் ஆனதை சக வழக்குரைஞர்கள் எள்ளி நகையாடினர். 

மறுநாள், வலைக்குள் சட்டப் புத்தகங்களை கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றார். அந்த சட்டம் உனக்கு மட்டுமல்ல, எனது வலைக்கும் சிக்கும் எனக் கூறியது போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார். அரசியல், ஆன்மிகம், அறிவி யல், பண்பாடு, கலை என அனைத்து தளங்களிலும் சனாதனத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம்.

No comments:

Post a Comment