ஊரை உணர்த்தும் வகையிலும், உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் ஈரோட்டைப் பெயரில் சூடிக்கொண்ட நம் காலத்தின் மாபெரும் கவிஞர்ஈரோடு தமிழன்பன்.நம் காலத்தில் மட்டுமல்லாமல் தமிழின் நீண்ட வரலாற்றிலும் பெருங்கவிஞர்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுபவர் தமிழன்பன்.திராவிட இயக்கத்தின் வரலாற்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பின்னர்த் தனித்தன்மையும், பன்முகமாட்சியும் கொண்ட தனிப் பெருங்கவிஞராகத் திகழ்பவர் தமிழன்பன். தந்தை பெரியாரின் சிந்தனைகளை அடியொற்றித் தமிழ்ச் சமுதாயத்தில் தலைசிறந்த கருத்துகளைக் கவிதைகளின் வாயிலாக எடுத்துரைக்கும் பெருங்கவியாக விளங்குபவர் ஈரோடு தமிழன்பன்.
பெரியார் பிறந்த மண்
ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த மண் என்பது ஒருநிலை; ஈரோடு என்பது தந்தை பெரியாரையே, பெரியாரின் சிந்தனைகளையே குறிப்பது இன்னொரு நிலை. ஈரோட்டைக் குறித்துக் கவிஞர் தமிழன்பன் படைத்திருக்கின்ற கவிதைச் சித்திரங்கள் தமிழுணர்வாளர்கள் மனங்கொள்ளத் தக்கவையாக மாட்சிமை கொண்டு ஒளிர்கின்றன.
எல்லா
ஊர்களின் பெயர்களையும்
எனது
உதடுகளால் உச்சரிப்பேன்!
ஈரோட்டை
எனது உயிரால் உச்சரிப்பேன்.
ஈரோடு,
பகுத்தறிவுப்
பறவைகளின்
சரணாலயம்!
வேடங்தாங்கல் பொறாமையால்
வேர்ப்பது இதைக் கண்டுதான்!
இதன் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்
பல்கலைக் கழகங்கள்
பாடம் கேட்டன!
கேளிந்தா என்று சிந்தனைக்
கிடங்கு திறந்த
தென்னாட்டு
நாளந்தா
இது.
புனைவுகளற்ற, பொய்மைகளற்ற ஈரோட்டின் புதிய தலபுராணம் இது. நம் தந்தை ஈரோட்டுப் பெரியாரின் கைத்தடி பற்றிக் கவிஞர் தமிழன்பன் தீட்டியிருக்கின்ற கவிதையொன்று எண்ணி எண்ணி மகிழவும், வியக்கவும், கருத்தில்கொள்ளவும் தக்கதாக காட்சி தருகின்றது. அந்தக் கவிதை இதுதான்.
தீர்க்கதரிசி
மோசேயின் கைத்தடி அன்று
கடலைப் பிளந்தது!
பிளந்து கிடந்த தமிழரை
ஒருகடலாய் ஒன்று சேர்த்தது
பெரியாரின் கைத்தடி!
தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றில் திருவள்ளுவருக்குப் பிறகு மாபெரும் புரட்சிச் சிந்தனையாளராகத் தோன்றித் தமிழ்ச் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி வழிநடத்திய - வழிநடத்தும் தந்தை பெரியாரின் சிந்தனைப் பாதையிலே செம்மாந்த கவிதைப் பயணத்தை நடத்துபவர்தான் நம் ஈரோடு தமிழன்பன் .
தமிழன்பன் - ஒரு மகாநதி, மல்லற் பேரியாறு; ஒரு மாக்கடல், மகா சமுத்திரம். இந்த நதிக்குள், இந்தக் கடலுக்குள் எத்தனை எத்தனையோ வளங்கள்.இந்த நதியால், இந்தக் கடலால் தமிழ் வையத்திற்கு எத்தனை எத்தனையோ வளங்கள்; நலன்கள். வேகப் பாய்ச்சலில் மகாநதியாகவும், ஆழப் பரிமாணத்திலும், அகலப் பரிமாணத்திலும் மகா சமுத்திர மாகவும் வகைவகையான பரிணாமங்கள்.இந்த நதியைக் கரையில் நின்று கண்டு மகிழலாம்.கால் நனைத்துக் களித்து மகிழலாம். கையார நீரள்ளிப் பருகித் தாகம் தணியலாம். இறங்கி நீராடி உடலும் உள்ளமும் குளிர்ச்சியில் திளைக்கலாம்.இந்த மகா சமுத்திரத்தில் நித்திலங்களையும், வலம்புரிகளையும் முக்குளித்து, மூழ்கி அள்ளி வரலாம். கயமைகளுக்கும், சிறுமைகளுக்கும், புன்மைகளுக்கும் இந்தச் சமுத்திரத்திற்குள் சுறாக்களும், திமிங்கிலங்களும் வேட்டையாடக் காத்திருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம். இன்னும் இன்னும் என ஆயிரமாயிரம் பயன்கள்.
வியக்க வைக்கும் புதுமை
தமிழன்பனின் கவிதைப் படைப்புலகம் சமகாலத்தின் மதிப்பார்ந்த எந்தக் கவிஞரின் படைப்புலகத்தைக்காட்டிலும் விரிந்து பரந்தது; ஆழங்கொண்டது; வியக்கவைக்கும் புதுமைகள் கொண்டது; முன்னோடித்துவங்கள் கொண்டது.
தமிழின் குருதியிலிருந்து பிறந்தவன் நான்
என்னைப் பிழிந்தால் தமிழாய் வழிவேன்
எனத் தமிழின் குருதியிலிருந்து தோன்றித் தமிழாய் வழியும், தமிழாய் வாழும் தமிழன்பக்கவியின் ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் ஒவ்வொரு நிலையில் முன்னோடி முகம் கொண்டது. முத்திரை வித்தகம் காட்டும் அகம் கொண்டது.
எல்லாவற்றையும் அல்ல, தமிழன்பனின் சில கவிதையிலக்கியத் தொகுதிகளை இப்படி நிரல்படுத்தி அவற்றின் தனித்தன்மையை நினைத்துப் பார்க்கலாம்:
தமிழன்பன் கவிதைகள், விடியல் விழுதுகள் - மரபின் வளம்; மரபில் புதுமை.
சிலிர்ப்புகள் - வசன கவிதை; வசன காவியம்; காதல் ஓவியம்,
தோணி வருகிறது, தீவுகள் கரையேறுகின்றன - புதுக் கவிதையின் முன்னோடிப் பாய்ச்சல்கள்.சமூக விழிப்பின் விதைகள்; ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போர் முழக்கங்கள்.
சூரியப் பிறைகள் - முன்னோடி அய்க்கூ கவிதைகளின் தொகுதி.
திரும்பி வந்த தேர்வலம், ஊர் சுற்றி வந்த ஓசை, வார்த்தைகள் கேட்ட வரம் - செம்மாந்த கவியரங்கக் கவிதைத் தொகுதிகள்.
கிழக்குச் சாரளம், என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ்செடி, நடை மறந்த நதியும், திசை மாறிய ஓடையும், பனி பெய்யும் பகல் - புதுக்கவிதையில் புதிய பரிமாணங்கள்; உள்முகத் தேடல்களும் ஆழ்நிலைப் பார்வைகளும்.
உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட்விட்மன்! - பயண இலக்கியக் கவிதைகள்.
வணக்கம் வள்ளுவ - வள்ளுவத்தைக் கொண்டாடும், கேள்விக்குள்ளாக்கும் வனப்புமிகு படைப்பு.
ஒரு வண்டி சென்ரியு - சென்ரியு வகைக் கவிதைகளின் முன்னோடித் தொகுதி.
கவின் குறுநூறு - குழந்தைமையைக் கொண்டாடும் கவிதைத் தொகுதி.
குடை ராட்டினம் - குழந்தைப் பாடல் தொகுதி.
தமிழோவியம் - இசைப் பாடல்களின் இனிய தொகுதி.
சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் - முதல் லிமரைக்கூ வடிவக் கவிதைத் தொகுதி.
இரவுப் பாடகன் - ஞானத் தேடல்கள்; தத்துவநோக்கு, ஆழப் பார்வை கொண்ட அற்புதக் கவிதைகள்.
இவர்களோடும் இவற்றோடும் - தமிழடியார்களைப் போற்றும் புதிய பெரியபுராணம்.
என்னருமை ஈழமே - ஈழத்தின் வலியும் வாழ்வும்.
மழை மொக்குகள் - குழந்தைமையைக் கொண்டாடும் இலக்கியம்; குறள்வெண்பாத் தொகுதி.
தத்து பித்துவம் - தத்துவ வித்தகம்.
கஜல் பிறைகள் - கஜல் வடிவ இசைக்கவிதைகள்.
திசை கடக்கும் சிறகுகள் - உலகப் பார்வை; உலகக் கவிஞர் என்பதை உறுதி செய்யும் கவிதைத் தொகுதி.
கனாக்காணும் வினாக்கள் - கேள்விக் கவிதைகள்.
கீழடியில் கேட்ட தாலாட்டுகள் - தமிழின் வேர்களை நோக்கிய வியப்புறு பயணம்; தொல்லியல் ஆய்வுகள் விளைத்த சொல்லியல் கவிதைகள்.
முன்பணிக்காலம்-புதுக்கவிதையில் தன்வரலாறு.
இத்தனை பரிமாணங்களை எந்தப் பெருங்கவிஞனிடம் நாம் காண இயலும் என்னும் வியப்பை ஒவ்வொரு நூலும் நம் நெஞ்சங்களிலும் தமிழ்த்தாயின் நெஞ்சத்திலும் விரிவு படுத்திக்கொண்டே போகின்றன. இவை தமிழன்பப் படைப்புலகச் சாதனைகள்; கவிதை உலகிற்கு வாய்த்திருக்கும் வகைவகையான கவின்மிகு படைப்புச் சிற்பங்கள்.
···
சிகரம் தொட்டவர்
இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டுக் களத்தில் ஈரோடு தமிழன்பனின் இடம் மிகுமுதன்மை கொண்டது; மிகு கவனத்திற்குரியது.தமிழ் மூதறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பனார், தமிழண்ணல், சோ.ந. கந்தசாமி, அ. சண்முகதாஸ், தி.சு.நடராசன் முதலியோ ரெல்லாம் இந்த இடத்தை விதந்து எடுத்துரைத்துள்ளனர்.
தமிழ்த் திறனாய்வுலகத்தின் மாபெரும் ஆளுமைகளான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோவை ஞானி முதலியோ ரெல்லாம் இந்த இடத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஒருமுறை, தமிழன்பன் படைத்த ‘நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்’ என்னும் கவிதை கலாநிதி க. கைலாசபதிக்கு உலகப் பெருங்கவிஞன் மயாகோவ்ஸ்கியின் கவிதையை ஞாபகத்திற்குக் கொணர்ந்திருக்கிறது.
தமிழன்பனை “மானுடத்தை மறவாது எண்ணுபவர்” எனவும், “உவமைக்குப் பாரதிதாசன் எனக் கூறுவது இவருக்கும் பொருந்துமெனலாம்.ஆனால் ஒரு வித்தியாசம்; உவமை உருவகங்கள் தமிழன்பனது கவிதைகளில் படிமங்களாகப் பரிணமித்துள்ளன. இது காலத்தை ஒட்டிய வளர்ச்சியாகும்” எனவும், “பாரதிதாசனிடமிருந்து பல படிகள் முன்னேறி வந்துவிட்ட தமிழன்பன்” எனவும் அரை நூற்றாண்டுக்கு முன்பே மதிப்பிட்டிருக்கின்றார் என்பது தமிழன்பக்கவியின் பேரிடத்தை முரசறைகின்றது.
பிந்தைய அரை நூற்றாண்டில் பாரதிதாசனின் மரபில் பல படிகளல்ல, காலத்தின் வளர்ச்சிக்கேற்பப் பல முகடு களையே, சிகரங்களையே தமிழன்பன் தொட்டிருக்கின்றார் என்பது வரலாற்றுப் பேருண்மை. கைலாசபதியைத் தொடரும் பிறிதொரு மாபெரும் மார்க்சியத் திறனாய்வாளரான கா.சிவத்தம்பி, “நல்ல புதுக்கவிதைக்குள் ஒரு நவ செந் நெறிப்போக்கும் (ழிமீஷ்-நீறீணீssவீநீவீst) உண்டு.அந்தக் கவிதா முதிர்வை இப்பொழுது சில தமிழ்ப் புதுக்கவிதையாளர் களிடத்தே காணமுடிகிறது. அவருள் ஈரோடு தமிழன்பன் நிச்சயமாக ஒருவர்” எனக் கவிதா முதிர்வுகொண்ட சில புதுக்கவிஞர்களுள் தமிழன்பன் ஒருவர் என்பதை உணர்த்தியதோடு, “பாரதி பாரதிதாசனுக்குப் பிந்தையதான கவிதைக் களத்தின் இன்றியமையாப் பெரும் புள்ளிகளை எல்லாம் வரிசைப்படுத்தி வரிசையறிய முயலுங்கால், சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவி தமிழன்பன் எனலாம்” எனக் கவிதை வரலாற்றில் தமிழன்பனின் உச்ச இடத்தினை உரத்துச் சொல்லியுள்ளார்; உறுதி செய்துள்ளார்.
தமிழ்க் கவிதை வரலாற்றையும் தமிழ்ச் சமூக வரலாற்றையும் முழுமையாக உணராத நிலையில் அவசரகதியில் கருத்துகளையும் மதிப்பீடுகளையும் முன் வைப்பவர்கள் மலிந்துவிட்ட தமிழ்ச் சூழலில் ஒரு வரலாற்று உண்மையைக் கவனப்படுத்த வேண்டியிருக்கின்றது. நம் காலத்தில் - நம் தமிழ்ச் சமூகத்தில் - இரவீந்திரநாத தாகூரைப் போல மாபெரும் விசாலத்தோடு திகழ்ந்துகொண்டிருப்பவர் ஈரோடு தமிழன்பன். எனினும் தமிழன்பனைச் சிலர் மென்மையானவர், அமைதியானவர், களத்தில் நின்று போராடாதவர், உச்சங்களில் திகழ்ந்த தலைவர்களோடு நட்புப் பேணிய காரணத்தினால் கிளர்ச்சிக்காரரோ புரட்சிக்காரரோ அல்லர், நேரடிப் போர்க்குணம் அற்றவர்-போர்க்களம் அறியாதவர் என்றெல்லாம் கருதிக் கடந்து செல்லுகின்றனர்.
பாரதி, பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், இன்குலாப் என்னும் கவிதைப் போராளிகளின் மரபிலும் இடம்பெறுபவரே ஈரோடு தமிழன்பன் என்பதை உணர்வதில்லை.
இந்தக் களத்திலும், இந்த நிரலிலும் ஈரோடு தமிழன்பனின் இடத்தை அழுத்தமாகவும், உரத்தும், உண்மையாகவும் சொல்லத்தக்க ஒற்றைப் பேராளுமை உண்டென்றால் அது மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் இன்குலாப் தான். தமிழன்பனின் போர்க்குணத்தை - போர்முகத்தை-போராளிச் செயல்பாட்டை-களமாடிய பேரிடத்தை நேரடியாகக் கண்ட நிலையில் சொல்லத்தக்கவர் அவர் ஒருவரே.
தமிழன்பனின் இவ்வகையிலான வரலாற்று முக்கியத்துவத்தை அவர் பலபடப் பேசியிருப்பது முற்போக்கு இயக்க உணர்வாளர்களிடையே கவனம் பெற வேண்டிய தாகும். தமிழ்மண் உள்ளிட்ட இந்திய மண் ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வரலாற்று நெருக்கடியை எதிர்கொண்டது. அதுதான் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டமை.அந்தச் சூழலில் சிந்தனை யாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் எனத் தமிழ்ச் சமுதாயம் கொண்டாடிய பலரும் அமைதிகாத்தனர்; அரங்கு தவிர்த்தனர். ஆதிக்க வெறிமுகத்துக்கு எதிராக எந்தவோர் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தாது வீடு முடங்கினர்.அந்தச் சூழலில் தமிழன்பன் எப்படி வாழ்ந்தார்? எப்படி இயங்கினார்? எப்படிச் செயல்பட்டார்? இவற்றையெல்லாம் இன்குலாப் இப்படி விவரிக்கின்றார்.
அவசர நிலை எதிர்ப்பு
"ஓர் அமைதியான வாழ்வை நடத்திக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் தமிழன்பன் பக்கம் இருந்தாலும் அவர் போராட்டங்களின் தேவையை மறுத்த வரில்லை.
1975இல் அவசர நிலை அறிவிக்கப் பட்டபோது தமிழ்நாட்டில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் முன்விடுக்கப்பட்ட அறைகூவல், ‘நீ அவசர நிலையை ஆதரிக்கிறாயா? இல்லையா?’ என்பதுதான். வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பற்ற சோசலிசக் குடியரசு எனத் திருத்தப்பட்டது போன்ற வெளிப்பாடுகளைக் கண்டு முற்போக்குக் கவிஞர்கள்கூட மயங்கினர்.
ஆனால், இவற்றின் பின் உள்ள சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் முன்கூட்டியே அறிந்த கவிஞர்கள் இந்த அவசர நிலையை எதிர்த்தார்கள். அப்படி எதிர்த்தவர்களில் முன்னணியில் இருந்தவர் தமிழன்பன்.
அந்தச் சமயத்தில் தெலுங்குக் கவிஞர் சிறீ.சிறீ.தலைமையில் இலயோலாக் கல்லூரி அருகில் ஒரு கிறித்துவப் பொது அரங்கில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. ஈரோடு தமிழன்பனும், நானும் அந்தக் கவியரங்கில் பங்கேற்றோம். அந்தக் கவியரங்கம் அவசர நிலைக்கு எதிராக எழுந்த கலைப் பதிவுகளில் முதல் வரிசையில் இருந்தது."
தமிழன்பன் எப்படி வாழ்ந்திருக்கின்றார், கவிதையும் வாழ்க்கையும் இரண்டறக் கலந்து இலங்கியிருக்கின்றன என்பதன் அடையாளங்கள் இவை. இன்னும் இருக்கின்றன இத்தகைய காட்சிகளும் சாட்சிகளும் என்பதை இன்குலாப் பிறிதோர் இடத்திலும் பேசியிருக்கின்றார் இப்படி. நமக் கெல்லாம் தெரியாத தமிழன்ப வரலாறு தனக்குத் தெரியும் என்பதை அழகாகக் கவிதையில் கிளத்தியிருக்கின்றார் இப்படி.
நீங்கள்
குயில்களோடும் கனிகளோடும் பேசலாம்.
நான்
வேர்களோடு உரையாடிக் கொண்டிருப்பேன்.
என் நினைவின் உதிராத பகுதியில்
தமிழன்பன் முகம் முறுவலித்திருக்கும்.
அதிகாரக் கொடுமை தினவு கொண்டலைந்த
அவசர காலத்தில்
தோளோடு தோள் சேர்ந்தெதிர்த்தன
எங்கள் கவிதைகள்.
அவர் விடிவெள்ளி
நான் யுஜி
தலையைப் பிய்த்துக் கொண்டலைந்தது
காவல்துறை.
தமிழன்ப வரலாற்றில் எத்தனை எத்தனையோ அறிஞர்களும், திறனாய்வாளர்களும் அவரை மதிப்பிட்டிருக் கின்றார்கள்; அவருடைய தனித்துவங்களைக் கண்டுகாட்டியிருக்கின்றார்கள். ஆயினும், மக்கள் கவிஞர் இன்குலாப் கண்டுகாட்டிய தமிழன்ப தரிசனம் கவிதைக்கலை சார்ந்ததும், சமூக உணர்வு சார்ந்ததும் மட்டுமல்லாமல் நேரடி அனுபவத்தின் விளைவாகவும் வெளிப்பட்டதாகும்.
பிறரெவராலும் கண்டுகாட்ட இயலாததுமாகும். தமிழ்ச் சமூக வரலாற்றிலும், தமிழ்க் கவிதை வரலாற்றிலும் தமிழன்பன் ஒரு ஞானியாக, ஒரு கலைஞனாக, ஒரு போராளியாகத் திகழும் மும்மைச் செம்மாப்பைக் கவிஞர் இன்குலாப் பத்தாண்டுகளுக்குமுன் இப்படிச் சாசுவத சாசனமாகப் பொறித்திருக்கின்றார்:
போராளி
80 அகவைக்குப் பின்னரும் ஒரு ஞானியைப் போல் தெளிந்தும், ஓர் ஓவியரைப் போல அழகுபடுத்தியும், ஒரு போராளியைப்போலத் துணிவாகவும் எழுதி இயங்குகிறவர் கவிஞர் தமிழன்பன்.
இன்குலாப்பின் இந்த மதிப்பீட்டுமொழிகள்மற்றைய யாவர்க்கும் எளிதில் வசப்படாத் தமிழன்பனின் இரு பெருநிலைகளைநாம் மனங்கொள்ள எடுத்துரைக்கின்றன. ஒன்று, அவர் நம்மிடையே மானுட வாழ்வின் ஆழ அகலங்களை, அர்த்தங்களை நுணுகி நோக்கித் தெளிந்து மெய்ம்மைகளைக் கண்டுணர்த்தும் ஒரு ஞானியாகத் திகழுகின்றார் என்னும் பெருநிலை. இரண்டாவது, ஒரு போராளியைப் போல் துணிவாக எழுதுபவர்; இயங்குபவர் என்னும் பெருநிலையாகும்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குமுன் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் ஊடகம், ஒற்றைக் காட்சி ஊடகம் தொலைக்காட்சி. அதுவும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த தொலைக்காட்சி. அதன்வழித் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருக்கும் அறிமுகமாகியிருந்த கனிந்த முகமும் காந்தக் குரலும் தமிழன்பனுடையவை. அவர் செய்தி வாசிக்கின்றார் என்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியின்முன் உட்கார்ந்து செய்தி பருகியது தமிழ்ச் சமூகம் என்பதெல்லாம் பழைய வரலாறு. வருவாய்க்கும் புகழுக்கும் நிலைக்களம் அது. ஆயினும் தமிழன்பனின் கவிதைக் கருத்துவீச்சின் கனம் அந்தப் பெருவாய்ப்பை இழக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்படி அவர் கொண்ட கொள்கைக்காக, களமாடிய செயல்பாடுகளுக்காகக் கொடுத்திருக்கும் விலை ஏராளம். அவர் ஓர் உண்மைக் கவிஞராக ஒளிர்ந்திருக்கின்றார்; வாழ்ந்திருக்கின்றார் என்பதன் வரலாற்றுப் பதிவுகள் இவை. தமிழ்ச் சமூகத்தின் அரிதாகிப் போன உண்மைக் கவிஞர்களின் வரிசையில், போராளிக் கவிஞர்களின் வரிசையில் தமிழன்பனின் இடம் குறிப்பிடத்தக்கது.
···
தமிழ்மொழி பெரும்புலவர்களைக் கண்ட மொழி; கொண்ட மொழி.‘யாமறிந்த புலவரிலே’ என்பது வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரின் இடத்தைப் பேசும் நிலையில் பாரதியார் ஆண்ட தொடர். கவிதைக்கலையில் உச்சம் தொட்ட பெரும்புலவர்களைச் செந்நாப் புலவர், கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசர் எனக் கொண்டாடிய மரபு தமிழ் வரலாற்றின் முற்கால, இடைக்கால, பிற்கால வரலாறு. பெருங்கவிஞர்களை, குறிப்பாகக் காப்பிய இலக்கியம், நாடக இலக்கியம் படைத்த தேர்ந்த கவிஞர்களை மகாகவி எனப் போற்றும் மரபு வடமொழி மரபு. இருபதாம் நூற்றாண்டில் முதன்முறையாக இந்திய விடுதலைப் போராட்டக் கவியாக மலர்ந்த பாரதியை மகாகவி எனக் கொண்டாடியது தமிழ்ச் சமூகம்.
புரட்சிக்கவி, பாவேந்தர் எனத் தமிழ் உலகால் கொண்டாடப்பட்ட பாரதிதாசனை செக்கோஸ்லோவாக்கிய நாட்டுத் தமிழ்ப் பேரறிஞர் கமில் சுவலபில் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதங்களில் “மகாகவி” என விளித்துப் போற்றியிருந்தார் என்பது அதிகம் வெளிப்படா வரலாறு. எந்த அடைமொழியைக் காட்டிலும் ஈடில்லாத அடையாள மொழியாகிய ஈரோடு என்பதனைப் புனைபெயரின் தலைப்பெயராகப் பெற்றுப் பொலியும் தமிழன்பப் பெருங்கவியை இலக்கிய உலகம் கவிப்பேரருவி முதலிய அடை மொழிகளால் அழைத்து மகிழ்ந்த வரலாற்றின் உச்சமாகத் தமிழன்ப அன்பருலகம் ஓர் அடைமொழியால் உள்ளங் குளிர அழைத்துப் போற்றத் தலைப்பட்டிருக்கின்றது. விளைவு விருதுகளாகவும் வெளிப்பட்டிருக்கின்றது.
மகாகவி
அமெரிக்காவின் தமிழ்ச்சங்கமொன்று தமிழன்ப விசாலத்தையும், விழுமிய நிலையையும் கவனங்கொண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ‘மகாகவி விருது’ வழங்கிக் கவிஞர் பெருந்தகைதமிழன்பனின் இடத்தைக் கவனப் படுத்தியுள்ளது. அதன் எதிரொலி போலத் தமிழ் மண்ணில் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தீர்மானம் இயற்றிக் கவிஞர் தமிழன்பனுக்கு ‘மகாகவி விருது’ அளித்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது; தமிழன்பர்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க வழி சமைத்திருக்கின்றது.
இன்றைய தமிழ்ச் சமூகத்தில், தமிழ்க் கவிதை உலகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இடத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் விளங்குகின்றார். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தந்தை பெரியாரின் இடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திகழுகின்றார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தந்தை பெரியார், “சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி” என்று போற்றினார்.
இன்று தந்தை பெரியாரின் இடத்திலே இருக்கின்ற தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி, "அன்பர்களின் போற்று மொழியையும், தகைசான்ற தமிழ் அமைப்புகளின் ஏத்து மொழிகளையும் உளங்கொண்டு, “உலக மகாகவிஞர்" என்கிற அளவிற்கு, உலகக் கவிஞராக இன்றைக்கும் திகழ்ந்துகொண்டிருக்கின்றார்.
உலகப் பார்வையோடு - பாரப்பா உலகப்பா என்று அன்றைக்கு ஆரம்பித்துப் பாடிய புரட்சிக் கவிஞர் அவர்களுடைய எதிரொலியாக, பிம்பமாக இன்றைக்கு ஈரோடு தமிழன்பன் இருக்கிறார்” என மதிப்பிட்டு வழிமொழிந்திருக்கின்றார். ஆம், உலகப் பார்வைகொண்ட தமிழின் மகத்தான கவி, ஒப்பற்ற கவி ஈரோடு தமிழன்பன்.
தமிழர் தலைவரின் மதிப்பீட்டு மொழியை, மதிப்பார்ந்த மொழியை வரலாறு மனங்கொள்ளும்; வழிமொழியும்; உறுதிசெய்யும் என்பது தமிழன்பப் பெருங்கவியின் கவிதைகளில் திளைத்த ஒவ்வொருவருடைய நம்பிக்கை.
···
உலகளாவிய பார்வை
உலகளாவிய பார்வைகொண்டு,உலகக் கவிஞர்களின் நிரலில் ஒளிரத்தக்க பெற்றி கொண்டு திகழும் ஈரோடு தமிழன்பன் உலகளாவிய நிலையில் சில விருதுகளால் போற்றப்பெற்றிருக்கின்றார். கனடா நாட்டுத் தொரண்டோ பல்கலைக்கழகம் தமிழ்த்தோட்டம் அமைப்புடன் இணைந்து வழங்கிய ‘நாவலர் தகைசால் விருது’, வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கிய ‘உலகத் தமிழ்ப்பீட விருது’, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்விருது’ உள்ளிட்ட பெரும்புகழுக்குரிய பெருந்தொகைப் பரிசில்களைக் கொண்ட விருதுகள் தமிழன்பக் கவியை அணி செய்திருக்கின்றன. உலகளாவிய பரிசில் விருதுகளைப் போலவே உலகத்தின் பார்வைக்குத் தமிழன்பக் கவியின் கவிதைகளைக் கொண்டு செல்லும் பெருமுயற்சிகளும் பிறிதொரு நிலையிலான விருதுகளாக மலர்ந்திருக்கின்றன.
அவை மற்றைய உலக மொழிகளுக்கு முதுபெருங்கவி தமிழன்பனின் கவிதைகளைக் கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பு முயற்சிகளாகும்.
மகாகவி பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரது சில கவிதைகள் அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற கவிஞரும், அறிஞரும், திறனாய்வாளருமாகிய ஜேம்ஸ் எச்.கசின்ஸ் என்பாரால் ஆங்கிலத்தில் ஆக்கப்பெற்று அகில இலக்கிய அரங்கின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன.
அதற்கடுத்த கட்டத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சில கவிதைகள்அவர் வாழுங்காலத்திலேயே உலகளாவிய தமிழியல் அறிஞரான செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சார்ந்த கமில் சுவலபில் அவர்களால்மொழிபெயர்க்கப்பட்டன என்பதும் வரலாறு.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் உலகளாவிய அகராதியியல் அறிஞரும் ஆங்கிலேயருமான கிரிகோரி ஜேம்ஸ் அவர்களாலும் மற்றையோராலும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை இந்தப் பெருமித வரலற்றின் சமகாலத் தொடர்ச்சியாகவும் தமிழன்பனாரின் கவிதைகள் உலகளாவிய நிலையில் கவனம் பெறுகின்ற காட்சியாகவும், மாட்சியாகவும் நம் கண்ணெதிரே விரிகின்றன. தமிழன்பன் கவிதைகள் உலகின்கவனத்தைப் பெறுகின்ற பிறிதொரு நிலையின் வெளிப்பாடாக உல்ரிகே நிக்கலஸ் (ஹிறீக்ஷீவீளீமீ ழிவீளீறீணீs), ஸாஷா எபிலிங் (ஷிணீsநீலீணீ ணிதீமீறீவீஸீரீ) முதலிய அயல்நில, அயல் மொழிவாணர்களாகவும், தமிழியல் அறிஞர்களாகவும் திகழ்பவர்களால் பேசப்பட்டுள்ளமை விளங்குகின்றது. உலகளாவிய நிலையில் விருதுகள், மொழிபெயர்ப்புகள், கவிதைச் சிறப்பு பேசப்படும் பெற்றிமை எனத் தமிழன்பக் கவியுலகம் இன்று பரந்தவெளியில் ஞாலத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வரலாறு தமிழுக்கும், தமிழர்களுக்கும், பெரு மையினை, மகிழ்ச்சியினைச் சேர்க்கின்ற வரலாறாகச் சிறக்கின்றது.
இத்தகைய பெருமித வரலாறுகளுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று 28.9.2023இல் 90ஆம் அகவையில் அடியெடுத்துவைக்கின்றார்.
வரும் டிசம்பர் மாதம் 91ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கவுள்ள பெரியாரியலின் முன்னோடி, தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி கவிஞர் ஈரோடு தமிழன்பனைப் “புரட்சிக்ககவிஞரின் பிம்பம்” என்று போற்றியுள்ளார்.
ஆம், நமக்குக் கிடைத்திருக்கிற இரண்டாம் பாரதிதாசன் கவிஞர் ஈரோடு தமிழன்பனவர்களாவார்.பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பனை வாழ்த்தியும், அவருடைய கவிதைகளை வாசித்தும் உவகையும், உணர்வும் பெற வேண்டிய தருணம் இது. அனைவரும் ஈரோடு தமிழன்பனை, அவர் கவிதைகளைக் கொண்டாடி எழுச்சிகொள்வோம்.
No comments:
Post a Comment