''இந்தியா'' கூட்டணி: 14 பேர் ஒருங்கிணைப்புக் குழு - அடுத்த கட்ட பணிக்கு ஆயத்தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

''இந்தியா'' கூட்டணி: 14 பேர் ஒருங்கிணைப்புக் குழு - அடுத்த கட்ட பணிக்கு ஆயத்தம்!


மும்பை, செப். 2
  மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்றத்  தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டு, 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பாரதீய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. 

எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதியும், 2 ஆவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடந்தது. பெங்களூருவில் நடந்த கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. முதல் இரண்டு கூட்டங்களும் எதிர்க்கட்சிகள் அணி திரட்டி பலத்தை காட்டும் அளவில் இருந்தன. 

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முக்கிய முடிவுகளை எடுக்கும் நோக்கில் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் ''இந்தியா'' கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள 'கிராண்ட் ஹயாத்' விடுதியில் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்பட 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர். தலைவர்களுக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் நாள் (31.8.2023) இரவில் விருந்து அளித்தார். இந்தநிலையில் நேற்று மும்பையில் 2 ஆவது நாளாக (1.9.2023) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பாரதீய ஜனதாவை வீழ்த்த தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். 

ஒருங்கிணைப்புக் குழு

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவாக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூக குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவில் இடம்பெற்ற தலைவர்கள் விவரம் வருமாறு:-

சரத்பவார் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க), பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி (ராஷ்டிரீய ஜனதாதளம்), அபிஷேக் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா), ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ராகவ் சதா (ஆம் ஆத்மி), ஜாவேத் அலிகான் (சமாஜ்வாடி), லாலன் சிங் (அய்க்கிய ஜனதாதளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழுவில் இடம்பெறும் தலைவரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழு தான் கூட்டணி தொடர்பான அடுத்தடுத்த முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. 

குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும் என்றும், இந்த பணியை வருகிற 30 ஆம் தேதிக்குள் முடிக்க இருப்பதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. 

மற்ற குழுக்கள்

இதேபோல பிரசார குழு, பத்திரிகையாளர்கள் குழு, சமூக ஊடக குழு, ஆய்வு குழு ஆகிய குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்தியா கூட்டணியின் அமைப்பாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதேபோல கூட் டணியின் இலச்சினையும் (லோகோ) வெளியிடப்படவில்லை. 

நேற்று (1.9.2023) காலை இலச்சினை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு கட்சியின் பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சிக் கும் சின்னங்கள் இருக்கும்போது, இலச்சினை வெளியிட்டால் மக்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்ததால், இந்தத் திட்டம் தள்ளிப்போடப்பட்டு உள்ளது.

தீர்மானங்கள்

முன்னதாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அவை வருமாறு:-

* இந்தியா கூட்டணி கட்சிகளான நாங்கள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிட முடிவு செய்கிறோம். பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும். கொடுக்கல், வாங்கல் முறையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

* நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி விரைவில் பொதுக் கூட்டங்கள் நடத்துவோம்.

* 'இந்தியா' கூட்டணி கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலம் பல்வேறு மொழிகளில் "இந்தியா ஒன்றுபடும், இந்தியா வெற்றி பெறும்" என்ற கருப்பொருளுடன் பிரசாரம் மேற்கொள் ளப்படும்.

* இந்தியா கூட்டணி கட்சிகளான நாங்கள் நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் நமது நாட்டை பெருமைப்படுத்திய சிறந்த சாதனைகளுக்காக இஸ்ரோ குடும்பத்தை வாழ்த்துகிறோம். இஸ்ரோவின் திறமை மற்றும் திறன்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் 60 ஆண்டு கள் ஆனது.

* சந்திரயான்-3 திட்டம் உலகை சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் சனிக்கிழமையன்று சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல்1 ஏவப்படுவது ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

இஸ்ரோவில் அசாதாரண சாதனைகள் நமது சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்துவதோடு நமது இளைஞர்கள் அறிவியல் முயற்சியில் சிறந்து விளங்குவதற் கான உத்வேகத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி பலத்தால் பதற்றத்தில் பிஜேபி! 

காங்கிரஸ் தலைவர் கார்கே உரை

எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் ஒன்றிய அரசை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- 

இந்தியா கூட்டணியின் முந்தைய 2 கூட்டங்களும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக பிரதமர் மோடி நமது அன்பான நாட்டின் பெயரை பயங்கரவாத அமைப்புடனும், அடிமைத்தனத்தின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். 

இந்தக் கூட்டம் வெற்றி பெற்றுள்ளதால் தற்போதைய அரசின் பழிவாங்கும் அரசியலால் வரும் மாதங்களில் மேலும் பல தாக்குதல், அதிக சோதனைகள் மற்றும் கைதுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு பாரதீய ஜனதா அரசு நமது தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும். 

140 கோடி இந்தியர்களும் துயரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எங்களை எதிர்நோக்கி உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரப்பிய வகுப்புவாத நஞ்சு இப்போது அப்பாவி ரயில் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளது. கொடூரமான பாலியல் வன்முறை வழக்கில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, கவுரவிக்கப்படும்போது, அது கொடூரமான குற்றங்களை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக மறுபுறம் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதில் ஆச்சரியம் இல்லை. 

பிரதமர் மோடியின் ஆட்சியில் கார்கில் ராணுவ வீரரின் மனைவிக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசின் அக்கறையின்மையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர் மீது சிறுநீர் கழிக்க வைக்கப்படுகிறது. இந்த குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவ விடப்படுகின்றனர். விசாரணை அமைப்புகள், நிறுவனங்களை பாரதீய ஜனதா முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சி.பி.அய். இயக்குநர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. 3 கூட்டங்கள் மூலமாக ''இந்தியா'' கூட்டணி நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்தை நிரூபித்துள்ளது. எங்களின் பலம் இந்த அரசை பதற்றமடைய செய்துள்ளது. 

இவ்வாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  அவர்கள் உரையாற்றினார்.

பிஜேபிக்கு எதிரான கட்சிகளை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் அதற்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை 'இந்தியா' கூட்டணியில் சேர்த்தாகவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பையில் நேற்று (1.9.2023) நடைபெற்ற ''இந்தியா'' கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றினார். 

அவரது உரை விவரம் வருமாறு:- 

பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டமாக மும்பையில் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்தியாவைக் காக்கப் போகும் இந்த 'இந்தியா' கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தைவிட, 'இந்தியா' என்ற பெயரே பாரதீய ஜனதா கட்சிக்குப் பயத்தையும், காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப் படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள், ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து- அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது. 

பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலை வர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். ''இந்தியா'' கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும். 

மக்களாட்சி

ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்தவேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment