சமூக ஊடகங்களிலிருந்து... மனசாட்சி உள்ளோரே, தெரிவு உங்கள் கையில்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

சமூக ஊடகங்களிலிருந்து... மனசாட்சி உள்ளோரே, தெரிவு உங்கள் கையில்!!

உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் கிளம்பின. இரண்டிலும் இந்து பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். இரண்டிலும், சுடச்சுட டீ போட, சப்பாத்தி போட்டெடுக்க, ரயில்வே விதிகளை மீறி, ரகசியமாக மறைத்து எடுத்து வரப்பட்ட அடுப்புகள் இருந்தன.

ஒரு அதிகாலை வேளையில் பற்ற வைக்கப்படும்போது, இரண்டு அடுப்புகளும் திடீரென்று வெடிக்க, இரண்டு பெரும் தீவிபத்துகள் நடந்தன.

ஒரு விபத்தில், கிட்டத்தட்ட பெட்டியில் இருந்த 58 பேரும் இறந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் பிளாட்பாரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமிய சிறு வணிகர்கள் தான் ரயில் பெட்டிக்குத் தீ வைத்ததாக வதந்தீ மாநிலம் முழுக்கப் பரப்பப்பட்டது. கடுமையான முகம், கூரான பார்வை, இறுக்கமான குரலுடன் உச்ச அதிகார மய்யம் டிவியில் தோன்றி "தீ வைத்தவர்களுக்குச்" சரியான பாடம் புகட்ட வேண்டும் என வன்மம் கொப்பளிக்கப் பேசியது. அடுத்த மூன்று நாட்களுக்கு, காவல்துறை வேடிக்கை பார்க்க, இந்துத்வ அமைப்புகளின் முற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த தலைவர்கள் திட்டம் போட, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த காலாட்படை அடியாட்கள் வன்முறை வெறியாட்டம் போட்டார்கள்; வெட்டினார்கள்; கொளுத்தினார்கள்; பாலியல் வன்புணர்வு செய்தார்கள்; ஈவு இரக்கமில்லாமல், இரண்டாயிரம் முதல் நாலாயிரம் பேர் வரை கொன்றார்கள்; சிக்கிய சிறுவர்கள், கைக் குழநதைகள், கர்ப்பிணிகள், சுமந்த கருக்கள் வரை யாரையும் தப்பவிடாது சிதைத்தார்கள்; பல நூறாயிரம் பேரின் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். ஆனாலும், கால ஒட்டத்தில் ஏறக்குறைய எல்லா குற்றவாளிகளும் தப்பினர், 'பிராமணர்' என்பதால் விடுதலை செய்யப்பட்ட கூட்டுப் பலாத்கார கொலைக் குற்றவாளிகள் உட்பட. 

அந்த இரண்டாவது விபத்தில், துரிதமாக மீட்புப் பணிகள் நடந்து, இழப்பு ஒன்பது உயிர்களுடன் நிறுத்தப் பட்டது. உயிர்ப் பிழைத்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுப், பத்திரமாகச் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை ரயில்வே ஊழியர் முதல், ரயில்வே அதிகாரிகள், விபத்தைப் பார்த்த பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த உள்ளூர் எம்பி, அமைச்சர் வரை எல்லோருமே நடந்தது ஒரு விபத்து, அது எப்படி எதனால் நடந்தது, வருங்காலத்தில் எப்படி அதைத் தடுக்கலாம் என்பது குறித்து ஊடகங்களுடன் பேசினர். யாரும் யார் மீதும் வீண் பழி போடவில்லை; வதந்தி கிளப்பவில்லை; மதவெறி இனவெறி கக்கவில்லை. எந்த வன்முறை கலவரமும், ஏன் சின்ன பதட்டமோ பரபரப்போ கூட ஏற்படவில்லை.

முதல் விபத்து நடந்த ஆண்டு 2002. இடம் குஜராத். இந்துத்வ பூமி. சனாதன மாடல் ஆட்சி.

இரண்டாவது விபத்து நடந்த ஆண்டு 2023. இடம் தமிழ் நாடு. பெரியார் பூமி. திராவிட மாடல் ஆட்சி.

மனசாட்சி உள்ளோரே,

தெரிவு உங்கள் கையில்!!

-அருண் பாலா பகிர்வு.


No comments:

Post a Comment