தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர்" விருது தமிழ்நாடு அரசால் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அளிக்கப்பட இருக்கிறது என்ற செய்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும், அதன் அரசியல் வடிவமான பிஜேபிக்கும் அடிவயிற்றில் ரணத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை "அப்பழுக்கற்ற அரசியல் பிதாமகன் நல்லகண்ணுவை அவமானப்படுத்துகின்றனர்" என்று சிண்டு முடியும் வேலையையும் அந்த கூட்டத்திற்கு உரித்தான முறையில் உளறிக் கொட்டியிருக்கிறார்.
வேறு எந்தச் செய்தி ஏடும் வெளியிடாத இச்செய்தியை ஆர்.எஸ்.எஸ்.இன் ஊது குழல்களான 'தினமல'ரும், 'ஏசியாநெட் தமிழ்' என்ற இணைய தளமும் மட்டுமே வெளியிட் டுள்ளன. தகுதி வாய்ந்த தலைவர்கள்பற்றிய அவதூறை வெளியிட வேண்டாம் என பிற ஊடகங்கள் புறக்கணித்து விட்டனவா என்று தெரியவில்லை.
இதில் ஏன் மூத்த பொதுவுடைமைவாதி சங்கரய்யா அவர்களின் பெயரை விட்டு விட்டார். என்பது அண்ணாமலைக்கே வெளிச்சம். அய்யா நல்லகண்ணுவும் சரி, சங்கரய்யாவும் சரி, அண்ணாமலையின் பிதற்றலைக் கண்டு நகைத்திருப்பார்கள். இந்த பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.-களுக்கு சூடு கொடுக்கக்கூடிய முற்போக்கு சக்தி வாய்ந்த போர்வாள்கள் அவர்கள். அந்த வரிசையில் திராவிடர் கழகத் தலைவருக்கு "தகைசால் தமிழர்" விருது கொடுத்திருப்பது கண்டு உலகம் முழுவதும் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும், அறிவியல்வாதிகளும், பிற்போக்குச் சக்திகளை வீழ்த்த வேண்டும் என்று கருதுகின்ற நல்லெண் ணம் கொண்டவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். வாழ்த்துகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் தோழர்கள் வாகனங்கள் மூலமாக பெரியார் திடலுக்கு வருகை தந்து ஆசிரியர் அவர்களுக்குச் சால்வை போர்த்தியும், சந்தாக்கள் அளித்தும் தங்களின் அளவற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
யாருக்கு விருது அளிப்பது என்பதற்கு தமிழ்நாடு அரசு அதற்கென்று உள்ள ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி இந்த விருது வழங்கப்படுகிறது.
யாருக்கு விருது அளிக்கப்பட வேண்டும் என்பதை அண்ணாமலையைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டுமோ? அண்ணா மலையைக் கத்துக்குட்டி என்றும், அரைவேக்காடு என்றும், அக்கப்போர் பேர்வழி என்றும், அரசியல்வாதிகள் அவ்வப்பொழுது அடை யாளம் காட்டியும், கன்னத்தில் அறைவது போல சூடு போட்டும் விமர்சனம் செய்ததற்குப் பின்னா லும்கூட அவருக்கு நல்ல புத்தி வந்ததாகத் தெரியவில்லை.
திராவிடர் கழகத் தலைவர் யார் என்பது பற்றி இவருக்கு என்ன தெரியும்? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த ஆசாமியாக அல்லவா இவர் இருக்கிறார். பத்து வயதில் மேடை ஏறி முழங்கி மக்களைக் கவர்ந்த மாணவர் ஆசிரியர் வீரமணி. அவர் கடலூரில் 1944ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் தந்தை பெரியார் முன்னிலையிலும், அறிஞர் அண்ணா முன்னிலையிலும் அந்த 11 வயதுச் சிறுவன் ஆற்றிய உரையின் வீச்சைக் கண்டு அய்யாவும், அண்ணாவும் ஆச்சரியப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்.
"இப்பொழுது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இருந்தால் இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல - பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்று அறிஞர் அண்ணா அவர்களால் 11 வயதில் அடையாளம் காட்டப்பட்டவர்தான் இன்று 90 ஆம் வயது காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆவார்.
90 வயதில் 80 ஆண்டுகாலப் பொது தொண்டு என்ற விகிதாச்சாரம் இந்தத் தலை வருக்கல்லாமல் வேறு யாருக்கும் உண்டோ! இந்த வயதிலும் மாதத்திற்கு 20 நாள் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்கும் தலைவர் வேறு எவரேனும் உண்டோ! என்ற கேள்வி நியாயமானதல்லவா? பள்ளி மாணவனாக இருந்த பொழுது கோடை விடுமுறை நாள்களில் தந்தை பெரியாரால் ஈரோட்டில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கு கொண்டு பிரச்சாரத்திற்குக் கிளம்பியவர் பள்ளிப் படிப்பிலும் சூரராகத் திகழ்ந்தவர்.
மாணவர் பருவத்திலேயே 'முழக்க'மிடும், 'புதுமை' ஏடுகளை நடத்தியவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் கல்வித் திறனில் ஒளி வீசியவர். எம்.ஏ. தேர்வில் முதல் மாணவராக வெற்றிக் கொடி நாட்டியவர். தங்கமெடல் வாங்கியவர். ஹானர்ஸ் படிப்பில் மூன்று மெடல்களை தட்டிப் பறித்தவர். இந்த மூன்றில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயில் பெயரில் அளிக்கப்படும் பரிசையும் வென்றவர் என்ற வரலாறு எல்லாம் இந்த கற்றுக் குட்டிகளுக்குத் தெரியுமா?
1956 ஆகஸ்ட் முதல் தேதி தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட ராமர் பட எரிப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு முதன் முதலாக கைது செய்யப் பட்டவர். இதுவரை 56 முறை கைதானவர் - சிறை சென்றவர். மிசா கைதியாக 358 நாட்கள்.
தந்தை பெரியாரின் புரட்சிக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி புத்துணர்ச்சியை ஏற்படுத்திய காரணத்தினால் இன எதிரிகளின் தூண்டுதலாலும், விபீஷணர்களாலும் உயிருக் குக் குறி வைக்கப்பட்டவர். மம்சாபுரம், வட சென்னை, ராயபுரம், புதுவண்ணை, சேலம் தம்மம்பட்டி, விருத்தாசலம், திருச்சி, திருப்பூர் போன்ற இடங்களில் தாக்குதலுக்கு ஆளானவர்.
அவருக்குப் பெண் பார்த்து, திருமண ஏற்பாட்டையும் தானே முன் நின்று திருமணத்தை நடத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் கையெழுத்திட்ட அழைப்பு! அப்பொழுது தந்தை பெரியார் - 'இயக்க நலன் கருதியே இந்த ஏற்பாடு' என்று சொல்லவில்லையா?
1960ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தந்தை பெரியாரால் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டவர். அதேபோல 1962இல் விடுதலை ஆசிரியராகவும் தந்தை பெரியாரால் திராவிடர் கழகத்தின் அமர்த்தப்பட்டவர். 10.8.1962 அன்று 'விடுதலை'யில் தந்தை பெரியார் எழுதுகிறார், "எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோன்று மற்றொருவர் வந்தார் - வருகிறார் - வரக்கூடும் என்ற உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே -அவரை நம் இயக்கத் தலைமை பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்" என்று தந்தை பெரியார் சொன்னார் - என்றால் இதைவிட பெரிய விலை மதிக்க முடியாத விருது வேறு ஒன்று இருக்க முடியுமா?
தகைசால் தமிழர் விருது:உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் துரைசாமி ராஜூ வாழ்த்து
தந்தை பெரியார் மறைவிற்குப் பின்பு அன்னை மணியம்மையார் நான்கு ஆண்டு களுக்கு மேல் தலைமைப் பொறுப்பேற்று இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் மறைவிற்குப் பிறகு தலைமையேற்ற ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையில் சிறு துரும்பு அளவில் கூட, பிறழாமல், எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் வீறு நடை போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதை யார் தான் மறுக்க முடியும்?
மேனாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே வாழ்த்து
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, இன்றைக்கு அது வெற்றி பெற்ற நிலையை அடைவதற்கு உந்து சக்தியாக, ஓயா உழைப் பாளியாக - போராட்ட தளகர்த்தராக இருந்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அல்லவா!
'திராவிட மாடல்' அரசின் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லையா? சிந்திக்க வேண்டும்!
தமிழன் கட்டிய கோயிலில் தமிழ் இல்லை, தமிழன் அர்ச்சகராக முடியாது என்று இருந்த நிலைக்கு காரணம் என்ன? அண்ணாமலை உட்பட அனைவரும் சூத்திரர்கள் என்ற காரணத்தினால் தானே! சூத்திரன் என்றால் என்ன? வேசிமகன் என்று மனுதர்மம் சொல்லும் பொருள் என்பது அண்ணாமலைகளுக்குத் தெரியுமா?
அண்ணாமலை உட்பட தமிழர்களின் இழிவை ஒழித்ததில், சுயமரியாதையை காப்பாற்றியதில் தந்தை பெரியாருக்கும், அவர் வழிவந்த ஆசிரியர் வீரமணிக்கும், திராவிடர் கழகத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை அண்ணாமலைகள் மறந்து விட வேண்டாம். இல்லை, இல்லை நாங்கள் சூத்திரர்களாகத்தான் இருப்போம் என்றுதான் அண்ணாமலை போன்ற பேர்வழிகள் கூறுவார்களோ?
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உளறித் தொலைக்கட்டும். வீரமணிக்குத் 'தகைசால் தமிழர்' விருது அளிக்கலாமா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். மான முள்ள மக்கள், சுயமரியாதை உள்ள மக்கள், பகுத்தறிவு சிந்தனை உள்ள மக்கள் இதன் தன்மையைப் புரிந்து கொள்வார்கள்.
சமூகநீதிக் களத்திலும் திரா விடர் கழக தலைவர் நடத்திய போராட்டங்கள், பொறித்த வெற் றிகள் சாதாரணமானவை அல்ல.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்ற சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்த போது, பொங்கி எழுந்தது யார்? அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தியவர் யார்? அந்த ஆணையைக் கொளுத்தி அதன் சாம்பலை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியவர் யார்?
அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் எம்ஜிஆரின் அண்ணா திமுக படு தோல்வி அடைந்தது. அதற்கான காரணம் என்ன என்பதை முதலமைச்சர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டாரே!
"அரசியல் சம்பந்தம் இல்லாத ஒரு இயக்கம், ஒரு தலைவர் என்னுடைய ஆட்சி சமூகநீதிக்கு எதிர்ப்பாக நடக்கக் கூடியது என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தது தான் என் தோல்விக்குக் காரணம்" என்று செய்தியாள ரிடம் சொல்லவில்லையா? அந்த இயக்கம் இது? அந்த தலைவர் யார்? என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?
தொடர்ந்து என்ன நடந்தது? வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டது மட்டு மல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50% ஆக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் உயர்த்தினார் என்றால், அதன் பின்னணியில் இருந்த முக்கியக் காரணம் இன்றைக்குத் "தகை சால் தமிழர்" விருது பெறவுள்ள வீரமணியும் திராவிடர் கழகமும் அல்லவா? வருமான உச்ச வரம்பை ரத்து செய்ததோடு பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இன்றைக்கு இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டப்படியாக நிமிர்ந்து நிற்பது தமிழ்நாட்டில் தானே! அய்ம்பது சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பொழுது அந்த 69 சதவீதத்திற்கு ஆபத்து வந்தது. அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொடுத்தவர் யார்?
"இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி பிரிவின் படி மாநில அரசாங்கமே சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒன்ப தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால்
69 சதவீதத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது - சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடும்" என்ற கருத்தைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதற்கான மசோதாவை வடிவமைத்துக் கொடுத்தவரும் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தானே!
அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதன்படி செயல்பட்டார் என்பது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும்.
அதேபோல இந்திய அரசில் அதன் துறை களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ, இடஒதுக்கீடு அறவே இல்லை என்ற கொடுமை இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் 340 ஆம் பிரிவின்படி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு ஒரு குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி முதல் குழு காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை. ஜனதா அரசாங்கம் வந்த பொழுது பிபி மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நலக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகள் சுற்றி தகவல்களையும் தரவுகளையும் பெற்று பிற்படுத்தப்பட்டோருக்காக இட ஒதுக்கீடு அளிக்க பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் அளித்து 10 ஆண்டுகள் கடந்தும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
அந்த நிலையில் இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், பதினாறு போராட்டங்களையும் நடத்திய இயக்கம் எது? அந்த இயக்கத்தின் தலைவர் யார்? இந்தியாவுக்கே தெரியும். இந்தியா முழுமையுமுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டக் களங்களில் நின்றவர் திராவிடர் கழகத் தலைவர் அல்லவா?
இந்தியாவில் வாராது வந்த மாமணியாம் பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு என்று அறிவித்தார் - இது சாதாரணமானதா எண்ணிப் பார்க்க வேண்டும்.
அந்த அறிவிப்பின்போது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நனவாயிற்று என்று பெருமிதமாக பிரகடனப்படுத்தியது உண்டே! சமூகநீதியில் வீரமணியின் பங்கு எத்தகையது என்பதை பிரதமர் வி.பி. சிங் மனதார பாராட்டியனாரா இல்லையா?
வி.பி. சிங் கூறுகிறார் கேளுங்கள்:
"புரட்சி என்பதை வாளை தூக்கிக் கொண்டு மட்டும் சாதிக்க முடியாது. மக்கள் மனதில் எழுகிற மறுமலர்ச்சியை வைத்துத் தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்கள் எல்லாம் செய்கின்ற பணியை விட உயர்ந்த பணியை வீரமணியாகிய நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே உங்களைப் பாராட்டுகிறேன். அரசியலில் எனது அருமைத் தோழர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களிடமிருந்து உணர்ச்சி பெறுகிறேன். அதே போல் சமுதாயப் பணியில் நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியை பெறுகிறேன்" என்று திருச்சியில் 28.12.1992 அன்று கூறினாரே!
அதுமட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்குத் தலைமை வகித்த பி.பி. மண்டல் அவர்களுக்கு சென்னை பெரியார் திடலில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் பங்கேற்ற பி.பி. மண்டல் அவர்கள் என்ன கூறினார்.
"பிற்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான எனது பரிந்துரைகளை சட்டப்படியாக்கும் ஆற்றல் வீரமணிக்கே உண்டு. சமூகநீதிக்கான மக்கள் சக்தியை வீரமணி அவர்களே, நீங்கள் தான் உருவாக்க வேண்டும்" என்று பேசவில்லையா?
இன்றைக்கு அண்ணாமலை உள்பட பிற்படுத்தப்பட்டோர் அய்பிஎஸ் ஆவதற்கு இந்த மண்டல் குழு பரிந்துரை சட்டமாக்கப்பட்டதன் விளைவு அல்லவா? அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல், அதற்குக் காரணமாக இருந்த தலைவருக்கு ஒரு விருது அளித்தால் - அதனை உளமார நன்றி உணர்ச்சியுடன் வரவேற்பதற்கு பதிலாக ஆற்றாமையை வெளிப்படுத்துவது அவருடைய அறியாமையா, நன்றி கெட்டத்தனமா அல்லது என்பதை பொதுமக்கள் உணர்வார்கள்.
சமூகநீதியால் பலன் பெற்ற மக்கள், சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட மக்கள், தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகம் ஆற்றிய சீரிய பணியால், அதனைத் தந்தை பெரியாருக்குப் பிறகு தலைமை தாங்கி சீரும் சிறப்புடன் தீவிரமாக நடத்தி வரும் ஆசிரியர் கி.வீரமணி வெற்றிகளைக் குவிக்கும் காரணத்தினால் அவருக்கு பொதுமக்கள் பல்வேறு கால கட்டங்களில் பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்கள். புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி வழங்கினார்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் அவர் தம் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. அறக்கட்டளைகளாக்கி 46 கல்வி அறப்பணி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். நாட்டு மக்களுக்குப் பயனுள்ள வகையில் தொண்டு அறமாக, செயல் பணியாக உருவாக்கினார் என்பதை அறிவு நாணயம் உள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
இன்றைக்குத் தந்தை பெரியார் சிந்தனைகள் உலக அளவில் பரவிக் கொண்டிருக்கின்றன. பெரியார் பன்னாட்டு மய்யத்தை உருவாக்கித் தந்தை பெரியார் சிந்தனைகளை பரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தவர் ஆசிரியர் வீரமணி.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற உறுப்பினர்கள் "தந்தை பெரியார் வாழ்க" என்று குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன என்பதை அறிவோடு அண்ணாமலைகள் சிந்திக்கட்டும்!
மம்சாபுரத்தில் ஆசிரியர் வீரமணி தாக்கப்பட்ட பொழுது நாடாளுமன்றத்தில் ஜெயபால் சிங் காஷ்யப் என்ற உறுப்பினர் ஆசிரியர் வீரமணி தாக்கப்பட்டது குறித்து பிரச்சினையை கிளப்பி "வீரமணி ஜிந்தாபாத்" என்று முழக்கமிடவில்லையா?
இந்த விவரங்கள் எல்லாம் கத்துக்குட்டிகளுக்கு எங்கே தெரியப் போகிறது? ஆசிரியர் வீரமணி பற்றி எத்தனை டாக்டர் ஆய்வு பட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்ற இந்த உண்மைகளை அறியாமல் உளறலாமா?
"தகைசால் தமிழர்" விருது மட்டுமல்ல, இதுவரை உலக அளவில் அவர் பெற்ற பெற்ற விருதுகள் எத்தனை, எத்தனையோ!
கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.
• 1993ஆம் ஆண்டு நாகை பெண்கள் மாநாடு 'இனமானப் பேரொளி' என்ற பட்டத்தினை வழங்கியது.
• 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய. 'தந்தை பெரியார் சமூக நீதி விருது'.
• 2000ஆவது ஆண்டில் புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் வழங்கிய, 'பாரத் ஜோதி' விருது.
• 2003ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் தமிழ்ச்சங்கம் வழங்கப்பட்ட ‘ஆக்ஸ்போர்டு தமிழ் விருது'.
• 2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம்.
• 2003ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் வழங்கிய, ‘பேரறிவாளர்' விருது.
• 2009ஆம் ஆண்டு மலேசிய திராவிடர் கழகம் வழங்கிய கருத்துக் கனல் விருது.
• 2009ஆம் ஆண்டு முரசொலி அறக்கட்டளை வழங்கிய, ‘கலைஞர் விருது'.
• 2010ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய, ‘பெரியார் ஒளி விருது'.
• 2010ஆம் ஆண்டு கோவை கே.ஜி. அறக்கட்டளை வழங்கிய, 'ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது'.
• 2011ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பி.எஸ்.ஏ.சாமி அறக்கட்டளை வழங்கிய ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது'.
• 2012ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி வழங்கிய “வாழ்நாள் சாதனையாளர் விருது''.
• 2019ஆம் ஆண்டு "அமெரிக்க மனித நேய சங்கம்" வழங்கிய "மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது.
• 2019ஆம் ஆண்டு காஞ்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய, ‘தந்தை பெரியார் விருது'.
• 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயங்கும் மகாராஷ்டிரா ஃபவுண்டேஷன் சார்பில் "நரேந்திர தபோல்கர் விருது".
• 2022ஆம் ஆண்டு உலக திராவிட மகளிர் மாநாட்டில் "பகுத்தறிவுப் போராளி" என்ற பட்டம்.
• 2022ஆம் ஆண்டு கனடா டொராண்டோவில் வழங்கப்பட்ட 'வாழ்நாள் சாதனையாளர் விருது'.
• 2023ஆம் ஆண்டு காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட, ‘பொதுவாழ்வில் நேர்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.
இந்த வரிசையில் 25.06.2023 அன்று டெல்லியில் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர் விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ‘சி.ஜி. ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க் பில்டு அமைப்பு' வழங்கியது.
இவ்வளவு விருதுகளையும் பெற்ற ஒரு தலைவருக்கு தந்தை பெரியார் வழிவந்த 'திராவிட மாடல்' அரசு "தகைசால் தமிழர்" விருது அளித்துக் கவுரவித்து மகிழ்கிறது என்றால் உண்மையான தமிழர் இரத்தம் உள்ளவர்கள் உளந்திறந்து பாராட்ட முடியாவிட்டாலும், தங்களுடைய ஆற்றாமையை அறியாமையை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாமே!
குறிப்பு: இதனை அண்ணாமலையை பொருட்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையாகக் கருதாமல் இது தந்தை பெரியார்மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் சேற்றைவாரி இறைக்கும் அனைத்து விபீஷணர்களுக்கும் சேர்த்துதான்.
No comments:
Post a Comment