இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய நிலப்பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கும் அதே போல் பாகிஸ்தான் நிலப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இது பெருங்கலவரமாக வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இது ஒரு கருப்பு நாளாக இந்தியவரலாற்றில் பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்துத்துவ அமைப்புகள் இந்த பிரிவினை நாளை இசுலாமியர் வெறுப்பு நாளாக பயன்படுத்தி வருகின்றன.
அந்த நாளில் ஹிந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய மதத்தவர் ஒற்றுமையுடன் நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வந்த நிலையில், அந்த நிகழ்வில் நடந்த ஹிந்துக்கள் மீதான தாக்குதலை இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும் என்று நீண்ட காலமாகவே விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாஜக ஆட்சிக்கு முன்பு இருந்த ஒன்றிய அரசுகள் அது ஒரு தழும்பாகவே இருக்கட்டும், அதை மீண்டும் கிளறி ரணமாக்கவேண்டாம் என்று விட்டு விட்டன.
இந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசின் மனித வளத்துறை (பள்ளிக் கல்வித் துறை) அனைத்து சி.பி. எஸ்.இ. பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரிவினை நாளை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந் தது. பிரிவினையின்போது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறியும், பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களின் அனுபவங்களை மாணவர்களிடையே எடுத்துக்கூற அழைக்க வேண்டும் என்றும் அந்தச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது
இதன் நோக்கம் என்ன? மாணவர்கள் மனதில் இசுலாமியர் வெறுப்பை விதைக்கும் நச்சுச்செயலை ஒன்றிய அரசின் கல்வி வாரியமே கையில் எடுத்துள்ளது - பெரும் கொடுமை ஆகும்
பிரிவினை தினம் தொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ. அதன் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது கவலை அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த பள்ளி திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:-
"பிரிவினையின் போது ஏற்பட்ட சூழல் குறித்து மாணவர்களுக்கு கூறுமாறு சி.பி.எஸ்.இ. அதன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கவலை அளிக்கிறது. ரத்த ஆறுக்கு இடையே நாடு பிளவுப்பட்டது தான் பிரிவினையின் வரலாறு. ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். பல சிந்தி சமூகத்தினர் இந்தியாவுக்கு வந்தனர். பஞ்சாப்பிலும் அதே நிலை தான் நிலவியது. அங்கு இருந்த பல முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றனர். பல போலியான தகவல்கள் பரவியதால் மிகவும் மோசமான விளைவுகள் நடந்தன என்பதுதான் உண்மையே!
பள்ளிகள் மாணவர்கள் இடையே. தேசிய மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்க வேண்டும்; ஆனால் பிரிவினை நாள் என்ற பெயரில் இளம் தலைமுறையினரிடம் மதவெறுப்பை - வன்முறையை விதைப்பது தவறானது ஆகும்" என்று சரத்பவார் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை மிக முக்கியமானது; அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.
இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்நாட்டின் குடிமக்களே! எந்தக் காரணத்தையும் காட்டி பிளவை ஏற்படுத்துவது - அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சின்னா பின்னப்படுத்துவதாகும்.
ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் - இந்நாடு ஹிந்து ராஷ்டிரம் என்பதே! அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நிலையில், எதிலும் இந்து முசுலிம் என்ற கண்ணாடி அணிந்து பார்ப்பதேயாகும்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைத் துண்டாக்கியது - அதன் சிறப்பு சட்டம் 370அய் ரத்து செய்தது முதல் பலவற்றையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இப்பொழுது பள்ளிக் கூடத்திலேயே சின்னஞ்சிறுவர்கள் நெஞ்சிலேயே நஞ்சு விதையை விதைப்பது என்பது பச்சையான பாசிசம்.
மதச் சார்பின்மை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை. இந்தக் கண்ணோட்டத்தில் 2024 மக்களவை தேர்தலை வாக்காளர்கள் அணுக வேண்டும் - அவசியம்! அவசியம்!!
No comments:
Post a Comment