மோடியின் அரசும் பிஜேபியும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்று விட்டன! தன் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

மோடியின் அரசும் பிஜேபியும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்று விட்டன! தன் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஆக. 13 - இந்தியா என்ற குடும்பத்தை பா.ஜ. தகர்த்துக் கொண்டிருக்கிறது என்று வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். 

மோடி சமுதாயத்தைக் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் ராகுல் காந்திக்கு மக்களவை உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி வயநாட்டுக்கு நேற்று (12.8.2023) வந்தார். கல்பெட்டா வில் அவருக்கு பிரம்மாண்ட வர வேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மக்களவை உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட 9 வீடுகளுக்கான சாவி களை அவர் பயனாளிகளுக்கு வழங் கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: 

என்னை தகுதி நீக்கம் செய்ய பா.ஜ., 100 முறை முயன்றாலும் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. குடும்பங்களை தகர்க்கும் அரசியலை தான் பா.ஜ. செய்து வருகிறது. இந்தியா என்ற குடும்பத்தை தான் பா.ஜ. தகர்த்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். அவர் சிரித்தார். அவர் கேலி செய்தார். அவரது அமைச் சரவை சிரித்தது, கேலி செய்து சிரித் தது. அவர்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தனர். ஆனால் மணிப்பூரைப் பற்றி இரண்டு நிமிடம் மட்டுமே பேசினார். 

மணிப்பூரில் பா.ஜவும், அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள்.ஆயிரக்கணக் கான பெண்களைப் பாலியல் வன்முறை செய்ய அனுமதித்துள் ளீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக் கிறீர்களா?. இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. பாரத மாதா கொலையைப் பற்றி இரண்டு நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை நீங்கள் எப்படி நிராகரிக்க முடியும்?. 

கடந்த நான்கு மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற் சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது. 

இவ்வாறு ராகுல்காந்தி  பேசினார்.

No comments:

Post a Comment