காவிரிப் பிரச்சினை: வழக்கை விசாரிக்க புதிய அமர்வு உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

காவிரிப் பிரச்சினை: வழக்கை விசாரிக்க புதிய அமர்வு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.22 காவிரியில் உரிய தண்ணீர் திறக்க கருநாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கருநாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார்.அப்போது முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெற செய்ய இன்று மீண்டும் முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி நேற்று முறையிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று  (21.8.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கரு நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன்வைக்க முயன்ற போது புதிய அமர்வில் வாதிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment