மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் கிடையாது! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் கிடையாது! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி,ஆக.31- மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் அளிக்கப்படவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடும்ப நல நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மேல் முறையீடு செய்தார்.

இது குறித்து அப்பெண் தரப்பில்  தாக்கல் செய்த  மனுவில்,  “கணவரின் பெற்றோர் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், அவர் தன் தாய்வழி அத்தையின் குடும்பத் தோடு வசித்து வருகிறார். திருமணமான சில நாள்களிலேயே, அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக என்னைத் துன்புறுத்தினர். காலப்போக்கில் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், அவற்றைப் பொறுத்துக் கொண்டேன். ஆனால், போகப்போக அவரும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து என்னைத் துன்புறுத்தி வந்தனர். அத்துடன் வரதட்சணை கேட்டு பல முறை தொந்தரவு செய்தனர். என்னை  குடும்பத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்தனர். அப்படிச் செய்தால், அவர்களால் அவ ருக்கு வசதியான குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட், நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மே 2013 அன்று, காய மடைந்த நிலையில் தன் பெற்றோர் வீட்டில் அப்பெண் விடப்பட் டுள்ளார். அதன் பின்னர், அப்பெண்ணின் கணவர் திரும்பவும் அப்பெண்ணை தனது  வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை.

இதிலிருந்து அப்பெண்ணுடனான உறவை அவர் தவறவிட்டுள்ளார். இதில் உடல் ரீதியான பிரிவு மட்டும் இல்லை என்பதோடு, புகுந்த வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்லாததில் ஏதோ நோக்கம் இருப்பதையும் உணர்த்துகிறது.

 மீண்டும் திருமண உறவைத் தொடங்கும் எண்ணம் கணவருக்கு இல்லை. விவாகரத் துக்கான மனுவும், இருவரும் பிரிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  

திருமணம் செய்து கொண்ட ஆண், கணவர் என்பதால், மனைவியை அடிப் பதற்கும் சித்ரவதை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை. இந்த நடத்தை அப்பெண்ணுக்கு விவாகரத்து அளிக் கும், 1955 இந்து திருமண சட்டம் 13 (1) பிரிவின்கீழ் உடல்ரீதியான கொடுமைக்குத் தகுதியானது’’ எனக்கூறி விவாகரத்து வழங்கினர்.


No comments:

Post a Comment