எதிர்ப்புகளால் பணிந்தது ஒன்றிய அரசு என்.அய்.டி. நியமனத்திற்கு ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

எதிர்ப்புகளால் பணிந்தது ஒன்றிய அரசு என்.அய்.டி. நியமனத்திற்கு ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு

மதுரை,ஆக.31- என்.அய்.டி நியமன தேர்வுகளில் ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கல்வித்துறை அமைச் சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். 

இதனையடுத்து இந்த தேர்வுகளில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வு களில் ஹிந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டிருந்தது. இதில், ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்ததும் 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்ததும் தமிழ்நாடு உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இத்தகைய அநீதி ஹிந்தி அல்லாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, ஹிந்தித் திணிப்பை கைவிட வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர் களுக்கு கடந்த 23ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். தற்போது கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. அதாவது தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹிந்தி கட்டாயம் அல்ல ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஹிந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி யாகும். மொழிப் பன்மைத்துவத்தை பாது காப்பதிலும், ஹிந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment