* ‘நீட்' விலக்குக் கிடைக்கும் வரை நாம் விடப்போவதில்லை
* உதயநிதி என்றால் 'போராளி' என்று பொருள்
அந்த ஒற்றைச் செங்கல் பத்திரமாக இருக்கிறதா?
‘நீட்'டுக்குக் கல்லறை எழுப்ப அது பயன்படும்!
சென்னை, ஆக. 22- நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது - ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த 20.8.2023 அன்று நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்.
இம்மாபெரும் அறப்போருக்குத் தலைமையேற்ற தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு, தி.மு.கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், தி.மு.க.மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன், தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் கனிமொழி என்.வி. என்.சோமு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, தி.மு.கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது,
‘நீட்' தேர்வை ஒழிப்பதற்காக, நீட் தேர்வை தமிழ்நாட்டிலே யிருந்து விரட்டுவதற்காக, நம்முடைய பிள்ளைகளுடைய வாழ்வை பலி கொள்ளக்கூடிய இந்த நீட் தேர்வுக்கு பெரியார் மண்ணிலே, சமூகநீதி மண்ணிலே தமிழ் நாட்டிலே அறவே இடம் கிடையாது என்று சொல்வதற்காக, இந்தப் பட்டினிப் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு காலை முதற்கொண்டே இந்த நேரம் வரையிலே நடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட காலத்திலே இருந்து திராவிடர் இயக்கம் குறிப்பாக திராவிடர் கழகம், திமுக, நம்மோடு இணைந்த கூட்டணிக்கட்சிகள் அத்த னையும் சிறப்பாக நடத்தக்கூடிய பெரிய எதிர்ப்புப் போராட்டத்திலே, திட்டமிட்டு மீண்டும் நாங்கள் குறுக்கு சால் ஓட்டிக் கொண்டிருப்போம், இதைத்தொடர்ந்து நடத்திக் கொண் டிருப்போம் என்று சொல்லக்கூடிய அளவிலே, அவர் கள் நடந்துகொண்டிருக்கக்கூடிய இந்த காலக்கட்டத் திலே ஒரு சரியான நேரத்திலே, தெளிவான ஒரு முடிவை இன்றைக்கு எடுத்து, அந்த வகையிலே இன்றைக்கு இந்த நீட் தேர்வுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த போர்க்களத்திலே, போராட்டக்களத்திலே நிற்க வேண்டும் என்று சொல்லக்கூடிய உணர்வோடு, நம்முடைய ஒப்பற்ற திமு கழகத்தினுடைய ஆற்றல்மிகு தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் எவ்வளவு சிறப்பாக, எள்ளளவும் போர்க்குணத்தை மாற்றிக்கொள்ளாத ஓர் இயக்கமாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக இன்றைக்குக் காட்டிக் கொண்டிருக் கின்ற, நம்முடைய ஒப்பற்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வழியிலே இந்த இயக்கம் இவ்வளவு வலிமையாக இருப்பதற்கு அடை யாளமே இளைஞரணி, அது ஒரு பாசறை, அது ஒரு கொள்கைப் பாசறை. அது வெறும் பதவிக்காக வந்தவர்கள் கூட்டம் அல்ல என்று சொல்லக்கூடிய கட்டத்திலே, இந்தப் போராட்டத்தை சரியான ஒரு நேரத்திலே சரியான தலைமையை வைத்து இங்கே நடத்தக்கூடிய வாய்ப்பைப்பெற்று, நம்முடைய ஒப்பற்ற இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்நாட் டிலே இளைஞர்களிடத்திலே வெறும் பதவிக்காக இளை ஞர்களைத் தயாரிக்க மாட்டோம், கொள்கைக்காக அவர்களைத் தயாரிப்போம். போராட்டக் களத்திலே அவர்களை ஆயத்தப்படுத் தக்கூடிய போர் வீரர்களாக, கருத்துப்போர் வீரர்களாக உருவாக்குவோம் என்ப தற்கான வகையிலே கொண்டு போய்க் கொண்டிருக்கக் கூடிய வகையில், இன்றைக்கு சிறப்பாக இந்த நீட் தேர்வுக்கு எதிராக முதற்கட்டம் இது.
இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் இது ஒரு முடிவல்ல, இது ஒரு தொடக்கம் என்று சொன்னார். தொடக்கம் மட்டுமல்ல, அப்படிப்பட்ட அருமைத் தளபதி அவர்கள் சொன்னார்கள், தளபதிக்குத் தளபதி யாக, தமிழ் நாட்டுத் தளபதியாக, இன்னுங்கேட்டால் உங்களுக்கு எத்தனையோ முகங்கள் உண்டு. ஆற்றல் உண்டு. பன்முகத்திறமை உண்டு. "நான் அமைச்சராக இங்கே வரவில்லை, அமைச்சராகவும் நினைக்கவில்லை. நான் சகோதரனாக, ஒரு மனிதனாக, உணர்ச்சியுள்ள மனிதனாக, ஒரு மாமனிதனாக, எளிய மனிதனாக வந்திருக்கிறேன்" என்று சொன்னீர்கள் அல்லவா? அதைவிட நான் சொல்லுகி றேன், இந்த இயக்கத்திலே உங்களைப்போன்ற அய்ந் தாவது தலைமுறையைப் பார்க்கிறோம். நீங்கள் 5ஜி. 5ஜி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, அந்த வேகம், ஆற்றல் தங்களுக்கு உண்டு, அதனால் நம்பிக்கை உங்கள் மீது எங்களுக்கு உண்டு, நாட்டு மக்களுக்கு உண்டு.
"மூத்த உறுப்பினர் எனும் முறையில் சொல்கிறேன்!"
உங்களுடைய வீரம் செறிந்த உரை, அறைகூவல் விட்ட உரை, அதற்குப்போதுமானது, நான் நீண்ட நேரம் பேசப்போவதும் இல்லை, தேவையும் இல்லை. அந்த அளவிற்கு நான் முடிவெடுத்திருக்கிற நேரத்திலே, ஒன் றைச் சொன்னீர்கள், "நான் ஒரு எளிய மனிதனாகத்தான், இந்த உணர்வுடன் இருப்பதாக" சொன்னீர்கள்.
நாங்கள் சொல்கிறோம், நாடு சொல்கிறது, நாட்டிலிருப் போரை பிரதிபலிப்பவர்கள் சொல்கிறோம், திராவிட இயக்கத்தினுடைய மூத்த உறுப்பினர் என்ற உரிமை யோடும், உறவோடும் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் எல்லாவற்றையும்விட ஒரு வாழ்நாள் போராளி. உங்களுடைய போர் எப்போதும் வெற்றி பெறும். அஞ்சிப்போகவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் நிறைய விளக்கங்கள் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் விட்ட சவாலை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார் கள். அது தெரியும். காரணம் என்னவென்றால், அந்த காலத்திலேயே அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் சொன்னார்கள், "பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. கொள்கைக்காக வந்தது" என்றார்கள். அதுவும் போராட் டத்திலே பூத்த மலர்கள் இந்த மலர்கள். காய்த்த கனிகள் இந்த கனிகள். ஆகவே, அவர்களுக்குத் தெரியாது. பீகாரிலே இருந்து வந்திருக்கிற அந்த அய்யருக்குத் தெரியாது. அவருக்கு இது தெரியாது. அந்த பாசறைக்குத் தெரியாது. பூமிகார் பிராமணன் என்று சொல்லக்கூடிய அளவிலே அந்த உணர்ச்சியோடு அவர்கள் இருக்கிறார் கள், அவர்கள் எத்தனை சவால் விட்டாலும் இங்கே எதுவும் நடக்காது.
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, 159 என்ற பிரிவிலே தனியாக ஒரு ஆளுநர் எப்படிப் பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டும், அந்தப்பதவிப் பிரமாணத் தினுடைய வாசகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழக்குரைஞராக இருக்கிறவர்கள் மட்டுமல்ல, மற்றவர் களும் தெரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர்களுககு இல்லாத பதவிப் பிரமாணம், குடியரசுத் தலைவரிலே இருந்து மற்றவர்களுக்கு இல்லாத ஒரு பதவிப் பிரமாணம் ஆளுநர்களுக்கு உண்டு. அதனை அம் பேத்கர் அவர்கள் வகுத்திருக்கிறாரா?
என்ன அந்த பதவிப் பிரமாண வாசகம்? நண்பர்களே, I will preserve, protect and defend the Constitution என்று சொல்லி கடைசியாக I will devote myself to the service and well-being of the people, மக்களுக்குத் தொண்டாற்றுவேன். welfare of the people மக்கள் நலனைப் பார்ப்பேன் என்று உறுதியை சொன்னார். ஆனால், ஆளுநர் அதைச் செய்கிறாரா?
எனவேதான், இந்தப் பதவிக்கு முற்றிலும் ஆளுநர் ரவி சரியானவராக இல்லை, லாயக்கானவராக இல்லை. அவர் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய அரசமைப்புச் சட்டத்தினுடைய பிரிவுப்படி, அவர் எடுத்த உறுதிப்படி, அவர் இல்லை.
எனவே, நீங்கள் பதவியேற்பின்போது அதைத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். ‘நீட்'டை நீக்க முடியுமா என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை, மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் இந்தக்களத்தில் தயாரித் துள்ள தளபதிகள் இருக்கிறீர்கள், அமைச்சர்கள் இருக் கிறீர்கள்,
அந்த செங்கல் நினைவிருக்கிறதா?
மேலும் ஒன்று, அந்த செங்கல்லை பத்திரமாக வைத்திருக்கிறீர்கள். அந்த செங்கல் போன தேர்தலிலே எதற்குப் பயன்பட்டது? அங்கே இருக்க வேண்டிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக்காட்டிய அந்த ஒரு செங்கல், அந்த செங்கல் தான் - உங்கள் கையிலே! அந்த செங்கலை, ஏன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். காரணம் நீங்கள் அதிபுத்திசாலி, அந்த செங்கல்லைக்கொண்டுதான் ‘நீட்'டின் கல்லறையை நீங்கள் கட்டப்போகிறீர்கள்.
'நீட்' தேர்வினுடைய கல்லறை, அதற்கு அச்சாரமாக உள்ள அந்த செங்கல்லையே வாங்கி கட்டி முடிப்பதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இன்னும் ஆறே மாதங்கள்தான் நண்பர்களே, முடியுமா என்று கேட்கிறவர்களுக்குச் சொல்லுகிறோம், இந்த ஆட்சி விடைபெறப்போகிறது, எதேச்சதிகார ஆட்சி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வெறும் 37 சதவீதத்தை மட்டுமே பெற்றவர்கள் தான் அவர்கள். மெஜாரிட்டி, மெஜாரிட்டி என்று சொல்கிற இந்த ஆட்சி இருக்கிறதே ஆர்.எஸ்.எஸ். ஆட்சி , பிஜேபி ஆட்சி, மோடி ஆட்சி அது முடிவுக்கு வருகின்ற காலக்கட்டத்திலேதான் இப்போது இருக்கின்றன. எனவே இந்த போராட்டங்கள் ஏதோ 5 ஆண்டுகள் கடந்து விட்டன என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.
நினைவிருக்கட்டும் நுழைவுத் தேர்வை ஒழித்தவர்கள் நாம்!
வரலாறு தெரியாதவர்களுக்குச் சொல்கிறோம், எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வு என்று கொண்டு வந்த நேரத்திலே திராவிடர் கழகமும், திமுகவும், கலைஞரும் எல்லாம் சேர்ந்து போராடிய நேரத்தில் 24 ஆண்டுகள் தொடர்ந்து போராடினோம். 24ஆவது ஆண்டுக்குப்பிறகு கலைஞர் வந்தார், ஆட்சி மாறி மாறிச் சுழன்று வந்த நேரத்திலே நுழைவுத் தேர்வுக்கு விடை கொடுத்து எல்லோருக்கும் மருத்துவ வாய்ப்பு என்பது ஏற்பட்டது.
எனவேதான், வரலாறு திரும்புகிறது. நிச்சயமாக நீங்கள் தொடங்கியிருக்கிற முயற்சி, காலையிலே இருந்து பட்டினிப் போர் என்ற பெயராலே ஓர் அறப்போரை முதற்கட்டமாக நடத்தியிருக்கிறீர்கள்.
22ஆம் தேதி அன்று நாடு முழுவதும் திராவிடர் கழக மாணவர்களை, பெற்றோர்களைத் திரட்டி அடுத்த கட்டத்துக்கு நாங்கள் நகர்த்துகிறோம். ஒவ்வொரு இயக்கமும் தமிழ்நாட்டிலே போராட்டக் களத்திலே நிற்கக்கூடிய அளவிலே உங்கள் முயற்சி வெல்லும். நீங்கள் எடுத்த காரியம் தோற்பதில்லை. திராவிடம் ஒருபோதும் தோற்பதில்லை.
அதை வரலாறு என்றைக்கும் சொல்லும். அதற்குத் தான் இவ்வளவு பெரிய முயற்சி. இவ்வளவு தோழர்கள் இங்கே உறுதியோடு திரண்டு இருக்கிறார்கள்.
இது ஓர் அறப்போர் என்பதற்காகத்தான் இந்த அற வழியை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதைத் தாண்டி, மக்கள் மத்தியிலே எந்தவிதமான அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத ஒரு போராட்டம், கட்டுப்பாடு மிகுந்த ஒரு போராட்டம் என்பதை இளைஞர்களாக இருக்கிற நீங்கள் ஆற்றல்மிகு தலைமையால் அடை யாளம் காணப்பட்டு நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள்.
"உங்களுடைய முயற்சி வெல்லும்
ஒருபோதும் நீங்கள் தோற்க முடியாது!"
இப்படை வெல்லும்!
"இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்!" என்ற அந்த முயற்சியோடு இதை முடித்துவைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நிச்சயமாக அந்த செங்கல்லை மறக்காதீர்கள். கல்லறை கட்டப்படும். மறைந்தவர்களுடைய கண்ணீர் துடைக்கப்படும்.
மிகப்பெரிய அளவிலே அனைவருக்கும், அனைத் தும் என்ற சமூக நீதி, தந்தைபெரியாரின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் கொள்கை, கலைஞருடைய வழிகாட்டுதல், இன்றைய முதலமைச்சருடைய உறுதி மிக்க நிலைப்பாடு இவை அத்துணையும் வெல்லும்.
அத்தனையையும் சேர்த்து அவற்றின் முழு உருவமாக உதயநிதி அவர்கள் இங்கே இருக்கிறார். எனவே உதயநிதி நமது புதிய நம்பிக்கை நிதி, போராளி, அந்த போராளியினுடைய புரட்சி வெல்லட்டும்!
எனவேதான் நீங்கள் நீண்ட நாள் வாழவேண்டும். உங்களுடைய உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும்.
"வெற்றி நமதே" என்று கூறி உதயநிதி அவர்களை வாழ்த்தி, (பொன்னாடை போர்த்தி, பெரியார் நூல்களை கொடுத்து), உங்கள் முயற்சியிலே , பெரியாரைக் காணுகி றோம், அண்ணாவைக் காணுகிறோம், கலைஞரைக் காணுகிறோம்.
எண்ணற்ற தோழர்கள் - போராளிகளாக இந்த இயக்கத்தில் இணைந்தவர்கள் அத்தனை பேரையும் தயார் செய்யுங்கள். இந்த படை நிச்சயம் வெல்லும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment