நரேந்திர தபோல்கர் சுடப்பட்ட நாள் (20.8.2013) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

நரேந்திர தபோல்கர் சுடப்பட்ட நாள் (20.8.2013)

மூடநம்பிக்கைக்குச் சாவு மணி அடிப்போம் வாரீர்!

நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புருகி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக்  கொல்லப் பயன்படுத்தப் பட்ட தோட்டாக்கள் பகுத்தறிவுப் பரப் புரையை மேலும் அதிக வேகத்தோடு பரப்புவதற்கு வழிவகுத்தன.

டாக்டர் நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரையை ஒடுக்க நினைத்த  தோட்டாக்கள், அவரது கொள்கை  பற்றிய விழிப்புணர்வுக்கு வழிவகுத்துள்ளன. 

ஆகஸ்ட் 20, 2013 அன்று, 67 வயதான மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் நிறுவனர், மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி தபோல்கர் புனேயில் காலை நடைப்பயணத்திற்கு வெளியே சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் .

 "டாக்டர் தபோல்கரின் சிந்தனைகளை எதிர்த்தனர்; அவரைக் கொலை செய்தால் அனைத்தும் அகன்றுவிடும் என்று மனப் பால் குடித்தனர். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணி மற்றும் கொள்கை பற்றிய விழிப்புணர்வு வீறு கொண்டுள்ளது.

அவரது  பகுத்தறிவுப் பரப்புரைப் பணிகள்  மகாராட்டிராவைத் தாண்டியுள் ளன. அவரது புத்தகங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு .அவரது நினைவு நாளில் மட்டும் அல்லாமல், அவரது பகுத்தறிவுக்காக ஆண்டு முழுவதும் மக்கள் அவரை நினைவுகூருகிறார்கள்.

 "டாக்டர் தபோல்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது பணியின் வெற்றியை  நீண்ட காலம் கணக்கிட வேண்டும்.  அவர் இறந்த பிறகு தான் மகாராட்டிரா மூட நம்பிக்கை தடுப்பு மற்றும்  பில்லி சூனியம், ஜோதிடம் உள்ளிட்டவற்றின் தடைச் சட்டம், 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது, ஆனால் அதன் பிறகு, பாஜக ஆட்சியில் அந்தச் சட்டம்  செயலிழந்தது.

நரேந்தர தபோல்கர் கொலை தொடர் பாக  செப்டம்பர் 15, 2021 அன்று, புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், இந்தியாவில் உள்ள ஹிந்து தீவிரவாதக் குழுவான  சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த காது மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வீரேந்திரசிங் தவாடே, சச்சின் அந்துரே, ஷரத் கலாஸ்கர், மும்பையைச் சேர்ந்த குற்றவியல் வழக்குரைஞர் சஞ்சீவ் புனாலேகர் மற்றும் அவரது உதவியாளர் விக்ரம் புரே ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. 

 தபோல்கர் கொலை வழக்கு 2014ஆம், ஆண்டுவரை விரைவாக நடந்து வந்தது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்றுவரை குற்றவாளிகள் அனைவருமே சுதந்திரமாக சுற்றித்திரி கின்றனர்.

கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், எழுத்தாளர் கல்புர்கி மற்றும் கவுரிலங்கேஷ் ஆகியோரை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டது ஒரே ரக துப்பாக்கி.

பகுத்தறிவாளர்கள் மற்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு நாத்திகர்களாக செயல் பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படு கொலை செய்யப்பட்டதைப் போன்றே கவுரி லங்கேஷும் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் தபோல்கர், கல்புர்கியை சுட்டுக் கொன்றது போன்றே அதே  பாணியில் கவுரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இக்கொலையில் கைதுசெய்யப்பட்ட ஹிந்துத்துவ அமைப்பின்  முக்கிய நிர்வாகி நவீன்குமார், சிறீராம் சேனாவைச் சேர்ந்த சுஜித்குமார் (எ) பிரவீன், பரசுராம் வாக்மோர் உள்ளிட்ட அய்ந்து பேர் குறித்த விவரம் கிடைத்தது. பிரவீனைக் கைதுசெய்து விசாரித்தபோது, கவுரி லங்கேஷைக் கொல்ல ‘ஆபரேஷன் அம்மா’ என்ற திட்டத்தை வகுத்ததும், அதை நிறைவேற்றச் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோரைத் தேர்வுசெய்து பெல்காமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித் தார்.

பரசுராம் வாக்மோர் அளித்த வாக்கு மூலத்தில், "துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடிந்ததும், ஹிந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணைக் கொலைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் கொல்லப்போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. கவுரி லங்கேஷைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு வந்த உத்தரவின்படி செப்டம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு அருகே உள்ள பிரவீன்குமார் வீட்டில் தங்கினேன். பிறகு நான் கொலை செய்ய வேண்டிய பெண்ணின் வீட்டையும், அந்தப் பெண்ணையும் காட்டினார்கள். அந்தப் பெண் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று காட்டினார்கள். கொலை செய்யும் முன்பாக என்னைப் பலர் வழிநடத்தினார்கள். அந்தப் பெண்ணை நான் கொலை செய்வதற்கு ஒருநாள் முன்னதாக என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்கள். செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, நான் கவுரி லங்கேஷை அவருடைய அலுவலகத்தில் இருந்து பின்தொடர்ந்து சென்று, அவரின் வீட்டு வாசலில் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுக் கொன்றுவிட்டு உடனடியாக என்னுடைய அறைக்குத் திரும்பி விட்டேன். அப்போது என்னிடம் இருந்த துப்பாக்கி மற்றும் நான் அணிந்து இருந்த ஜர்கினை மட்டும் வாங்கிச் சென்றுவிட்டனர். பிறகு நான் பெங்களூருவில் இருந்து கிளம்பி மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் என்று அய்ந்து மாதம் வரை தலைமறைவாக இருந்துவிட்டு பிறகு சொந்த ஊரான சிந்தகி திரும்பினேன்" என்று தெரிவித்துள்ளார்.

பரசுராம் வாக்மோர் தலைமறைவாக இருந்த காலத்தில், அவருடைய குடும்பச் செலவுக்குத் தேவையான நிதியை நேரடியாக வழங்காமல் ஹிந்துத்துவா ஆதரவாளர் பரசுராம் வாக்மோர் குடும்பம் ஏழ்மையில் சிக்கித் தவிப்பதாக ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கிக்கணக்கைக் குறிப்பிட்டு, உதவி கேட்டு அறிவிப்பு கொடுத்து பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகையை வசூல் செய்துள்ளனர். வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய ரசீது அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இணையதளத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர். 

இது மட்டுமின்றி, கவுரி லங்கேஷ் கொலை வழக்கிற்குத் தேவையான முக்கிய சாட்சிகளான சி.சி.டி.வி-யில் கிடைத்த கொலையாளியின் தோற்றமும், பரசுராம் வாக்மோரின் தோற்றமும் ஒன்றுபோல் இருக்கிறது. அதேபோல பரசுராம் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த தலைமுடியை சேகரித்த காவல்துறையினர், அவரின் தலைமுடியுடன் ஒப்பிட்டு உறுதி செய்துள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து முக்கியமான டைரி ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் 10 முற் போக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டி ருந்தன. இதுபோன்ற வலுவான ஆதாரங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு சேகரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் கல்புர்கி கொலை வழக்கையும் இந்தச் சிறப்புப் புலனாய்வு குழுவிடமே கருநாடக அரசு ஒப்படைத்துள்ளது. 

ஆனால் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டு, ஹிந்துத்துவா அமைப்பினரை இவ்வழக்கில் கொலையாளிகளாகச் சித்தரித் துள்ளதாக பி.ஜே.பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், சிறீராம் சேனா அமைப்பினர் குற்றம்சாட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கவுரி லங்கேஷ் உள்ளிட்ட பகுத்தறி வாளர்களின்  வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கு நீதிமன்றச் செலவு மற்றும்  அவர்களின் குடும் பத்தினருக்கு நிதி வழங்கவும் ஹிந்துத்துவ அமைப்பினர் பெருந்தொகையை வசூலித்து வருகின்றனர். அதற்கான சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிஜேபி அரசியலில் தலை எடுத்தாலும் எடுத்தது, அதிகாரத்துக்கு வந்தாலும் வந்தது! ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கு வால் முளைத்து விட்டது. கோரைப் பற்கள் முளைத்து விட்டன.

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தி யாரையே சுட்டுப் பொசுக்கிய கொலைகாரக் கூட்டமாயிற்றே!

கருத்தைக் கருத்தால் சந்திக்க இயலாத கோழைகள்  - துப்பாக்கிகளைத் தூக்குகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் [51A(h)]  மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது; சீர்திருத்த உணர்வை ஊட்டச் சொல்லுகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால், ஒன்றிய பிஜேபி அரசோ அந்தச் சட்டத்தைப் பொசுக்கி சாம்பலாக்கிக் குடித்து ஏப்பம் விடுகிறது.

துப்பாக்கிக் குண்டுகளால் அறிவியலையோ, பகுத்தறிவுச் சிந்தனையையோ, மூடநம்பிக்கை ஒழிப்பையோ ஒழித்து விட முடியாது.

நஞ்சு குடிக்க வைத்து சாகடிக்கப்பட்ட சாக்ரட்டீஸ் கொள்கை அளவில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்.

கல்லடி, செருப்படி, மல வீச்சு - இவை யெல்லாம் தோற்றோடி தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுது கொண்டு இருக்கிறதே!

உலக பகுத்தறிவு இயக்கத்திற்குத் திராவிடர் கழகம் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு தானே இருக்கிறது. அதன் தலைவர் தகைசால் தமிழர் நாள்தோறும் அத்திசை நோக்கி உழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். பகுத்தறிவாளர்களைப் பலி வாங்கிய கொலைகாரர்களை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தராவிட்டால், நாடு நாடாக இருக்காது - கொடும் விலங்குகளின் வேட்டைக்காடாகத்தான் மாறும்.

சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் கருத்தரங்குகள், கொள்கைப் பிரச் சாரங்கள் தமிழ்நாடெங்கும் நடைபெற உள்ளன. பகுத்தறிவாளர் கழகத்தின் பணிகள் பாராட்டத்தக்க வகையில் வீறு நடை போடு கின்றன.

பகுத்தறிவுப் பிரச்சாரப் பீரங்கி முன் மதக் கிறுக்கர்களின், மூடநம்பிக்கைவாதிகளின் வெடி மருந்து நமத்துப் போய்விடும்.

நடக்கட்டும் - நடக்கட்டும் பிரச்சாரம்! சங்கே முழங்கு!


பகுத்தறிவுவாதியின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறையின் மூடநம்பிக்கை

நரேந்திர தபோல்கர் என்ற மூட நம்பிக்கை ஒழிப்பாளரை - பகுத் தறிவுச் சிந்தனையாளரைச் சுட்டுக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க புனே காவல்துறை தலைமைக் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் என்ன செய் தார்கள் தெரியுமா?

அன்றைய 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடு (24.7.2014) வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

ஜோதிடர்களும், மந்திரவாதிகளும் அழைக்கப் பட்டனர்.

தபோல்கரின் ஆவியுடன் தொடர்பு கொண்டு கொலையாளிகளின் பெயரைத் தெரிந்துகொள்ள காவல் துறை கண்காணிப்பாளர் குலாப்ராவ் பால் முயன்றார்.  அதில் குடியரசுத் தலைவரின் பதக்கம் வென்ற ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் அபியங்கர், ஒரு ஜோதிடரை பரிந்துரை செய்ததாகவும் அதன் பேரில் தபோல்கரின் ஆவியை வரவ ழைத்து, குற்றவாளியின் பெயரைத் தெரிந்து கொள்வது என்று காவல்துறையினர் முடிவு செய்தனர் 

இதற்காக தாபோல்கரை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, ரவை மற்றும் ஏற்கெனவே கொலைக் குற்றத்திற்காக குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து புனே தலைமைக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில்  உள்ள ஒரு அறையில்  பூஜை செய்தனர். 

மந்திரவாதியின் உடலில் தபோல்கர் ஆவி வந்ததாகவும், ஆனால் சில அதிகாரிகள் இதன் மீது நம்பிக்கையில்லாமல் இருந்ததால் அந்த ஆவி திரும்பிச்சென்றுவிட்டதாகவும் கூறினர். இதுதொடர்பாக ஆங்கில செய்தியாளர் ஒருவரும் பூஜைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் ஆங்கி லத்தில் கேள்வி கேட்ட போது ஆங்கிலம் பேசுவது கடவுளை நிந்திப் பதாகும் என்று கூறி அவரை வெளியே போகச்சொல்லிவிட்டார் அந்த மந்திர வாதி -

இந்த பூஜை பற்றி  தபோல்கரின் மகன் ஹமீத் தபோல்கர், புனே காவல் துறையின் இந்தச் செயல் மிகவும் கேவலமானது - எனது தந்தையை அவமதிக்கும் செயல் என்று கூறினார்

Tantrik visited me, says Dabholkar murder suspect | Pune News - Times of India

PUNE: Vikas Khandelwal,a suspect in the murder of anti-superstition crusader Narendra Dabholkar, alleged that he and Manish Nagori (an arms dealer) were arrested in the high-profile murder case on the instructions of a 'tantrik', who visited them in police custody.

Khandelwal, who is currently on bail, on Wednesday, submitted an application demanding action against police officials who falsely implicated him in the case on the instructions of a god man.

எப்படி இருக்கிறது? மூடநம்பிக்கை ஒழிப்பாளரைச் சுட்டுக் கொன்றவர் களைக் கண்டுபிடிக்க இப்படி இன் னொரு மூடநம்பிக்கையா? வெட்கக் கேடு! வெட்கக்கேடு! படிப்பு வேறு - பகுத்தறிவு வேறு என்று தந்தை பெரியார் கூறிய கூற்றை இந்த இடத்தில் எண்ணிப் பாரீர்!


No comments:

Post a Comment