மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு உள்பட 10 புதிய அறிவிப்புகள்!
ராமநாதபுரத்தில் வெளியிட்டார் முதலமைச்சர்
ராமேசுவரம், ஆக.19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.8.2023 அன்று ராம நாதபுரம் சென்றார். அங்கு பேராவூரில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இரவில் ராமேசு வரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். காலையில் அவர், அங் கிருந்து புறப்பட்டு பேய்க்கரும்பு பகுதி யில் உள்ள மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மணி மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். கலாம் நினைவிடத்தில் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். கலாம் பற்றிய ஒளிப் படங்களை ஆர்வமாக பார்த்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் வந்தார். அங்கு தமிழக அரசு சார்பில் நடந்த மீனவர் நல மாநாடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இருந் தனர்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண் ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, நவாஸ்கனி, காதர்பாட்சா, சட்டமன்ற உறுப்பினர் முத்துராம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
மாநாட்டில் 14 ஆயிரம் பேருக்கு 88 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் 10 அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
1,076 கிலோ மீட்டருக்கு மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. நமது கப்பல்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருப்பதை தாலமியின் நிலவியல் கையேடு சொல்கிறது. கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, திமில் என்று வகை, வகையாக கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள்.
நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்து கடல்களிலும் தமிழர்கள் கலம் செலுத்தி இருக்கிறார்கள். உலகப் பயணிகள் எல்லோரும் தமிழ்நாட்டு கடலோரத்தை நோக்கி வந்தார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டை உலகத் தோடு இணைத்தது கடல்தான். அது ஆழமானது மட்டுமல்ல, வளமானது.
மீன்பிடித் தொழிலில் இந்தியாவில் 5-ஆவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் பங்களிக்கிறார்கள்.
"கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீ ரால்..." என்று அறிஞர் அண்ணா சொன்னார். கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் மட்டுமல்ல, கடலோரத்தில் வாழும் தமிழனின் கண்ணீராலும்தான் உப்பாக இருக் கிறது என்பதை உணர்ந்துதான், தி.மு.க. அரசு தனது ஆட்சிக்காலத்தில் ஏராள மான திட்டங்களை மீனவர்களுக்கு தீட்டி வந்திருக்கிறது.
மீனவர் நல வாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீன வர்களுக்கு மானிய விலையில் மண் எண்ணெய் போன்றவை முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில்தான் நிறைவேற் றப்பட்டன. இதே போல் கடந்த 2 ஆண்டு காலத்திலும் ஏராளமான திட் டங்களை கொடுத்துள்ளோம்.
இந்த மீனவர்கள் நல மாநாட்டிலும் உங்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
1. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும்.
2. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக்கடன் வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கியமான அறிவிப்பு. இதனை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள்.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
40 சதவீதத்தில் மானியம்
4. நாட்டுப்படகு மீனவர்கள் ஆயிரம் பேருக்கு, 40 சதவீத மானியத்தில் எந் திரங்கள் வழங்கப்படும்.
5. தூத்துக்குடி, திருநெல்வேலி மற் றும் குமரி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு உரிமை யாளர்களுக்கு தற்போது மானிய விலை யில் வழங்கப்பட்டு வரும் மண்எண் ணெய் அளவானது 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
6. மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண் டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக் கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகு களுக்கு 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
தங்கச்சிமடத்தில் மீன்பிடித் துறைமுகம்
7. தங்கச்சிமடம் மீன்பிடித் துறை முகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டி ருக்கிறது. குந்துகால் மீன் இறங்கு தளத்தை மேம்படுத்தும் ஆய்வுப் பணி களையும் தொடங்கி இருக்கிறோம். பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி களையும் தொடங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
8. மீனவர் விபத்து காப்புறுதி திட் டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவா ரணம் வழங்கப்படும்.
வீட்டு வசதி திட்டம்
9. மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த் தப்படுகிறது.
10. பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாது காப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது.
இது குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற காரணத் தினால் இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே, இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப் படும் இடங்களில் எங்கெங்கு சாத்தி யமோ அங்கெல்லாம் பணிகளை விரை வில் தொடங்குவோம்.
2.77 லட்சம் மீனவர்கள்
இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயி ரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். அதற்காக, மொத்தம் ரூ.926 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். இந்த அறிவிப்புகள் எல்லாம் மீனவர்களுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட இருக்கிறது.
மீனவர்களின் இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். ஏனென்றால், எல்லோரும் சொன்னது போல இது என்னுடைய அரசு மட்டு மல்ல; இது உங்களுடைய அரசு. உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு. எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment