10 ஜோசப் 10 கிரேசிகள் உருவாக வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

10 ஜோசப் 10 கிரேசிகள் உருவாக வேண்டும்!

துப்பாக்கி நகர் பொதுமக்கள் உருக்கம்!திருச்சி மாவட்டக் காப்பாளராக இருந்த சோ.கிரேசி (வயது 76) 20.08.2023 அன்று மறைவுற்றார். மறுநாள் காலை இரங்கல் கூட்டம் நடத்தப் பெற்று, பின்பு அவரது உடல் மகளிர் தம் தோள்களில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. இரங்கல் கூட்டத்தில் பேசிய துப்பாக்கி நகர் பொதுமக்கள் "10 ஜோசப், 10 கிரேசி உருவாக வேண்டும்" என்று பேசியது  அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், கண்ணீரையும் 

ஒருசேர வரவழைத்தது! 

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஏற்பாடுகள் செய்ய,  மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ் நிகழ்வை  ஒருங்கிணைத் தார். 

இளம்பெண்களை உருவாக்கியவர்!

இயக்கத்தோடும், எங்களோடும் 45 ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்தவர்கள் கிரேசி அம்மா! உறவினர் களை விட, தோழர்களின் குடும்பங்களோடு நெருக்க மாக இருந்தவர். இவர் வீட்டிற்கு வராத தோழர்களே கிடையாது. திருச்சி மாவட்ட மகளிரணித் தோழர்களை அற்புதமாக வழிநடத்தியவர்! தோழர்களின் குடும்பங் களில் பிரச்சினைகள் என்றாலும் அதைச்   சரிசெய்வதில்  முனைப்பாக இருப்பார்! அவரது இழப்பு எங்கள் மாவட்டத்திற்குப் பேரிழப்பு", எனத் திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் பேசினார். 

மகளிரணி வளர்ச்சிக்குப் பெருந் துணையாக இருந்தவர் கிரேசி. தமிழ்நாடு முழுவதும் எங்களுடன் பயணம் செய்திருக்கிறார். இன்றைக்கு திருச்சி மாவட் டத்தில் இளம்பெண்கள் பலரை அவர் உருவாக்கியிருக் கிறார். அந்த இளம் தலைமுறையினர் தொடர்ந்து கொள்கைகளை முன்னெடுத்து, கிரேசி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்", எனக் காப்பாளர் க.பார்வதி பேசினார். 

தோழியின் இறப்பு!

இயக்கத்திற்கு வந்த போது எங்களுக்கு வழி காட்டியாக இருந்தவர் கிரேசி அம்மா! அனைத்துத் தோழர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கருப்புச் சேலை கட்டி, கழகப் பணிக்கு வர வேண்டும் என்பார். நாங்களும் அவர் பின்னால் செல்வோம். ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட அனைத்துக் கூட் டங்களிலும் எங்களைப் பங்கேற்கச் செய்தவர்", என மாவட்ட மகளிரணித் தலைவர் பா.ரெஜினா பேசினார். 

பார்வதி, திருமகள், மனோரஞ்சிதம், கிரேசி நாங்க ளெல்லாம் பழைய தோழிகள்! கிராமங்கள் தோறும் செல்வோம், அதுவும் நடந்தே போயுள்ளோம்!  

"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு", என்றார் வள்ளுவர்! இறப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் கொள்கையாளர்களின்  எண்ணம். எனினும் எங்கள் தோழி இறப்பு தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது", எனக் காப்பாளர் பி.என்.ஆர்.அரங்கநாயகி பேசினார். 

கைத்தடியும்! கழகக் கொடியும்! 

கிரேசி அம்மா அவர்களின் இழப்பு இயக்கத்திற்கும்,  தனிப்பட்ட எனக்கும் பேரிழப்பாகும்! அவரின் தோழ மையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றி லும் முதல் ஆளாக வந்து நிற்பார். பெரியார் பிறந்த நாளன்று எங்கள் வீட்டில் கொடியேற்றும் போது, தவறாமல் வந்து செல்பவர். ஒரு கையில் கைத்தடியும், மறுபுறம் கழகக் கொடியுமாக அவரைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும்! அவர்களின் பெண் குழந்தைகள் தான் நாங்கள்! எங்களின் அன்பான அம்மா அவர்கள்! ஒரு பிறந்த நாளில் இரவு 12 மணிக்கு அழைத்து எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். இரத்தத்தில் கொள்கைகளை இரண்டற கலந்தவர். பெண்கள் வெளியில் வருவதே பெரியதாக இருக்கும் சூழலில், இவர்களின் செயல்பாடுகளால் எப்போதும் எங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருப் பார்கள்", என மாவட்ட மகளிரணி செயலாளர் சு.சாந்தி பேசினார். 

10 ஜோசப்! 10 கிரேசி!

இயக்கப் பணிதான் அவரின் விருப்பம்! கொள்கைக் குடும்பமாய் வாழ்ந்தவர். அவரது செயல்பாடுகள் எப்போதும் வியப்பைத் தருவன. அந்தளவு நம்மால் முடியவில்லை. இது ஏதோ, சாதாரண இயக்கமா? இங்கு வந்தால் உழைக்க வேண்டும், தனிப் பயன்கள் கிடைக் காது. ஆனால் இந்தச் சமூகம் சுயமரியாதைப் பெறுவதற்கு இந்த உழைப்பு பயன்படும். கொள்கையில் இருந்து விலகிப் போக, குடும்பத்தில் நிறைய சூழல் உருவாகும். ஆனால் அதையெல்லாம் தாண்டி, உயிர் மூச்சு நிற்கும் வரை ஓயாது உழைத்தவர் கிரேசி அம்மா! இவரின் உழைப்பும், தியாகமும் போற்ற வேண்டிய ஒன்று", என இலால்குடி மாவட்ட மகளிரணி தலைவர் குழந்தை தெரசா பேசினார். 

துப்பாக்கித் தொழிற்சாலையில் ஜோசப் அவர்களை விடவும், அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் கொள்கைப் பணியாற்றியவர் கிரேசி அவர்கள். அழகாகக் கொள்கைகளை எடுத்துச் சொல்வார்கள். நாங்கள் பகுத்தறிவுச் சிந்தனை பெற கிரேசி அவர்களும் முக்கியக் காரணமாவார்! இந்த இரங்கல் நிகழ்வில் இத்தனைக் கறுப்புச் சட்டைகளைப் பார்க்கும் போது, சொல்லொணா உணர்வு எனக்கு மேலிடுகிறது. தன் பணம், தன்  உழைப்பைக் கொண்டு தானே இத்தனைத்  தோழர்கள் செயல்படுகிறீர்கள்! எங்கள் பகுதிக்கு இன்னும் 10 ஜோசப், 10 கிரேசிகள் வேண்டும்",  துப்பாக் கித் தொழிற்சாலை அய்.என்.டி.யு.சி. மேனாள் தலைவர் தங்கவேல் பேசினார்! 

யாருக்கு கால் வலிக்கும்

தொடக்கம்  முதலே ஊக்கம் நிறைந்தவர் கிரேசி. நாங்கள் "அருள் அக்கா" என்றுதான் அழைப்போம். எல்லோரிடமும்  உறவுமுறை வைத்துப் பேசுவார்கள். அனைவருக்குமே தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாக இருக்கிறது. வசூல் பணி செய்வதில் சிறப்பு வாய்ந்தவர். "உங்களுக்குக் கால் வலிக்கப் போகிறது, வசூல் பணியை நிறுத்திக் கொள்வோமா  என்றால்,  உனக்குக் கால் வலிக்கிறது என்று சொல். எனக்கு  வலிக்காது என்பார்! திருச்சி மகளிரணி தோழர்கள்  கிரேசி போல செயல்பட வேண்டும்", என மேனாள் மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச்செல்வி பேசினார். 

பார்வதி, கிரேசி போன்றோரைப் பார்த்து வளர்ந்த வர்கள் நாங்கள்! துப்பாக்கித் தொழிற்சாலையில் ஜோசப் அவர்களைச் சிந்தனை ஜோசப் என்றே அழைப்பார்கள். எவ்வளவு சமூக விழிப்புணர்வு இருந்தால் இவ்வளவு தோழர்களை இங்கே காண முடியும்! வியப்பாக இருக்கிறது! இங்கேயுள்ள மகளிரைக் காணும்போது என் மனைவியையும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற உணர்வு வருகிறது. இவ்வளவு தோழர்களும் திரண்டு கிரேசி அவர்களுக்கு வீர வணக்கம் செய்வதே பெரும் நெகிழ்ச்சியாக இருக்கிறது", எனத் திமுக யூனியன்  செயலாளர் கண்ணன் பேசினார்.

பேசுவதும், நடப்பதும் நின்றுவிட்டது!

ஜோசப் அவர்களுடன் ஒரே இடத்தில் நானும் பணிபுரிந்தவன். ஜோசப் - கிரேசி அவர்கள் வீட்டில் தங்கியிருப்பேன். எப்போதும் அவர்கள் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் இருந்து கொண்டே இருப் பார்கள். உபசரிப்பதில் இருவருமே இணையானவர்கள். பல குடும்பங்களுக்கு இன்று பேரிழப்பாக இருக்கும். தாலி கழட்டிய நிலையில்  உறவினர்கள் கடும் எதிர்ப்புத்  தெரிவித்தனர். ஆனால் ஜோசப் அவர்கள் பெரும்  துணையாக இருந்தார். கடைசி வரை தாலி இல்லாமலே இறந்துவிட்டார். இதனால் சமூகம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை", என்று கனகராஜ் பேசினார்.

எங்களின் செயல்பாட்டிற்கு இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். இந்தச் சிறிய பகுதிகளில் தினமும் 125 ‘விடுதலை'யை வீடு, வீடாகக் கொண்டு செல்கி றோம். மாதா மாதம் கூட்டம் நடத்துவோம். திருச்சியில் எங்கு நிகழ்ச்சிகள் என்றாலும் தொழிற்சாலை தோழர்கள் இணைந்தே செல்வோம்! அண்ணா நகர், துப்பாக்கி நகர் உள்ளிட்ட எங்கள் பகுதிகளில் எந்தக் கூட்டம் என்றாலும், கடந்த 10 ஆண்டுகளாக கிரேசி அம்மா தலைமையில் தான் நடந்துள்ளது! இடையில் அவருக்கு நடக்க முடியாத சூழல் வந்த போதே, எங்களுக்குக் கை ஒடிந்த நிலை! இப்போது அவர் நடப்பதும் நின்றுவிட்டது! பேசுவதும் நின்றுவிட்டது!," எனத் திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர் பேசினார். 

கருப்பு சேலை அணிந்த மகளிர்!

பொது வாழ்க்கைக்கு வரும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு வரலாறு உள்ளது! பெரியார் தம் கொள்கையின் நிறமாகக் கறுப்பைத் தேர்வு செய்தார். பெண்கள் கறுப்புச் சேலை அணியத் தொடங்கினர். கறுப்புடை தரித்த கிரேசி அவர்களின் போராட்ட வாழ்க்கை எல்லோருக்கும் முன்னுதாரணம்! தாலியை அகற்றி, அதை எதிர்நோக்கிய அவரது பாங்கு இன்னும் நினைவில் நிற்கிறது. அக்காலத்தில் மகளிரணிப் பணிகள் என்பது கூடுதல் சிரமமானது. போக்குவரத்து, பெண்களின் மாதாந்திர பிரச்சினைகள், தங்குமிடம் என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றவர்கள் இயக்க மகளிர்! எப்போது பார்த்தாலும் கொள்கை மலர்ச்சியோடு அனைவரையும் வரவேற்பார். இப் போது அமைதியாக உறங்குகிறார்", என மாநில மகளி ரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி பேசினார்.

இந்தப் பகுதியில் வசிக்கும்  தோழர்கள் இலால்குடி யில் நடைபெறும் கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். கிரேசி அவர்கள் ஒருவகையில் எனக்கு உறவினர் என்றாலும், இயக்க ஈடுபாடுகள் தான் அதிகம்!  மகளிரணித் தோழர்கள் அனைவரோடும் தொடர்ந்து தொலைப்பேசி வழி இணைப்பில் இருப்பவர். சிறந்த ஒருங்கிணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளரும் ஆவார்! பார்வதி - கிரேசி இருவரின் கொள்கை உறவு தான், பின்னாளில் அவர்கள் பிள்ளைகளின் திருமண உறவாக மாறியது! மனஉறுதி பெற்றவர் தோழர் கிரேசி அவர்கள்!", எனத் தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட் பேசினார். 

திருச்சியில் மகளிர் பங்கு!

தோழர்கள் அனைவரும் சகோதரர்கள் எனக் கருதியவர் கிரேசி அவர்கள். ஒரு கொள்கையாளர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத்  திகழ்ந்தவர். கடந்த ஒரு மாதமாகத் தினமும் வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வோம். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வந்து பார்த்துச் சென்றார். எழுந்து உட்கார முயற்சி செய்தார்; ஏதோ சொல்ல வாய் திறந்தார்! 

அண்மையில் கிரேசி அவர்களை ஒரு நேர்காணல் செய்தேன். இயக்கத் தொடர்பு, ஈடுபாடு உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்துள்ளார். தம் உடல் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரின் ஆவலாக இருந்தது. ஆனால் அவரின் உடல்நிலைக் கருதி அது வாய்ப்பில்லாமல் போனது! அவரின் இணையர் ஜோசப் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்திற்கு, கிரேசி அவர்களும் செல்ல இருக்கிறார்", என பெல் ஆறுமுகம் பேசினார்.

தம் தொண்டால், கொள்கையால் வாழ்பவர் கிரேசி அம்மா! பார்வதி, திருமகள், மனோரஞ்சிதம், கிரேசி உள்ளிட்ட மகளிர் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து, இயக்கப் பணி செய்தவர்கள். பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே சிரமமான சூழலில், நமது இயக்கத்தில் மகளிர் பங்கு மகத்தானது. பிறப்பு, இறப்பு மட்டுமா வாழ்க்கை? கிரேசி அம்மா எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார், நிறைவான பணி செய்திருக் கிறார் என்பதை இங்கு கூடியுள்ளவர்களைப் பார்த் தாலே தெரிகிறது. ஜோசப் அவர்கள் மறைந்த பிறகு, அய்ந்து பெண் குழந்தைகளுடன் துப்பாக்கிச் தொழிற் சாலையில் பணி செய்து, இயக்கப் பணிகளும் ஆற்றி பெரும் சாதனை செய்தவர் கிரேசி அம்மா அவர்கள்! 

முகவரி கேட்டு இந்தப் பகுதிக்கு வருவதே சிரமமாக இருந்தது. அப்படியான இந்தப் பகுதியில் இருந்து நேரம், காலம் பார்க்காமல் திருச்சி மாவட்டத்தில்  நடை பெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்றுவிடுவார். நிறைய மகளிர் வெளியில் வந்து பணியாற்றுவதற்கு இவரின் உழைப்பு முக்கியமானது. திராவிடர் கழகம் ஆண்களுக்கு இணையாக, திருச்சி மாவட்டத்தில் மகளிர் சிறப்பாகப் பணி செய்கின்றனர். இங்கே தோழர் களும், இப்பகுதி வாழ் மக்களும் இவ்வளவு வருந்து வதே கிரேசி அம்மாவின் பொது வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்!  திராவிடர் கழகத்  தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் ‘விடுதலை'யில் இரங்கல் அறிக்கை எழுதியுள்ளார்கள். 

தம் அய்ந்து குழந்தைகளுக்கும் அழகிய தமிழில் அன்புச்செல்வி, மலர்க்கொடி, தேன்மொழி, அறிவுச் சுடர், அருள்மொழி போன்ற பெயர்களைச்  சூட்டியுள் ளனர். இயக்க வரலாற்றில் எப்போதும் அவருக்கோர் இடமிருக்கும்", எனத் திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பேசினார். 

நிகழ்வில் தாமஸ், சிவக்குமார், பெர்லிக் சகாயராஜ், செல்வமணி, செந்தில் முருகன்,  இலால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், செயலாளர் அங்கமுத்து, திருச்சி  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.அம்பிகா,  தோழர்கள் இளங்கோவன், சிவானந்தம், தேவா, கல்பாக்கம் இராமசந்திரன், இராஜேந்திரன், காமராஜ், சங்கிலிமுத்து, கனகராஜ், ரூசோ, செந்தமிழினியன், விஜய் யோகானந்த், பஞ்சலிங்கம், ரூபி, கவுரி, அமுதா, தமிழ்மணி, முபாரக் அலி, முருகன், மாரியப்பன், குணசேகரன், வசந்தி, பொற்செழியன், பேபி, சங்கீதா, பூலாங்குடி பால்ராஜ், இராஜசேகரன், கருணாநிதி, வி.சி. வில்வம் ஆகியோர் பங்கேற்றனர்.  

- வி.சி. வில்வம்


No comments:

Post a Comment