"கொடி - செடி - படி" - செயல் வடிவில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

"கொடி - செடி - படி" - செயல் வடிவில்

சென்னை TO மன்னார்குடி - வி.சி.வில்வம்









தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை எழும்பூர் இரயில் நிலையத்தில் 11.07.2023 இரவு 10.15 மணிக்கு சென்னை தோழர்கள்  வழியனுப்ப, 12.07.2023 அதி காலை 5.20 மணிக்கு அய்ம்பதற்கும் மேற் பட்ட மன்னார்குடி தோழர்கள் வரவேற்றனர்!

இரயில் புறப்பட்ட உடனே தூங்கிவிட முடியாது! நிறுத்தத்தை அடைந்த பிறகும் எழுந்திருக்க முடியாது!  இரண்டிற்குமே 1 மணி நேரம் கால அவகாசம் தேவை. ஆக ஆசிரியரின் பயணம் இன்றிரவு மட்டும் 350 கிலோ மீட்டர். உறக்கம் 5 மணி நேரம்!

ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை எழுதினாலும் குறையாத ஒன்று வியப்பு! அவர்களின் ஒப்பற்ற உழைப்பை நூல்களின் வழி வாசித்து, அப்பாடா... என்றி ருக்கையில், அடுத்த 100 பக்க நூல் எழுதும் அளவிற்குச் செயல்களும், செய்திகளும் வந்துவிடும்!

சிறு, சிறு செய்திகளையும் "தேனீ" போல சேகரித்து 90 இல் 80 என்கிற பெயரில் நூலாக நெய்து கொடுத்தார் பேராசிரியர் நம்.சீனி வாசன் அவர்கள்! அவர்கள் எழுதி 2 மாதங் கள் முடிந்துவிட்டன. அதன் பிறகானதை தொகுத்தால், அது எத்தனைப் பக்கங்கள் வரும் என்பதும் ஆச்சர்ய திகைப்பு!

அந்த வகையில் சென்னை - மன்னார்குடி பயணத்தின் ஒருநாள் நிகழ்வை தொகுக்க நினைத்தால், கடல் அலைகள் போல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக் கின்றன!

அதிகாலை 5.20 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் தொடர்வண்டி நிலையத் திலேயே பலரையும் நலம் விசாரிக்கிறார்; ஒவ்வொருவரிடம் அவரவர்களுக்குத் தேவையான ஏதோ ஒரு செய்தியைப் பகிர்ந்துக் கொள்கிறார்.

நினைத்துப் பாருங்கள், இன்றைக்கு செயலிகள்‌ (கிஜீஜீ) ஆயிரமாயிரம் வந்து விட்டன. ஆனால் அந்தக் காலத்தில் இருந்தே ஒரு செய்தியை நினைவில் வைத்தி ருப்பது மட்டுமின்றி, எத்தனை நூறு பேர் இருந்தாலும் அவரவர்களுக்கான செய்தி யைப் பேசிக் கொண்டே செல்வதை நாம் நினைத்துப் பார்க்க முடியுமா அல்லது நம் நினைவில் வேறு யாரும் தான் இருக் கிறார்களா?

ஆக தொடர்வண்டி நிலையத்தில் இருந்து வாகனப் புறப்பாடு! அதனுள் சில தோழர்கள். அவர்களிடமும் கலந்துரை யாடுகிறார். அனைத்துத் தோழர்களும் அறிந்த ஒரு விசயம். எந்த ஊரில் அல்லது எந்த சாலையில் பயணம் செய்கிறாரோ, அதன் முந்தைய வரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதில் ஆசிரியர் அசாத்திய திறன் படைத்தவர்கள்!

ஆக வாகனம் நெடுஞ்சாலைத் துறை ஓய்வு இல்லம் செல்கிறது. அங்கும் ஒரு அய்ம்பது பேர். அவர்களிடத்தும் பேசிவிட்டு ஆசிரியர் ஓய்வுக்குச் செல்லும் போது மன்னிக்கவும்... நிகழ்ச்சிக்குத் தயாராகப் போனார்கள். அவர்கள் எடுத்துக் கொண்டது இரண்டு மணி நேரம்! செய்தித்தாள் வாசித் தல், அறிக்கை எழுதுதல், உணவு போன்ற வையும் இந்த இரண்டு மணி நேரத்திற்குள் அடக்கம்!

மீண்டும் காலை 9 மணிக்கு இயக்கத் தோழர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பிற கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் எனத் தொடர் சந்திப்புகள்!

காலை 9.30 மணிக்கு  செ.முகிலன் - பி.ஆனந்தி வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைக்கப் புறப்படுதல். அது இரண்டு மணி நேர நிகழ்ச்சி.

எவ்வளவு பெரிய மேடை யானாலும், அதில் எத்தனை பேர் இருந் தாலும் பங்கேற்கும் ஒவ்வொருவரின் சிறப்பு களையும், தனித்துவமாக எடுத்துக் கூறி, அவர்களின் பெயர்களை அழுத்தம், திருத்தமாக விளிப்பதில் ஆசிரியர் என்றுமே "சூப்பர்தான்"!

அந்த இணையேற்பு நிகழ்வில் 

ஆசிரியர் பேசிய சில முத்துகள்:

• இந்த இணையர்களை நாங்கள் பார்த்த தில்லை. இன்று தான் பார்க்கிறோம். அவர் களைப் பார்ப்பதை விட, அவர்கள் கொள் கைகளை அறிந்து கொண்டாலே போது மானது!

• கொள்கையைச் சொல்லக் கூடியவர்கள் பலர்; செய்யக் கூடியவர்கள் சிலரே. இவர்கள் செய்திருக் கிறார்கள்!

• என்னைப் பார்க்க வரும் போது மணமகளின் தந்தை செருப்பைக் கழட்டிவிட்டு மேடைக்கு வந்தார். நான் பார்க்க இசையவில்லை. காலணி அணிந்து வந்த பிறகே சந்தித்து மகிழ்ந்தேன்!

• படிப்பில் மட்டுமல்ல; கொள்கையிலும் மணமகன் முதல் மாணவராக இருக்கிறார். கருப்பு எல்லோருக்கும் தேவைப்படுகிறது; தேவைப்படும்!

• "யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே,’’ என்று ரசித்துப் பாடுகிறவர்கள் கூட ஜாதி மறுப்புத் திருமணங்களை விரும்புவதில்லை. அவர்கள் பாடும் பாடல் குறுந்தொகையாக இருக்கலாம். ஆனால் விரும்புவது பெருந் தொகை யும், வருந் தொகையும் தான்!

• ஜாதி இழிவைப் போக்கவே இட ஒதுக்கீடு; ஜாதிப் பெருமை பேச அல்ல!

இவ்வாறு இணையேற்பு விழாவில் இனவுணர்வு ஊட்டினார்!

தொடர்ந்து பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ரமணியன் நூற்றாண்டு நினைவாக, கோட்டூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா! ஏராளமான தோழர்களும், கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணவச் செல்வங்களுமாகப் பெருந்திரள் பேரலை!

அந்நிகழ்வில் தான் எவ்வளவு சிறப்பு! தலைமையாசிரியர் ஒரு பெண், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒரு பெண், அவ்வூரின் ஒன்றியப் பெருந்தலைவர், மாவட்டக் குழு உறுப்பினர் அனைவரும் பெண்கள்! இவ்வளவு ஏன்... அப்பள்ளியில் பணியாற்றும் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள். இது ஒன்று போதாதா ஆசிரி யருக்கு?

"திராவிட சித்தாந்தம் வென்றது. பெரியார் வெற்றி பெற்றார்! என நெகிழ்ச்சியோடு முழங்க, மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தனர் 457 பெண் மாணவர்களும்! கல்விப் புரட்சி, அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி என்பது இதுதான். எங்கள் காலத்தில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத, இப் போதோ பல இலட்சம் ஆகிவிட்டது. அதிலும் பெண் மாணவர்களே தொடர் சாத னைப் படைக்கின்றனர்!

தனி மனித சொத்து நிரந்தரம் இல்லாதது. அதற்கு மரியாதையும் கிடையாது. ஆனால் அதுவே பொதுச் சொத்தாக மாறும் போது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் மதிப்பும் குறையாது; புகழும் நீங்காது!

இந்தக் கலையரங்கமும் பாலசுப்பிர மணியம் அவர்களின் குடும்பத்திற்கு நீங்கா புகழை வரலாற்றில் சேர்த்து வைக்கும்! இருபது இலட்சம் திட்டமிடப்பட்டு, நாற்பது இலட்சத்தில் முடிந்துள்ளது.

மழை, வெயிலில் இருந்து மாணவர் களைப் பாதுகாப்பதோடு, இந்த ஊரின் பெருமைக்கும் இந்த அரங்கம் சான்றாக விளங்கும்", எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார்கள்.

ஆசிரியர்கள், மாணவர்களிடையே இந்த உரை மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தியது! நிகழ்ச்சி முடிந்த கையோடு, ஓய்வு இல்லத்திற்குப் பயணித்தன கால்கள்! 

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்" என்பதற்கேற்ப உணவு முடிந்து, சற்று ஓய்வு முடித்து, மாலையும் வந்தது. பத்திரிகையாளர்கள் சூழ 30 நிமிடம் நேர்காணல். அதனைத் தொடர்ந்து மீண்டும் அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு!

இடைவெளியற்ற சூழலில் மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் சாலையில் உள்ள பி.பி.மகால் நோக்கிய பயணம்! அங்கே பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பால சுப்ரமணியம் அவர்களின் நூற் றாண்டு விழா நிகழ்ச்சி!

அங்கே ஆசிரியர் பேசுகையில், "குவளையத்தில் பிறந்து, குவலை யத்தையே ஆண்ட கலைஞர் நூற்றாண்டு இது! இன்னும் பலரின் நூற்றாண்டு காலமிது! இந்தக் கால கட்டத்தில் தான் வீ.பாலசுப்ரமணியம் நூற்றாண்டும் வரு கிறது. அவருக்கு உறுதுணையாக இருந்த ருக்மணி அம்மாள் அவர்களையும் நினைவு கூர்கிறோம்.

சாணிப்பாலும், சவுக்கடியும் நிறைந்திருந்த சமூகமிது. பிற்பாடு வரலாறு படித்தவர்களும், வரலாறு படைத்தவர்களும் நிறைந்தனர். கன்னியாகுமரியில் கர்ப்பிணி பெண்களைக் கூட மாட்டுக்குப் பதிலாக கட்டி வைத்து ஓட்டிய நிலை இருந்தது.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராகத்தான் திராவிடர் இயக்கம் உருவானது. பின்னர் பெரியாரால் ஈர்க்கப்பட்டார் பாலசுப்ர மணியன். நெருஞ்சினக்குடியில் பிறந்த அவர், நெருங்கிய குடியாக மாறிப் போனார்.

இந்த மலரில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதேநேரம் வீ.பால சுப்ரமணியம் அவர்கள் கவிஞரைப் பாராட்டி எழுதிய கடிதமும் இருக்கிறது!

தலைவருக்குக் கீழ்ப்படிதலும், கொள்கைக்கு நேர்மையாய் இருத்தலும், இயக்கத்திற்கு உண்மையாய் நடத்தலுமே

சிறந்த தொண்டருக்கு அடையாளம் என்றார் புத்தர். அவ்வாறு வாழ்ந்தவர் தான் வீ.பாலசுப்ரமணியம் அவர்கள். இப்படியான தொண்டர்களால் தான் வேரறிந்து, நாடறிந்து, உலகறிந்த இயக்கமாகத் திராவிடர் கழகம் திகழ்கிறது!

வீ.பாலசுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு நாளில் மூன்று சிறப்புகள் நடைபெற்றுள்ளன. காலை இவரின் பெயரன் முகிலன் திருமணம்! ஜாதி மறுத்த அற்புதமான சுயமரியாதைத் திருமணம் அது! அதே போன்று கோட்டூர் அரசுப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கலையரங்கம் ஒன்று திறக்கப்பட்டது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ச்செல்வி அவர்கள் "காற்றலையில்" எனும் சிறுகதை நூல் ஒன்றையும் இம்மேடையில் வெளியிட்டுள்ளார்.

இதைவிட வேறென்ன சிறப்பு? "நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை" என்கிற பாரதிதாசன் வரிகள் தான் நினை வுக்கு வருகின்றன என ஆசிரியர் அவர்கள் பேசினார்கள்.

நிகழ்வு முடிந்ததும் விழாவில் பங்கேற்ற அனைவரிடமும் பேசிவிட்டு, அரங்கத்தில் இருந்த பலரும் படமெடுக்க அனுமதித்து விடைபெற்றார்கள்!

தங்குமிடம் வந்த பிறகு சென்னை செல்வதற்கான ஆயத்த பணிகள். அதுசமயம் கொஞ்சம் உணவு முடித்து, வரவேற்பு அறையில் தயாராகி அமர்கிறார். மீண்டும் இயக்கத் தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம்.

"அய்யா! தொடர்வண்டிக்கு நேரமாகி விட்டது," என உதவியாளர் சொன்னதும், அப்படியா எனக் கேட்டு, அப்படியே புறப்படுகிறார். நிலையம் சென்றதும் பொது மக்கள் சந்திப்பு,  வணக்கம் பரிமாறிக் கொள்ளுதல்,  ஒளிப்படம் எடுத்தல், தோழர் களுடன் அளவளாவுதல் என இரயில் 10.35 மணிக்குப் புறப்பட,  ஆசிரியரோ 10.25 மணிக்கே இரயிலில் ஏறுகிறார்.

ஆம்! நேற்று வந்த சென்னை - மன்னார் குடி இரயில்தான், இன்று மன்னார்குடி - சென்னையாக திரும்பிப் போகிறது! இங்கே எழுதப்பட்டது ஒருநாள் நிகழ்வு! இப்படித் தான் 80 ஆண்டுகளாகப் பணிகளும், பயணங்களும் தொடர்கின்றன! இனியும் தொடரும்!

வாழ்க தமிழர் தலைவர்!

No comments:

Post a Comment