‘‘மொழி என்பது ஒரு போர்க் கருவியே!'' என்றவர் தந்தை பெரியார்
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மொழி பயன்படவேண்டும்!
பழம் பெருமைப் பேசுவதைக் கைவிட்டு- தமிழ்மொழியை அறிவியல் மொழியாக்கவேண்டும்!
கோலாலம்பூர், ஜூலை 22 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (International Association for Tamil Research) நடத்திடும் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா - கோலாலம்பூரில் ஜூலை 21 ஆம் நாள் கோலாகலமாகத் தொடங்கியது. ஜூலை 21, 22 & 23 ஆகிய மூன்று நாள்கள் மாநாடு நடைபெறுகிறது. மலேசிய பல்கலைக் கழக (Universiti Malaya) வளாகத் தில் நடைபெற்று வரும் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றிட உள்ளனர். மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்கிறார்.
இரண்டாம் நாள் மாநாட்டினை முறையாகத் தொடங்கி வைத்து மலேசிய நாட்டு பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் உரையாற்றிட உள்ளார்.
மாநாட்டின் முதல் நாள் காலையிலிருந்தே பொது அரங்கில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டு வரவேற் புரையினை ஓம்ஸ் அறக்கட்டளையின் தலைவர் தியாகராசன் ஆற்றினார். மாநாட்டு ஏற்பாட்டு தலைவர் முனைவர் டத்தோ சிறீ மாரிமுத்து மற்றும் மாநாட்டு ஏற்பாட்டு செயலாளர் நந்தன் மாசிலாமணி ஆகியோர் மாநாடு நிகழ்ச்சிகள் பற்றிய திட்டத் தொகுப்பு குறித்து விளக்கிப் பேசினர்.
நிகழ்ச்சியில் குழந்தைப் பாடல் தமிழறிஞர் முரசு நெடுமாறன் அடுத்த தலைமுறைக்கான தமிழ் பயிற்சி குறித்து ஆய்வுரையினை வழங்கினார்.
மலேசிய நாட்டு துணை அமைச்சர் சரசுவதி கந்த சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிறீ சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த அரசியல், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர். முனைவர் தொல். திருமாவளவன், கவிஞர் வைகைச் செல்வன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ‘நக்கீரன்’ கோபால், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன், எழுத்தாளர் பழ.கருப்பையா, சிங்கப்பூர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், சி.மகேந்திரன் (சி.பி.அய்.), திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தாமஸ் ஆகியோர் கருத்துரையினை வழங்கினர். சீன நாட்டிலிருந்து வருகை தந்த சீன தமிழ் பள்ளி ஆசிரியர்கள் நிலானி, நிறைமதி ஆகியோர் உரையாற்றினர்.
முதல் நாள் நிறைவுரை
மாநாட்டின் முதல்நாள் நிறைவுரையினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார். அவரது நிறைவுரை வருமாறு:
‘‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி’’
மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் - அதன் முக்கிய தலைப்பில் ‘‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி’’ என்ற தலைப்பில் இங்கே இன்று காலைமுதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய மாநாட்டிற்குச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து - இப்பணியை தொடக்கம் முதலே சிறப்பாக செய்து கொண்டிருக்கக்கூடிய பாராட்டுதலுக்குரிய நம்முடைய அய்யா பேராசிரியர் டான்சி முனைவர் மாரிமுத்து அவர்களே,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு தன்னுடைய அறக் கட்டளையை இணைத்து நம்மையெல்லாம் அன்போடு வரவேற்ற தொண்டறத்தின் தோழராக இருக்கக்கூடிய திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்களே,
இந்நிகழ்வுக்கு சிறப்பாகத் தலைமைப் பொறுப்பேற்று இருக்கக்கூடிய அமைச்சர் மாண்புமிகு டத்தோ சிறீ சிவக்குமார் அவர்களே,
அதேபோன்று இணைத் தலைவராக இருக்கக்கூடிய டத்தோ சிறீ சரவணன் அவர்களே, இந்நிகழ்ச்சிக்காக அரும்பாடுபட்டு, எல்லோரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடிய நம்முடைய ஆற்றல்மிகு நந்தன் மாசிலாமணி அவர்களே,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் வந்திருக்கக்கூடிய பேராளர்களான அருமைத் தமிழ்ப் போராளிகளே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்!
அனைத்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள், இயக் கங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், அதற்கப்பாலும் தமிழ் மேல் பற்றுக்கொண்டுள்ளவர்கள், தமிழ் அன்பர்கள் அத்துணை பேரையும் சிறப்பாக ஒருங்கிணைத்து இங்கே இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித் திருக்கிறீர்கள்.
நிறைவுரையாற்றிட இன்றைய நாளில் எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கக்கூடிய அருமை நண்பர் களுக்கு, இந்தக் குழுவினருக்கு என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வத் தொடக்கம் நாளைய தினம்தான். இந்த நாட்டினுடைய பிரதமர் அவர்கள் வந்து, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்குரிய சிறப்பை செய்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில்
தமிழ்மொழி என்பதும் அடங்கும்!
மலேசிய திருநாட்டிற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. அதுதான் முதல் உலகத் தமிழ் மாநாடு என்று சொல்லக் கூடிய அளவிற்கு ஒன்றிணைத்த ஒரு பெருமை - தனிநாயகம் அடிகளார் போன்ற மிகச் சிறந்த அறிஞர் களுடைய ஒத்துழைப்பினால் - அன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். அதனுடைய தொடர்ச்சி பல காலகட்டங்களில் தமிழுக்குச் செம்மை சேர்த்து இங்கே நம்முடைய பேராசிரியர் சுப.வீ. மற்றவர்கள் சொன் னதைப்போல, இந்த மாநாடும் அதன் ஒரு தொடர்ச்சியாக உலகத்தில் தமிழுக்கு, தமிழர்களுக்கு வாய்ப்பு என்ன என்பதை எடுத்துச் சொல்லுகின்ற சிறப்புத் தகுதியோடு நடைபெறுகின்றது. எதையும் உரிய காலத்தோடு சொல்லவேண்டும்; வெறும் பழம்பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது என்ற அளவில் இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையில், இன் றைக்கு மிக அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத் திருக்கிறீர்கள். ‘‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி'' - இன்றைய காலகட்டத்தில் தமிழ்மொழி என்பதும் அதில் அடங்கும்.
இணைய காலகட்டம் இன்றைய காலகட்டம்; இன்றைய காலகட்டத்தையும், இணைய காலகட்டத் தையும் இணைத்துப் பார்க்கின்ற நேரத்தில், எங்களைப் போன்றவர்களையும் அழைத்திருக்கிறீர்கள்.
என்னைப் பேசவேண்டும் என்று அறிமுகப்படுத்திய தோழர் அருமை நண்பர் முருகன் அவர்கள், மெதுவாக என்னுடைய காதில் சொன்னார் - ‘‘சமயத்தைத் தவிர்த்து'' என்றார்.
நான் சொன்னேன், ‘‘நான் சமயத்திற்கேற்ப பேசுவது இல்லை'' என்று.
சமயத்திற்கேற்ப பேசத் தெரியாதவர்கள்
பெரியார் பெருந்தொண்டர்கள்
சமயத்திற்கேற்ப பேசத் தெரியாதவர்கள் பெரியார் பெருந்தொண்டர்கள். நான் ஒரு பெரியாரின் மாணாக்கன். வாழ்நாள் முழுவதும் மாணாக்கன்.
எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ - தமிழ் ஆய்வுக்குத் தகுதி எனக்கு இருக்கிறதோ இல்லையோ - தமிழுக்காக உழைத்து, தமிழுக்காக வாழ்ந்து, தமிழுக்கு ஏற்படும் இடரினைப்போக்க இன்னும் ஆக்க ரீதியான பணிகள் செய்யப்படவில்லையே என்கிற ஏக்கமுடைய பெரியாரின் மாணவன்.
நான் ஒரு பெரிய தமிழறிஞன் என்றோ, தமிழில் பண்டிட் என்றோ - அந்த உரிமையோடு இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ளவில்லை. அதற்காகவும் நீங்கள் அழைத்திருக்கமாட்டீர்கள்.
மாறாக, தந்தை பெரியாரின் மாணவன் நான். காரணம், தந்தை பெரியார் தமிழுக்கு என்ன செய்தார்? என்று கேட்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், மிக முக்கியமான ஒரு கருத்தை இங்கே எடுத்து விளக்கவேண்டும்.
அய்யா பெரியார் அவர்கள், காலத்தைத் தாண்டி முன்னோட்டமாக சிந்தித்த ஒருவர். அதனால்தான் அந்த உணர்வுகள் இன்றைக்கு நாடு முழுவதும் பெருகக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டிற்காக ஒன்றை உங்களுக்குச் சுட்டிக் காட்டவேண்டும்.
ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு
பெரியார் அவர்களுடைய தொண்டர்கள், பெரியாரின் சார்பில், பெரியாருடைய கருத்தையுடைய - பெரியார் பற்றாளர்கள் தமிழைப்பற்றிப் பார்க்கின்ற பார்வைக்கும் -மற்றவர்கள் பார்வைக்கும், முற்போக் காளர்கள் பார்க்கின்ற பார்வைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.
அது என்னவென்று சொன்னால், மொழி என்பது இருக்கிறதே, அதை விழி என்று சொல்வார்கள்; பாதுகாக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
மொழி ஒரு போர்க் கருவி போன்று இருக்கவேண்டும்!
ஆனால், பெரியார் அவர்கள் அதை ஒரு தனித் தன்மையோடு சொன்னார்கள். மொழி என்பது இருக்க வேண்டும்; மொழியினுடைய சிறப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், மொழி ஒரு போர்க் கருவி போன்று இருக்கவேண்டும் என்று சொன்னார்.
மொழி ஒரு போர்க் கருவி. அந்தப் போர்க் கருவியாக மொழியைக் கருதியக் காரணத்தினால்தான், இன் றைக்கும் அந்த மொழியை, அந்தப் போர்க் கருவியை நாம் நவீனப்படுத்தவேண்டும். புதுமையாக்கத்தோடு மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான், அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அந்தத் தலைப்புதான், ‘‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி.''
சில பேர் நினைக்கலாம்; தமிழ் மொழியைப் போர்க் கருவி என்கிறார்களே என்று. போர்க் கருவிகள் என்பது ஆதிக்காலத்தில் அம்பும், வில்லும் போர்க் கருவிகளாக இருந்தன.
ஆனால், அம்புக்கும், வில்லுக்கும் எவ்வளவுதான் பழம்பெருமைகள், புராணப் பெருமைகள், அங்கே விட்டது, இங்கே திரும்பி வந்தது என்கிற பெருமைகள் இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் அது பயன் படாது.
அதற்கு அடிப்படையான கருத்து என்னவென்று சொன்னால், போர் என்றவுடன், ஆயுதங்களை எடுத்து சண்டையிட்டு, ரத்தம் சிந்துகின்ற போர் என்று மட்டும் நினைக்கத் தேவையில்லை.
போர்க் கருவி என்று சொல்வதற்குத்
தமிழ் மொழிக்குத் தகுதி உண்டு!
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு போர் என்பது இருக்கிறதே - அது மொழியின்மீது தாக்கப்படும் பொழுது, மொழியின்மீது வீசப்படும்பொழுது, அதனை எதிர்கொள்வதற்கு மொழி ஒரு போர்க் கருவியாக இருந்தால் மட்டும்தான் முடியுமே தவிர, இல்லாவிட்டால் அந்த மொழியே காணாமல் போகக்கூடிய மொழியாகிவிடும். இதுதான் பெரியாருடைய சிந்தனை. அதைத்தான் மிகத் தெளிவாகச் சொன்னார் தந்தை பெரியார். போர்க் கருவி என்று சொல்வதற்குத் தமிழ் மொழிக்குத் தகுதி உண்டு.
மலேசிய பிரதமர் அவர்கள் இம்மாநாட்டினை தொடங்கி வைக்கவிருக்கிறார். மலேசிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு முன் உரையாற்றிய சீனத் தோழியர்கள் நிலானி, நிறைமதி ஆகியோர் அற்புதமாகத் தமிழ் பேசுகிறார்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட, உலகத் தமிழர்களைவிட அவர்கள் தமிழ் மொழியைக் அழகாகக் கற்றுக்கொண்டு பேசுகிறார்கள் என்று சொல்லும்பொழுது, ‘‘எம் மொழி செம்மொழி மட்டுமல்ல - எம் மொழி தனி மொழி - அது எல்லோருக்கும் பயன்படக் கூடியது; உலகளாவிய அள விற்குப் பயன்படக் கூடியது'' என்று பெருமைப்படு கிறோம்.
இந்த அரங்கத்தில், இந்த மலேசிய பல்கலைக் கழகத்திலேயே தமிழ் மொழி என்பது, அது போர்க் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுத்தான் வந்தது. இந்தத் தகவல் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த நேரத்தை நான் அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
மொழிப் போர் வரக்கூடிய அளவிற்கு,
மொழியின்மீது தாக்கம்!
மலேசிய நாடு, சிங்கப்பூர் நாடு எல்லாம் ஒன்றாக இருந்த காலகட்டத்தில், இங்கே மொழிப் போர் வரக் கூடிய அளவிற்கு, மொழியின்மீது தாக்கம் வரக்கூடிய அளவிற்கு ஒரு நிலை இருந்தது.
அய்யா முரசு நெடுமாறன் போன்றவர்கள், முதி யோர்கள் அதை அறிவார்கள்.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் என்ன நடந்தது என்று சொன்னால், இந்திய நாட்டிலிருந்து ஒரு மொழியை உருவாக்கவேண்டும்; ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில், அந்தத் துறை சமஸ்கிருதத் துறையாகத்தான் இருக்கவேண்டும்; வடமொழிதான் இருக்கவேண்டும் என்று உள்ளே வைத்து, நுழைத்திட இங்கே சில சூழ்ச்சிகள் நடந்தன.
தமிழவேள் கோ.சாரங்கபாணி
அதனை முறியடித்த பெருமை தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களைச் சார்ந்ததாகும்.
தமிழவேள் அவர்கள் இன்றைக்கும் ‘‘தமிழ்முரசை'' நம் கைகளில் கொடுத்துவிட்டு, முரசறையும்படியாகச் செய்து, அவர் மறையவில்லை, வாழ்ந்து கொண்டிருப்ப வர்களின் பட்டியலில் வரக்கூடியவராக சிறப்பான இடம்பெற்றுள்ளார்.
அப்பொழுதுதான், ‘‘ஏன் நீங்கள் தமிழ் மொழித் துறையை அமைக்கக்கூடாது? சமஸ்கிருதத்தை ஏன் கொண்டு வருகிறீர்கள்? தமிழ் மொழி செம்மொழி இல்லையா? தமிழ் மொழி என்ன வழக்கொழிந்த மொழியா?'' என்றெல்லாம் கேட்டார்.
அதற்கு வேறுவிதமான பதில்கள் கிடைத்தன. அதற்கு நிதியில்லை என்று சொன்னார்கள்.
‘‘தமிழ் எங்கள் உயிர்’’ என்று தலைப்பிட்டு நிதி திரட்டினர்!
உடனே தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர் கள், ‘‘இதோ நாங்கள் திரட்டுகிறோம், தமிழர் களிடமிருந்து நிதி திரட்டுகிறோம், இந்த நாட்டில், இந்த மண்ணிலுள்ள மக்களிடமிருந்து நிதி திரட்டுகிறோம்'' என்று சொல்லி, ‘‘தமிழ் எங்கள் உயிர்'' என்ற தலைப்பு கொடுத்து, ‘தமிழ்முரசு' இதழில் செய்தி வெளியிட்டு, நிதி திரட்டி தனி இருக்கை வைக்கக்கூடிய அளவிற்குச் செய்கி றோம் என்ற செயலாக்கத்தின் விளைவாகத்தான், தமிழுக்கு இடம் கொடுத்தது மலேசிய பல்கலைக் கழகம்.
இப்பொழுது சொல்லுங்கள், தமிழ் போர்க் கருவியா, இல்லையா? என்று.
அந்தப் போர் அறிவுப் போர்
அந்தப் போர் அறப் போர்
அந்தப் போர் உரிமைப் போர்
எனவே, உரிமைப் போருக்கு, அறப்போருக்கு வளர்ச் சியாக இருக்கக்கூடிய அந்த சூழ்நிலை மிக முக்கிய மானது என்ற அடிப்படையில்தான் நண்பர்களே, இந்தச் செயலை நாமனைவரும் இணைந்து செய்கின்றோம்.
சிறப்பாக சொல்லவேண்டுமானால், நான் சொன் னேன், இந்த இயக்கம், திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார்? என்று சொல்கிறார்களே, அவர்களுக்குச் சொல்கிறோம் மிக முக்கியமாக.
‘‘வளர்ச்சி நோக்கில் தமிழ்!’’
‘‘வளர்ச்சி நோக்கில் தமிழ்'' என்று அச்சிட்டே கொண்டு வந்திருக்கின்றோம்.
சுருக்கமாக அதைச் சுருக்கி சொல்லுகிறேன்.
1918 இல், நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலம் - 105 ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக்கட்சி மாநாடு - திராவிட இயக்கம் - எங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறது தமிழ் மொழியைப்பற்றி என்றால், தமிழை சில நேரங்களில் அரசியல் ஆக்குகிறார்கள்; இன்றைக்குச் சிலருக்குத் திடீரென்று தமிழ்ப் பற்று வந்துவிடுகிறது; தமிழில் நான்கு வார்த்தைகளை எழுதிக் கொடுத்துப் பேசிவிட்டால், உடனே அவர்கள் தமிழுக்காகத் தாங்கள் தான் பாடுபட்டோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழ் பேசுவதால் மட்டுமே வளர்ந்து விடாது என்றெல்லாம் நீட்டிப் பேசுகின்றார்கள்.
அவர்களுக்கு வரலாறு தெரியாது; சொல்லிக் கொடுக் கிறோம், கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம்.
105 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு
1918 இல் மார்ச் 30, 31 ஆகிய நாள்களில், தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது.
எப்பொழுது தெரியுமா?
105 ஆண்டுகளுக்கு முன்பு - யாராவது ஒருவர், இருவர் இப்பொழுது இருந்தாலும் அது அதிசயமானது.
எப்படி தமிழ் மூத்த மொழியோ, தமிழ் முன்னோடி மொழியோ, தமிழ் நமக்குப் பயன்படக்கூடிய செம் மொழியோ அந்தக் கருத்துக்கு வருகிறபொழுது, இங்கே எப்படி அது வந்தது அதன் வரலாறு - கடந்து வந்த பாதை தெரியவேண்டும்.
நம்முடைய விழுதுகள் எவ்வளவு பலமாக இருந்தாலும், வேர் சரியாக இருக்கிறதா? வேர் எங்கே இருக்கிறது? என்று பார்க்கும்பொழுதுதான் நண்பர்களே, அந்தக் கருத்து நன்றாக விளங்கும்.
அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:
தீர்மானம் 8 (ஆ)
எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம் மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி.நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை.
வழிமொழிந்தவர்: திரு.ந.மு.வேங்கட சாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.
தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானம் நிறைவேறி ஒரு நூற்றாண்டுக்காலம் ஆயிற்று. இன்றைக்கு அது வளர்ந்தோங்கி, உலக தமிழாராய்ச்சி மய்யமாக, சீன நாட்டு சகோதரிகள் எல்லாம் இவ்வளவு அழகாகப் பேசுகிற நேரத்தில், இந்த செம்மொழி எம்மொழி என்று நாம் நினைக்கிறோமே, அந்த எம்மொழிக்குத் தீர்மானம் போட்டது மட்டுமல்ல - அந்தத் தீர்மானத்தையே எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்தார்கள்.
பகுத்தறிவுவாதி,
ஒரு சமூகப் போராளி நான்!
ஆனால், சட்டப்பூர்வமாக அதற்குரிய வாய்ப்புகள் வந்திருக்கின்றனவா? சட்டப்பூர்வமாக ஓர் அரசாங்கம் அதைச் செய்திருக்கிறதா? என்று சொல்லுகிறபொழுது, அதற்கு மிக முக்கியமான முயற்சியை, 2004 ஆம் ஆண்டு - அரசியல் உருவம் நுழைகிறது என்று இங்கே காலையி லிருந்து சொன்னார்கள். இதுபோன்ற மாநாட்டிற்கு அரசியல் தேவையா? தேவையில்லையா? என்ப தைப்பற்றி நான் பேசவில்லை. நான் அரசியல் வாதியும் அல்ல. பகுத்தறிவுவாதி, ஒரு சமூகப் போராளி நான்.
ஆனால், அரசாங்கங்கள்தான் மொழியை அழிப்பது, வாழ வைப்பது என்பதில், மொழியை மேம்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு தேவை.
தமிழ் மொழியை சட்டப்பூர்வமாக செம்மொழியாக ஆக்கிய பெருமை கலைஞரையே சாரும்!
செம்மொழி தகுதி நமக்கு இருந்தும், மூத்த மொழி, முன்னோடி மொழி, எப்பொழுது தோன்றியது என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத காலத்தின் முன் னோடியான மொழி - ஆதிகால மொழி என்ற பெருமை நமக்கு இருந்தால் மட்டும் போதாது; செம்மொழித் தகுதி இருந்தால் மட்டும் போதாது; வாய்மொழியாக அது இருக்கக்கூடாது; சட்டப்பூர்வமாக செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்று ஆக்கிய பெருமை முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய முயற்சிக்குரிய தாகும். இந்திய அரசால் அது ஏற்கப்பட்டது.
இந்திய அரசு அதை ஏற்றுக் கொண்டதின் நோக்கம் என்ன? நாங்கள் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக இந்த நூலில் வெளியிட்டு இருக்கிறோம்.
‘‘கவர்ன்மெண்ட் ஆர்டர் நோட்டிபிகேசன் மினிஸ்ட்ரி ஆஃப் ஹோம் அபேர்ஸ்'' என்று மிகப்பெரிய அளவிற்கு டில்லியில் 2004 ஆம் ஆண்டு அந்த ஆணை வந்தது.
அதற்குப் பிறகுதான் தமிழ் செம்மொழியானது - சட்டப்பூர்வமாக.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி
ஆட்சியில்தான் செம்மொழியானது!
என்ன செய்தார்கள் திராவிட இயக்கத்தவர்கள் என்று கேட்டால், மற்றவர்கள் போன்று பேசிக் கொண் டிருக்கவில்லை. அப்படி பேசி, மக்களுக்குத் அறிவுறுத்தி, தெளிவுறுத்தி, அதற்குப் பிறகு மக்களைப் பண்படுத்தி, ஓர் அரசாங்கம் இதனைச் செய்தாகவேண்டும் என்று முடிவெடுத்து, எங்கள் நாட்டு ஒன்றிய அரசாங்கத்தில் பாராட்டுத்தகுந்த அளவிற்கு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் - தி.மு.க. - மற்றவர்களும் இருந்த நேரத்தில்தான் நண்பர்களே, தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற தகுதி சட்டப்பூர்வமாகக் கிடைத்தது.
இன்றைக்குத் தமிழ் மொழி, செம்மொழி என்ற தகுதி பெற்ற மொழி என்கிற பெருமை இருக்கிறதே, அதுதான் சிறப்பு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நீதிக்கட்சி கூட தீர்மானம் போடும்பொழுது, சமஸ்கிருதம் போன்றவற்றிற்கு செம்மொழி தகுதி இருக்கும்பொழுது, தமிழ் மொழிக்கு இல்லையா? என்று கேட்கக்கூடிய கட்டம் இருந்தது.
ஆனால், ஓர் உண்மை வெளியே வந்தது என்மூலம். அது என்னவென்று சொன்னால், அதுவரையில் அதி காரப்பூர்வமாக சமஸ்கிருதம் - வடமொழி செம்மொழி யாக இல்லை. அறிவிக்கப்படவில்லை. காரணம் என்ன?
சமஸ்கிருதம் என்கிற ஒரு மொழிக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும் என்பதல்ல. நமக்கு வெறுப்பு முக்கியமல்ல; ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்'' என்ற பெருமை நமக்கு உண்டு என்பதை எல்லோரும் இங்கே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்; சொல்லிக் கொண்டு வருகிறோம்; நாளையும் சொல்வோம். அதுதான் நம்முடைய தனித்தன்மை என்பது மிக முக்கியமானது.
உடனே சொல்வார்கள், சமஸ்கிருதத்தைப்பற்றி பேசுகிறாரே, இது குறுகிய பார்வை என்பார்கள்.
நான் கேட்கின்ற கேள்விக்கு தெளிவான பதிலை நீங்கள் சொல்லுங்கள்.
இன்னொரு மொழியைப் பார்த்து ‘நீஷ பாஷை' என்று நாம் சொன்னதுண்டா?
ஒரு மொழி ‘தேவபாஷை'
இன்னொரு மொழி ‘நீஷபாஷை!'
ஒரு மொழி ‘கடவுள்' பேசக்கூடிய மொழி
இன்னொரு மொழி சாதாரண ‘நீசர்'கள் பேசக்கூடியது.
தமிழ்மொழி பேசினால், தீட்டாகும் என்று ஒரு சமயம் சொன்னால், அந்த சமயத்தை நாங்கள் எதிர்க்காமல் இருக்க முடியுமா?
கிருமிகளை அழிக்காமல், உடல்நலத்தைப் பேண முடியுமா? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும்.
இது அரசியல் அல்ல நண்பர்களே - இது வாழ்வியல் - அறிவியல்.
நோய்நாடி நோய் முதல்நாடுகின்ற அறிவியல் இது. அந்த அடிப்படையில் வருகிறபொழுது, இங்கே பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையைக் கேட்டேன்.
ஆங்கிலத்தின்மூலம்தான் தமிழின் பெருமை மேற்கு உலகத்திற்குப் போய்ச் சேர்ந்தது!
ஏதோ மூன்று மொழிகள் வந்தால்தான் உருப்படும்; அதுமட்டுமல்ல, இரண்டு மொழிகள் என்று சொல்லும் பொழுது, தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்துவிட்டது என்கிறார்கள். ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறோம், அது விரும்பத்தக்கதல்ல என்பதெல்லாம் இருக்கட்டும்.
ஆனால், அந்த ஆங்கிலத்தின்மூலம்தான் தமிழின் பெருமை மேற்கு உலகத்திற்குப் போய்ச் சேர்ந்தது என்பதை மறுக்க முடியுமா?
தமிழ் மொழியை நீஷ பாஷை என்று சொன்னவர்கள் யார்?
இன்னுங்கேட்டால், எந்த ஆங்கிலேயனும், எந்த ஜி.யு.போப்பும், ஆங்கில அறிஞர்கள் யாரும் தமிழை ‘‘நீஷ பாஷை'' என்று சொல்லவில்லை. தங்கள் மொழியை ‘‘தேவபாஷை'' என்று சொல்லவில்லை.
ஆனால், யார் இப்படிப் பேசினார்களோ, அவர்கள் தானே நாம் அடையாளம் காணப்படவேண்டியவர்கள். அதை எதிர்க்காமல், நோயை எதிர்க்காமல், நோய்க் கிருமியை அழிக்காமல் நான் வளர்ச்சியடைகிறேன், வளர்ச்சியடைகிறேன் என்று சொன்னால், எப்படி வளர்ச்சியடைய முடியும்?
கோவிட் பெருந்தொற்று பல ரூபத்தை எடுத்தது - இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு அதைவிட பல ரூபத்தை எடுக்கிறது.
ஆகவேதான், நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணிகள் என்னவென்றால், மொழியை வளர்க்க இன்றைய காலகட்டத்தில் நாம் உரிய, சிறந்த பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
வெளிநாட்டு அரசியல் வந்து படையெடுத்தால்கூட, ஒரு காலகட்டத்தில் அது முடிந்து போய்விடும். ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு இருக்கிறதே - அதனால் ஆட்சி போய்விடும்; காட்சிதான் நிலைக்கும்.
வாழாமலேயே சமஸ்கிருதம் ஆளுகிறது!
அந்தக் காட்சியை நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கும்பொழுதுதான், இன்றைக்கு ஆங்கிலேயர் ஆட்சி ஒழிந்துவிட்டது; ஆனால், ஆங்கிலம் ஆண்டு கொண்டிருக்கிறது அல்லவா! அதுபோலவே, வாழாமலேயே சமஸ்கிருதம் ஆளுகிறது அல்லவா!
அப்படி வருகின்றநேரத்தில், மிக முக்கியமாக சுட்டிக்காட்டவேண்டிய செய்தி இன்னொன்று.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பணி மட்டுமல்ல; அதற்கு முன்பு தந்தை பெரியாரின் தலைமகனாக, ‘‘தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான்'' என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘‘ஆரிய மாயை'' என்ற தலைப்பில் எழுதினார்.
தலைப்பைப் பார்த்தவுடன் நிறைய பேருக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி ஏற்படும். அண்ணா அவர்கள் அதை எப்படி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
திராவிட இயக்கத் தலைவர்கள்
மொழியை பாதுகாப்பதற்கான காவலர்கள்!
திராவிட இயக்கத் தலைவர்கள் எல்லாம் நுனிப்புல் மேய்கிற தலைவர்கள் அல்ல. மொழியை ஆராய்ச்சி செய்தது மட்டுமல்ல - மொழியை பாதுகாப்பதற்கான காவலர்களாக தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பணியைத்தான் நாம் செய்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு அடையாளமாக ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்று இருக்கின்ற நாட்டில், நம்முடைய குறளை உலகப் பொதுமறையாக, பொதுவாழ்க்கை வழிகாட்டி யாகக் கொள்கிறோம்? எல்லா நாட்டிற்கும் பொருந்தும்; எல்லா மக்களுக்கும் பொருந்தும்; எல்லா சமயத்தவர் களுக்கும் பொருந்தும்; சமயமற்றவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதற்குப் பெருமை இருப்பதற்கு என்ன காரணம்?
அதில் இருக்கின்ற கருத்து மனித குலத்திற்குத் தேவையானதாகும்.
இங்கே நடப்பது உலக மாநாடாகும். உலகப் பார்வையோடு பார்க்கிறோம்; மானிடப் பார்வை.
மானிடப் பற்றுதான் முக்கியம் என்றார்
தந்தை பெரியார்!
தந்தை பெரியார் சொன்னார், ‘‘எனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது. மானிடப் பற்றுதான் முக்கியம்'' என்றார்.
அந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து சொல்லு கிறபொழுது, ஜாதியை ஒரு மொழிக்குள் கொண்டு வந்து திணித்தார்கள். வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராளியாக, தமிழ்மொழியை ஆக்கி, அதனுடைய ஆக்கத்தோடு மொழி வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மொழியை எப்படி ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில், மிக முக்கியமான கருத்தைப் பார்ப்போம்.
அண்ணாவின் ‘‘ஆரிய மாயை!''
எப்படியெல்லாம் பண்பாட்டுப் படையெடுப்பு வந்தது என்பதற்கு அடையாளமாக சொல்லுகின்ற நேரத்தில், ‘ஆரிய மாயை'யில் அண்ணா அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
"அண்ணா அவர்கள் "வச்சணந்தி மாலை" என்கிற குறிப்பை" 1940 ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார்.
நம்முடைய மொழி - இலக்கியம் மட்டுமல்ல; இலக்கணமும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அடையாளமாக நண்பர்களே, அண்ணா சொல்கிறார்,
‘‘பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண -க்ஷத்திரிய -வைசிய- சூத்திர என்ற சாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண் ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.''
எவ்வளவு பெரிய பண்பாட்டுப் படையெடுப்பு - இது யாரால் தடுத்து நிறுத்தப்பட்டது? இப்படிப்பட்ட சிந்தனை யாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்னமும் அந்த ஆபத்து நீங்கிவிடவில்லை.
எப்பொழுது வேண்டுமானாலும் நோய்கள் வரும்; எப்பொழுது வேண்டுமானாலும் அந்தக் கிருமிகள் உள்ளே நுழையும். அதற்காகத்தான் நண்பர்களே, இந்தக் கருத்தை எடுத்துத் தெளிவாகச் சொல்லுகிறோம்.
மேலும் அண்ணா தொடர்கிறார்,
‘‘‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாக வுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொரு ளென்ன?
ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக் கற்றது. ஆனால், இலக்கணத்தில் விதியாகப் புகுந் துள்ளது.
பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப் பனருக்கு, பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா, வைசியருக்கு -வகை பல குறைந்த கலி சூத்திரர் என்ற திராவிடருக்கு - ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் இடமா?''
என்று அண்ணா அவர்கள் கேட்டு சிந்திக்க வைத்த தினுடைய விளைவுதான் இது.
தந்தை பெரியாரின்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!
ஆகவே, ஒரு போர்க் கருவியை எப்படி நாம் பயன்படுத்தவேண்டுமோ, அக்கருவி தயாராக இருக்கவேண்டும். நவீன முறையில் போர்க் கருவிகள் மாறிக் கொண்டிருக்கவேண்டும் என் கின்ற அடிப்படையில்தான், தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே 1935 ஆம் ஆண்டிலேயே செய்தார்.
தமிழில் 247 எழுத்துகளை வைத்துக்கொண்டு, நாம் தமிழை வளர்க்க முடியுமா? தமிழை முன் னேற்ற முடியுமா? அதிலும் இப்பொழுது யுனிகோட் போன்று வந்துவிட்ட நேரத்தில், இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் அலைபேசி இருக் கிறது; அதில் நீங்கள் தமிழ் மொழியில் டைப் செய்கிறீர்கள் என்றால், ஒலி அமைப்பாக வைத்துக் கொண்டுதான் செய்கிறீர்கள். இது அறிவியல் காலம் அல்லவா!
தமிழ் மொழி தனித்து நிற்கவேண்டாமா?
எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.பிறகு என்னாயிற்று என்றால், அந்த எழுத்துக் கணினித் துறையில் பயன்படக் கூடிய அளவிற்கு வந்த பிறகு, தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சொல்லியே அதற்கு ஆணை போட்டார்.
அந்த ஆணை எப்பொழுது போடப்பட்டது? அதை முதல் முறையாக எந்த வெளிநாடு ஒன்று செயல் படுத்தியது? என்றால், அது சிங்கப்பூர்தான். அதற்குப் பிறகு மலேசியாவும் செயல்படுத்தியது.
பெரியார் சொன்னார், ‘‘எனக்கு அந்தத் தகுதி எப்படி வந்தது? யாரும் செய்யவில்லை என்பதுதான் அந்தத் தகுதி. யாரும் இதைப்பற்றி யோசிக்கவில்லையே என்பதுதான் என்னுடைய மிக முக்கியமான தகுதி'' என்று அவர் சொன்னார்.
இன்றைக்கு அது மேலும் மேலும் வளர்ந்து, எந்த அளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.
எனவேதான் நண்பர்களே, போர்க் கருவியாக மொழி இருப்பது மட்டுமல்ல, வளர்ச்சி பெற்று அது வர வேண்டும்.
இம்மாநாட்டில், காலையில் முரசு நெடுமாறன் அவர்கள், அடுத்த தலைமுறைக்கான தமிழ் பயிற்சி குறித்து ஆய்வுரையினை வழங்கினார்.
பழைய பெருமைகளைப் பேசாமலும் இருக்கக் கூடாது!
அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக் கிறீர்கள்; ‘‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி’’ - அந்தத் துறையிலே தமிழ் மொழி வளரவேண்டும். இன்னமும் நாம் பழைய பெருமைகளையே பேசிக் கொண்டிருப்பதினால் பயனில்லை. ஆனால், பழைய பெருமைகளைப் பேசாமலும் இருக்கக் கூடாது.
பகுத்தறிவிற்கு ஒத்ததாக இருக்க முடியாது!
எப்படி என்று சொன்னால், உரத்தின்மூலம்தான் உணவு தயாராகிறது; உணவு தயாராவதற்கு உரம் மிகவும் முக்கியம். இதை யாரும் மறுக்க முடியாது. அந்த உணவுதான் நம்மை வாழ வைக்கிறது என்பது உண்மை. ஆனால், அதற்காக உரத்தின்மூலம்தானே உணவு வருகிறது; எனவே, உரத்தையே நாங்கள் உணவாகக் கொள்கிறோம் என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி சொன்னால்தான், ஏற்க முடியுமா? அப்படி ஏற்றால், அது பகுத்தறிவிற்கு ஒத்ததாக இருக்க முடியாது.
அதுபோலத்தான் நண்பர்களே, இந்தப் பழம்பெருமை என்பது நமக்கு உரமாக இருக்கவேண்டுமே தவிர, அது ஒருபோதும் உணவாக இருக்கக்கூடாது. அதன்மூலமாக நம் மொழி வளர முடியாது என்பதற்காகத்தான் - இப் பொழுது நாம் அறிவியல் யுகத்தில் இருந்துகொண்டி ருக்கின்றோம்.
மொழி அறிஞர்களுக்கு எங்களைப் போன்றவர்களின் வேண்டுகோள்!
மொழிப் போராட்டத்தில், பல போட்டிப் போர்களில் நாம் முன்னால் நிற்கவேண்டுமானால், இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு வந்திருக்கின்ற காலகட்டத்தில் கூட, மிக முக்கியமாக நம் மொழி வரவேண்டும் என்றால், பழைய சிந்தனைகளுக்கு மீண்டும் மீண்டும் புதிய வழிகள், புதிய வியாக்கியானங்கள், புதிய விளக்கங் களைக் கொடுத்துக்கொண்டு, அதன்படி நம்முடைய ஆய்வுக் கட்டுரைகளும், நம்முடைய ஆராய்ச்சிகளும் இருப்பதைவிட, நீங்கள் உங்களுடைய துறையில், வான்வெளிக்குப் போயிருக்கக் கூடியவர்கள், ராக்கெட் டில் பறக்கக்கூடியவர்கள், இங்கே இருக்கின்ற தமிழர்கள், இங்கே இருக்கக்கூடிய வாய்ப்புகளை எப்படி உருவாக் குவது என்ற அறிவியலை நோக்கி, மொழியியலை அமைத்துக் கொள்ளுங்கள். அதைத்தான் மொழி அறிஞர்கள் செய்யவேண்டும். அதுதான் மொழி அறி ஞர்களுக்கு எங்களைப் போன்ற சாதாரணமானவர் களுடைய வேண்டுகோள் ஆகும். இப்படிப்பட்ட ஆய்வு மாநாடுகள் எல்லாம் நடைபெறுகின்ற நேரத்தில், மாற்றத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் கிடையாது.
மாற்றமே கூடாது என்று சொல்வது சனாதனம்!
மாற்றமே இருக்கக்கூடாது; மாற்றமே கூடாது என்று சொல்வதற்குப் பெயர் சனாதனம்.
அது இயற்கைக்கும், அறிவுக்கும் மாறுபட்டது.
புத்தர் காலத்திலிருந்து மாறாதது ஒன்று உண் டென்றால், மாற்றம்தான். காரல் மார்க்சும் அதைத்தான் சொன்னார். மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்று.
ஆனால், இன்றைக்கு நம்முடைய அணுகுமுறையைப் பார்த்தால், மாற்றத்தைப்பற்றி சிந்திப்பதைவிட, ஏமாற்றத் தைப்பற்றித்தான் அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்; அதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவேதான், நம்முடைய தமிழ் ஆய்வுகட்கு மட்டு மல்ல, தமிழ் மொழிக்கு வருகின்ற ஆபத்துகளையும் எதிர்நோக்கி களத்திலே நிற்கவேண்டும்.
இன்றைக்குக் காலையில்கூட சொன்னார்கள், மதம், பாடல்கள், பக்தி இலக்கியங்கள் தமிழில் ஏராளம் இருக் கின்றன. அதைத் தவிர வேறு இருக்க முடியாது என்றெல் லாம் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, தமிழ் மொழிக்கு இவ்வளவு பெருமை என்றெல்லாம் சொல்லி, ‘‘பாட்டுப் பாடினான், பூட்டுத் திறந்தது'' என்ற பெருமைகள் எல்லாம் இருக்கலாம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பெருமைப்பட வேண்டிய நாம், இங்கு தமிழ் இருக்கிறதா?
ஆனால், அறிவியல் ரீதியான ஆய்வுகள் பெருக வேண்டும். ஆனால், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பெருமைப்படவேண்டிய நாம், இங்கு தமிழ் இருக்கிறதா? என்று கேட்கவேண்டிய கேள்விகளும் இருக்கின்றன. அதை ஏன் ஆய்வாளர்கள் தொடுவதில்லை? இதுதான் நம் கேள்வி.
தமிழன் கட்டிய கோவில், அக்கோவிலில் வழிபாடு நடத்தும்பொழுது தமிழ் மொழிக்கு உரிமை இல்லை. தமிழ் மொழியில் வழிபாட்டிற்காக இன்னமும் தமிழ்நாட் டிலேயேகூட போராடவேண்டிய கட்டத்தில் இருக் கிறோம்.
திராவிட இயக்கத்தால்தான்
கும்பாபிசேகம் குடமுழுக்காயிற்று!
கோவில் கோபுரங்களை தமிழன் கட்டினான், சிறப்பான சிற்பங்கள் என்பதெல்லாம் பெருமை தான். ஆனால், கோபுரத்தின்மேல் குடமுழுக்கு நடத்துகிறார்கள் அல்லவா! அதுகூட திராவிட இயக்கத்தால்தான் கும்பாபிசேகம் குடமுழுக் காயிற்றே தவிர, அதற்குமுன் கும்பாபிசேமாகவே இருந்தது. அதற்குப் பிறகுதான், திருக்குட நன் னீராட்டுவிழாவாக ஆயிற்று!
கும்பாபிசேகம், திருக்குட நன்னீராட்டு விழா வாக ஆனதுதான் இவர்களாலே முடிந்ததே தவிர, அங்கே கோபுரத்தின்மேல் ஏறுவதற்கு, அங்கே தமிழ் மொழியை அமர்த்துவதற்கு வாய்ப்பு உண்டா? என்பதுதான் இன்றைய கேள்வி.
இன்னுங்கேட்டால், நிலவிற்குச் சென்றவர், அங்கே தமிழ் மொழியை நிறுத்த முடியும். செவ்வாய்க்கோளுக்கும் தமிழ் மொழியைக் கொண்டு போகக்கூடிய ஆற்றல் உண்டு. தமிழர் கள் தயாராகிறார்கள்.
ஆனால், கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் தமிழ் மொழி போகவில்லையே. தமிழில் சொன்னால், தீட்டாகிவிடும் என்று சொல்லுகிறார்களே!
தமிழில் பேசினால், தீட்டாகிவிடும் என்று சொன்ன மடாதிபதித் தலைவர்களும் இருக்கிறார் களே - அதைப்பற்றியெல்லாம் பேசாமல், எப்படி நீங்கள் தமிழை வளர்க்க முடியும்?
தமிழ் எங்கெங்கெல்லாம் இல்லையோ, அங்கெல்லாம் தமிழை உள்ளே விடுங்கள்!
எனவேதான், தமிழ் எங்கெங்கெல்லாம் இல்லையோ, அங்கெல்லாம் தமிழை உள்ளே விடுங்கள். உள்ளே விடுவதற்குத்தான் தமிழ்ப் போர்க்கருவியாக இருக்க வேண்டும்; தமிழர்கள் போராளிகளாக இருக்கவேண்டும்; தமிழர்கள் மானமுள்ளவர்களாக இருக்கவேண்டும்; தமிழர்கள் அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
திசை திருப்பாதீர்கள்;
திரிபுவாதங்களைச் செய்யாதீர்கள்!
இந்த ஆராய்ச்சியை முதலில் செய்யுங்கள்; உங் களால் அது முடியவில்லையானால், யாரால் முடிகிறதோ, அவர்களுக்குக் குறுக்கே நிற்காதீர்கள்; குறுக்கு வியாக்கியானம் செய்யாதீர்கள்; திசை திருப்பாதீர்கள்; திரிபுவாதங்களைச் செய்யாதீர்கள்.
உடல் நல்ல நிலையில் இருக்கவேண்டும்; மொழி நலத்தைப் பாதுகாக்கவேண்டும்; மொழி பரவவேண்டும்; மொழியின் மூலமாக நம் இனம் காப்பாற்றப்படவேண்டும்.
ஆனால், தமிழர்கள் வாழ்ந்தால், இன உணர்வோடு வாழ்ந்தால், மொழி உணர்வோடு வாழ்ந்தால், பகுத்தறி வோடு வாழ்ந்தால், முன்னேற்ற நோக்கோடு வளர்ந்தால், நிச்சயமாக இந்த இனம் வளர்ந்தால், மொழி வளரும். அப்படி மொழி வளரும்பொழுது, இன்னமும் அந்தப் பழைமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண் டிருக்க முடியாது.
‘‘பழையன இருத்தலும்; புதியன வருதலும்!’’
நீண்ட காலத்திற்கு முன்பே, அறிஞர்கள் தமிழிலேயே சொல்லியிருக்கிறார்கள்; ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்'' இதைச் சொல்லிக் கொடுக்காத தமிழாசிரி யர்கள் உண்டா?
ஆனால், நடைமுறையில் பழையன கழிதல் இருக் கலாம்; புதியன வருதல் கிடையாது. "பழையனவற்றில் பயனுடையவை இருத்தலும்; புதியன வருதலும்" என்ற நிலை ஏற்படவேண்டும்.
வெறுப்புப் பிரச்சாரம் அல்ல!
இதுதான் நம்முடைய இருப்புப் பிரச்சாரம்!
செல்போன் வைத்துக் கொண்டிருப்போம்; அதை வைத்து என்ன வியாக்கியானம் சொல்வோம் என்றால், காலையில், சமஸ்கிருத சுலோகத்தைக் கேட்பதுதான், சுப்ரபாதம் கேட்பதுதான் மிக முக்கியம் என்று சொன்னால், விஞ்ஞானம் எப்படிப் பயன்படுகிறது? அறிவியல் எப்படிப் பயன்படுகிறது? என்று கேட்கின்ற நேரத்தில் நண்பர்களே, இது வெறுப்புப் பிரச்சாரம் அல்ல! இதுதான் நம்முடைய இருப்புப் பிரச்சாரம்; இருப்பு சரியாக இருந்தால்தான் நல்லது. அதைப் புரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் நெருப்பு என்று கருதினாலும், இதுதான் உங்கள் சமையலுக்குப் பயன்படக்கூடியது!
நீங்கள் நெருப்பு என்று கருதினாலும், இதுதான் உங்கள் சமையலுக்குப் பயன்படக்கூடியது என்கிற கருத்தைச் சொல்லி விடைபெறுகிறேன்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வளர்க அறிவியல் தமிழ்!
மற்ற மொழிக்கு செம்மொழித் தகுதியை எப்பொழுது கொடுத்தார்கள் தெரியுமா? 2005 ஆம் ஆண்டில்தான். இந்திய அரசால், கலைஞர் முயற்சியினால், தமிழ் மொழிக்கு எப்படி செம்மொழித் தகுதி வந்ததோ, அதற்கு அடுத்த ஆண்டு 2005 ஆம் ஆண்டில்தான் சமஸ்கிருத மொழிக்கு செம்மொழித் தகுதி வந்தது.
ஏனென்றால், எங்கள் தமிழ் மொழியை ‘நீஷ பாஷை' என்று சொன்னாலும்,
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!
அவர்கள் நாணுகிறார்களோ, இல்லையோ - அவர்கள் நாண இந்த முயற்சியை செய்தார்.
தமிழுக்குக் கிடைத்த பெருமையும், வாய்ப்பும் நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்காய் வழியோடி, புல்லுக் கும் ஆங்கே கிடைத்தது - சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்றது, 2005 ஆம் ஆண்டு.
திராவிட இயக்கம் அளித்த நன்கொடை!
எனவே, அதுவும் திராவிட இயக்கம் அளித்த நன்கொடை என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
வாழ்க தமிழ்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
தமிழர் அறிஞர்கள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றது!
மூன்று நாள்களும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.), ம.தி.மு.க. பொருளாளர் செந்தில திபன், ‘தீக்கதிர்’ ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் அறிஞர்களும், ஆய்வாளர்களும் பல்வேறு தனி அரங்குகளில் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைப் படித்து கருத்துரை ஆற்றிட உள்ளனர்.
முதல் நாள் தமிழர் தலைவர் ஆற்றிய நிறைவுரையின் உள்ளடக்கம் - மாநாட்டின் நோக்கம், தமிழ் மொழி கையாளப்பட வேண்டிய முறை, தமிழர் மீதான ஆதிக்க எதிர்ப்பு அவைகளிலிருந்து தமிழைப் பாதுகாப்பது என பல தளங்களில் பரவி, மாநாட்டு பேராளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் அறிஞர்கள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.
No comments:
Post a Comment