ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நாணய மதிப்பில் அமெரிக்காவில் டாலர், அய்ரோப்பாவில் யூரோ, பிரிட்டனில் பவுண்ட், மலேசியாவில் ரிங்கட், சிங்கப்பூரில் சிங்கப்பூர் டாலர், இந்தியாவில் ரூபாய் என்று இருக்கும்போது, பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் பொது சிவில் சட்டம் அவசியம் என்கிறாரே?

- எஸ்.நல்லபெருமாள், வடசேரி

பதில் 1: வெளிநாடுகளுக்கு ஏன் சென்று உதார ணங்களைத் தேடுகிறீர்கள்? நம்மை ஹிந்து ராஷ்டிர மாக்கத் துடிக்கும் இவர்களது ஆரிய மதமான ஹிந்து மதத்தில் - திருமணம், சொத்துரிமை, சட்ட வரம்புக்குள் வரும் மத அனுஷ்டானங்கள் எல்லாம் ஒரே மாதிரி சீர்மையாகவா(Uniform)  இருக்கின்றன? அதனை முதலில் சமப்படுத்திய பிறகு அல்லவா ஒரு பொதுச் சட்டம் பற்றி யோசிக்க வேண்டும். ஒரே ஜாதி என்று அறிவிக்க ஏன் இவர்களால் முடியவில்லை? இரண்டு ஆண்டு களுக்கு மேல் நாம் கேட்கும் கேள்வி - நிலுவையில் உள்ளதே!

----

கேள்வி 2: ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி போன்று - இளைஞர்கள், மாணவர்களிடையே அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் ‘நீட்’ தேர்வு, பட்டமளிப்பு விழா நடைபெறாததை எதிர்த்துப் புரட்சி, கிளர்ச்சி வெடித்தால்தான் தமிழ்நாடு ஆளுநர் அடங்கு வார்போல தெரிகிறதே?

- மா.விவேகா, வேலூர்

பதில் 2: மக்கள் பெருந்திரள் உருவாக்கும் போராட்டம் துவங்கும் முன்(Quit Tamilnadu Governer Ravi)  “ஆளுநர் ரவி அவர்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அனைத்து ஒத்தக் கருத்துள்ள கட்சிகளையும் இணைத்து இயக்கம் ஒன்றைத் துவக்க உத்தேசம்.

-----

கேள்வி 3: தேர்தல் அரசியலில் திராவிட கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது முன்பு கவலை அளிப்பதாக இருந்த நிலையில், தற்போது மற்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. இருப்பதைபோல் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளரவும், ஆதிக்கம் செலுத்தவும் முடியாத அளவிற்கு தடுப்பணையாகவும், இரும்புக்கோட்டையாகவும் இருப்பது திராவிட கட்சிகள்தானே?

- மன்னை சித்து, மன்னார்குடி

பதில் 3: எத்தனை ‘காளான்கள்’ - கட்சிகள் முளைத்தாலும், எதை முறையாக அடையாளப்படுத்தி வாக்குகளைத் தர வேண்டுமோ, அதனை தமிழ் நாட்டு வாக்காளர்கள் நிச்சயம் தராமல் இருக்க மாட்டார்கள். இப்போது கட்டப்படுவது வெறும் ‘மாயை’ - அவ்வளவுதான் - கவலைப்படாதீர்கள்! சில கட்சித் தலைவர்கள் தனித்து என்பது நல்ல அரசியல் வியாபாரம் நடத்துவதே!

-----

கேள்வி 4: இந்தியாவிலேயே தமிழ்நாடு ஆளுநருக் குத்தான் அதிகமாக செலவு செய்யப்படுகிறதாமே, ஆண்டிற்கு ரூ.16 கோடியாமே, இது தேவையா?

- மீ.முரளிதரன், மதுரை -9

பதில் 4: அப்படியா? அநியாயம் - “அப்பீல்” - மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்!

-----

கேள்வி 5: புதுவை மாநிலத்தில் சமையல் எரி வாயு மானியமாக ரூ.300 தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளாரே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்?

- பா.முகிலன்,  சென்னை-14

பதில் 5: ஏறிய விலையை இவரால் எப்படிக் குறைக்க முடியும்?  செய்து காட்டட்டும். பிறகு வாழ்த்தலாம்.

-----

கேள்வி 6: பிரதமர் மோடி அவர்கள், ‘வந்தே பாரத்’ ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வழியனுப்பியதற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செல வாகியுள்ளது என்று தனியார் நிறுவனம் ரசீது அனுப்பியுள்ளதாமே?

- பா.கண்மணி, வேலூர்

பதில் 6: ஒரு கொடி அசைப்புக்கு விளம்பர நிறுவனத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவு - வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கோடானுகோடி மக்கள் உள்ள இந்த நாட்டில்! நியாயம்தானா?

-----

கேள்வி 7: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷண், பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்தது எதைக் காட்டுகிறது?

- லோ.விஜயலட்சுமி, திருநெல்வேலி

பதில் 7: அவர் குற்றம் புரிவதற்கு அஞ்சாத ஒருவர் என்பதையே காட்டுகிறது!

-----

கேள்வி 8: மத்தியப் பிரதேசத்தில், சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட இளைஞரும், முதலமைச் சரால் கால் கழுவி விடப்பட்ட இளைஞரும் வேறு வேறா?

- ப.ஆனந்த், ஆவடி

பதில் 8: அப்படித்தான் செய்திகள் வருகின்றன. பா.ஜ.க. வித்தைகள் எப்படிப்பட்டவை என்பது இப்போது புரிகிறதா?

-----

கேள்வி 9: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டில்லியில் முகாமிட்டிருப்பது ஏன்?

- மு.கேசவன், மயிலாடுதுறை

பதில் 9: சட்ட நிபுணர்களிடம் அரசமைப்புச் சட்ட ஆலோசனைகளைக் கேட்காததால், தனது மூக்கைத் தானே உடைத்துக் கொண்டதற்கு சிகிச்சை தேடுகிறார் போலும்!

-----

கேள்வி 10: மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தி.மு.க.விற்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று சொல்கிறார்களே, அதுகுறித்துத் தங்கள் கருத்து என்ன?

- க.கண்ணன்,  ஊட்டி

பதில் 10: வயிற்றெரிச்சல்காரர்களின் வம்பளப்பு. அதை ஒரு பொருட்டாக்கி கேள்வி கேட்பது நியாயமாகாது விடுங்கள்!


No comments:

Post a Comment