கேள்வி 1 : "நான் தவறு செய்வேன். ஆனால், அதில் உள்நோக்கம் இருக்காது" என்று மோடி பேசியுள்ளாரே?
- க.அன்புமொழி, மதுரை
பதில் 1 : மக்கள் அறிவார்கள். அதுபற்றிய அவரது விளக்கம் உண்மையா, பொய்யா என்பதை!
கேள்வி 2 : "தமிழ்நாட்டில் இருக்கும் 9 கட்சிகள் பா.ஜ.க.விற்கு ஆதரவாக உள்ளன" என்று எடப்பாடி பேசியுள்ளாரே. அதிமுகவில் உள்ள பிரிவுகளைக் குறிப்பிடுகிறாரா?
- த.வெங்கடேசன், திருத்தணி
பதில் 2 : அ.தி.மு.க.வில் 9 பிரிவுகள் உள்ளன என்பதைத்தான் எடப்பாடியார் இப்படிக் கூறு கிறாரோ - என்னவோ! (பார்ப்பனர் சங்கங்களையும் இணைத்துக் கொள்ளுகிறாரோ?)
கேள்வி 3 : அமலாக்கத் துறையைக் காட்டி மிரட்டி தனது கட்சி நாடாளுமன்ற பெண் உறுப்பினரையே பாலியல் இச்சைக்கு இணங்க வைத்துள்ளாரே பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கிரிட் சோமையா?
- அ.கார்த்தி, தருமபுரி
பதில் 3 : அசிங்கத்தின் அலங்கோலம் - அருவருப்பு நிறைந்த செய்தி.
கேள்வி 4 : இன்றைய இளம் தலைமுறையினர் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகின்றனரே - இதைத் தடுக்க என்ன வழி?
- அ.தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் 4 : அரசின் - காவல்துறை - பள்ளிக் கல்வித் துறை மற்றும் தீவிரமான பிரச்சாரம் - பொதுநல அமைப்புகள் மூலம் கடுமையான நடவடிக்கை தேவை! தேவை!!
கேள்வி 5 : தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மலைவாழ் மக்களுக்கு என தனித் தொகுதிகள் இருப்பதுபோல், சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களை அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துவதைப் போன்று, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் வகையில் பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அந்தந்த தொகுதிகளில் பார்ப்பன வேட்பாளர்களை மட்டும் நிறுத்துவதன் மூலம் சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பார்ப்பனர் களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறதே?
- மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 5 : பார்ப்பனர்கள் முன்பு கடுமையாக எதிர்த்த இடஒதுக்கீட்டை அவர்களே இப்போது பெற 'பகீரதப் பிரயத்தனம்' செய்கிறார்கள் போலும்!
கேள்வி 6: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்விற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான் என்று அசாம் மாநில முதலமைச்சர் கூறியுள்ளாரே?
- ப.ஆறுமுகம், வேளச்சேரி
பதில் 6 : "எவ்வளவு பெரிய புத்திசாலி" என்று புரிந்து கொள்ளுங்கள்!
கேள்வி 7 : "தாழ்த்தப்பட்ட - பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக - நாங்கள் தான் அங்கீகாரம் கொடுத்தோம்" என்று மோடியும், பா.ஜ.க.வினரும் கூறுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை காவல்துறை குப்பையில் போட்டு எரிக்கிறது - மணிப்பூரில் பழங்குடியின இளம்பெண்கள், கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்? இதற்குத்தான் அங்கீகாரமா?
- க.சிவா, மதுராந்தகம்
பதில் 7 : "கெட்டிக்காரன் புளுகுக்கு எட்டு நாள்கள் தான்" உத்தரவாதம்! இவர்கள் புளுகு சில மணி நேரம்கூடத் தாங்காது என்பது புரிகிறதல்லவா?
கேள்வி 8: மணிப்பூர் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - இலங்கையில் இசைப்பிரியாவிற்கு நேர்ந்த கொடூரம் - பதிலளிப்பவர்கள் யாரோ?
- ச.தமிழ்மணி, ஒசூர்
பதில் 8 : இக்கேள்வி ஒரு 'மில்லியன் டாலர் கேள்வி'. யார் பதிலளிக்க வேண்டுமோ அவர்கள் பதில்...? கிடைக்கவே கிடைக்காது!
கேள்வி 9 : இப்போது 'இந்தியா' வெள்ளைக்காரன் வைத்த பெயராக அவர்களுக்குத் தெரிகிறதே, ஏன்?- வே.முருகேசன், வேலூர்
பதில் 9 : எப்படியாவது - இப்போதாவது உண்மை வெளிச்சத்திற்கு வருகிறதே. அதுவரையில் நமக்கு மகிழ்ச்சியே!
கேள்வி 10: மணிப்பூர் கொடூரத்தைச் செய்தவர்கள் "திரவுபதிக்கு சேலை கொடுத்தான்" என்று மகா பாரதக் கதையில் எழுதப்பட்டுள்ள கண்ணனை கும்பிடும் மக்களாமே?
- கா.புருஷோத்தமன், தஞ்சாவூர்
பதில் 10 : முன்பு சேலை கொடுத்த கண்ணன் இப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லையா?
No comments:
Post a Comment