கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் - அவர்
கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்
பள்ளியினைப் பலவாறாய்க் கட்டிவைத்தார் - நாம்
படிப்பதற்கே பாரெல்லாம் சுற்றிவந்தார்!
எல்லாரும் ஒன்றென்றே எண்ணச் செய்தார் - அதற்கு
இதமான சீருடையை எடுத்துத் தந்தார்!
சொல்லாமல் செய்கின்ற சுடரொளியாய் இருந்தார் - நாளும்
சூரியனாய் உழைத்தவராய் அறிவொளியைத் தந்தார்!
மதியவுணவுத் திட்டத்தால் மாணவர்க்கு அன்னை -இவர்
மானுடத்தைக் கொண்டதனால் மக்களுக்குத் தந்தை
பதவியினை விரும்பாமல் பாடுபட்ட தால்பெருந் தலைவர் - தம்
பட்டறிவு ஒன்றாலே படையமைத்தத் தமிழர்
உதவிகளைச் செய்வதற்கே உயர்ந்துவந்த முதல்வர்
உழைப்பாளி குமாரசாமி சிவகாமிப் புதல்வர்
சிதையாத நெஞ்சத்தின் சொந்தக் காரர்- நம்
செந்தமிழின் செழிப்புக்கோ நல்லுறவுக் காரர்!
அறியாமை இருள்ஒழிக்க ஆண்டுவந்த மேதை - நாம்
அனைவருமே ஒன்றென்றிட போட்டுவந்தார் பாதை!
வறுமையினை ஒழிப்பதற்கு அணைகள்பல கட்டினார் - நாடு
வளமாக இருப்பதற்குத் திட்டங்கள் தீட்டினார்!
பெரியாரின் வழியினிலே பேதத்தை ஒழித்தார் - மக்கள்
பெருமையினைப் பெறுவதற்கோ பெரியாராய்ச் சிரித்தார்!
உரிமையினைப் பெற்றெடுக்க உழைப்பினையே கொண்டார் - நாளும்
ஒழுக்கத்தில் உயர்ந்தவராய் உலகத்தை வென்றார்!
பொதுநலத்தைத் தம்நலமாய்க் கொண்டிருந்தார்- அதனால்
புதுமையினை எந்நாளும் செய்தவராய்ச் சிறந்தார்!
மதுவினையே ஒழித்தவராய் மாநிலத்தை ஆண்டார் - நாளும்
மக்கள்தொண்டு மகேசன்தன் தொண்டென்று ரைத்தார்!
இதமாக ஆகட்டும் பார்க்கலாமென்று சொல்லி - நம்
எல்லாரின் உளத்தினையும் வென்றெடுத்த வெள்ளி!
பொதுவாகக் காந்தியத்தின் வழியினிலே நின்றார்- அதனால்
புவியெங்கும் கறுப்புகாந்தி என்றிங்கே ஆனார்!
தென்னாட்டுக் காந்தியென சிறப்பினையும் கொண்டார் - இந்திய
தேசத்துப் பிரதமரை உருவாக்கி நின்றார்
எந்நாளும் கதராடை தனையேதான் அணிந்தார்
ஏழ்மையினைப் போக்குதற்கு ஆட்சியினைத் தந்தார்
கண்ணெனவே கல்வியினைக் கருதி வாழ்ந்தார் - எங்கும்
கல்விவள்ளல் என்றுபெயர் பெற்றுச் சிறந்தார்!
இன்றிங்கே இவருக்குப் பிறந்தநாள் எடுக்கின்றோம் - எங்கள்
பெரியவரே என்றபெயரில் சிறந்தவராய் வாழ்த்துகின்றோம்!
- புலவர் கந்தசாமி
No comments:
Post a Comment