கொல்கத்தா, ஜூலை, 23 மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், பஞ்ச்லா கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட் பாளர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், “வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு மய்யம் சென்றிருந்தேன். அப்போது என்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஹிமந்தா ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை கம்பால் தாக்கினர்.
மேலும் என் ஆடைகளை அகற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்தனர்” என கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் ஹிமந்தா ராய் உள்ளிட்ட 40 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தப் புகாரை அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மறுத்துள்ளார்.இதுகுறித்து மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) மனோஜ் மாளவியா நேற்று முன்தினம் (21.7.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 13-ஆம் தேதி ஹவுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பா.ஜ.க. வினர் மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் அனுப்பி இருந்தனர். அதில், கடந்த 8-ஆம் தேதி பஞ்ச்லா வாக்குப் பதிவு மய்யத்திலிருந்து பாஜக பெண் வேட்பாளரை சிலர் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியதாகவும் அவருடைய ஆடைகளை கிழித்ததாகவும் கூறப்பட்டி ருந்தது. இதன் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்தபோது, காவல் துறையினரும் ஒன்றிய பாது காப்புப் படையினரும் இருந்துள்ளனர். அவர்களும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகி றோம்.ஆனால் அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. தாக்குதலின்போது காயமடைந்திருந்தால் அதுபற்றி விவரத்தை தெரிவிக்குமாறு கோரினோம். இதற்கு இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment