மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்- ‘புரட்சியின் குரல்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்- ‘புரட்சியின் குரல்!'

இம்பால், ஜூலை 28- மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித் தாளை தொடங்கியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. 

அதிலும் அங்கு சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம், மேலும் அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் பல தரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இரு தினங்களுக்கு முன்பு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

பிராட் பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இணைய சேவைக் கான தடை தொடர்கிறது. 

இந்நிலையில் மலைப் பகுதிகளில் பரவலாக வாழும் குகி மக்கள் மணிப்பூரில் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளவும் தகவல் பரிமாற்றத்திற்காகவும் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கி யுள்ளது. 

'ஸலேன் அவ்கின்' (Zalen Awgin) என்ற பெயரில் தொடங்கியுள்ள இதன் அர்த்தம் 'புரட்சியின் குரல்' (The Voice of the Revolution). 

குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அனைத்து கிராமங்களுக்கும் இந்தச் செய்தித்தாள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment