தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என ஈரோட்டில் மே 13 இல் நடை பெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.
அதற்கான ஒருங்கிணைப்பாளராக இரா.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். அந்த மாதமே (27.5.2023) முதல் பயிற்சிப் பட்டறை சென்னை, பெரியார் திடலில் தொடங்கியது! தொடர்ந்து கீரமங்கலம், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருநா கேஸ்வரம், கோயம்புத்தூர், செந்துறை, கல்லூர், குற்றாலம், திருவாரூர், திருமருகல், இலால்குடி, துறையூர், சேந்தநாடு என வாரத்திற்கு 2 வீதம், மாதத்திற்கு 8 பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன! அவ்வகையில் 2 மாதத்தில் நடைபெற்ற 17 பட்டறைகளில் 900 மாணவர்கள் தீட்டப்பட்டுள்ளனர்! அங்கு விற்பனையான புத்தகங்களின் மதிப்பு ரூ 70 ஆயிரம்.
மாணவர்களின் ஆவணங்கள்!
ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் பயிற்சிப் பட்டறையின் ஆவணங்கள் துல்லியமாகச் சேகரிப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் அவர்கள் பேசும்போது ஒரு தகவலை மறக்காமல் கேட்பார். உங்கள் தாத்தா, பாட்டியில் எத்தனை பேர் படித்துள்ளார்கள்? உங்கள் பெற்றோரில் எத்தனை பேர் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு முடித்திருக் கிறார்கள் எனக் கேட்பார். அந்தத் தகவலை வைத்துக் கொண்டு அதிலிருந்து இந்த இனத்தில் கல்வி வரலாற்றை அழகுற படம் பிடித்துக் காட்டுவார்!
அந்த அடிப்படையில் பயிற்சிப் பட்டறை மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், படிக்கும் கல்வி நிலையம், வீட்டு முகவரி, அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, தனித் திறன்கள் ஆகியவை வாங்கப்படுகின்றன. மேலும் பங்கேற் கும் மாணவர்களில் முதுகலை, இளங்கலைப் பட்டதாரிகள், தொழில் நுட்பப் பட்டயப் படிப்புகள், மேல்நிலை, உயர்நிலை, நடுத்தரப் பள்ளி மாணவர்கள் எனத் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு ஆவணங்களில் இணைக்கப்படுகின்றன!
மொத்தம் 30 தலைப்புகளில் நூறாண்டு கால இயக்கச் சாதனைகளை, 15 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் எடுத்து வருகின்றனர்!
இயங்கும் தோழர்களின் கூட்டமே இயக்கம்!
அந்த வகையில் நேற்றைய தினம் (22.07.2023) விழுப்புரம் கழக மாவட்டமான சேந்தநாட்டில் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உளுந்தூர்பேட்டையில் இருந்து உட்புறம் சென்றால் வழி நெடுக கிராமங்கள். எந்த இடத்தில் முகாம் நடைபெறுகிறது என பார்த்துக் கொண்டே சென்றால், முகம் மலர வரவேற்றது இயக்கக் கொடிகள். அதைச் சிற்றூர் என்பதா? கிராமம் என்பதா? என்பதில் யோசனை இருந்தது. சிறிது நேரத்தில் மாணவர்கள் பட்டாளம் திரண்டு வந்தது பாருங்கள்... மொத்தக் கணக்கில் 91 பேர். ஆக மாநகரமோ, நகரமோ, சிற்றூரோ, கிராமமோ இடத்தைப் பொறுத்து அல்ல வெற்றி; இயங்கும் தோழர்களைப் பொறுத்தது என்பது புரிந்தது!
மாணவர்களை வரவேற்பது, அவர்களின் இருக்கைகளை உறுதி செய்வது, விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து பெறுவது, அதிலுள்ள விடுதல்கள் மற்றும் பிழைகளைச் சரி செய்வது, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களில் விவரம் எழுதுவது, மாணவர்களின் முகவரிகளைத் தனி நோட்டில் பதிவு செய்வது, குடிநீர், தேநீர், பிஸ்கட் போன்ற வற்றைச் சரியாகக் கொண்டு சேர்ப்பது, உணவில் கவனம் செலுத்துவது, நிறைவாக அவர்களை வீடுகளுக்குப் பத்திர மாக வழியனுப்புவது வரை தோழர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கு ஈடுஇணையில்லை. எந்த ஒன்றிலும் நேர்த்தி என்பார்களே, அதை இயக்கத் தோழர்களிடம் ரசித்துக் கொண்டே இருக்கலாம். யாம் பெற்ற பெரியார் வாழ்வியலை, பிள்ளைகளும் பெற வேண்டும் என்கிற துடிப்பு! இதைவிட வேறென்ன பெருமை வந்துவிடப் போகிறது இவ்வுலகில்!
நிகழ்வுத் தொடக்கம்!
ஆக 91 மாணவர்களுடன் தொடங்கிய இந்நிகழ்விற்கு விழுப்புரம் கழக மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் வரவேற்புரை கூறினார். மாவட்டத் தலைவர் ப.சுப்புராயன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மாவட்டத் துணைத் தலைவர்
க.திருநாவுக்கரசு, மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோ பண்ணா, மாவட்ட ப.க. தலைவர் துரை.திருநாவுக்கரசு, ப.க. அமைப்பாளர் சி.கார்வண்ணன், விழுப்புரம் நகரத் தலைவர் கொ.பூங்கான், செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தொடக்கவுரை ஆற்றினார்.
வகுப்பிற்கான தலைப்புகள்!
"தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், "பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு" எனும் தலைப்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர்
சு.அறிவுக்கரசு, "கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம்" என்கிற தலைப்பில் திராவிடர் கழகக் கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன், "சமூக ஊடகங்களில் நமது பங்கு" என்கிற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர் வகுப்பெடுத்தனர். பிற்பகல் தொடக்கத்தில் தந்தை பெரியாரின் "பெண் ணுரிமைச் சிந்தனைகள்" எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, "ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்கிற தலைப்பில் முனைவர் க. அன்பழகன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
நிறைவு விழா!
நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த மாணவர்களைப் பாராட்டி, திராவிட கழகம் மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியார் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் உரை நிகழ்த்தினார்!
இறுதியில் சிறப்பாகக் குறிப்பெடுத்த ஜெ.கமலேஷ், பி.கனிமொழி, எஸ்.தர்ணிகா ஆகிய மூன்று மாணவர்களுக்கும் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. நிறைவாகக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். பங்கேற்ற 91 மாணவர்களில் 56 ஆண்கள், 35 பெண்கள். இதில் ஒரு முதுகலை பட்டதாரி, 7 இளங்கலைப் பட்டதாரி, 5 டிப்ளமோ பட்டதாரி, 78 மேனிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆவர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் பெரியார், ஆசிரியர் படம் பொறித்த பனியன் அணிந்திருந்தார்கள்.
கம்பீரமாக பறக்கும் கழகக் கொடி!
சேந்தநாடு கிராமத்தில் நான்கு சாலைகள் பிரியும் மய்யமான இடத்தில் இரண்டடுக்கு கட்டடம் ஒன்று உள்ளது. பொதுவாக ஒரு கம்பியில் ஒரு கொடி ஏற்றப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே வித்தியாசமாக ஒரே கம்பியில் 3 கொடிகள் பறக்க விடப்பட்டு, பார்க்கவே பரவசமாக இருக்கிறது. அவ்வழியே செல்லும் எவர் கண்ணிலும் தப்பவே முடியாத அளவிற்கு கழகக் கொடி கம்பீரம் தருகிறது! சிறிய விசயமாகத்தான் இருக்கும்; அதைச் சிலர் வித்தியாசமாக செய்வர். அவ்வகையில் இந்தக் கட்டடத்தின் கொடிக்கு சொந்தக்காரர் மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் ஆவார்.
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment