மேக தாது பிரச்சினை : கருநாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

மேக தாது பிரச்சினை : கருநாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா?

 காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

சென்னை, ஜூன் 3 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அண்ணாமலை கருநாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருந்துவரும் பாஜகவை விமர்சிப்பாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கருநாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு காங்கிரசை சீண்டிப் பார்க்கிறார்.  தமிழ்நாடு அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பாரதிய ஜனதா தடுத்து நிறுத்தும் என வீராவேசமாக பேசியிருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம் காட்டினார்கள். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விரைவான திட்ட அறிக்கை தயார் செய்ய கருநாடக அரசுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் ஜூன் 2017 இல் அனுமதி அளித்தது. நவம்பர் 22, 2018 இல் கருநாடக அரசு தயாரித்த திட்ட அறிக் கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக ஒன்றிய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப் பேர வையிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, 2019 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு ஒன்றிய பா.ஜ.க அரசு கருநாடக மாநிலத்திற்கு ஆதரவாக இத் தகைய நடவடிக்கையை எடுத்தது என்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? இதைவிட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும்?

கடந்த 2021 முதல் 2023 வரை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சிக் காலத்தில் 2022-_2023 ஆம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பா.ஜ.க அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார்? இதை எதிர்த்து குரல் எழுப்பினாரா? இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன் என்று சொல்கிற அண்ணாமலை அன்று வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு, இப்போது வீரவசனம் பேசுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும்.  நமது உரிமையின்படி, நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழ்நாடு எல்லையில் இருந்து 4 கி.மீ தொலைவில் பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்படுமேயானால், தமிழகத்தின் நீர் வரத்து கடுமை யாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடி யாது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே வருகிற நீர் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுத்து, தேக்கி வைத்து பயன் படுத்துவது தான் மேகதாது அணை கட்டுவதன் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. தற்போது கர்நாடக அரசு அணை கட்ட எடுக்கிற முயற்சிகள் நீதிமன்ற அவமதிப் பாகவே கருதப்படும்.

தமிழக காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கருநாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பா.ஜ.கவை விமர்சிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


No comments:

Post a Comment